கடலில் ஊறும் சிறு தும்பி - 2 – பார்கவி

மனிதக் குரலைப் போன்ற கருவி இன்னொன்றில்லை. அதிலும் சொல் சேர்ந்து விட்டால் அது அடையும் உச்சங்கள் அதிகம். சில தருணங்களில் பகுத்தறியும் மனம் இயங்காமல், இந்த ராக – காட்சி, பாடல் வரி – இசை தொடர்புறுத்தல்கள் வெறும் சமரசமாக, மனம் நிகழ்த்தும் சித்து விளையாட்டாகவும் அமைந்துவிடலாம். அவை மாற்றுப் புலனனுபவமாக (synesthesia) மாறாமல் சில நேரங்களில் மனப்பிதுக்கங்களாக (mental projections) மட்டுமே நின்று விடுகின்றன. இதனால் தான் வரிப்பாடல்கள், சினிமாப் பாடல்கள் அவ்வளவு பிரபலமாக இருக்கின்றன. வெண்ணிலாவின் தேரில் ஏறி சைதாப்பேட்டை சென்று இறங்கும் காட்சி ஒன்று முகுந்த் நாகராஜன் கவிதையில் வரும். ஆரம்பகட்டத்தில் அப்படி எதாவது ஒன்றை பிடித்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. உங்கள் வெண்ணிலாவின் தேருக்கு இலக்கம் சைதாப்பேட்டை தானா என்ற கேள்வியை சற்று அழுத்தமாக கேட்டுக் கொள்வதில் தவறில்லை.  

சொல்லவா ஆராரோ (வெய்யில்)

ஆம் அம்மா! அந்த ரயில்தான்

உனக்கும் எனக்குமிடையே நீண்டு தடதடக்கும்

தொப்புள்கொடி

வலிக்கிறது ராஜா... வெட்டிவிடுங்கள்

ரணமான அவளின் உயிர்ப்பாதையில் 

வேங்குழலின் சாற்றைப் பூசிக்கொண்டிருப்பது யார்?  

லயத்தின் துடிப்பை, நாதத்தின் தொடர்ச்சியை பின் தொடர்ந்து மனம் ஒரு உத்தரவாதத்தை, நிறைவை, அதன் வழியாக இந்த வாழ்க்கைக்கு ஒட்டுமொத்தமாக ஒரு அர்த்தத்தைத் தேடிக்கொண்டே இருக்கிறது. பல நூறு வருடங்களாக மாறாத ஒலியமைப்புக்குள், பரிணமிக்கப் பிடிக்காத ஓர் ஆதிப் பிரக்ஞை நம்மைச் செலுத்தி வருகிறது. அதற்கு நாம் மொழியை துணைக்கருவியாக, ஆதார கட்டமைப்பாக கொள்கிறோம்.  நகரத்தின் பாதுகாப்பான கட்டமைப்பில் இருந்து விலகினால் ஒழிய வயல் பச்சைகளை கண்டு கொள்ள முடியாது. அதற்கொரு மனப்பயிற்சி அவசியமாகிறது.

செவ்வியல் இசை திரை இசையிடமும் நாட்டார் இசையிடமும் இருந்து பின் தங்குவதில் மொழியின் பங்கு முக்கியமானது. கருவியசைகளை நாம் தாண்டிச் செல்வதன் பின்னணியில் இருப்பதும் மொழியின்மை தரும் அச்சமே. இயல்பாகவே நாம் பரீட்சார்த்தமான முயற்சிகளை வெறுப்பதற்கான உளநிலையை வேறு கொண்டுள்ளோம். அந்த அச்சத்தை, மனத்தடைகளை விலக்கி, பெயரும் உடலும் அற்ற சுதந்திர இருப்பாக இசையை சொல்வதில் இருக்கும் போதை அலாதியானது. ஏனெனில், ராக அனுபவம் என்பது சொல்பொருள் அனுபவமல்ல.

