புலிப் பாய்ச்சல்
புலியின் உறுமல்
அப்புலிக்கே கேட்டது
உறுமலைக் கவனிப்பதால்
அதன் காதுகளுக்கு
கடுமையான வலி ஏற்பட்டபொழுதும்
சத்தமாக உறுமி கூர்ந்து கேட்டது
உறுமலின் போக்கில்
லேசாகப் பிசிறடித்தது
அதற்குத் தெரிந்தது
சிறிது சரிசெய்து
இன்னொரு முறை உறுமியது
உறுமல்
நீளவாக்கில் அடர்த்தி குறைந்துபோய்க் கொண்டிருந்தது
உறுமி உறுமி
அதைக் கெட்டித் தன்மைக் கொண்டதாய் மாற்றிக்கொண்டிருந்தது.
(செல்வசங்கரனின் 'பறவை பார்த்தல்' தொகுப்பிலிருந்து..)
***
கவிஞர் செல்வசங்கரன் 1981ல் பிறந்தவர்.பூர்வீகம் விருதுநகர். தற்போது அங்கு கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.அறியப்படாத மலர் ( 2013 ), பறவை பார்த்தல் ( 2017 ),
கனிவின் சைஸ் ( 2018 ), சாலையின் பிரசித்தி பெற்ற அமைதி ( 2020 ), கண்ணாடி சத்தம் ( 2022), மத்தியான நதி ( 2022), வெறுங்கடல் ( 2024 ) ஆகிய ஏழு கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். சாலையின் பிரசித்தி பெற்ற அமைதி, வெறுங்கடல் தொகுப்புகளுக்காக செளமா இலக்கிய விருது பெற்றுள்ளார். விசித்திரங்களை ஒழுங்கமைத்து எழுதுவது, காலம் மீதான ப்ரக்ஞை, நிகழ்காலத்தை பதட்டத்துடன் அணுகுவது ஆகியன இவரது கவிதைக் குணங்கள்.
1. கல்விப்புலம் சார்ந்தவர்கள் இலக்கியம் படைக்க வருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அதில் அவர்களின் கல்விப்புலம் சார்ந்த பிண்ணனி மட்டுமே ஒரு படைப்புச் செயல்பாட்டில் ஈடுபட காரணமாக இருக்கும். உங்கள் கவிதைகள் அப்படி அல்லவே, நீங்கள் உங்களை கவிஞனாக உணரும் இடம் என்று ஒன்று உண்டு. அது அனைத்திற்கும் அப்பாற்பட்ட உச்சபட்ச ஒன்று. அந்த இடத்தில் தான் ஒரு கவிஞன் என்பதற்கு மேல் அந்தப் படைப்பாளிக்கு வேறு எதுவும் மலைப்பாக இருக்காது. நீங்கள் உங்களை கவிஞனாக உணர்ந்த இடம் பற்றிச் சொல்லுங்கள்?
கவிதை என்பது உயிருள்ள ஒரு ஆள் அல்ல. மொழியே அதற்கான மையச்சரடு. மொழியின் தயவில்லாமல் ஒரு கவிதையால் தன்னைத் தானே எழுப்பிக்கொள்ள இயலாது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமான அகவோட்டங்களாலும் புறவயக் காரணிகளாலும் பின்னப்பட்டுக் கிடக்கின்றான். கவிதை எழுதுகிறவன், தான் யாரென்று கவிதை வழியாக நேரடியாக சொல்லாது போயினும் கவிதை அவனை யாரென்று காட்டிவிடும். வெகுநாட்களுக்கு ஒருவன் கவிதையை ஏமாற்ற முடியாது.அது, எழுதுகிறவனை யாரென காட்டியே தீரும்.
என்னையே என் கவிதை வழியாகத் தான் திரை விலக்கி புரிந்து கொள்வதாக நான் நினைத்துக் கொள்கிறேன். இல்லை, கவிதை வழியாக நான் புரிந்து கொள்ளுமாறு மிகச்சரியாக நான் வெளிப்படுகிறேன். என் மனம் மிகவும் சிக்கலான சரடு போன்றது. என் மனத்தைக் கொண்டு இந்த வாழ்வை ஒரு மனிதன் வாழ்வது, தொடர்ந்து நீடிப்பது மிகவும் கடினமான காரியம். இந்தச் சிக்கலில் இருந்து நான் இடையறாது வெளியேற முயற்சிக்கிற போது தான் என்னிடமிருந்து கவிதை பிறந்து கொண்டிருக்க வேண்டும். இந்த இடத்தில் தான் நான் கவிஞனாக ஆகின்றேன் போல…
2. முதல் கவிதையை எழுதியது எப்போது? குடும்பப் பின்புலம்? வாசிப்புப் பழக்கமானது எப்போது?
