கடலில் ஊறும் சிறு தும்பி - 1 – பார்கவி

ஆத்மாநாம்
ஓர் எல்லையில், அழகின் சாம்ராஜ்யத்தில் அனைத்துமே பகுப்பற்றது. தஞ்சாவூர் கோபுரம், கம்பன் மொழி, பிறந்த நாய்க்குட்டி, வாய் மலர்ந்த அல்லி –இவை எல்லாவற்றையும் மனித மூளை அழகின் பிரதிபலிப்புகளாகவே விளங்கிக்கொள்கிறது. அழகின் வீரியத்தை வெளிப்படுத்தும் வழிகளில் மிக நெருக்கமானவை என்று கருதப்படுவது இசையும் கவிதையும். பண்ணோடு இணைந்த பாடல், ஓசை நயம் கொண்ட சொற்கள், சந்த ஒழுக்கிலமைந்த செய்யுள், இசைத்தன்மை கொண்ட வரிகள் என்று பல நிலைகளில் கவிதை இசையோடு அணுக்கமாகவே வாழ்கிறது. கவிதை என்றாலே அது ‘தட்டச்சு இயந்திரத்தில் பியானோ வாசிப்பது’ என்கிறார் கவிஞர் இசை. ஆனாலும், அவை தனிமொழிகள், கவிதையின் அலகு சொல், இசையின் அலகு ஒலி. எத்தனை அணுக்கமான வெளிகளில் இயங்கினாலும், இசையும் கவிதையும் வேறுபட்ட குணங்கள் கொண்ட தனித்தனி நிலங்கள். அவற்றை ஆளும் அரசியர் உயிர் தோழிகள் என்பதால் அவை நட்புணர்வு கொண்ட அண்டை நாடுகளும் கூட. 

சங்கீதத்தை பாடுபொருளாகக் கொண்டு, அதை வாழ்வின் ஒரு கூறாக, ஒரு தத்துவமாக, இயற்கையின் நுண்ணிய சரடாக, அரூபத்தின் வெம்மை மிக்க தொடுகையாக, ஆடலாக, பேருணர்ச்சியின் பெருவெளியாக, கலை அனுபவமாகக் கொண்டு அமைந்த நவீன கவிதைகளை என் வாசிப்பில் இருந்து முன்வைக்கிறேன். ஓர் அனுபவத்தை தனித்த வகைமையாக பாவித்து கவிதைகளை தொகுப்பது உகந்த செயல் அல்ல என்றாலும் ஒரு கலைக்குள் இன்னொரு கலை வந்தமரும் புள்ளியை, கவிதைக்குள் இசையின் நுண்ணுணர்வுகள் வெளிப்படும் இடத்தை தொட்டுகாட்டலாம் என்று தோன்றுகிறது. பாடுபொருளை அடையாளப்படுத்தும் முத்திரைச் சொற்களோ, குறிப்போ இல்லாதிருக்கும் கவிதைகள் ஏராளம் என்று அறிகிறேன். கூடவே என்னுடைய வாசிப்பின் எல்லைகளும் சில விடுபடல்களை இட்டு வரும். 

இசையை பாடுபொருளாக கொள்ளும் பொழுது சில சிக்கல்கள் எழுகின்றன. அந்தியை, குழந்தையை, கண்ணீரை, அழகை, காதலைப் பாடுவது போல இசை குறித்து பேச முடிவதில்லை. காதலியை கவருவதற்காக முதல் முறையாக சமைக்கும் காதலன் செய்த பண்டம் போல, ஏதோவொரு ருசி அதீதமாகவோ குறைந்தோ நிற்கிறது. அவனுடைய நேர்மையான அசட்டுத்தனத்தை ஏற்றுக்கொண்டே தான் நாம் கவிதைக்குள் நுழைகிறோம். 

செவ்விசைக் கருவி (சி மணி)

செவ்விசை என்றால் இப்போதெல்லாம்

மாண்டலின் உண்டு; கிதார் உண்டு.

சாக்ஸஃபோன் கூட உண்டு. இனி

எதுவெல்லாம் செவ்விசைக் கருவி

என்றாகுமோ தெரியாது. ஆனால்


இப்போதும் சரி அப்போதும் சரி

செவ்விசை என்றால், நீதான்

உண்டு, சாரங்கி.

சி. மணி
ஒற்றைப் பொது அனுபவமாக மாறும் தன்மையை இசை தன்னியல்பாக கொண்டிருப்பதில்லை. சட்டென வடிவத்திற்குள் சிக்காத இரு வினோத உயிர்கள் சங்கமிக்கும் புள்ளியில் தான் இசையாலான கவிதைகள் பிறக்கின்றன. குழந்தை  வானத்தைத் தடவிப் பார்த்து அதற்கு ‘ஆனை’ என்று பெயரிடும் காரியம் இது. இசை நம் எல்லோரையும் மொழி திருந்தாதவர்களாக ஆக்கி விளையாடுகிறது. 

குளிரில்

கல் போல் உறைந்து

எங்கோ விழுந்துவிட்ட 

பாடலை

இரவு முழுதும் 

பீதியுடன்

தேடிக்கொண்டிருந்தது

பறவை (போகன் சங்கர்)

எத்தனை புற வயமாக சொல்ல முற்பட்டாலும், இசை ரசனை மிக மிக அந்தரங்கமானது,  அகவயாமனது. சகாவின் விளையாட்டும் காதலின் இனிமையும் அருமருந்தின் ஆதுரமும் துயரத்தின் பரிச்சயமும் அதில் ஏற்றி ஏற்றி மேருகேற்றப்பட்டிருக்கிறது. நெகிழ்ந்து சிதறிப் பரவுவத்தின் இன்பமாக துய்க்கப்பட்டிருக்கிறது. மயக்கி மதியிழக்கச் செய்து வேறோர் உலகத்திற்கு அழைத்துச் செல்லும் ஆன்மிக அனுபவமாகவே இசை விவரிக்கப்பட்டிருக்கிறது. அந்த காணா உலகமும் சேர்ந்தே இசை என்று நாம் அறிவது.

இசை/ஓசை (ஆத்மாநாம்)

வயலினில்

ஒரு நாணாய்

எனைப் போடுங்கள்

அப்பொழுதேனும்

ஒலிக்கிறேனா

எனப் பார்ப்போம்


அவ்வளவு துல்லியமாக

அவ்வளவு மெல்லியதாக

அவ்வளவு கூர்மையாக


எல்லா நாண்களுடனும்

ஒன்று சேர்ந்து

ஒலித்தபடி


உள் ஆழத்தில்

ஒலியின்

ஆளரவமற்ற

இடத்தில்

மிக மிக மெலிதாய்

ஒரு எதிரொலி கேட்கிறது


கூர்ந்து கேட்டால்


அதே துல்லியம்

அதே மென்மை

அதே கூர்மை

இசை ஜாம்பாவான்கள்  பலர் இந்த அவதானத்திற்கு மறு எல்லையில் நிற்கின்றனர். ‘இசையில் குறிப்பிடத்தக்கது என்று ஒன்றுமில்லை. சரியான விசையை சரியான சமயத்தில் தீண்டுவது ஒன்றே செய்ய வேண்டியது, இசைக்கருவி தன்னைத் தானே வாசித்துக் கொள்ளும்’ என்கிறார் பாக். அந்த விசை அத்துணை இயந்திரத்தனமானதா? ஏழே ஸ்வரம், அதை அப்படியும் இப்படியும் தொட்டால் இசை வருமா? ஒரு வகையில் இதை எந்த கலைக்கு வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் சொல்லலாம். இதே மூச்சில், இசையில் இறைவனின் கை இருப்பதாக அவர் கூறி இருக்கிறார் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். இலக்கணம், பயிற்சி, வெளிப்பாடு சார்ந்த கவலைகளும் ஏனைய உலகியல் சிக்கல்களும், தனிப்பட்ட நம்பிக்கைகளும் தொழில்முறை கலைஞர்களுக்கு இருக்க, நம் ரசனைகளையும் பித்துத் தருணங்களையும் அவர்களை உறுதிபடுத்த நிர்பந்திப்பதில் நியாயமில்லை. இசையின் முழு பரிமாணம் அவர்களுக்கும்  விளங்காத விந்தையாக  இருகக்கூடும். குயிலின் வேலை இசைப்பது தானே. 

ஆற்றல் மிக்க தலைவர்களையும் தத்துவ ஞானிகளையும் அறிவியல் மேதைகளையும் குழந்தைகளையும் விலங்குகளையும் சமநிலை இழக்கச்செய்துக் குழைத்துப் பார்த்திருக்கிறது இசை. பொதுவாக கண்ணீரையும் அகலமலர்வுகளையும் தன் அளவுகோலாக பெற்று நம் உணரச்சிகளை நமக்கே மீள் அறிமுகம் செய்கிறது.

புல்லாங்குழல்

சகல மனிதர்களின் சோகங்களையும்

துளைகளில் மோதிற்று


கூரை முகட்டிலிருந்து இறங்கிய நாளங்கள்

ரத்தமாய்ப் பெய்தன‌

அறையெங்கும் இரும்பின் வாசனை


மறு நிமிஷம்

என் உப்புக் கரைந்து எழுந்தது

மல்லிகை மணம் (இசை தரும் படிமம், சுகுமாரன்)

கல்யாண்ஜி (வண்ணதாசன்)
நாம் பிடித்த பாடல்கள் என்று மீள மீள காதுப்புழுக்களாக மாற்றி வைத்திருக்கும் பாடல்களை உளவியல் ஆய்வாளர்கள் வடிவ அடையாளம் சார் நினைவுத் தூண்டலை எழுப்பிக்கொள்ளும் தந்திரம் என்கின்றனர். தாளக்கட்டு உள்ள பாடலைக் கேட்பவருக்கு டோபமின் போதை இருக்கலாம். அலைக்கழிக்கும் சோகப் பாடல்களையே மனம் திரும்பத் திரும்ப நாடுகிறதா, துயரத்தை மீட்டி மீட்டி உங்கள் மூளையின் நரம்புகளை ஊக்கிக் கொள்கிறீர்கள் என்கிறார்கள். விண்மீன்கள் கூட வளிம உருண்டைகள் தான், இல்லையா?

கஸல் (வண்ணதாசன்)

நான் இப்பொழுது

ஒரு கஸல் பாடிக்கொண்டிருக்கிறேன்

குரல் ஹரிஹரனுடையது

வரிகள் அப்துல் ரகுமானுடையது

கண்ணீர் மட்டும் என்னுடையது

மனிதருடைய சஞ்சலம் கொண்ட, குவியமற்ற மனத்திற்கு இசையின் ருசி அவ்வளவு சாதாரணமாக இருப்பதில்லை. மனித உள்ளம் ஒழுங்கமைவைத் தேடிக்கொண்டே இருக்கிறது. இசை நுணுக்கங்கள் என்று நாம் கண்டு கொள்ளும் ஆலாபனை முறைகள், கமகங்கள், சங்கதிகளிலும் வடிவுருவை பின்தொடரும் பித்து இருக்கிறது. அறிந்தோ அறியாமலோ நம்மால் நரம்புகளைத் தூண்டி நினைவுகளை எழுப்ப முடிகிறது. இசை குறைந்தால் வாழ்வே பிழையென்று கருதச் செய்கிறது. 

என் பயணவழிகளில்

அவர் என்னை ஊர்போய்ச் சேரவிடாமல் தடுக்கிறார்


நான் திரும்பவிரும்பாத என் பால்யத்திற்கு

அவர் திரும்பிப் போகச் செய்கிறார்


என் மோகத்தின் நெருப்பில்

அவர் என்னை ஒரு விறகாகப் பயன்படுத்துகிறார்


நான் மழையில் நனையும்போது

மழையின் சப்தத்தில்

அவர் தன் வயலினைக் கலந்துவிடுகிறார்


நான் உறுதிமிக்க மனிதனாக

இதயமற்ற மனிதனாக

கண்ணீரற்ற மனிதனாக இருக்க விரும்புகிறேன்

இளையராஜாவுக்குத் தெரியாமல்

நான் எங்கே ஒளிந்து கொண்டாலும்

இளைய ராஜா அங்கே வந்துவிடுகிறார். 


(இளையராஜா...எனக்கு விடை கொடுங்கள், மனுஷ்யபுத்திரன்)

கூடிக் குறைந்து இயங்கும் காதுகளை நம்பி இத்தனை மகத்தான ஒன்று படைக்கப்பட்டு பேணப்பட்டு வந்திருக்கிறது என்பது வியப்பூட்டுவது. அதுவும் கூட வெற்று தற்பெருமையோ, உணர்ச்சிப் பொங்கலோ, மனமயக்கோ என்று கூட பயம் காட்டுவது. அது மனிதனுக்கு மட்டும் என்று நம்புவதற்கில்லை என்று அறிவியலாலர்களைப் போல் கவிஞர்களும் நம்புகின்றனர். அறிவுப் புலனுக்கு அப்பால் உயிரிகள் அனைத்தும் இணையும் ஒற்றைப் பெரும் ஜீவநதியா இசை?