ராகம் (அபி)

விரல்கள் தாளமிடத் தொடங்கியதும்

அந்த ராகம்

எங்கிருந்தோ

மனசுக்குள்

நுழைந்தது


கிளை பிரிந்து பிரிந்து

கடலடித் தாவரங்களை

அசைத்து இசைகொண்டது


பவளப்பாறை இடுக்குகளில்

குளிர்ந்து கிடந்த வயலின்கள்

உயிர்த்து வீறிட்டன

00


எல்லாப் புறங்களிலிருந்தும்

ஒரே காற்று

வீசியடித்தது


கற்பனைகள் முற்றிலும்

கலைந்து போயின


பல தேசத்துக்

குழந்தைகளின் முகங்கள்

ஒரே அழுகையின் கீழ்

ஒன்று கூடின


பாதைகளற்றுப் போனது உலகம்

நேரம் கூட நகர்வதற்கின்றி


கவிதையின் மூச்சு ஒன்று

கவிதையை மறுத்துக்

கடல்வெளி முழுவதையும்

கரைக்கத் தொடங்கிற்று

விவால்டியின் புகழ்பெற்ற நான்கு பருவங்கள் இசைக் கோர்வையில் ஒன்றான கூதிர் காலத்திற்கான இசையுடன் நான் இதை தொடர்புபடுத்திக் கொண்டுள்ளேன். அதை வாசிக்க குறிப்பு கொடுத்திருக்கிறார்கள் – ‘வேகமாக, ஆனால் அதிவேகமாக வசிப்பதற்கு அல்ல.’ சரி தான்.  

கேள்வியின் முழுமையான இன்பத்தை புறந்தள்ளாமலும் கலை புறக்கணிப்பாக மாறாமலும் இசையை நாம் அணுக வேண்டி இருக்கிறது. நாம் ‘சஹ்ருத்யர்’ என்பதை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்ள வேண்டி இருக்கிறது. பவபூதி, இதை சமான தர்மம் என்கிறார். இசைப்பவருக்கும் நமக்கும் நிபுணத்துவத்தில் இருக்கும் நிகர்நிலை இல்லை, உள்ளத்து உணர்வில் ஏற்படும் சமானம் இது. ஒரே ஸ்ருதியில் பிணைக்கப்பட்டிருக்கும் இரண்டு வீணைகள் ஒத்திசைப்பது போல இசையும் ரசிகரும் ஒன்றாவது தான் நிஜமாகவே கலை உதிக்கும் இடம்.

இசைப் பயன் (சுகுமாரன்)

பாடகர் பாடிக் கொண்டிருக்கிறாரா

நாம் எல்லாரும் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமா

பாடகருக்கும் நமக்கும் நடுவில் இசை ஒலித்துக் கொண்டிருக்கிறதா?

ஏதோ விநாடியில்

நமக்கும் இசைக்கும் இடையில் அமர்ந்து

பாடகரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்

அவருக்கும் இசைக்கும் இடையில் அமர்ந்து

நாமும் பாடிக் கொண்டிருக்கிறோம் .


-

ஒரே பாடல் தான் 

நான் கேட்டதால்

இரண்டாகப் பிரிந்தது

மீண்டும்

நான் பாட, நீ கேட்கவென,

பலவாகி வளர்ந்தது

நாம் பாடி, பலர் கேட்டு

உலகம் நிறைத்தது

உலகெலாம் பாட

ஒன்றாகிக் கேட்கிறது

ஒரே பாடல். (ஆனந்த் குமார்)

-

சரிவிலே எழுவதென்ன கண்ண பெருமானே ! (இசை)

பாடகர் பாடுகிறார்

பாடிக் கொண்டிருக்கிறார்

பாடிக் கொண்டிருக்கிறார்


பாடகர்  

‘பாடத்’ துவங்கும் தருணம்

என்றொன்றுண்டு


பாடகர் ‘பாடத் ‘ துவங்கி விட்டார்


“ ஓ...”