நான் இளங்கலையில் பொருளாதாரம் படித்தேன். எனக்கான துறை அது இல்லை என பின்னர் தெரிந்து கொண்டேன். இந்தக் காலகட்டத்தில் வாழ்வியல் குறித்து நிறைய கேள்விகள் எனக்குள் எழுந்தன. நடைமுறை வாழ்க்கையில் அதற்கான பதில்கள் எனக்கு கிடைக்கவில்லை. இலக்கியம் தான் சரியானதென்று அப்பொழுது தோன்றியது. முதுகலையில் தமிழ் இலக்கியம் சேர்ந்த பின்பு மனதில் எழுகின்றவற்றையெல்லாம் டைரிக் குறிப்புகளாக பதிவு செய்ய ஆரம்பித்தேன். அந்தக் குறிப்புகள் அன்றாட நிகழ்வுகளல்லாமல் அன்றாடம் தோன்றியவைகளாக இருந்தன. அந்தக் குறிப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவைகளாகவும் இருந்தன. அக்குறிப்புகளையே கவிதைகளாகவும் எழுதிப் பார்த்தேன்.ஆக, முதுகலை முதலாமாண்டு படிக்கும் பொழுது முதல் கவிதையை எழுதினேன்.முதன் முதலாக எனது கவிதைகள் பதிவுகள் என்ற தனிச்சுற்று இதழில் 2007 ல் வெளிவந்தாலும் சிற்றிதழில் 2008 ல் தான் புதிய காற்றில் வெளிவந்தது.
எனது குடும்பப் பின்னணியில் சொல்லிக் கொள்ளும்படி இலக்கிய ஆர்வம் யாருக்குமில்லை. எனது மூத்த சகோதரர் அவரது இளைய வயதில் சிற்சில கவிதைகளை எழுதிப் பார்த்துள்ளார்.என் அம்மா நன்றாக ஓவியம் வரைவார். மற்றபடி வார இதழ்களின் வழியே தான் இலக்கியப் பரிச்சயம். சிறிய வயதிலும் சரி , இப்பொழுதும் சரி நான் தீவிர வாசிப்பாளானெல்லாம் கிடையாது. நினைத்தால் வாசிப்பேன். மாதக்கணக்கில் கூட வாசிக்காமல் இருக்கிறதுண்டு. மனிதர்களை கூர்ந்து நோக்குவது பிடித்தமான ஒன்று. மேலும் உயிரற்ற பொருட்களுக்கு என் வாழ்வில் மிக முக்கிய இடமுண்டு. அவைகள் எனக்கு மனிதர்கள். பதிலிகள். அவையில்லாமல் என் வாழ்வே இல்லை. என் தொகுப்புகளில் இதன் தாக்கங்களை நன்றாகவே உணரலாம்
3. கவிதை உங்களை ஈர்க்கக் காரணம்?
எழுதப்படும் எல்லா இலக்கிய வகைமைக்கும் கவிதையே மூலகர்த்தா. இலக்கியங்கள் அனைத்தும் கவிதை வழியாகவே புரிந்துகொள்ளப்படுகின்றன. ஒரு நல்ல கவிதையை விரித்து ஒரு சிறுகதையாகவும் ஒரு நாவலாகவும் எழுதிப் பார்க்கலாம். எழுதத் துணியும் அத்தனை பேரும் தங்கள் கணக்கை கவிதையிலிருந்தே துவக்குகிறார்கள். கவிதையிலேயே இலக்கியத்தின் அத்தனை ருசிகளையும் அடைந்துவிட முடியும். என் எழுத்துப் பணியை கவிதையிலேயே துவக்கியது போல கவிதையிலேயே முடித்துக் கொள்ளத் தான் ஆசைப்படுகிறேன். புதியவர்களை அணுகத் தயங்கும் என் சுபாவம் தான் என்னை கவிதை எழுதுபவனாக மட்டுமே வைத்துள்ளதாக தோன்றுகிறது. மேலும் நான் மிகப் பெரிய எழுத்துச் சோம்பேறி.
4. பிடித்த பாதித்த கவிஞர்கள் / கவிதைகள்?
எல்லா கவிதைகளுக்குள்ளும் எல்லா வாசகர்களாலும் செல்ல முடியாது. கவிஞன் என்பதற்காக எல்லா கவிதைகளின் ஆத்ம உணர்வினையும் ஒருவனால் தொட்டுவிட முடியாது. நமது மனநிலையையொத்த, நமது சுபாவங்களையொத்த, நமது வாழிடங்களையொத்த ஒருவரது படைப்புகளைத் தான் நம்மால் நெருங்க முடியும். நம்மால் அனுபவிக்க முடியும். ஆனால் கவிதை பல நூறு கோணங்களை உடையது. பல நூறு முகங்களைக் கொண்டது. எவ்வளவு பெரிய படைப்பாளன் ஆனாலும் கவிதையின் சில முகங்களைத் தான் கண்டுணர முடியும். சில கவிதைகளுக்குள் தான் அடியாழம் சென்று காண முடியும்.. கவிஞர்களானாலும் கூட அவர்களாலும் எல்லா கவிதைகளையும் துய்க்க முடியாது. எல்லா கவிதைகளும் எல்லாருக்குமானது அல்ல. அந்த வகையில் எல்லாருக்கும் போல எனக்கும் தேவதச்சன் மாஸ்டராக தெரிகிறார். தற்காலத்தில் ச.துரை, வே.நி.சூர்யா கவிதைகள் எனக்கு மிகவும் நெருக்கமாக உள்ளன. ஆனந்த் குமார் பல்வேறுவிதமான அனுபவங்களை தன் கவிதைகளின் வழி நிகழ்த்திக் காட்டுகிறார்.
5. கலாப்ரியாவின் அதிர்ச்சியூட்டக்கூடிய தருணங்களைப் போன்றவற்றை உங்கள் கவிதைகளில் காணமுடிகிறது. கலாப்ரியா மற்றும் பிற கவிஞர்கள் உங்கள் கவிதைகளில் ஏற்படுத்திய தாக்கம் ஏதாவது உண்டா?
