என்னில்
எடுத்து முடைக
நரம்பொரு யாழ்
என்ற வரிகள் அழகாக முடையப்பட்டுள்ளன. அந்தக் கவிதையே கூட.
என் இல் துடைத்து வைத்துவிட்டேன் நீ இன்னும் வரவில்லையே என்று கேட்கும் குரல் எவ்வளவு அழகானது. அவருக்கென்று பிரத்யேகமான புனைவுலகம் ஒன்றை தன் கவிதைக்குள் பின்னியிருக்கிறார். அதற்குள் முட்டி மோதி எழும்பும் கவிதைகள் மொழியழகு மிக்கவை. அது அல்லாது வெளியுலகை தன் உலகுக்குள் இழுத்து வந்து எழுதப்படும் கவிதைகளும் மொட்டு மலரும் தருணத்தில் நிற்கின்றன. அவை முழுதாக விரியும்போது வி. சங்கரின் கவிதைகள் இன்னும் பரந்துபடும் என்று தோன்றுகிறது. வி.சங்கரை கவிஞனாக அடையாளம் காட்டும் கவிதைகள் இவை.
1
வெளி மீபெரிது
குருவி நாம்
இங்கு வந்தோம்
காடு விடுத்து அதில்
சிறு வீடு செய்தோம்
வீடு விடுத்து அதில்
சிற் றகம் செய்தோம்
அகம் விடுத்து அதில்
சிறு சேக்கை செய்தோம்
சேக்கை விடுத்து அதில்
சிறு கூடு செய்தோம்
குறுகிபடுத்து அதில்
சிறு குருவி ஏய்தோம்
2
என் இல் துடைத்து வைத்திருக்கிறேன்
இன்று உன்னை காணவில்லை
சிறு விளக்கு சுடர் ஏற்றியிருக்கிறேன்
இன்று உன்னை காணவில்லை
மணற்மேடுகளை பார்த்திருக்கிறேன்
இன்று உன்னை காணவில்லை
ஞாயிறும் திங்களும்
என் தலை மேல் போட்டிருக்கிறேன்
இன்று உன்னை காணவில்லை
தேடாத இடம் தேடியிருக்கிறேன்
இன்று உன்னை காணவில்லை
தேடிய இடத்தில் காத்திருக்கிறேன்
இன்று உன்னை காணவில்லை.
3
என்னில்
எடுத்து உண்ணுக
ஊன் ஒரு பருக்கை
என்னில்
எடுத்து தீட்டுக
என்பு ஒரு ஈட்டி
என்னில்
எடுத்து முடைக
நரம்பொரு யாழ்
என்னில்
எடுத்து மீட்டுக
தோலொரு ஓசை
என்னில்
எடுத்து நிறைக
என்னில்
எடுத்ததொரு நான்
***







0 comments:
Post a Comment