என்றெழுந்ததொரு  வாத்தியம் 


“ம்”

என்றொரு வாத்தியம்


“ஆஹா...”

என்று எங்கோ துள்ளியதொரு வாத்தியம்


“ ச்…”

கொட்டி மறைந்ததொரு வாத்தியம்


“வாவ்!” 

வாய் திறந்து 

கூச்செரியும் வாத்தியங்கள் ஆங்காங்கு


தாயைத் திட்டி 

ஒரு கெட்ட வாத்தியம்

பிளாஸ்டிக் சேர் வாத்தியங்கள்

செருப்புக் கால் வாத்தியங்கள்


நெஞ்சத்து ஆனந்தம்…

அது ஒரு நிகரற்ற வாத்தியம்


வாத்தியங்கள் 

கூடிக் கூடிப் பெருகியதில்


மேடை கொள்ளவில்லை

இதோ..

இந்த மேடை 

சமத்தில் சரிவதைக் காண்கிறேன்


மேடை, அரங்கு என்று

இரு வேறில்லை இப்போது.

இயற்கையின் சரடாக ஒரு இசைப்படைப்பை அணுகுவதென்றால் என்ன? குயிலும் குக்கரும் கூவுவது இனிமை தான். ஆனால் இசை என்ற அடையாளத்தை அறுதியாக ஏற்காதவை. ஸ்வரங்கள் என்பவை ஒரு வகையான ஒலி ஊகங்கள். அதை ஊகிப்பதிலும் வெளிப்படுத்துவதிலும் உள்வாங்குவதிலும் மானுட அறிவு தொழில்படுகிறது.  கரும்பச்சைக்கும் இளம்பச்சைக்கும் வேறுபாடு சொல்வது போல சாதாரண காந்தாரத்திற்கும் அந்தர காந்தாரத்திற்கும் வேறு சொல்ல முடிவதில்லை. அருகருகே வைத்து பாடி காண்பித்தால் கூட காதில் வண்டு ஊறுவது போல அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்கும். இசைக்கு காது திறக்க காத்துக்கிடக்க வேண்டி இருக்கிறது, திறக்காமலே கூட போகலாம். இருப்பினும், ஒலியின் உச்சக்கட்ட வெளிப்பாடு என்று ஒன்று இருப்பதை நாம் தன்னியல்பாக உணர்கிறோம்.

நீரோ நீ வாசி (மதார்)

ஹாரனில் இசையமைக்கும் பேருந்தோட்டி 

தன் பயணிகளை 

அமைதியற்ற மலையுச்சிக்கு 

அழைத்துப் போகிறான் 

தன் ஹாரன் வழியே

இனிமைப்படுத்த முயலுகிறான் 

இழந்த இசைப்பொழுதுகளை 

ஹாரன் இசை செவியுறும் அப்பிரதேசத்து மக்கள் 

கெட்ட வார்த்தை கூறி நகர்கிறார்கள் 

ஹாரன் இசை செவியுற்ற 

ஒரு கூடைப் புல்லாங்குழல்கள் 

கால் முளைத்து மானாகி காடோடின 

நம் பேருந்தோட்டி இசையை நிறுத்தமாட்டான் 

ஹாரன் இசைதான்

நம் பேருந்தோட்டிக்கு 

எரியும் ரோம் நகரமும் 

பிடிலும்

அருவமான ஒன்றாக இருந்தும் அதெப்படி புலன்களை வந்தடைகிறது? புலன் உணர் வட்டத்திற்குள் இருந்தும் பிடிபடாத இசையின் எடையின்மையை எப்படி பொருள் கொள்வது? இசைக்கான பிரத்யேகமான தொழில்நுட்ப மொழியை கொண்டு அதன் தொழில் நுட்பத்தை மட்டுமே விளக்க முடிகிறது. கவி மொழிக்குள் ஸ்வரத்தின் துல்லியமும் அசைவும் சட்டென்று திறந்துவிடுகிறது.