கலாப்பிரியா என்ற பெயரை எனது ஆசிரியர் பு.சி.கணேசன் தான் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். 2002 ல் ஆனந்த விகடனது 75 வது ஆண்டு பவள விழா கொண்டாட்டத்தின் பொழுது 75 முத்திரைக் கவிதைகள் என்ற தொகுப்பைக் கொண்டு வந்தார்கள். அந்த தொகுப்பு என் இலக்கிய வாழ்வில் மிக முக்கியமானது. எனக்கான முதல் தீனியாக அந்த தொகுப்பு அமைந்தது. அதைத் தூக்கிக் கொண்டே திரிந்திருக்கிறேன். அதன் வாயிலாகத் தான் விக்ரமாதித்யன், தேவதச்சன், வண்ணதாசன், மனுஷ்யபுத்திரன் போன்ற ஆளுமைகள் எனக்கு அறிமுகம் ஆயினர், அதில் கலாப்பிரியாவின் ஒரு கவிதையும் இருந்தது. மற்றபடி கலாப்பிரியாவின் தாக்கம் என்னிடம் இருக்கின்றதா என எனக்குத் தெரியவில்லை
6. அசெளகரியமான சூழல் ஒன்றை உங்கள் கவிதைக்குள் தொடர்ந்து காண முடிகிறது. அச்சூழல் ஏற்கனவே இருப்பதாக பாவித்துக்கொண்டு அதற்குள் நீங்கள் உங்கள் கவிதையை நிகழ்த்திக் காட்டுகிறீர்கள். ஒரு அதிர்வு கேட்டுக்கொண்டே இருக்கிறது. சரிதானா?
நான் உண்மையை அவ்வளவு சீக்கிரம் நம்ப மறுப்பவன். (கதவைப் பூட்டியாயிற்று போன்ற உண்மை) நேர்காணல் மாதிரியான முக்கியத் தருணங்களில் கூட ஒருவித எதிர்மறையான மனநிலையை உள்ளே வடிவமைத்துக் கொள்வேன். எல்லாம் நேர்மறையாக நடந்தாலும் கூட அவ்வாறு இல்லையோ என உள்ளே ஏதோவொன்று சொல்லிக் கொண்டிருக்கும். அதனால் என்னால் மகிழ்ச்சியைக் கூட மகிழ்ச்சியாகக் கருத முடியாது. ஒரு எதிர்மறையான மனவமைதி ஒரு ஆறு போல எனக்குள் சலசலத்துக் கொண்டிருப்பதை என்னால் எப்பொழுதும் உணர முடியும். இந்த மனநிலையால் அகந்தைக்கு எதிரான ஒன்றை நோக்கியே சதா தேடிக் கொண்டிருக்கிற நற்கூறு என் வாழ்வில் தேடாத ஒன்று போல அமைந்து விடுகிறது. அதிலிருக்கிற அம்சங்களை என் வாழ்வின் எல்லா சாத்தியக்கூறுகள் மீதும் தெளிக்கப் பார்க்கிறேன்.அது கவிதை மீதும் படும். ஆக, மகிழ்வு என ஒன்றே இல்லாத வருத்தமும்; மகிழ்வு என ஒன்றே இல்லாத சமநிலையும் கொண்டு அகம் இயங்கும்பொழுது அது ஒருவிதமான அதிர்வினை எனக்குள் எழுப்பலாம். என் கவிதைகளை வாசிக்கும் வாசகர்களுக்கும் அந்த அதிர்வினைக் கேட்கக் கூடிய எல்லா சாத்தியக் கூறுகளும் உள்ளன
7. உங்கள் கவிதைகள் குறித்து பேச எழுதியபோது அதற்கு நான் இட்ட தலைப்பு - 'கவிதைக்குத் திரும்புதல்'. எப்படி கவிதைக்குத் திரும்பிக் கொண்டே இருக்கிறீர்கள்? அந்த மனநிலை, கவிதை முயற்சியிலிருந்து கவிதையைத் தொட்டுவிடுவது தொடங்கி, குறுகிய காலத்திற்குள் ஏழு தொகுப்புகள் எப்படி?
ஒருவன் எல்லா நேரத்திலும் படைப்பு மனத்தோடே இயங்க முடியாது. கவிதை எழுதத் துவங்கிய பின் பல ஆண்டுகள் ஒரு கவிதை கூட எழுதாமல் போன காலங்கள் என் வாழ்வில் உண்டு. அக்காலகட்டத்தில் ஏதோ ஒன்றின் மீது சாய்ந்து கொண்டு இந்த வாழ்வை நகர்த்திச் சென்றிருக்கிறேன்.
லௌகீக வாழ்வில் படைப்பு சார்ந்த ஒருவன் சுதந்திரமாக இயங்குவதற்கு பல்வேறுபட்ட தடைகள் இங்குள்ளன. எல்லா படைப்பாளிகளும் இதைக் கடந்து தான் வந்திருக்கிறார்கள் என்றாலும் எல்லாரும் கடந்து வந்த வழி எல்லாருக்கும் பொருந்தாது. கடந்த பத்தாண்டுகளாகத் தான் குடும்பம் சார்ந்த நிலையில் படைப்பில் ஒரு சுதந்திர வெளியை என்னால் உருவாக்கிக் கொள்ள முடிந்துள்ளது. நான் பார்க்கின்ற பணி அமைவாலும் எனக்கு எழுத போதிய நேரம் வாய்த்துள்ளது. மனிதர்களுக்கு நெருக்கடி எல்லா காலகட்டத்திலும் இருக்கக்கூடிய ஒன்று தான். அதைத் தள்ளி நின்று அவதானிப்பதற்கு போதிய நேரம் அமைய வேண்டும். பெரும்பாலானவர்கள் சம்பிரதாயரீதியான பொருளாதாரத் தேடல் வாழ்வில் படைப்பு மனநிலையிலிருந்து தள்ளிப் போய்விடுகிறார்கள். தொடர்ந்து எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிடுகிறார்கள். உபரியான என்னுடைய நேரங்களிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள முடிவதாக நான் நினைக்கின்றேன். தவிரவும் ஒரு கவிதையை எழுதி முடித்த பின்னால் வருகின்ற அந்த மனச் சமநிலைக்காக தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருக்கிறேன்.
எனது முதல் தொகுப்பான அறியப்படாத மலர்க்கும் (2013, 2010 ல் வெளிவர வேண்டியது) இரண்டாவது தொகுப்பான பறவை பார்த்தல் தொகுப்புக்கும் (2017) நீண்ட இடைவெளி இருந்தது. இந்தக் காலத்தைத் தான் கவிதையில் என்னுடைய தேக்க காலமாக நினைக்கிறேன். பறவை பார்த்தல் வருகின்ற வரை அவ்வளவாக அறிமுகம் இல்லாதவனாகவே கவிதையில் இயங்கி வந்தேன். 2008 முதலே சிற்றிதழ்களில் எழுதி வந்தாலும் அந்தச் செயல்பாடு உதிரி நிலையிலேயே இருந்து வந்தது. எனது முதல் தொகுப்பிலும் பதிப்பகம் சார்ந்து நிறைய கசப்பான அனுபவங்களே எனக்கு இருந்தது. 2008 லிருந்து 2017 வரை கவிதை பிரசுரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இயங்கிக் கொண்டிருந்த நிலையில் மணல் வீடு அறிமுகத்திற்குப் பின் தான் நிறைய சிற்றிதழ்கள் என் கவிதைகளை தொடர்ந்து வெளியிட்டன. பறவை பார்த்தல் தொகுப்பிற்குப் பின்னான எட்டு ஆண்டுகளில் மணல் வீடு, காலச்சுவடு, சால்ட் பதிப்பகங்கள் வாயிலாக தொடர்ந்து ஐந்து தொகுப்புகள் வெளிவந்துவிட்டன. மொத்த தொகுப்புகள் சார்ந்து கால அளவில் இவ்வாறு சீரற்ற நிலையிலே தான் இயங்கி வந்திருக்கிறேன். குறிப்பிட்ட காலகட்டத்தில் தொகுப்பு வரவேண்டும் என்று நினைத்து எதையும் செய்ய முடியாது. அதைக் கவிதையே முடிவு செய்யும். மேலும், எந்தக் கவிஞனும் கவிதைக்குத் திரும்புவதையே தான் விருப்பமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருப்பான். நான் கவிதைக்கு திரும்பிக் கொண்டே இருக்கிறேன் என நீங்கள் கூறுவதைக் கேட்க மகிழ்ச்சியளிக்கிறது
8. காலம் என்பதை ஒழுங்குபடுத்தியும், கலைத்தும் ஆடும் மனநிலையை உங்கள் கவிதைகளில் தொடர்ந்து பார்க்க முடிகிறதே?
இதைச் செய்ய வேண்டுமென்ற முன் உணர்வில் நான் எதையும் கவிதையில் செய்ய முயலுவதில்லை. இதை எழுதியே ஆகவேண்டுமென்ற எந்த பிரயத்தனமும் செய்து பார்ப்பதுமில்லை. என்னுடைய பல கவிதைகளில் ஒரே பொருள் வேறு வேறு விதமாக பயின்று வந்திருக்கலாம். அதைத் தவிர்க்கவும் நான் பெரும்பாலும் முயல்வது கிடையாது. சில பொருள்கள் அதுவாகவே திடீரென்று என் கவிதையில் காணாமல் போய்விடும். என் கவிதை என்ன கோருகிறதோ அதற்கு நான் இழைகிறேன். காலம் தின்று செரிக்கக்கூடிய ஒரு பொருளா என்ன…காலம் தருகின்ற மயக்கிலிருந்து எந்தக் கவிஞன் தான் தப்பித்துச் செல்ல முடியும்.
9. காலவெள்ளம், தவளையின் சுயசரிதை போன்ற உங்களின் நிறைய கவிதைகளில் நிகழ்காலம் கடப்பதன் பதட்டத்தை இறந்த காலத்திலும் எதிர்காலத்திலும் நின்று பார்க்கும் ஒருவன் வெளிப்படுகிறான். உங்கள் கவிதையுலகம் நிகழ்காலத்தை ஒரு குறுகிய சந்து போல உருவகப்படுத்துவதாகத் தோன்றுகிறது. குட்டிச் சந்துக்குள் நடந்து போகும் குண்டு மனிதன். ஏன் அப்படி?
