ரசம் அழிந்த கண்ணாடிகள்
அந்த குப்பமேட்டில்
அங்க அங்க
தீ எரிஞ்சிக்கிட்டு இருக்கு.
ஆளுக்க
எது எதையெல்லாமோ பெறக்கி
பத்தரப்படுத்துதாக.
ஒரு சின்னக் கொழந்த
தனியா உக்காந்திருக்காள்.
அவா கைல
ஒரு சானிட்டரி டவல் இருக்கு
அசிங்கமா இருக்குது அது.
அந்த தீட்டுத் துணிய
கைட்டுப் பெசைறா
வாய்ல வச்சிக் கடிக்கிறா.
அந்த வெளையாட்டு
போர் அடிச்சதும்
தீட்டுத் துணியை தூர எறிஞ்சுட்டு
குப்பையை அள்ளி
தல மேல போட்டுக்கிறாள்.
சந்தோசம் தாங்க முடியல அவளுக்கு
குழந்தை குலுங்கிக் குலுங்கி
சிரிப்பாச் சிரிக்கிறது.
அழாமல்
சிரிச்சி வௌயாண்டுக்கிட்டு இருக்கு
கொழந்த.
அலஞ்சி திரிஞ்சி
அந்தப் பெரிய குப்பமேட்டில்
உடைந்த பீங்கான்கள்
பெறக்கிக்கிட்டு இருக்கா
தாய்.
***
எஜமானர்கள்
எங்கவூர் கழுதைகளுக்கு
காதுகள்
அறுக்கப்பட்டிருக்கும்.
உடம்பெங்கும்
சூடு போட்ட
தழும்பு இருக்கும்.
எஜமான்
கழுதைகளுக்கு
இரை போட மாட்டான்
தண்ணீர் காட்ட மாட்டான்.
முதுகில்
ஏற்றி வைத்த பொதிகளை
கண்ணீரோடு சுமக்கும்
கழுதைகள்.
கழுதைகள்
தப்பிச் செல்லமுடியாது.
அவைகளுக்கு
முன்கால்கள்
தழையப்பட்டிருக்கின்றன.
கழுதைகள்
நொண்டி நொண்டி
தானாகவே மேய்ந்துகொள்ளும்.
கழுதைகள்
குடும்பம் நடத்துகின்றன
கழுதைக் குட்டிகள்
அழகாக இருக்கின்றன.
***
பிறந்த ஊர்
வருசம்
போனது தெரியாமல்
போய்விட்டது.
பட்டணத்துக்கு வந்து
நாற்பத்தைந்து ஆண்டுகள்
ஆகிவிட்டன.
பிறந்த ஊருக்கு
புறப்பட்டேன்.
ஒரு வனாந்தரத்தில்
என்னை இறக்கிவிட்டது
பஸ்.
ஐந்து கிலோமீட்டர் நடை
வெயில்
முள்
பனைமரங்கள்
ஒத்தையடிப்பாதை.
மணல் சுடுகிறது
உடம்பு வியர்க்கிறது
தாகம்.
ஒரு முள்மரத்து நிழலில்
இளைப்பாறுகிறேன்,
எனக்கு முன்னே
என்னுடைய கிராமம்.
என்னைப் பார்த்து
நாய்கள் குரைக்கின்றன
பன்றிகள் ஓடுகின்றன
கோழிகளும்
சேவல்களும்
பயத்தில் கெக்கரிக்கின்றன.
சிறுவர்கள்
வேம்படியில்
வேப்பங்கொட்டை
சேகரிக்கிறார்கள்.
தெருவெங்கும்
அடுப்புச் சாம்பல்.
உடைந்து நொறுங்கிய
மண்பானை ஓடுகள்.
ஒரு பாட்டி
ஒரு ஓலையை மடித்து
அதில்
தீக்கங்குகள் எடுத்து வருகிறாள்.
ஒரு அண்ணாச்சி
முறுக்குத் தடியில்
அருவாள்
தீட்டிக்கொண்டிருக்கிறார்.
ஒரு பெண்
தன் குழந்தையை
மடியில்
கிடத்தி
சீழ் துடைத்துக்கொண்டிருக்கிறாள்.
தெருவில்
கால் நீட்டி உட்கார்ந்துகொண்டு
குழந்தை தலைக்கு
தண்ணீர் ஊற்றுகிறாள்
ஒரு தாய்.
குழந்தை உடம்பு முழுவதும் புண்
தண்ணீரில்
மஞ்சள் வேப்பிலை.
கருவாடு சுடுகிற வாசனை
காற்றில் மிதக்கிறது.
ஒரு திண்ணையில்
இரண்டு குழந்தைகள்
கஞ்சி குடிக்கிறார்கள்.
தெருக்கோடி
எங்கள் வீட்டுக்கு முன்னால் வந்து
நிற்கிறேன்.
வீடு இருந்த இடத்தில்
ஒரு குப்பைமேடு
ஒரு பெரிய கருவை மரம்
இரண்டு கழுதைகள்
படுத்துக் கிடக்கின்றன.
தெருவில்
புழுதி
வெயில்.
***
மு. சுயம்புலிங்கம் தமிழ் விக்கி பக்கம்
***







0 comments:
Post a Comment