மழை தேக்கிய இலைகள்

அசைந்து

சொட்டும் ஒளி


கூரையடியில் கொடியில் அமர‌

அலைக்கழியும் குருவி 

(யேசுதாசுக்கு, இசை தரும் படிமங்கள், சுகுமாரன்)

அப்படி எல்லா நேரமும் இசை தன்னை காட்டி நிற்பதில்லை. மர்மமான களி நடனமும் இந்த பரவசத்தின் ஒரு பகுதி. பெரும்பாலும் தொட்டறிய முடியாத தெய்வதங்களை, பேரனுபவங்களை நாம் இசையோடு தொடர்பு படுத்தி வைத்திருக்கிறோம். அது காமமாக வெளிப்படும் பொழுது நமக்கு மெல்லிய திகைப்பு ஏற்படுகிறது. இந்த இணைவு சாதாரணமாக fallacies முளைக்கும் சாத்தியங்களை கொண்டுள்ளது. எந்த உள்ளர்த்தமும் இன்றி எவ்வித அனுபவத்தையும் மீட்டாமல், பேச்சுவாக்கில் ஒரு பிரபலத்தின் பெயரை குறிப்பிட்டு தன்னை முன்னிறுத்திக்கொள்ள முயலும் கற்றுக்குட்டிப் போல், சில கவிதைகள் இசையை பெயர் தூவிச் செல்கின்றன. தொடுகறி ஆக்கிக் கொள்கின்றன. பெயர் தூவிக் கவிதைகளில் இருந்து இசையை காப்பற்ற வேண்டியதில்லை, கவிதையை பத்திரப்படுத்த வேண்டி இருக்கிறது. அரிதாக நுட்பங்களைத் தொடும் கவிதையும் உண்டு. 

ஜகன்மோகினி (சுகுமாரன்)

மறைக்கபடாத உன் இடங்களை எல்லாம்

பகல் ஒளியின் உண்மை போலப் பார்த்த எனக்கு

ஆடையின் இருளில் அதே இடங்கள்

அறியாமையின் திகைப்பாய்த் திணற வைப்பதேன்


தெளிந்த ரகசியம் எந்தப் பொழுதில்

தெரியாப் புதிராகிறது ஜகன்மோகினி?

... 

இசை, கால ஒழுங்கோடு மிக நெருக்கமான தொடர்புடையது. ஏதுமற்ற தொடக்கத்தில், காலவெளி ஒன்றோடன்று முயங்கி ஒற்றை உருண்டையாகக் கிடந்தது. நாம் ‘நோட்’ அல்லது 'ஸ்வரம்' என்று அர்த்தப்படுத்தும் ஒலிகள் அத்தனையும் ஒரே நேரத்தில் இணைந்து பேரோசை இட்டிருக்கலாம். காலம் என்றொன்று பிறக்க, ஒரு கணம் மற்றொன்றில் இருந்து பிரிந்து தனித்த அடையாளத்தை பெற்று இசைக்கான சாத்தியங்கள் பிறக்கின்றன. ஏறத்தாழ பிரம்மத்தை வர்ணித்து ஜீவன் பிறந்த கதை போல் இருந்தாலும், ராகங்களும் தாளங்களும் அறுபடாத ஒருமையிலிருந்து பிறந்தவை. அரூபத்தை இத்தனைத் தூலமாக சொல்லிவிட முடியுமா என்று தோன்றச்செய்யும் சிருஷ்டி கீதமாகவும் கவிதை அமையும். 

