புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.
மண்ணில் வாழும் இந்த உயிரினங்களை அறிவு என்ற வகைமையால் ஆறாக பிரித்துக் கூறுகின்றார் திருவாசகத்தில் மாணிக்கவாசகர் (இதில் பூமியில் வாழும் உயிர்கள் மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டது).இப்படி பூமியில் ஆறுவகை பிறப்புகளும் எடுக்கும் உயிரினங்களுக்கும் , பிறப்பு என்பது ஒன்று, உயிர் என்பது ஒன்று. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கு" எல்லா உயிர்க்கும் பிறப்பு என்பது ஒன்று என்கின்றது திருக்குறள்.
இதை தான் இந்து மத நான்கு வேதங்களின் சாரமான மஹாவாக்கியங்களும் விளக்குகின்றது. இந்த வாக்கியங்களுக்குள் செல்வதற்கு முன் இரண்டு விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் . பிரம்மன் (நான்முகன் என்ற படைப்பின் கடவுள் அல்ல) ஒட்டுமொத்த படைப்பின் ஆதாரமாக கருதப்படுகின்ற வேதங்களில் குறிப்பிடப்படும் பிரம்மனை குறிப்பது. ஆத்மன் என்பது மனிதர்களின் ஆன்மாவை குறிப்பது.
ரிக் வேதத்தின் சாரமான பிரக்ஞானம் பிரம்ம என்பது பிரக்ஞையே(அறிவுணர்வே) பிரம்மன். அறிவுணர்வு என்று இருக்கும் எல்லாவற்றுள்ளும் படைப்பின் ஆதாரமாக விளங்குகின்ற பிரம்மன் இருக்கின்றது. அதர்வண வேதத்தின் சாரமான அயம் ஆத்மா பிரம்ம என்பது ஆத்மன் தான் பிரம்மன். அதாவது எல்லா உயிர்களில் இருக்கும் ஆத்மன் தான் படைப்பின் ஆதாரமாய் விளங்குகின்ற பிரம்மன். சாம வேதத்தின் சாரமான தத் த்வம் அஸி என்பது ஆத்மன் ஆன நீயே அந்த பிரம்மன் என்கின்றது. யஜுர் வேதத்தின் சாரமான அஹம் பிரம்மாஸ்மி என்பது ஆத்மனான நானும் பிரம்மன் தான் என்கின்றது.
மௌனி சொல்வார் "பிரக்ஞை சுடர் மாதிரி எறிஞ்சிண்டே இருக்கணும் , உள் மனசிலே". அதுபோல பிரக்ஞை சுடர் போல எரியும், உயிரினங்களிலும் கடவுள் இருக்கின்றார். இப்படியான தத்துவத்தின் நீட்சியாகதான் மதாரின் தொகுப்பான வெயில் பறந்தது என்ற தொகுப்பில் வரும் முப்பத்தி ஏழாவது கவிதையை பார்க்கின்றேன்.
சமவெளிகளில் ஆடு மேய்க்கும் சிறுவன்
மானசீகமாய்க் கும்பிடுகின்றான்
அதிகாலைப் பனியை
ஆடுகள் தங்களது காலை உணவில்
சேர்த்து விழுங்குகின்றன
மேய்ப்பாளனின் கடவுளை
மேய்ப்பரும் கர்த்தா
மேய்வதும் கர்த்தா
இந்த கவிதையில் பனித்துளியை கடவுளாக பார்க்கின்றான் ஆடு மேய்க்கும் சிறுவன். புல்லுடன் அந்த பனித்துளியையும் சேர்த்து விழுங்குகின்றன ஆடுகள். இங்கு ஆடுகளும் கர்த்தா, விழுங்கும் பனித்துளியும் கர்த்தா என்கின்றார் மதார். இங்கு நிலம், புல்,பனித்துளி, ஆடு, சிறுவன் என யாவும் கர்த்தா தான். இப்படி எல்லாவற்றிலும் இறைத்தன்மையை உணர்ந்த திருமூலரும் தனது திருமந்திரத்தில் அணுவிற்கு உள்ளும் இறையே, புறமும் இறையே. இறையே பிரபஞ்சம் அளவு விரிந்துள்ள எல்லாமும் ஆக இருக்கின்றது என்கின்றார்.
***
அணுவில் அவனும் அவனுள் அணுவும்
கணுஅற நின்ற கலப்பது உணரார்
இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்
தனிவற நின்றான் சராசரம் தானே
இதையேதான் ஒவ்வையார் எழுதிய விநாயகர் அகவலில் வரும் ஒரு வரியும்
கூறுகின்றது.
அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்
எல்லாவற்றிலிலும் நீக்கமற நிறைத்த அந்த இறையை தான் வே.நி.சூர்யா, தனது அந்தியில் திகழ்வது தொகுப்பின் (கடவுள் வாழ்த்து பாடல் போன்று அமைந்த) முதற் கவிதையில் வணங்குவோம் என்கின்றார்.
தூரத்தில்
ஒரு சோளக்கொல்லை பொம்மையினை பார்த்தேன்
இருந்தும் இல்லாது
பறவைகளின் நெரிசலையும் அதன் சாயைகளின் நெரிசலையும்
நெறிப்படுத்திக்கொண்டு
ஏதோ தானொரு போக்குவரத்து காவலர் என்பதுபோல
நின்றுகொண்டிருந்தது
மானுடர்களுக்கும் இப்படியொருவர்
இருக்கவேண்டும்
அடிக்கடி விடுப்பு எடுத்துக்கொண்டு
அநேகமாக எந்நேரமும் உறங்கியபடி
எட்டாத தொலைவினில்
ஒரு இன்மையின் வடிவிலிருந்து
சகலத்தையும்
ஒழுங்குபடுத்தியவாறு
ஒரு மகத்தான ரகசியத்தைப் போல ஒருவர் இருக்க வேண்டும்
அவரை அந்தப் பேரின்மையைப்
போற்றுவோம் நண்பர்களே
அப்பாலுக்கு அப்பலாய் இருந்தபடி எல்லாவற்றையும் ஒரு நெறிப்படுத்தும் இன்மையே இறைநிலை. அப்படி தனக்குள் இருக்கும் இன்மையை , ஆன்மா என்னும் இறையை போற்றுவோம். இந்த இறையின் தரிசனத்தை காணாத மாந்தர்கள் கோடி கோடி என்கின்றார் சிவவாக்கியார்.ஆம் அவர் சொல்லும் அந்த மகத்தான ரகசியம் ஆன்மன் தான்.
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்காள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே
இப்படியான மகத்தான ரகசியத்தை உணர்த்த நிலை பற்றி வெளிப்படுத்துதல் கவிதையில் விளக்குகின்றார் சூர்யா.
ஊழ்கத்தின் கடைசிப் படிக்கட்டை
விட்டிறங்கி
இன்மையின் முதல் படிக்கட்டில்
கால் வைக்கிறான்
ஆனந்தத்தின் அடிவாரத்திலிருக்கும் கிராமத்தில்
சிங்கம் பசுவுடன் நடக்கத் துவங்கியது
அத்தனை ஞானத்துடனும்
அத்தனை துயரத்துடனும்..
தான் இறை என்று உணர்ந்த ஆன்மன் , இறையின் நிலையான இன்மையை நோக்கி முதல் படிக்கட்டில் கால் வைக்கின்றது. அந்த நிலையில் சிங்கமும் இல்லை , பசுவும் இல்லை. எல்லாம் ஆன்மன் , எல்லாம் இறை. இந்த இறைநிலை அத்தனை ஆனந்தம் பொதிந்த ஒன்று, ஞானத்தின் உச்சம் . இங்கு அத்தனை துயரம் என்பது முரண், உலகவாழ்வை நீங்க துணியாத மனத்தினை குறிக்கின்றது அல்லது தான் இறை என்ற உயரிய ஞானத்தை அடைந்துவிட்டோம் , இறையின் உன்னதத்தை அறிந்து , அதன் உன்னதத்தை அடைந்து ,அதனுடன் எவ்வாறு இரண்டற கலக்கப்போகின்றோம் என்ற அச்சத்தின் காரணமாக ஏற்பட்ட துயர். இயங்கும், படைக்கும் யாவும் இறை எனில் நாமும் இறையே என்பதே இக்கவிதைகளின் வாயிலாக உணரக்கூடிய உண்மை.
***
வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்
***
0 comments:
Post a Comment