கால வெள்ளம் கவிதை கடைசியில் இப்படி முடியும்
தலை அது இருக்கிற இடத்தில்
இருப்பது போலத்தான்
கால வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கிறது
இப்போதைக்கு
கால வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் ஏன் தலையை உருட்டிக் கொண்டு ஓடவில்லை. தலையின் வடிவம் நல்ல உருண்டை. தலையைக் கொய்து கீழே வைத்தால் காற்றுக்கோ நீருக்கோ அடித்துச் செல்லக்கூடியது. ஏன் தலை உருண்டு ஓடவில்லை. அப்பொழுது காலம் வெள்ளம் இல்லையா.இல்லை தலையைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கின்றதா.தலையைத் தடவிப் பார்க்கிறேன். இப்போதைக்கு தலை இருக்கிறது.
இது அந்தக் கவிதை பேசுகின்ற விடயம்.
என் முன்னால் தெரிகின்ற வெள்ளம் எனக்கு காட்டாமல் எனக்குத் தெரியாமல் எங்கோ கரை புரண்டு ஓடிக்கொண்டிருக்கின்றது. அதன் ஒரு பகுதியையே என்னால் பார்க்க முடிகிறது. ஆனால் அந்தப் பகுதி மட்டுமே முழு வெள்ளம் அல்ல. என் முன்னால் தெரிகின்ற இந்த மிகச் சிறிய பரப்பளவு பின் எனக்கு எப்படி போதுமானதாகும்
10. கதைத் தன்மை கொண்ட கவிதைகளை உங்களிடத்தில் பார்க்க முடிகிறது. சிறுகதை வடிவத்திற்கும் கவிதைக்குள் கதையம்சம் வருவதற்கும் உள்ள வேறுபாடாக நீங்கள் நினைப்பது என்ன?
ஞானக்கூத்தன் கவிதைகளில் இந்த கதைத் தன்மையை உணரலாம். ஆனாலும் அவர் எல்லா விதமான கவிதைகளையும் முயன்று பார்த்திருக்கிறார். பொதுவாக இலக்கியத்திற்கு கவிதை, சிறுகதையென நாம் தான் பெயர் வைக்கின்றோம்.இப்பொழுது நுண்கதை என்ற புதிய வடிவம் வந்துவிட்டது. ஒரு காலத்தில் அதையே நாம் கவிதை என்று கூட அழைத்திருக்கின்றோம்.அந்த வடிவில் ராணி திலக் ஒரு தொகுப்பில் எழுதிப் பார்த்திருக்கின்றார்.மேலும் சிலர் முயன்றுள்ளார்கள். கோபி கிருஷ்ணன் டைரிக்குறிப்பு பாணியிலே கூட சிறுகதையை செய்து பார்த்திருக்கிறார். அளவின் வடிவிலே தான் கவிதை, சிறுகதை என பிரித்து வைத்திருக்கின்றோம். நுண்கதை என்ற புதிய வடிவம் வந்து எல்லாவற்றுக்குள்ளும் எல்லாவற்றையும் கொண்டு வந்துவிட்டது. அப்படி சொல்லமுடியாது.ஏற்கனவே எல்லாவற்றுக்குள்ளும் எல்லாம் இருக்கிறது தான். இப்பொழுது பிரித்தறிந்து கொள்கிறோம் அவ்வளவே…
11. குறுங்கவிதைக்கும் நீள்கவிதைக்கும் என்ன வித்தியாசம்? உங்கள் கவிதைகளில் அதை எவ்வாறு வேறுபடுத்திக் காட்டுகிறீர்கள்?
ஏற்கனவே கூறியது தான். கவிதை என்ற ஒன்று மட்டுமே உண்டு. ஒவ்வொரு கவிஞனுமே வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு வடிவங்களில் ( குறுங்கவிதை, நீள்கவிதை என ) முயற்சித்துப் பார்க்கவே செய்கின்றான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நீள்கவிதை காலாவதியான ஒன்று என்றே படுகிறது. முக்கியமாக நீள்கவிதை, வாசிப்பவர்களை கொட்டாவி விட வைத்துவிடும். 15 வரிகளுக்குள்ளாகவே கவிஞன் தன் உணர்வுகளை வாசிப்பவர்களுக்கு நேர்த்தியாக கடத்திவிட முடியும். அதற்குள் எழுதுவது தான் சவாலானது என்று நினைக்கின்றேன்
12. கவிதை அல்லாத பிற வடிவங்கள் குறித்த உங்களின் பார்வை? வாசிப்பு? எழுதிப் பார்த்ததுண்டா?
கவிதை மேலானது என நான் கூறிக்கொண்டாலும் இலக்கியத்தின் ஒரே வடிவம் எல்லாரையும் திருப்திபடுத்தாது. நானே ஒரு குறிப்பிட்ட நாளின் மனநிலையில் கவிதையை கீழே வைத்துவிட்டு சிறுகதையை வாசித்துக் கொண்டிருக்கலாம்.சில நாளின் மனநிலை வாசிக்க கவிதையைக் கோரும். கவிதையில் இருக்கும் பல்வேறுவிதமான உள்ளடுக்குகள் தான் கவிதையை சிறந்த வடிவாக்குகிறதென நினைத்துக் கொள்கிறேன். அதே அடர்த்தியோடு, உள்ளடுக்கோடு ஒரு சிறுகதையை நீண்டதாக எழுதும் பொழுது எழுதுபவனே ஒரு கட்டத்தில் சோர்வடைந்துவிடுவான். பின் வாசிப்பவர்களை சொல்லவா வேண்டும். மிகவும் ஆசுவாசமான மனநிலையில் ஒரு சிறுகதையை வாசிக்கலாம். ஆனால் கவிதையை எழுதுவதற்கும், வாசிப்பதற்கும் ஒரு பிரத்யேக மனநிலை வாய்க்க வேண்டும்.தற்சமயம் வரை ஒரு சிறுகதை கூட நான் எழுதிப் பார்த்ததில்லை
13. சமகால தமிழ்க் கவிதை சந்திக்கும் சவால்கள் என்னென்ன? குறைகள் நிறைகள் என்னென்ன?