நிசப்தமும் மௌனமும் (அபி)

நெடுங்கால நிசப்தம்

படீரென வெடித்துச் சிதறியது


கிளைகளில் உறங்கிய

புழுத்தின்னிப் பறவைகள்

அலறியடித்து

அகாத வெளிகளில்

பறந்தோடின

தத்தம் வறட்டு வார்த்தைகளை

அலகுகளால் கிழித்துக் கொண்டே


விடிவு

நினைவுகளையும்

நிறமழித்தது


'நெடுங்காலம்' கடுகாகிக்

காணாமல் போயிற்று


சுருதியின்

பரந்து விரிந்து விரவி...

இல்லாதிருக்கும் இருப்பு

புலப்பட்டது

மங்கலாக


சுருதி தோய்ந்து

வானும் நிறமற்று

ஆழ்ந்தது மெத்தென


பூமியில்

ஒலிகளின் உட்பரிவு

பால்பிடித்திருந்தது

வெண்பச்சையாய்

'இசைக் கோர்வை என்பது, காலக் களிமண்ணில் வனைந்தெடுத்த  பலபட்டைகள் கொண்ட இருப்பு’ என்கிறார் விர்ஜினியா வுல்ஃப். அவர் நுட்பாமாக எதையோ சொல்கிறார் என்று புரிந்தாலும் என்னவென்பதை என்னால் ஊகமாகத் தான் புரிந்து கொள்ள முடிகிறது. சப்தத்தின் பிடியில் சிக்கி இருக்கும் சங்கீதத்தின் விளக்கமுடியாத நுண்மையை சொல் தொட்டுவிடும் கணமும் கவிதைக்குள் சாத்தியம். 

...

நிசப்தமும் 

முழக்கத்திற்குப் பின்னான நிசப்தமும்

ஒன்றல்ல


வாத்தியக்காரன்

வாத்தியத்திலிருந்து

கையைத் தூக்கிவிட்ட பிறகு

உருவாகும் தாளமே!


நீ

அங்கென்னைக் கூட்டிச் செல்! (அங்கு, இசை)

நேரடி புலன் அனுபவத்திலிருந்து எழுதப்பட்டிருந்தாலும் அதி தீவிர அனுபவத்திற்கு முன்னும் பின்னும் மனிதர் அமையும் இரட்டை நிலையையும், இசையின் பல்பரிணாம இருப்பையும் மொழியனுபவமாக மாற்றுகிறது. 

இசைக்கு அறிவு தேவையில்லை என்றொரு கருத்து நிலவுகிறது. மேலும், உணர்வு நிலைகள், அறிவிற்கு அவ்வப்பொழுது எட்டாததாலேயே கீழானது என்ற எண்ணமும் அறிவுத்தளத்தில் உண்டு.  இவற்றில் உண்மை இல்லை என்பதால் எனக்கு உடன்பாடில்லை. பீத்தோவன் இசையை அறிவுலகத்திற்கும் உணர்வுலகத்திற்கும் இடையில் இயங்கும் சமரசக்காரராக விவரிக்கிறார். செவித்திறன் இழந்த பின் சிம்ஃபோனி எழுதியவர் சொல்வதில் அர்த்தம் இருப்பதாகவே தோன்றுகிறது. அறிவும் உணர்வும் கனிந்த நிலையை இசைக்கோருகிறது. அதற்கு நம் முன் அனுபவங்களும் போதாமைகளும் எதிரிகள் ஆகின்றன. 

பியானோ (பிரமிள்)

...

கைதொட  எட்டி

கண்தொட எட்டாத

தொலைதூரம் வரை

கட்டமிட்டு நின்றன

ஸ்ருதி பாறைகள்

இசையின் வெளியில்

வட்டமிட்டது ஒருநிழல்


திடீரிட்டு

வெளிநீத்து வெளியேறி

கையை நிழல்

கவ்விக் குதறிற்று

வேதனையில்

சிலிர்த்த விரல்கள்

நிலவில் ஒடுங்கின.

நிலவெளிமேல்

ஸ்ருதிப் பாறைகள்

தத்தளிக்க துவங்கின.

