இரண்டு பறவைகள்
என் மூக்கின் நுனி
என் கண்களைக் காட்டி
மேலிருக்கின்ற இரண்டு பறவைகள்
ஏன் பறக்காமலிருக்கின்றன
என்று கேட்டன
மலை உச்சியாக இருந்தால்
இந்நேரத்திற்கு இரண்டு பறவைகள்
அங்கிருந்து பறந்திருக்கும்
பறக்காமல் இருப்பதற்கு
அந்த இரண்டு பறவைகள்
அங்கு என்ன செய்கின்றன
***
நீர் பாக்ஸிங்
நீருக்குள் பந்தை
மேலிருந்து கீழே ஒரு கை
அமுக்குகிறது
கீழிருந்தும் மேலே ஒரு கை
அமுக்குகிறது
பார்க்க நீர் பாக்ஸிங்
போல தோன்றுகிறது
என்ன இந்த பாக்ஸிங்கில்
மைதானத்தை மட்டும்
யாரோ ஒருவர் தெரியாமல்
தூக்கி பக்கவாட்டாக
படுக்கப்போட்டுள்ளார்
***
இல்லாத கடல்
வெளிச்சத்திற்கு சொந்தமான
பொருள்கள் எல்லாம்
இருட்டிற்கும் சொந்தமானது
வெளிச்சத்தில் வரிசை மாறாத
புத்தகங்கள் எல்லாம்
இருட்டிலும் வரிசை மாறாது
வெளிச்சத்திற்கும் இருட்டிற்கும்
இடையே
பெருங்கடலெல்லாம் ஓடவில்லை
ஆனால்
பெருங்கடல் ஓடுகின்ற அளவு
அங்கே ஓடிக்கொண்டிருக்கிறது
***
தெய்வம்
உலகத்தில் எல்லாரும்
தூங்குகையில் நானும் தூங்குகிறேன்
என் தூக்கம் ஒரு சிறிய பரப்பளவு
ஒரு குட்டிப் பாத்திரம்
ஒரு சிறிய வீட்டில் ஒரு சிறிய கட்டிலில்
தூங்கிக் கொண்டிருக்கிறேன்
ஒரு சிறிய முழிப்பில் முழித்துப் பார்க்கிறேன்
கண் முன்னால் வீட்டிலிருந்த பொருட்கள்
எல்லாம் சிறிய சிறிய பொருட்கள்
இவ்வளவு சிறிய பொருட்களை
இவ்வளவு பெரிதாக காட்டுகிற கண்களை
ஒருமுறை தொட்டு வணங்கினேன்
***
நான்கு குழந்தைகள்
தன்னுடைய மூன்று குழந்தைகளில்
ஓவ்வொரு குழந்தையாக
தெப்பத்தில் தூக்கி எறிந்த தாய்
தன்னுடைய முறைக்காக காத்திருக்கிறாள்
தன்னுடைய முறையில் அவளை மட்டுமே
அவளால் தூக்கியெறிய முடிந்தது
அவளிடம் குழந்தைகள் தீர்ந்துவிட்டன
அவளையே ஒரு குழந்தையைப் போல
எண்ணி உள்ளே தூக்கி எறிந்தாள்
நீந்த தெரிந்த அவளது கை கால்களை
இவ்வாறு அமுக்கி பிடித்துக் கொண்டாள்
***







0 comments:
Post a Comment