எல்லா காலத்திலும் இருந்துள்ள, இருக்கின்ற நிகழ்காலம் எப்பொழுதும் சவாலானதே. ஏனெனில் நிகழ் காலத்திற்கு இறந்த காலம் என ஒன்றுள்ளது. இறந்த காலத்திற்கு இந்தப் பிரச்சினையில்லை. இது கவிதைக்குமே பொருந்தும். வேறு மாதிரி முயன்று பார்ப்பது, இதுவரை இல்லாத மாதிரி செய்து பார்ப்பது என்கின்ற நெருக்கடி கவிதைக்கும் உள்ளது. இது கவிதையை வேறு தளத்திற்கு கொண்டு செல்ல முயலுமென்றாலும் இதில் செயற்கைத்தனங்கள் வந்து பரவும் ஆபத்தும் உள்ளது. ஒரு கவிஞன் நகர்ச்சியை தன்னுடைய கவிதைகளிலிருந்து செய்து பார்த்தானேயானால் அது உண்மைக்கு மிகவும் நெருக்கமானதாக அமையும். பக்கத்துக் கவிதைகளில் நிகழுகின்ற மாற்றங்களை தானும் செய்து பார்க்க ஆசைப்பட்டால் போலிகள் வந்து குவிந்து விடலாம். சமகாலத்திற்கு இருக்கக்கூடிய சவால்களாகவும், நிறை குறைகளாகவும் இவற்றையே பார்க்கிறேன்
14. அயல்மொழிக் கவிதைகள், மரபுக் கவிதைகள் வாசிப்பதுண்டா? அதில் உங்களுக்கு பிடித்தவர்கள்? உங்கள் மேல் தாக்கத்தை செலுத்தியவர்கள் யார்?
அயல் மொழிக் கவிதைகளை முக நூலில் வாசிக்க முடிகிறது. க.மோகனரங்கன் தொடர்ந்து கவிதைகளை மொழிபெயர்த்து முகநூலில் பதிவிடுகிறார். மேலும் சிற்றிதழ்கள், இணைய இதழ்களில் வருகின்ற மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் வாசிக்கிறேன். மொழிபெயர்ப்புக் கவிதைகளுக்கான மூல ஆசிரியர்கள் முகம் தெரியாதவர்கள் என்பதால் எனக்கு பெயர்கள் ஒரு விசயமாக இல்லை. அவர்களின் நிலமும் அப்படியே. தற்காலத்தில் கவிதைகளில் நிகழுகிற எல்லா பரிமாணங்களையும் ஒரு கவிஞன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் இணைந்து போகின்றோமா விலகிப் போகின்றோமா என்பது ஒரு பொருட்டல்ல. தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்
15. நீங்கள் ஒரு ஆசிரியர் என்பதால் நவீன கவிதையை இளைய தலைமுறையினரிடம் எளிதாக எடுத்துச் செல்லும் வாய்ப்பு உள்ளது.ஒரு ஆசிரியராக நவீன கவிதையை இளைய தலைமுறையிடம் கடத்தி விடுவதில் உங்களின் பங்களிப்பு என எதுவும் உண்டா?
வாசிப்பு நிலையில் எல்லா படைப்பாளர்களும் வெகுஜன எழுத்தாளர்களிடமிருந்துதான் தீவிர இலக்கியத்திற்கு வந்து சேர்ந்திருக்க முடியும். இதில் விதிவிலக்கு இருக்கின்றதாவெனத் தெரியவில்லை. 30, 35 ஆண்டுகளுக்கு முன்பு வார இதழ்கள் வாசிக்கும் பழக்கம் எழுத்துலகில் புகுவதற்கான ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. தொலைக்காட்சி கூட ஆடம்பரமாகிப் போன அத்தகைய காலகட்டத்தில் அம்புலிமாமா, கோகுலம் போன்ற சிறுவர் இதழ்கள் , காமிக்ஸ் கதைகள் வாசிப்பவர்களை புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்ல உதவி புரிந்தன. இதன் மூலம் ஒரு கற்பனையான புதிய உலகத்தில் இளமைக்கால வாழ்வை முந்தைய தலைமுறை கழிக்க முடிந்தது. இன்று வார இதழ்கள், காமிக்ஸ் கதைகள் இடத்தை வீடியோ கேம்ஸ்கள் பிடித்துவிட்டன. இதிலும் கற்பனைகள் இருக்கின்றன. இதிலுள்ள கற்பனை, காட்சியாகவே பார்வையாளர்களுக்கு கடத்தப்படுவதால் அதைத் தாண்டிய ஒரு புதிய உலகத்திற்குள் இளைய தலைமுறையினரால் நுழைய முடிவதில்லை. இதையும் தாண்டி ஒவ்வொரு வருடமும் நவீன இலக்கியப் புரிதல் உள்ள குறைந்த பட்சம் ஒரு மாணவரையாவது கல்லூரி வளாகத்திற்குள் கண்டு விடுகிறேன். தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவருக்கு நவீன இலக்கியம் ஒரு தாளாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதன் வாயிலாக நவீனக் கவிதைகள் அறிமுகப்படுத்தப்படுகிறன. தற்காலத்தில் எழுதுகின்ற அநேகம் நவீனக் கவிஞர்களின் பெயரையேனும் அவர்கள் மனத்தில் இருத்திட வெகுவாக முயன்று வருகிறேன். ஒரு மாணவரேனும் நவீன இலக்கியப் புரிதலோடு கல்லூரியிலிருந்து படித்து வெளியேறுவதை நல்ல எண்ணிக்கையாகவே காண்கிறேன். எம் கல்லூரியில் படித்து முடித்து சமீப காலத்தில் வெளியேறியதில் பெரு.விஷ்ணுகுமாரை நல்ல விளைச்சலாகப் பார்க்கிறேன்
16. கவிதை மொழியில் உரைநடைத்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?
நவீன கவிதை ஒரு காலகட்டத்தில் சிடுக்கான மொழியைக் கொண்டிருந்தது.சொற்களை எவ்வளவு திருக முடியுமோ அவ்வளவு திருகினார்கள். புரியாத ஒரு மொழியில் எழுதுவது தான் நவீன கவிதை என்ற புரிதலை பொதுப்புத்தியில் ஏற்படுத்தியிருந்தார்கள். இந்த காலகட்டத்தில் தான் கவிதை ஒரு வித அயர்ச்சியைத் தந்தது. இதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நகர்ந்து கவிதை இன்றைய உரை நடை வடிவதிற்கு வந்து சேர்ந்துள்ளது. இந்த நகர்ச்சிக்கு ஒரு சில பத்தாண்டுகள் தேவைப்பட்டுள்ளன. கவிதையின் ஆகச்சிறந்த வடிவமாக உரை நடை வடிவத்தையே சொல்வேன். உரை நடை வடிவில் எழுதுவது தான் இருப்பதிலேயே கடினம். எளிமையாக சொல்லும் பொழுது ஆழம் விடுபட அநேக வாய்ப்புகளுண்டு. எளிமைக்குள் பொருளைப் புதைக்க தான் இன்றைய நவீன கவிஞர்கள் அதிகம் மெனக்கெடுகிறார்கள். உரைநடையில் இருக்கின்ற எளிமை அது எளிமை அல்ல. அன்றைய காலகட்டத்தில் இருந்த மொழித் திருகலை விட கடினமானது.
17. உங்களுக்குப் பிடித்த உங்களின் ஒரு கவிதை?
எனது பறவை பார்த்தல் தொகுப்பில் இடம் பிடித்த ஒரு கவிதை.
இரைச்சல்
வேண்டுமென்றே
பல்லை இந்தச் சுத்தியல் கொண்டுடைத்து
கதற முடியும்
இப்பொழுது
சுத்தியலைக் கீழே வைத்துவிட்டு
அந்தக் கடையில் போய்
டீ குடித்து வரலாம்
அடித்துவிட்டால்
கண்டிப்பாக உட்கார்ந்து அழவேண்டும்
இதற்குப் பின் நிறைய கவிதைகளை எழுதிவிட்டேன். இதை விட நிறைய நல்ல கவிதைகள் எழுதியிருப்பதாகவும் நம்புகிறேன். ஆனாலும் இந்தக் கவிதை என்னுடைய இருப்பைத் துல்லியமாக காட்டக்கூடிய ஒன்று. இந்தக் கவிதையை இன்னும் வேறு வேறு விதமாக வேறு வேறு பரிமாணங்களில் இன்றும் எழுதிப் பார்க்கிறேன். அந்தக் கடையில் போய் டீ குடிப்பதைத் தான் ஒரு தியான நிலை போல தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறேன். அது ஒன்று தான் எனக்குப் பாதுகாப்பு
18. டவுண்லோட் ஆகிக்கொண்டிருக்கும்
அவ்வீடியோ மீது
வெள்ளையான புழு போன்ற சுழி
சுற்றிச் சுற்றி வர
அது இன்னும் சுற்றிக்கொண்டேயிருக்கிறது
என்ற வரிகளை எழுதியுள்ளீர்கள். டவுண்லோட், வாட்ஸப், க்ரிஞ்ச் போன்ற நவீன சொல்லாடல்களை கவிதையில் பயன்படுத்துவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
நவீன சொல்லாடல்கள் நவீன கவிதைக்குள் வெற்றிகரமாக எழுதப்பட்டுள்ளன என்று நினைக்கிறீர்களா?
கவிதைக்கு தற்காலம் வரை எந்த வரையறையும் கிடையாது. எது கவிதை என்பதிலே கூட இன்று வரைக்குமே குழப்பமே நிலவுகிறது. இது கவிதையா இல்லையா என்பதை அனுபவத்தால் மட்டுமே விளங்கவோ விளக்கவோ முடியும். கவிதை எதுவென தெரிந்து கொள்வதற்கு ஒருவன் ஆயிரம் கவிதைகளைக் கடந்து வந்திருக்க வேண்டும். கார் ஓட்டப் பழகும் பொழுது கார் சரியாக ஓட்டுகின்ற அந்த ஒரு இடத்தை அடைய பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருப்போம். கார் நன்றாக ஓட்டிய பிறகு அந்த சரியான இடம் இதுநாள் வரை எங்கிருந்தது என சொல்லமுடியாது. ஆனால் சரியாக ஓட்டிக்கொண்டிருப்போம். அது போல தான் கவிதையை உணருகின்ற வரை கவிதை பிடிபடாமல் தான் இருக்கும். உணர்ந்த பின்னால் தான் கவிதையின் அந்தராத்மா புலனாகும். அப்படி தெரிந்த பின்னால் கவிதையில் சரி, தப்பென்று எதுவும் இல்லை. கவிதைக்கு ஒரு வரையறை இதுவரையே கூட வகுக்கப்படவில்லை. அப்படி வகுக்கிற இடத்தில் கவிதை காணாமல் போகத் தொடங்கிவிடும். வரையறையின் வழியே கவிதையை அடைய முயற்சித்தால் வருவது கவிதையாக இருக்காது. ஒரு நல்ல கவிதைக்கு அடைக்க என வாசல்களே கிடையாது
19. கால், மூக்கு முடியை வெட்டுதல் என ஒரு தருணத்தில் உணரும் ஒரே உணர்வை நேர்கோடாகக் கவிதையாக்குகிறீர்கள். அது ஒரு விசித்திரத்தையும் பேசுகிறது. அதே சமயம் ஒரு ஒழுங்கமைவுக்குள்ளும் அமைகிறது. இந்த அம்சத்தை உங்களின் நிறைய கவிதைகளில் காண முடிகிறதே?
நம் கையிலோ காலிலோ உள்ள விரல்களை வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தால் நாமே ஒரு ஜந்து மாதிரி தெரிவோம். இவ்வுலக வாழ்வில் விநோதங்களுக்கு என்ன பஞ்சம்…
20. உங்களின் கவிதைக்குள் வெளிப்படுகிற ஆளுமையின் தோற்றமாக என் மனம் ஒரு ஒழுங்கற்றவனையே கற்பனை செய்கிறது. இந்தப் பிறழ் உங்களுக்குள்ளும் உங்கள் கவிதைகளுக்குள்ளும் நிகழ்வதுதானா? நிகழ்ந்தால் ஏன்?
இந்தக் கேள்விக்கான பதில் இதுவரை அளித்த பதில்களுக்குள் இருப்பதாக நம்புகிறேன்.
***
கவிஞர் செல்வசங்கரனின் சில கவிதைகள்,
1
புதுமனை புகுவிழா
புதுமனை புகுவிழாவிற்கு வந்தவர்கள்
ஒவ்வொரு அறையாகப் பார்த்து வர
விநாடி நேரத்தில் எல்லாவற்றையும் கட்டிமுடித்தார்கள்
இவ்வளவு நாட்களாக
நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம்
கட்டி அடுத்து அடுத்து என தாவிக்கொண்டிருந்தார்கள்
அவர்கள் கட்டுகிற வீடென்பதால்
எல்லாரிடமும் சந்தோஷம் பொங்கி வழிந்தது
ஒரு நொடியில் கட்டி
ஒரு நொடியில் வாழ்ந்து முடித்து
ஒரு நொடிக்குள்ளாக
எல்லாரும் கிளம்பிச் சென்றார்கள்
எவ்வளவு சிறிய காலத்துக்குள்
அவ்வளவு பெரிய வாழ்வு வாழ்ந்து முடிந்துவிட்டது
ஒரு நல்ல நாளாகப் பார்த்து
புதியவீட்டில் குடியேறி
ஜவ்வாக அந்தக் காலத்தை
நாங்கள் இழுக்கத் துவங்கினோம்
2
கற்பனை
என்ற சொல்லைத் தூக்கி
தண்ணீரில் போட்டனர்
காலம் எந்த அளவிற்கோ
அந்த அளவிற்குக் கணம்
கற்பனை என்பதால் மிதந்து கொண்டிருந்தது
3
பறவை பார்த்தல்
றெக்கையடித்து
தன்னை மட்டும்
இழுத்துப் பறந்தவண்ணமிருந்தது
மஞ்சள் எனச் சொல்ல முடியாத பறவை
பறப்பதால்
அது சாலைவெளியில்
ஓடித் திரிகின்ற பேருந்து எதையும்
நிறுத்த முடியாமற்போயினும்
வெளிர்நீலனிற வானை
சாலை வெளியில்
திடீரென
தோற்றுவிக்கமுடியும்
4
நீர்ப் புரிதல்
நீரை எடுத்து என் மீது ஊற்றினேன்
ஒரு குவளையைப் போல உடம்பு
வாங்கிக் கொள்ளுமென நினைத்தால்
ஏமாந்து போவோம்
தரை ஒரு அண்டாவைப் போல
எல்லாவற்றையும் வாங்கியது
எல்லாம் நீருக்குரிய நீர் இது ஒரு நீர்ப் புரிதல்
நீரை வைத்து நீரைக் கழுவி விட்டாற் போல
எல்லாம் தெளிவானது
0 comments:
Post a Comment