"அடடா!- ஆனாலும்

இண்டியன் கர்நாடிக்

மியூசிக்கிற்கு

அப்புறம்தான் இது -

நம்ப கல்ச்சர்

ஸ்பிரிச்சுவல் ஆச்சே"

என்று உருண்டன

உள்வட்டது

அசட்டுக் கற்கள்


இந்தக் கல்நார்

தோல் வட்டத்துக்கு அப்பால்

அரை இருளில்

காலணியற்று நின்ற

யாரோ ஒருவனின்

இதயச் சுவடுகளில்

குத்திய முட்கள்

சிறகுகளாயின


துடிப்புகள் கூடி

கழுகுகளாகி

நிலவில் ஒடுங்கின

...

அரசியல் தொனிக்கும் கவிதைகளை கவித்துவம் குறைந்தவை என்று சொல்லும் நுட்ப அரசியத்தாண்டி, சமகாலத்தன்மை கொண்ட ஒன்று எப்போது கவிதையாக உருக்கொள்கிறது? பாட்டும் வரியும் இணைந்து நிகழ்த்தும் ரசவாதத்தை போல, இசையற்ற வெளியில் இசையின் நினைவு எழுப்பும் ரசவாதம் என்றும் ஒன்றுண்டு. ‘மென்குரல் மங்கிய பின்னான இசை’ என்ற தலைப்பில் ஷெல்லி எழுதிய கவிதைக்கு அருகில் வரும் கவிதை இது. நினைவினூடாக ஓசையை தொட்டெழுப்பி ரீங்காரமாக எஞ்சும் புள்ளியில் நிகழ்கிறது. மலர் உதிர்ந்த பின்னும் எஞ்சும் மணம். இன்மையின் அழுத்தமான ஆற்றல், அது தரும் துயரம், துயரமென்னும் இசை, இசையென்னும் ஆடல், ஆடலில் ஒரு சொல். 

தூல சூட்சும சன்னிதி (சங்கர ராம சுப்ரமணியன்)

கிழக்குக் கோபுரத்துக்குள்

நுழைந்து

நந்தியை

நினைவில் இப்போது

தாண்டினாலும்

தலைக்குள் கேட்கத் தொடங்கிவிடுகிறது

தவிலும் நாயனமும்

இசைப்பவர் வேண்டாம்

கருவியும் வேண்டாம்

இன்னும் வெளிச்சம் நுழையாத

இருள்மூலைகளில்

அதன் எதிரொலிகள் பெருமூச்சுகள் கேட்கின்றன

ஒடுக்கிய குதிரைகள் போல்

கொடிமரம் தாண்டிக் கருவறைக்குள்

செல்லும் நுழைவாயிலின்

பக்கவாட்டு மேடையின் மூலையில்

தவிலும் நாதஸ்வரமும் பம்பையும்

புழங்காத நாட்களில் அழுக்குத் துணிகள் சுற்றி

எண்ணெய் மக்கி நெடியடிக்கும் 

சுவரில் தொங்கும்.

உச்சிகால பூஜை வேளையில்

சந்தடி இல்லாத நேரத்தில்

கோயிலுக்குள் புகுவோம் சிறுவர்கள் நாங்கள்

தவிலும் பம்பையும் தொங்கும் மேடையில்

துள்ளி ஏறி

தவிலை தப்தப்பென்று அடித்துவிட்டு

அரவமில்லாத மண்டபத்தைத் துடித்தெழுப்பி

பறந்து ஓடுவோம்

ஆமாம்

இன்னமும்

கோயிலின் நடுவில் 

தன் ஆதங்கத்தை 

நூற்றாண்டுகள் அடக்கப்பட்ட பைத்தியத்தை 

ஒலிக்காமல்

இருக்கிறது அந்த வாத்தியம்

கைகளைக் கொண்டு விடுதலை செய்ய முடியாது. 