மகத்தான ஈ (இசை)

...

சஞ்சய் பாடுகையில்

மைக்கும் ஒரு இனிப்புப் பண்டம்தான்

அதன் வடவடப்பில் மொய்த்துக் கொண்டிருக்கிறது ஒரு ஈ

அவர் அவ்வளவு நெருங்கி வருகையிலும்

அது ஆடாது அசையாது அமர்ந்திருக்கிறது.

மத்தளங்களின் கொட்டும், நரம்புகளின் நாதமும்

விரட்டுவதற்குப் பதிலே

அதை மேலும் மேலும் இருக்கச் செய்கிறது.

அதிகாலை இளங்காற்றின் ஏகாந்தியென

மின்சார ஒயர்களின் மேல்

ஊர்ந்து கொண்டிருக்கிறது.

மகத்தான விஷயங்களின் மீது

ஈயாயிரு மடநெஞ்சே! 

***

கவிதையின் முதல் புலன் கண் என்பதால் இசைக்கு முன்னர் அந்த கலைஞரின் உடலசைவுகளும் கை மலர்த்தல்களும் கண் செருகல்களும் உவக்கின்றன. அதி தீவிர இசை விமர்சகர்கள் பாடகரை கொண்டாடுவது பாட்டைக் கொண்டாடுவது அல்ல என்றே கருதுகிறார்கள், அது கொஞ்சம் பழுதுள்ள உண்மை, மேட்டிமைத்தனம் கலந்திருப்பதால். நாம் முழுதுணர்ந்து விட முடியாத எல்லாவற்றிற்கும் நாம ரூபத்தை அளிக்கிறோம். இசையில் அது பாடலாகவும் இசைப்பவராகவும் அமைகிறது. அது இசை தரும் ஆழ்நிலை அனுபவத்தை உருவகப்படுத்துகிறது, நம் கற்பனைகளை  மானுடப்படுத்துகிறது. கீதம் இசைப்பவர், அவரல்ல, அவரற்ற அவர், அதிமானுடர், மொத்த உலகத்தின் எஜமானி. உணர்ச்சி மேலிட தொழுது ஓய்ந்த பின், பாடுவது எவர், என்னுள் பாட்டுவிப்பது எதை என்ற புதிர் கேள்வியே கவிதைக்கான வெளியாகிறது. 

ஒரு பாடலில் பாடுவது எது? (இசை)

நஸ்ரத் அலிகான்

தன் ஒற்றைக் கரத்தால்

வானத்தை அளாவிக் கொண்டிருக்கும் படம் வெகு பிரசித்தம்


எனக்குத் தெரியும்

அந்த வானம்தான் பாடுகிறது


ஒருவர் காலியிடமொன்றை

உற்றுப்பார்த்தபடி பாடிக் கொண்டிருக்கிறார்.

அங்கு என்னென்னவோ

தோன்றித் தோன்றி மறைகின்றன.


எனக்குத் தெரியும்

காலியில் நிரம்பி வழிபவை எவையோ

அவைதான் பாடுகின்றன.


ஒருவர் பாடுகிறார்

கண்களை இறுக மூடியபடி.

உள்ளே அவ்வளவு வெளிச்சம்


எனக்குத் தெரியும் 

அந்த வெளிச்சம்தான் பாடுகிறது

...

இதில் சிக்கல், இசை ஒரு நிகழ்த்துக்கலையாக இருப்பது. அது இரண்டு தளங்களிலான அகவயத்தன்மையை இழுத்து வருகிறது. நீங்களும் நானும் ஒரே வகையான இசையை கேட்பதில்லை. ஒரே தரத்திலான அபூர்வத்தையும்  கண்டுகொள்வதில்லை. இசை தரும் அந்த மோன நிலையை மொழியில் வெளிப்படுத்தினால் அது வாசகருக்கு முழுமையாக சென்று சேருமா என்ற பிரக்ஞையை உதறி எழுந்த கவிதை இது. 

கடலின் மறதி (பிரம்மராஜன்)

...

வெளிச்சமிட்ட விளையாட்டுப் பொம்மையாய் மிதந்த மங்கு மாலை

உலோகப் பருந்தாகும் ஜெட் உறுமலிலும் கூட

தன் சுருதி பிசகாது பீம்சேன் ஜோஷியுடன்

பாடிக்கொண்டிருந்தன நெக்குருகி

தலைப்பிற்குள் புதைந்த முகத்தை அகற்ற மனமில்லை

குருதித் தாளமும் ஜோஷியின் தேஷும் மீன்வாடையும்

ஆற்றைத் தாண்டியும்

கேட்டுக்கொண்டிருந்தன

நுகர்வில் பதிந்துபோன நுரைமுகமும்

உயிர் கசிந்த உன் பாடலும்

கடலற்ற இற்றை நாளிலும்

தோணியில் மிதக்கத் தோதாயின

க்ளட்சுகளை மாற்றிக்கொண்டிருப்பினும்

தோணியை நகர்த்தும் துடுப்பின் ஸ்பரிசமே

இந்தத் தார்ச் சாலையை அலைக் குரலாய்

மாற்றிக் கொண்டிருக்கிறது.

நல்வாய்ப்பாக இணையப்பதிவு இருக்கும் பாடல் என்றால், கவிதையை ரசிக்க சுட்டியை கொடுக்க வேண்டியுள்ளது. பாட்டும் பொருளும் இணைந்து உருவாக்கும் பூரணம், ஓர்  அனுபவத்தை கிளர்த்தக் கூடும். மதுவையும் சீஸையும் இணைத்து கொடுப்பது போல ஓர் இசைக் கோர்வையையும் – கவிதையையும் இணைத்து வைக்கலாகுமா?

...

அந்தக் குளிரூற்றைவேர்  உறிஞ்சுவதால்

தீமரம் குளிர்கிறது;

குளிர் அலைகளுக்குமேல்

சீதையின் முகம் காட்சியளிக்கிறது


உலர்ந்து உதிர்ந்திருக்கலாம் 

திருநெற்றியில் இட்ட குங்குமம்

சூடு தணிக்க

இப்பாடல் இல்லாமலிருந்தால்


சஞ்சயின்  எழுந்தாளே துணைவராதிருந்தால் 

தேவி

உள்ளே பொசுங்கியிருப்பாள்

அக்கினி தேவன் கைகளில்

...

எழுந்தாளே பூங்கோதை 

(பி ராமன் (மலையாளம்), தமிழ் மொழியாக்கம்: சுகுமாரன்)

அருணாசல கவி எழுதிய இராம நாடகத்தில் இருந்து ‘எழுந்தாளே பூங்கோதை’ என்ற பாடலை பாடகர் சஞ்சய் சுப்ரமண்யன் பாடியதை முன்வைத்து எழுதப்பட்ட கவிதை. அக்னிப் பிரவேசத்தில் கருக்கழியாமல் வெளிப்பட்ட சீதையைச் சொல்கிறது. பொதுவாக பிலஹரி ராகத்தில் பாடப்படுவது, சஞ்சய் இதை மோஹனத்தில் அமைத்துப் பாடுகிறார். ‘தீமரம் குளிர்கிறது’ என்பது மோஹன ராகம் எழுப்பும் உணர்வுகளை மிக அணுக்கமாக சொல்லும் படிமமாக அமைகிறது. 

சில தருணங்களில் இசையின் வண்ணம் மொழியின் மெய்ப்பாட்டைச் சூடி புதிய சித்திரத்தை உருவாக்கித் தரும்.  வகுளாபரணம் என்பது மரமேறி விளையாடும் சிறுவர்களின் வேடிக்கையின் தனி மொழி என்பதை இந்த கவிதை நிகழ்வதற்கு முன்னர் எண்ணிப் பார்த்திருக்கமாட்டோம்

வகுளாபரணம் (சுகுமாரன்)

உச்சிக் கிளையில்

ஒற்றை மலர் எஞ்சியிருக்கும்

மகிழ மரத்தில் ஏறுகிறான்

குண்டுப் பையன்

...

...

முன் சடையைப் பின்னுக்கு வீசிக்

கண்ணிடுக்கிச் சிரிக்கிறாள்


ஒரு சிரிப்பு இன்னொரு சிரிப்பை

இப்படித்தான் திறக்குமா

இப்படித்தான் பூக்குமா

இப்படித்தான் மணக்குமா?


‘ஜாலம் செய்வதேதோ?’ என்று

உள்ளிருந்து கேட்கிறார் வேதநாயகம்.

பாட்டைச் சொல்லும் பொழுது அதன் வரிகள், அதன் பின்னால் இருக்கும் உணர்ச்சிகள், அதன் வழியாக பயணம் செல்லும் பாதைகள் என்று தொட்டு தொட்டுச் சொல்ல எதுவாக இருக்கிறது. பாட்டின் வரியை இழுத்துக்கொன்டாலும் அதை மீறிய ஒன்றைச் சொல்லும் பொழுது கவிதை பறக்கிறது. இசை என்றால் அது செவ்வியல் இசை, தீவிரம் என்றால் கழுத்தறுந்து ரத்தம் பீறிட வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லாமல், கலை அன்றாடத்தைத் தீண்டும் கள்ளமின்மையின் பொற்கணத்தில் உன்னதம் நிகழலாம்.  பாட்டில் ஏறுவதே அதன் இன்பம் என்னும்படி, புன்னகையாகவும் மலரலாம். 

பரோட்டா மாஸ்டரின் கானம் (இசை)

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..

2014, டிசம்பர் 3, இரவு சுமார் எட்டு மணி இருக்கும்

"மூக்கின் மேலே

 மூக்குத்தி போலே

 மச்சம் உள்ளதே.... " அதுவா ?

 என்று நீங்கள் கேட்க,

கோயமுத்தூர் முனியாண்டி விலாஸில்

அடுப்பில் கிடந்து கருகும்

திருமங்கலத்து பரோட்டா மாஸ்டரொருவன்

அதுவா...?

அதுவா...?

அதுவா...?

என்று திருப்பிக் கேட்டான்

அப்போது உங்களுக்கு சிலிர்த்துக்கொண்டதா எஸ்பிபி  ஸார் ?

பீறிட்டுக் கொண்டு ஒலிக்கும் பரோட்டா வீச்சின் தாளமும் ‘அதுவா’ சொல்லும் உச்சாடனத்தன்மையும் இதை கலையாக்குகிறது. 

நியாயமாக ‘இனிய’ குரல் கொண்டவர்களாக அறியபட்ட பாடகர்களே கவிதைக்குள் நுழைய வேண்டும். சஞ்சய், எம் டி ராமநாதன், ஜோஷி போன்ற தனித்துவ குரல் கொண்ட பாடகர்கள் தொடர்ச்சியாக கவிதைக்குள் வருவது சுவாரஸ்யமானது. பெண் பாடகர்கள் ஏனோ அவ்வளவாக இடம் பெறவில்லை. (பெண் கவிஞர்களும் அதிகமாக இசையை பொருட்படுத்தவில்லை) இசையன்பது வெறும் குரல் அல்ல. குரலினிமை, மதுரம் என்று நாம் சில மதிப்பீடுகளின் மீது வழக்கமான பார்வைகளை கூட்டி கற்பனாவாதத்தின் பூச்சை தடவினாலும், அதைத் தாண்டிய மேதமைமையும் தீவிராம்சமும் நம் நெஞ்சத்தை ஊடுருவி அதிரச் செய்கின்றன. 

ஜன்னல்களுடைய

மறையைத் தாண்டி

அந்த ஸ்வரங்கள்

அரச மரத்து இலைகளில்

கல்பாத்தியாற்றில்

சுடுகாட்டில்

காலங்களைத் தாண்டி

ஒழுகிக் கொண்டிருந்தன. 

...

ராமநாதன்

பாடிக்கொண்டே இருந்தார்.

காலத்தின் பாதையில்

பின்னோக்கி நடந்துகொண்டே இருந்தார்.

நாத ரஹஸ்யத்தைத்தேடி

ஆதிமௌனத்தைத் தேடி 

எம் டி ராமநாதன், பி ரவிகுமார் (மலையாளம்) மொழியாக்கம்: சுகுமாரன்)


மேலும்...

***










***
Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

கடலில் ஊறும் சிறு தும்பி - 1 – பார்கவி

ஆத்மாநாம் ஓர் எல்லையில், அழகின் சாம்ராஜ்யத்தில் அனைத்துமே பகுப்பற்றது. தஞ்சாவூர் கோபுரம், கம்பன் மொழி, பிறந்த நாய்க்குட்டி, வாய் மலர்ந்த அல்...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (8) இசை (9) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (11) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (226) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (4) சுந்தர ராமசாமி (2) செல்வசங்கரன் (1) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (26) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (2) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (6) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (8) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (8) இசை (9) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (11) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (226) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (4) சுந்தர ராமசாமி (2) செல்வசங்கரன் (1) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (26) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (2) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (6) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (8) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive