நீர்
1
கண்கள் கலங்கி
முகமே குளமான
நீர் நிலை
ஆழம் காண மூழ்குகிறேன்
இரவில் அமிழ்ந்து தரை படிந்த நிலாவில்
பாதம் பதிய
வசதியாகத் தியானத்தில்
அமர்ந்து விடுகிறேன்
தியானவெளியாகவும் மையப் போதமாகவும் குளம்
ஆனால் இது
அந்தரத்தில் மிதக்கிறது
2
மழையைப் போல நீ
எனக்கு எல்லாம் தந்தாய்
3
தூறலாய்த் தொடங்கி
படிப்படியாக வலுத்து
ஒவ்வொரு இழையாக இணைந்து
சலசலவென ஓடோடி
தியானத்தின் உச்சியிலிருந்து உன்னை
அவிழ்த்துக் கொண்டிருக்கிறாய்
அருவி
4
நீ நடந்து செல்லும் பாதையெல்லாம்
ஈரம்
அது உனது பண்பு
என் உடலெங்கும் பலவாகி ஓடுவது
ஒரேவொரு ஆறு
5
கடலைப் போல ஒரு
உடல் நீ
கவிதையைப் போல ஒரு
கடல் நீ
6
குளம் மழை அருவி ஆறு கடல்
எல்லாம் நீ
இப் பெயர்களில் பொருந்தும்
வடிவம் நான்
7
குளம் தியானம்
மழை குதூகலம்
அருவி கொண்டாட்டம்
ஆறு திருவிழா
கடல் கலவி – எல்லாம்
மனசெனச் சுழலும் ஒரு துளி
8
மழையைப் போல நீ
எனக்கு எல்லாம் தந்தாய்
அந்தர நதி
பேரழுகையின் உப்பு நதியில்
வழித்தவறிச் சேர்ந்த
பாய்மரத்தில் நான்
இந்தப் பாய்மரம் பலநூற்றாண்டுகளாகக்
கரை தொட்டதில்லை
என்னைக் கடந்து செல்லும் பறவையே
உனது கேவல் எதற்காக
தரைதொடாத உனது பயணமே
எனது பாய்மரத்திற்கு வழிகாட்டலாய் அமைய
என்னைக் கடந்து செல்லும் பறவையே
எனது கால்களுக்குக் கீழேயும்
தலைக்கு மேலேயும்
விரிந்து நீளும் நீல நதிகள்
யாரின் பேரழுகையில் நாம்
மிதந்து செல்கிறோம்
நூற்றாண்டுகளாக
***
ரமேஷ் பிரேதன் தமிழ் விக்கி பக்கம்
***
0 comments:
Post a Comment