உள்ளே வா

சந்தடி இல்லாத உச்சிகால வேளையில்

விளையாட்டாக

நுழையும் சிறுவர்களைப் போல உள்ளே வா

உள் ஒடுக்கி

அமர்ந்திருக்கிறது 

தவிலும் பறையும் பம்பையும்

உள்ளே வா

கைகளைக் கொண்டு 

சிலைக்குள் இருக்கும்

குதிரையை

விடுதலை செய்யமுடியுமா

உள்ளே வா. 

(பாடகர் டி. எம். கிருஷ்ணாவுக்கு)

இசையை பற்றி நேரடியாக சுட்டாமல் என்னுள் இசையனுபவமாக நீடிக்கிற கவிதைகள் இருக்கின்றன. அவை மிகை வாசிப்பிற்குள்ளும் மிகை உணர்சிக்குள்ளும் கூட்டிச் செல்லும் அபாயத்தை மனதில் கொண்டு கைவிடுகிறேன். 

தெளிவற்ற பாழ்வெளிகளில், எதனுள்ளும் சிக்காத முடிவின்மையில், மொழிப்படுத்தவியலாதவற்றில் இசை எழுகிறது. அங்கு காட்சிக்கலைகள் துல்லியத்தை இழக்கின்றன, கவிதை சற்று திக்கித் தடுமாறுகிறது. சரியாக அந்தப் புள்ளியில், இருளை உண்ணும் ஒளி போல, இசை நுழைந்து தனது ஆட்சி செலுத்துகிறது. இசையின் சாத்தியங்கள் பிரக்யைக்குள்ளும் மொழிக்குள்ளும்  வசப்பட்டும் வசப்படாமலும் அலைக்கழிக்கும் தருணங்களை கூர்மையாக்கிக் கொண்ட அளவிற்கு, பாடல் வரிகளை விரித்துக் கொண்ட அளவிற்கு, முக பாவங்களை கூர் நோக்கியதைத் தாண்டி, ரசிகனின் ரசனையை புலன் அனுபவப்படுத்தியத்தை விடுத்து, இசையின் தனித்த  நுண்மைகளை தொட்ட கவிதைகள் தமிழில் அரிதாகவே கிடைக்கின்றன.  சொல்லால் அள்ளிவிட்டால் எதோ ஒன்று அதில் பிறழ்ந்து விடுமோ, தப்பி ஓடுமோ,  என்ற ஐயம் காரணமாக இருக்கலாம். 

பேரலையோடு கடல் வந்து நம் காலை தீண்டித் தீண்டிச் செல்கிறது, நாம் கண்டுகொள்வது அலையின் தடங்களைத் தான். உவமையிலா இன்பம் என்றாலும், மொழியின் விந்தை அல்லவா அலையை கடலாக்குவது?

நன்றி: கவிஞர் சங்கர ராம சுப்ரமணியன், கவிஞர் இசை

***

வெய்யில் தமிழ் விக்கி பக்கம்

சுகுமாரன் தமிழ் விக்கி பக்கம்

அபி தமிழ் விக்கி பக்கம்

ஆனந்த்குமார் தமிழ் விக்கி பக்கம்

மதார் தமிழ் விக்கி பக்கம்

இசை தமிழ் விக்கி பக்கம்

பிரமிள் தமிழ் விக்கி பக்கம்

ஷங்கரராமசுப்ரமணியன் தமிழ் விக்கி பக்கம்

***


Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

கடலில் ஊறும் சிறு தும்பி - 2 – பார்கவி

மனிதக் குரலைப் போன்ற கருவி இன்னொன்றில்லை. அதிலும் சொல் சேர்ந்து விட்டால் அது அடையும் உச்சங்கள் அதிகம். சில தருணங்களில் பகுத்தறியும் மனம் இயங...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (13) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (8) இசை (9) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (12) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (231) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (5) சுந்தர ராமசாமி (2) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (27) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (6) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (8) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (13) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (8) இசை (9) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (12) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (231) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (5) சுந்தர ராமசாமி (2) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (27) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (6) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (8) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive