கம்பனுக்கும்தான் விழாக் கொண்டாடுகிறார்கள். அமர்க்களமாகவே கொண்டாடுகிறார்கள். இரண்டுக்கும் எத்தனை வித்தியாசம்?
ஷேக்ஸ்பியரைப்பற்றி எத்தனை நூல்கள்! எத்தனை பேர் வழிகள் வாழ்வின் லக்ஷியமாக வைத்துக்கொண்டு, அதே மூச்சாக இருந்து உழைத்திருக்கிறார்கள்? பதிப்புகள் என்ன! வாழ்க்கை ஆராய்ச்சிகள் என்ன! விமரிசனங்கள் என்ன! அப்படி ஒருவர் இருந்தாரா இல்லையா என்பது பற்றி என்ன! இப்படியாக ஒரு லைப்ரரியை நிரப்புகிற அளவுக்கு நூல்கள் வந்திருக்கின்றன.
நூல்கள் மட்டும் அல்ல; ஷேக்ஸ்பியர் படிப்பது, அனுபவிப்பது, ரஸிப்பது, ரஸித்தது ஒன்றை எடுத்துச் சொல்வது என்று தங்கள் வாழ்நாள் பூராவையும் செலவிட்டவர்கள் உண்டு.
கம்பன் ஷேக்ஸ்பியருக்கும் முந்நூறு - அல்லது ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்தவன் - அதற்கு முந்தி சிலப்பதிகாரம் - திருக்குறள் - மூன்றாஞ்சங்கம் - இரண்டாஞ் சங்கம் - முதற் சங்கம் - தொல்காப்பியர் - அகத்தியர் - சிவபெருமான் என்று கதைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நம்மிடையே பஞ்சமே இல்லை.
கம்பனைப் பற்றிய வரையில், அந்த ரஸனைக்குத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் ஒருவர் உண்டு. தான் அனுபவித்ததையும் பிறர் அனுபவிக்கச் செய்தவர். அவரைத் தமிழ் அன்பர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் என்ன பாடு படுத்தினார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும்.
ஷேக்ஸ்பியர் என்று ஒருவர் இருந்ததேயில்லை. இருந்திருந்தாலும் அவர் இந்த நாடகங்களையெல்லாம் எழுதியிருக்க முடியாது என்று சொல்கிற அளவுக்கு இங்கிலாந்தில் ஆராய்ச்சி பெருகுகிறது.
இங்கு கம்பராமாயணத்தில் செருகு கவிகள் ஏராளம் என்று ஏற்றுக்கொள்கிறவர்கள்கூட ரசிகமணி டி.கே.சி. இவைதான் கம்பன் பாடல்கள் என்று எடுத்து அறுதியிட்டு - தன் ரஸனையை வைத்துச் சொன்னால் ஆட்சேபம் சொன்னார்கள்.
கம்பனுக்கு ஒரு நல்ல பதிப்பா, ஒரு நல்ல விமரிசனமா, படிப்பதற்கு ஒரு தூண்டுதலா - ரஸிகமணி டி.கே.சி. தந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒன்றும் கிடையாது.
இருந்தும் கம்பனைப் பற்றிய புத்தக உற்பத்தி பெருந்தொழிலாகத்தான் இருக்கிறது - விழாத் தம்பட்டங்கள் பெரிதாகத்தான் ஒலிக்கின்றன.
வ.வெ.ஸு. ஐயர் தன் போக்கில் கம்பராமாயண ஆராய்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.
அந்தப்பாதைகளில் செல்ல முழுநேர இலக்கிய ஈடுபாடுள்ளவர்கள் தமிழ்நாட்டில் பத்துத் தலைமுறைகளில் ஒரு ஆயிரம் பேராவது தோன்றாவிட்டால் கம்பன், கம்பன் என்கிற முழக்கம்தான் இருக்குமே தவிர காரியம் எதுவும் இராது.
தவிரவும் கம்பனை அணுகி, அணுகி அறிந்து ரஸிக்க வ.வே.ஸு. ஐயர் பாதை, டி.கே.சி. பாதை என்று இரண்டுதான் உண்டு என்பதும் தவறு. எத்தனையோ பாதைகளை உண்டாக்கிகொள்ள வேண்டும். எத்தனை பேருக்குக் கம்பனிடம் ஈடுபாடு இருக்கிறதோ அத்தனை பாதைகள் உண்டு.
பண்டித பேராசிரியர்களுடையதும் ஒரு பாதைதான். இந்த ஐம்பது நூறு ஆண்டுகளில் நாம் காண்பது இதுதான். அவர்கள் பின்பற்றுகிற பாதை இருட்டுப்பாதை. எங்கும் செல்லாது. சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கும் என்பதுதான்.
***
‘இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்’, 1985







0 comments:
Post a Comment