கவித்துவம் - புனைவெழுத்தாளர்கள்

கவித்துவம் என்ற இந்தப் பகுதியில் மூன்று புனைவெழுத்தாளர்களிடம் கவிதைகள் குறித்த ஏழு கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களின் பதில்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 

பதில்களை அளித்த எழுத்தாளர்கள் சுனில் கிருஷ்ணன்,கார்த்திக் பாலசுப்ரமணியன், தூயன் ஆகியோருக்கு நன்றிகள். கேள்விகளைக் கட்டமைப்பதில் உதவி செய்த கவிஞர் வே.நி.சூர்யாவுக்கும் நன்றி.
  1. புனைவெழுத்துக்கு அப்பால் நீங்கள் கவிதை எழுத முயற்சி செய்தது உண்டா? கவிதையுடனான உங்களது உறவு குறித்துச் சொல்லுங்கள்? 

சுனில் கிருஷ்ணன் :

பெரும்பாலான புனைவெழுத்தாளர்களைப் போல எனக்கும் கவிதைதான் தொடக்கம். பள்ளி காலத்தில் ஒரு நோட்டு புத்தகத்தில் கவிதைகள் என நான் நம்பியவற்றை எழுதி சேமித்து வைத்திருந்தேன். பலவும் 'ஏ மனிதா' ரகம்தான். ஒன்றிரண்டு கவிதைகள் கொஞ்சம் பரவாயில்லை என சொல்லலாம். பதிப்பிக்கப்பட்ட முதல் ஆக்கம் என்பதும் கவிதைதான்.  ஆங்கில நாளிதழின் சிறுவர் இணைப்பிதழில் 'ஜோக்கர்' என்றொரு கவிதை வெளியானது. எனது கவிதைக்கு ஒரு படமும் வரைந்திருந்தார்கள். ஒரு வாசகர் கடிதம் கூட பள்ளி முகவரிக்கு வந்தது.   பள்ளி ஆண்டு மலரின் ஆசிரியர் குழுவில் இந்த கவிதை என்னை கொண்டு சேர்த்தது. அதிலும் 2 கவிதைகள் வெளியாகின. கவிஞர்களில் எனது முதல் ஆதர்சம் அப்துல் ரகுமான். கவிஞனாக தொடரவில்லை. கைவிட்ட கவிதையை நவீன கவிதைகளை வாசித்து, பல வருடங்களுக்கு பிறகு துரத்தத் தொடங்கினேன்.  கவிதையை எட்டிப்பிடிக்க முயலும் உரைநடையாளன் என்று சொல்லிக் கொள்ளலாம். தற்போது வெளிவந்துள்ள எனது புதிய நாவலான குருதி வழியில் மையப்பாத்திரங்களில் ஒருவன் இளம் தமிழ் கவி. ஆகவே அதில் சில கவிதை முயற்சிகள் உள்ளன.

கார்த்திக் பாலசுப்ரமணியன் : 

கவிதையைத் தொடாமல் புனைவின்வழி மட்டுமே எழுந்து வந்தவர்கள் இங்கே மிகக் குறைவாகவே இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். அதற்கு நானும் விதிவிலக்கல்ல என்றாலும் அவற்றை வெளியிட்டுப் பார்க்கும் விஷப் பரிட்சைக்குத் துணியவில்லை என்பதே தமிழ் கவிதைக்கு என்னாலான எளிய பங்களிப்பு.

இலக்கியத்துக்குள் நுழைபவர்களை உண்மையில் கவிதையே முதலில் வசீகரிக்கிறது என்றாலும் நாவல், சிறுகதைகளை ஒப்பிட கவிதைகளைக் குறைவாகவே வாசித்திருக்கிறேன். என்னளவில் கவிதை அதன் வரிகளுக்கு இடையேதான் தன்னைத் திறந்து வைக்கிறது. ஆகவே, அளவில் சிறியதென்றாலும் கவிதைகளை வாசிக்க அதிக உழைப்பும் ஈடுபாடும் கூரிய கவனமும் தேவைப்படுகின்றன. முந்நூறு பக்க நாவலை வாசிக்கும் வேகத்தில் என்னால் மூன்று பக்கக் கவிதையை வாசிக்க இயல்வதில்லை. குறைவாகவே எனினும் தொடர்ந்து கவிதைகளை வாசிக்கிறேன்.

தூயன் : 

கதைகள் வழியாகவே ஒவ்வொருவரும் இலக்கியத்துக்குள் நுழைவதாகவும் கவிதைகள் வழியாக படைப்பாளியாகிறதாகவே நான் இதுவரை நம்பிக்கொண்டிருக்கிறேன். ஆனால் மொழியைப் பொருள்கொள்வதில் அடிப்படையில் கவிஞனும் புனைவெழுத்தாளனும் வெவ்வேறானவர்கள். காரணம் இருவரது பிறப்பும் வெவ்வேறாக அமைந்துவிடுகிறது. அதனால் புனைவெழுத்தாளனுக்கு கவிஞன் “மற்றமை” (ஆனால் கவிஞனுக்கும் மற்றமைக்குமான உறவுச் சிக்கலானது. காரணம் கவிஞன் தன்னையே மற்றமையாக துண்டிக்கிற பரிசோதகன்). எனவே புனைவெழுத்தாளனின் அடிப்படை கதைமனம் மற்றமைக் குறித்தே சிந்திக்கவும் ஆராயவும் அறிந்துகொள்ளவும் “தந்நோய்போல் போற்றாக் கடை” என்பதாக விரும்புகிறது.

  • உரைநடையும் கவிதையும் வேறுபடும் இடங்களாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்? 

சுனில் கிருஷ்ணன் :

ஆயுர்வேதத்தில் இந்த பிரபஞ்சம் ஐம்பூதங்களால் ஆனதென சொல்லப்படுகிறது. பஞ்ச பூங்களின் கூட்டு என்பதினாலேயே பிரபஞ்சம் என்றானது. ஐம்பூதங்களில் உரைநடையில் நிலத்தின் தன்மை அதிகம் என எனக்கு தோன்றுவதுண்டு. கவிதை விசும்பின் தன்மையுடையது. வெளிக்குரிய விஸ்தாரம் கொண்டது.

கார்த்திக் பாலசுப்ரமணியன் : 

கவிதையை நான் பூடகத்தின் கலை என்பதாகப் புரிந்துவைத்திருக்கிறேன். சிறுவயதில் வானத்தில் குவிந்து நிற்கும் மேகக்கூட்டங்களைப் பார்த்து உருவங்கள் கண்டுபிடித்து விளையாடுவோமில்லையா? ஒருவனுக்குப் புலியாகத் தெரியும் அதே மேகம்தான் இன்னொருவருனுக்கு மானாகவும் மற்றொருவனுக்கு மயிலாகவும் தெரியும். சில நொடிகள் இடைவெளியில் புலி பார்த்தவனுக்குப் புலி மறைந்து பூச்செடி தெரியும். கவிதை அந்த மாதிரிதான். உரைநடை அந்த மேகத்துக்குப் பின்னால் நீண்டிருக்கும் வானம் போல. வண்ணக் கண்ணாடி அணிந்து பார்க்காத வரை பார்ப்பவர் அனைவருக்கும் ஒரே நீல வானம்தான்.  

தூயன் : 

நிறைய சொல்ல முடியும். கவிஞன் சொற்களை உருவாக்குகிறான். அப்படியென்றால் புதிய சொற்களை உருவாக்குவதாக அர்த்தத்தில் அல்ல, மொழியின் வடிவத்தைக் குலைத்துப் போடுகிறான். அவ்வாறுதான் அவனால் கவிமனதை அறிய முடிகிறது. புனைவெழுத்தாளன் கவிஞன் இருவரும் மொழியால்தான் இலக்கியத்தை அனுகுகிறார்கள். மொழி இருவருக்கும் வெவ்வேறு திசைகளில் உள்ளது. உரைநடையில் புனைவுக்குள்ளே மொழி இயங்குகிறது என்றால், இங்கு மொழியே கவிதையாகிறது. உண்மையில் புனைவு எழுதுகிறவர்களும் கவிஞர்களைப்போல மொழிக்குள் திரும்ப வேண்டும். மாறாக புனைவெழுத்தாளனோ ஒரு தொல்லியலாளனைப் போல் கையில் கிடைக்கிற கல் குறித்து ஆராய்ச்சிதான் செய்கிறான்.

ஆனால், கவிஞனால் அது இத்தனை காலம் நிலத்துக்குள் மிதந்ததை எண்ணிச் சிரிக்க முடிகிறது. புனைவெழுத்தாளன் அந்தக் கல்லின் காலத்துக்குள் பயணிக்கிறான். கவிஞன் காலத்துக்குள் புலங்குவதில்லை. அதனால்தான் அவனால் Flashforward ஐ நிகழ்த்திப் பார்க்க முடிகிறது. ஆனால் புனைவிலும் Flashforward நிகழ்த்த முடியும் என்கிறார் பா.வெங்கடேசன் தன் கதையும் புனைவும் நூலில். அதுகுறித்து நாம் விரிவாகத்தான் உரையாட வேண்டும்.

இரண்டாவது, கவிதை தன் கற்பனைகள் வழியே புனைவுலகை உருவாக்குகிறது. புனைவு தன் கற்பனைகள் வழியே யதார்த்தவுலகை உருவாக்குகிறது. புனைவு உருவாக்கும் யதார்த்தம் நமது அன்றாட யதார்த்தத்தின் “அச்சு அசல்“ என்கிறபோது தோற்றுவிடுகிறது. ஆனால் கவிதை உருவாக்கும் உலகம் யதார்த்தவுலகம் அல்ல.

மூன்றாவது, கவிதையால் எந்தப் பாடுபொளுளையும் பேசலாம். வெறும் மொழியை மட்டும் பேச முடியும். இது ஒருவித மரபு போல கவிதைக் கொண்டிருக்கிறது. தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் பாடிவிட்டு பிறகு தனக்களித்தச் சிறப்பு என மொழியைப் பாடும். மொழியின இனிமையை மட்டும் எழுதித் தீர்க்கிறது. தொல்க்காப்பியத்துக்குள் இப்படி நிறைய நாம் காணலாம். நம்மிடம் உள்ள இலக்கணப் பனுவல்கள் அத்தனையிலும் இது உள்ளது. வள்ளுவர் சொல் இனிது என்கிறார், பாரதி சொல்லை இசைக்கவிட்டார். அது சத்தம் போட்டது, பாடியது, ஆடியது. ‘ஞங்’ என அது விழும் ஓசையை பாரதி கவிதைகளில் கேட்கலாம். சில இடங்களில் மௌனமாகி நிற்கிறது. மௌனத்தை சொற்கள் வழியே பாரதி கடத்திருக்கிறார்.

அதே சமயம் கவிதைகளில் நிறைய கவித்துவப் பண்புகள் கவித்துவக்கூறுகள் அதைக் கவிதையாக நடிக்க வைக்கும். நாம் கவித்துவத்தின் மோனத்தில் மயங்குவோம் அவை உண்மையில் கவிதையா என்று தெரியாமல். படிமங்கள் மூலம் கவிதைபோல ஒன்றை எழுதிவிட முடியும். கவித்துவ வர்ணையால் காட்சிகளை அழகாய்ச் சுட்ட முடியும். பிரமிளின் ‘காற்றிலாடும் பறவையின் சிறகு’ அழகான படிமம். நகுலனின் ‘எங்கிருந்தோ வந்தான்’ ஆழமான தத்துவவிசாரனை. கவிதை அது கவிதையாகிற கணத்துக்கு முன் அதன் கூறுகளைத் தனியாக விடுவிப்பதில்லை. இவ்விடுபட்டவை கவிதையாக கவிஞனை வற்புறுத்தும்.

அவற்றை வாசிக்கிறபோதும் நம்மால் ரசிக்கவும் உணர்ச்சிவசப்படவும் உருகவும்கூட முடியும். கவிதை என்கிற வகைமையில் இது பெரும் சிக்கலான ஒன்று. இதைக் கவிதைக்கும் புனைவுக்குமன ஒரு வேறுபாடகவே சொல்ல முடியும். ஆனால் புனைவில் நடிக்கிற சிறுகதை, நடிக்கிற நாவல் என்று ஒன்று இல்லை. காரணம் புனைவு ஒரு கதையைச் சொல்ல முனைகிறது. கதையின் அலகு ஸ்தூலமான சிலப் பண்புகளைக் கொண்டிருக்கிறதாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான் கதை ஒன்றிலிருந்துத் தொடங்கி இன்னொரு இடத்தில் முடிய வேண்டியுள்ளது. கவிதைக்கு இவ்வாறான விதிகள் இல்லை. கவிதை விதிகளுக்கு அப்பாற்பட்டது.

  • ஒரு புனைவெழுத்தாளருக்கு கவிதை வாசிப்பு எந்த அளவுக்கு உதவிகரமாக அமையும் என்று நினைக்கிறீர்கள்?

சுனில் கிருஷ்ணன் :

செய்திறன் சார்ந்து மொழியின் எல்லைகளை நெகிழ்த்த, அர்த்த அடுக்குகளை உருவாக்க கவிதை வாசிப்பு மிகவும் முக்கியம். மொழியின் தனித்துவம் கவிதை வழியே அடையப்பெறுவது. கவிதை வாசிப்பு புதிய தரிசனங்களை உருவாக்க வல்லது.

கார்த்திக் பாலசுப்ரமணியன் : 

என்னுடைய தனிப்பட்ட அனுபவத்திலிருந்து இக்கேள்விக்கு பதிலளிக்க முயல்கிறேன். என்னுடைய நட்சத்திரவாசிகள் நாவலை எழுதுவதற்கான தூண்டுதலை சாலையோரச் சுவரில் வரையப்பட்டிருந்த முள்கிரீடம் தரித்த ஏசுவின் ஓவியத்திலிருந்து பெற்றேன். நாவலுக்கும் அந்த ஓவியத்துக்கும் நேரடியாக எந்தச் சம்பந்தமும் கிடையாது. நாவலில் ஒரு வரியிலாவது ஏசு வருகிறாரா என்றால் இல்லை. பல நேரங்களில் கவிதையில் கிடைக்கும் ஒரு காட்சி, சமயங்களில் தெறிப்பாக வந்துவிழும் ஒரு வரி அல்லது ஒரே ஒரு சொல் என அதுவரை கதையாக உள்ளே உழன்றாலும் எழுதுவதற்கான தூண்டுதல் இல்லாமல் கிடந்த நிச்சலனத்தைக் கலைத்திருக்கின்றன. கதைகள் எழுதுவதற்கு கவிதைகள் தூண்டுதலாக இருந்திருக்கின்றன என்று தனிப் பேச்சில் சில நண்பர்களும் கூறியிருக்கிறார்கள்.

தூயன் : 

இலக்கியத்தில் எதுவும் எதற்கும் உதவிகரம் நீட்டுவதில்லை. உதவிக்கரம் என எண்ணுவது அவரவர் தேர்வைப் பொறுத்தது. கவிதை இலக்கியத்தின் ஆதிவடிவம். இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிற தளம். அது எல்லா இலக்கிய வடிவங்களுக்கும் முதன்மையானது. முதுகிழவி. அதனால் அதை புனைவெழுத்தாளர்களோ அபுனைவாளர்களோ மொழிபெயர்ப்பாளர்களோ யாராக இருந்தாலும் அதைத் தீண்டியே ஆக வேண்டும். என்னைப் பொறுத்தவரை, கவிதைகள்தான் புனைவெழுத்தாளனுக்கு நிறையக் கற்பனைகளைத் தரும், உணர்ச்சிகளை மொழிப்படுத்தக் கற்றுத் தரும், மொழி சிக்கிக் கொள்கிறபோது அதை மௌனமாக்கும் வித்தையை அளிக்கும். உதாரணத்திற்கு அகநானூறு பாடலில் ஆய் எயினன் போர்க்களத்தில் இறந்து விழுகிறான். பரணர் அதைப் பாடுகிற விதம் பாருங்கள். 

ஒண் கதில் தெறாமை சிறகரின் கோலி நிழல்

செய்து உழறல் காணேன் அவன்மேல் வெயில் 

படாதிருக்க பறவைகள் சிறகால் நிழல் போர்த்துவது, 

இதே போல கம்பராமாயணத்தில், 

கானகம் மறைத்தன காலமாரி, மீன்நகு

திரைக்கடல் விசும் போர்தென 

இந்த வரிகள் அளிக்கிறக் காட்சிகள் ஆகட்டும்,

சங்கப்பாடல்கள் ஒரு முழுக் கதையையும் உவமையாகச் சொல்லி, வரலாறாகக் காட்டி ஆரம்பிக்கிற வடிவம் என புனைவுக்கான நிறைய அசாத்தியமானக் கூறுகள் உள்ளன. வேறெந்த மேலை இலக்கியத்திலும் இதுபோல கிடையாது.

கலித்தொகையில் ’ இடைமடக்கி’ என்கிற வகையில் பாடல் வரும். (நனவிற் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ?) ஒரு சொற்றோடர் மடக்கி மடக்கி மறுபடியும் மறு சொற்றோடர் அதே ஓசையில் முடிந்து ஆனால் பொருள் முந்தைய உவமையைத் தாண்டிச் செல்லும். இத்தகைய வடிவில் புனைவில் கதைகூறுவது சாத்தியமா என்று யோசித்திருக்கிறேன். குறுங்கதை ஒன்றை அப்படி எழுதிப்பார்த்தது உண்டு. பரிபாடலில் மலைமுழை அதிரும் என்கிற பரங்குன்றம் பற்றியப் பாடலில் ஒரு சுழற்சி வடிவம் கையாளப்படும். கார் மேகத்தின் இடிக்குரல் மன்னின் யானையின் பிளிறல் போலிருக்கிறது. அப்படியான இடியோசைக் கேட்டதும் யானை பிளிறிவிட்டதெனக் கண் விழித்துக் கூவுகிறதாம் சேவல். சேவல் கூவியதைக் கேட்ட யானை தன் பங்குக்குப் பிளிறுகிறது. அந்தப் பிளிறல் குன்றுகளில் மோதி எதிரொலிக்கின்றன. அந்த எதிரொலி இடி மலைபோன்று அதிர்கிறது. ஒவ்வொரு சம்பவங்களும் அழகாய் சுழல் போலச் சுற்றுகிற வடிவில் இருக்கிறது.

இதுபோல அகநானூறில் பரணரின் இரும்பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர் என்கிற பிரபலமான பாடல் உண்டு. அதில் களவுக்குத் தடையாக அமைகிற ஒவ்வொருவரின் துஞ்சாமைப் பற்றி வரிசைப்படுத்தப்படும். அதாவது, ஊரில் யாரும் உறங்கமாட்டார்கள் இந்த உறங்காமை ஒவ்வொன்றாய் எழுப்புவதுபோல ஒரு சுழற்சி வரும். இதெல்லாம்தான் புனைவுக்கானக் கதைசொல்ல மெட்டீரியல் என்கிறேன். 

இன்னொரு சங்கப்பாடலில் தலைவன் பறத்தையின் உறவில் திளைத்திருக்கிறான், தலைவின் நினைப்பெழ அவளைச் சமாதானம் செய்ய விறலியை தூதனுப்பி, தன்னைப் பற்றி விறலி சொல்வதாக, விறலி தன் காதலைச் சுட்டி தலைவனது காதலை விளக்க வேண்டும். எப்படி இருக்கிறது பாருங்கள் உரையாடல்? சங்கப்பாடல்களில் ஓர் உணர்ச்சியை ஒருத்தர் இன்னொருவருக்கும் வேறொருவரின் வழியாக அதைப் பரிமாறுவதெல்லாம் இயல்பாக நிகழும். அங்கு நேருக்கு நேராக உரையாடுவதே அதிகம் இருக்காது. அதுபோல சட்டென உணர்வை உடைக்கிற வித்தைகளை மொழி கவிதைகளில்தான் நிகழ்த்துகின்றன.

பேயாயுழலுஞ் சிறுமனமே என்கிறார் பாரதியார். காமக் கணிச்சி உடைக்கு என்கிறார் வள்ளுவர். பன்னமைதிக்காகப் பாடப்பட்டப் பரிபாடலில் வைகையின் வெள்ளப் பெருக்கும் சனங்களின் களிப்பும் வருகிற ஒவ்வொரு பாடல்களின் முடிவிலும் அதன் சந்தம் தெறிப்பாக முடிந்திருக்கும். தாயிற்றே தண்ணம் புனல், காமப் பெருக்கென்றோ வையை வரவு, புதுநாற்றம் செய்கின்றே செம்பூம் புனல். இப்படியெல்லாம் இந்தப் புனல் இந்த மக்களையும் ஊரையும் கொண்டாட்த்தில் வைக்கிறது. காமப் பெருக்கை கம்பர் படு மதம் நாற காத்த அங்குசம் நிமிர்ந்திர கால் விரித்து ஓடி புத்த ஏழிலைப் பாலையை பொடி பொடி மதம் பிடித்த யானை ஏழிலைப்பாலையின் நறுமணத்தை முகர்ந்து களிவெறிக்கூடி மரத்தில் போய் முட்டிக்கொண்டது என்கிறார். வள்ளுவர் பசலை நோய் பற்றி எழுதிய பசப்புறு பருவரல் அதிகாரத்தில் ஓர் அற்புதமான குறள் உள்ளது.

புல்லிக்கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்

அள்ளி கொள்ளவற்றே பசப்பு

இந்தக் குறளில் காலம் எப்படி shift ஆகிறது பாருங்கள். தழுவலுக்கும் புரல்தலுக்கும் இடையில் காலம் எவ்வளவு தூரம் ஓடியதாட்டம் ஒரு மாயையை அவள் உணர்வதாக நம் கற்பனையைத் தூண்டுகிறார் இல்லையா? இதுதான் கவிமனதின் மந்திரம்.

  • சில கருக்கள் மனதில் தோன்றும்போதே இது சிறுகதைக்கு இது நாவலுக்கு என மனம் பகுக்கும். அப்படி செய்கையில் இது கவிதைக்குரியதாயிற்றே என்று எதுவும் தோன்றியதுண்டா. அப்படி இருந்தால் அதைப் பகிருங்களேன்...
சுனில் கிருஷ்ணன் :

என்னளவில் எந்த கருவையும் கவிதையாகவோ கதையாகவோ எழுத முடியும் என்று நம்புகிறேன். நமக்கு வாகான வெளிப்பாட்டு முறை என்ற அளவில் மட்டுமே வேறுபாடு. உரைநடையில் கவிதைக்குரிய தன்மைகளை கொண்டு வர விரும்புகிறேன். ஆகவே கவிதைக்குரியது என எதையும் தனியாக கருதியதில்லை.

கார்த்திக் பாலசுப்ரமணியன் : 

ஆம், கருக்களாகத் தோன்றும்போது நேரடியாக மனம் அவற்றை குறுங்கதை, சிறுகதை, நாவல் இப்படி ஏதேனும் ஒரு புனைவு வகைமைக்குள் வைத்துப் பொருத்திக்கொள்கிறது. எழுதிப் பழகிய மனப் பயிற்சியால் அது கூடியிருக்கலாம். கருவாக அல்லாமல் ஏதோ ஒருவகையில் என்னைப் பாதித்த ஒரு காட்சியாக மட்டும் மனத்தில் தங்கிவிடும்போது அது கவிதைக்கு உகந்ததாக இருக்கிறது. 

கருவை காட்சியிலிருந்து எப்படி பிரித்துப் புரிந்துகொள்வது? ஒரு காட்சிக்கு முன்னும் பின்னும் சென்று பார்க்கும் சாத்தியம் இருந்து அதில் அந்தக் காட்சியை மீறியும் சொல்வதற்குப் புதிதாக ஒன்று இருக்கும்போது அங்கே கரு கிடைக்கிறது. 

முன்பு ஒருமுறை கவிஞர் தேவதேவன் ஆரஞ்சுப் பழத்தை, ஒரு அழகிய பூவைப் போல உறித்து வைத்திருந்த புகைப்படம் காணக் கிடைத்தது. அதில் பழத்திலிருந்து மலர்ந்திருந்த பூ என்னைக் கிளர்த்தியது. அப்போது இப்படியொன்றை எழுதிப் பார்த்தேன்.

சொற்களிலிருந்து 

கவிதையை விடுவிப்பதைப் போல 

ஒரு ஆரஞ்சுப் 

பழத்தைத் திறக்கிறான் கவிஞன் 

கனியிலிருந்து பிறக்கிறது ஒரு 

பூ


தூயன் : 

அப்படி எனக்குத் தோன்றியதில்லை. கவிதைக்குரிய “கரு“ என்று ஏதேனும் உண்டா? தெரியவில்லை. அடிப்படையில் நான் கவிஞன் இல்லை. நீங்கள்தான் சொல்ல வேண்டும். உண்மையில் கவிஞன் கவிதையை கரு கொண்டு அனுகுவதில்லையென்பது என் கருத்து. கவிஞனுக்கு அதொரு கணம். அவன் அந்தக் கணத்தைப் பிடித்துவிடுகிறான். கணம் என்றால் வெறுமனே காலம் அல்ல. அவனுக்குள் வந்து விழுகிற எதுவாக வேணாலும் இருக்கலாம் அவன் அதை அந்தக் கணத்திலேயே நிறுத்த முயற்சிக்கிறான். அது காலவெளியில் உறைந்துவிடுகிறது. உடனே அதை எழுதலாம் அல்லது எப்போது அதைத் தீண்டுகிறானோ அப்போது அது குறித்து எழுத ஆரம்பிக்கிறான். பிறகுதான் அதைத நாம் “கரு“ என்கிறோம் அல்லது பாடுபொருள் என்கிறோம். நான் கவிஞனாக இல்லையென்பதற்காக நல்ல கவிதைகளை வாசிக்கிறபோதெல்லாம் மனம் நொந்துக்கொள்வேன். 

சங்கப் பாடல்களை வாசிக்கையில் நிறைய இடங்களை அது புனைவுக்கானத் தருணத்தை அளிப்பதை எண்ணி வியந்திருக்கிறேன். உதாரணத்திற்கு, நான் மேலே குறிப்பிட்ட குறளில் (புல்லிக்கிடந்தேன்) வருகிற காலத்தாவல் time shift சிறுகதைக்கான அருமையான கரு. குறுங்கதையாக எழுதலாம். கலிங்கத்துப்பரணி மாதிரியான பாடல்கள் தருகிற கற்பனையை எந்த பேன்டசி ஹாரார் கதைகளிலும் திரைப்படத்திலும் பார்த்திருக்க முடியாது. பேய்கள் காளியிடம் கதைக் கூறுவது என்பது எப்படியொரு கற்பனை! கலிங்கத்துப்பரணி முழுக்க வாசிக்க வாசிக்க திளைக்கச் செய்கிற ஆச்சர்யங்கள் அதிகம். கரு என்று நினைப்பதைவிட கதைசொல்லல் (நேரேட்டிவ்) தன்மைகளை சங்கக் கவிதைகளில் பார்த்து வியக்கலாம். அப்படியொரு நேரேடிவ் இன்னும் நம்மால் உரைநடையில் செய்ய முடியவில்லை. முதுபேய் ஒன்று இமயமலையிலிருந்து இறங்கி வருகிறது, அது காளியைச் சந்தித்து, காளியைச் சுற்றி பசியோடு இருக்கிற தொண்டுப் பேய்களுக்கு (காளியின் பேய்களெல்லாம் பசியாற முடியாமல் தம் உடல்களையே உண்டுகொண்டிருக்கின்றன வேபசிக்கு அலந்து பாதி நாக்கும் உதடுகளில் பாதியும் தின்று ஒறுவாய் ஆனோம்- கொஞ்சம் கண்களை மூடி கற்பனை செய்துகொள்ளுங்கள்!) அவைகளுக்கு இந்திரஜால வித்தையை நிகழ்த்திக்காட்டுகிறது இமயமலையிலிருந்து வந்த முதுபேய். அவ்வித்தையில் குலோத்துங்கனின் போர் அரங்கேறுகிறது. அதைப் பார்த்த காளியின் பேய்களெல்லாம் அது மாயவித்தையென்பதை மறந்து உண்மையான இரத்தமும் சதையும் கண்முன்னால் கிடைத்தவிட்டதெனத் தின்பதற்கு அலைகின்றன. 

வெறுக் கை முகந்து முகந்து

எழுந்து விழும் தசை என்று நிலத்தை இருந்து துழாவிடுமே. 

இரத்தம் ஓடுகிறது என்று வெறு நிலத்லை அள்ளிக் குடிக்கிறதாம். ஒருகட்டத்தில் இப்படி எங்கள் பசியை இந்த முதுபேய் வித்தைக்காட்டி ஏமாற்றுகிறது (பேய்கள் ஏமாறுகின்றன!) என்று முதுபேயை விரட்டக் கோரிக்கை வைக்கின்றன தொண்டுபேய்கள். இப்போது முதுபேயிடம் கேட்டக் கதையை காளி தன் தொண்டுபேய்களிடம் ”நீங்களெல்லாம் பசியாற கலிங்கப்போர் ஒன்று நிகழப்போகிற”தென குலோத்துங்கனின் படைபலத்தையும் அவனது திறமையையும் விவரிக்கிறபோதே கலிங்கத்தில் போர் தொடங்கிவிடுகிறது. அதைக் கண்ட கலிங்கப்பேய்கள் ஓடிவந்து சொல்கின்றன (உரைப்போர்க்கு நா ஆயிரமும் கேப்போர்க்கு நாள் ஆயிரமும் வேண்டும்). கதை எப்படி போகிறது பாருங்கள். அதாவது, குலோத்துங்கனை ஒரு முதுபேய் அறிமுகப்படுத்த, காளி அதை மற்றப் பேய்களுக்குச் சொல்ல, போரைக் கண்டக் கலிங்கப்பேய்கள் வந்து விவரிக்கின்றன. என்னமாதிரியான கதைசொல்லல் இது!. இதுக்குப் பிறகு போர்க் காட்சிகள் வரும். குலோத்துங்கனின் யானைகள் மதம்பிடித்துக்கொண்டு சமர் செய்வதும் எதிரிகளின் யானைகள் இரண்டாக அறுபட்டு இரத்த ஆற்றில் படகுபோல கிடப்பதும் (குருதியின் நதிவெளி பரக்கவே குடை இனம் நுரையென மிதக்கவே) என அவ்வளவு பெரிய போரை பேய்கள் சொல்கின்றன. கலிங்கத்தைச் சொல்ல கவிஞர் எதற்காக பேய்களை கதாப்பாத்திரங்களாக்குகிறார்? அந்தத் தேர்வுதான் நமக்கு குலோத்துங்கனையும் கலிங்கப்போரையும் முன் ஊகிக்க வைக்கிறது. 

பரிபாடலை நாம் வாசிக்கிறபோது ஒரு திரைப்படம் தொடங்குவபோல ஆரம்பிப்பதைக் காணலாம். ஊர் விழிக்கிறது, திருமால் வணக்கம், வைகையில் நீர் வருகை, மக்கள் கொண்டாட்டம், ஊரின் பெருமை, மக்களின் பண்பாடு, தெய்வத் தொழுகை இதனூடே தலைவன் தலைவியைப் பிரிந்து தன்னை மட்டுமே விரும்புகிற இற்பரத்தையிடம் செல்கிறான், பிறகு தொழிலுக்காக இன்புறுத்தும் காதற்பரத்தையிடம் திரும்புகிறான், தலைவியின் கோபத்தை அறிந்து விறலியைத் தூதனுப்புகிறான். இங்கே இந்த நான்கு பெண்களின் உள்ளப் போக்குகள் வழியே அந்த உலகம் விரிகிறது. நான்கு பெண்களும் நான்கு திசைக்குரிய பண்புகளுடையவர்கள். நால்வரும் ஒருத்தொருக்கொருத்தர் தத்தமது உணர்வுகளைச் சொல்லி இன்னொருவருக்கு அதைக் கடத்துகிறார்கள்.

கதையை காளிக்குப் பேய்கள் சொல்வதாக இவ்வடிவத்தை இன்றைக்கு உரைநடை இலக்கியத்தில் சொல்ல முடியுமா தெரியவில்லை. அப்படிச் சொல்வதாக இருந்தால் புனைவாசிரியர் அதற்கெனத் தன் மொழியைத் தயார் பண்ண வேண்டியிருக்குமா? மொழி கற்பனைக்கேற்ப தயாராவதில்லை, மொழியே கற்பனையை உருவாக்குகிறது. சரி, நம்மிடம் சங்கக்காலத்தில் உரைநடை வடிவம் இல்லையே? பிறகு எப்படி உரைநடையில்  இது சாத்தியமா என்று கேட்க முடியும் என்று கேள்வியெழுப்பலாம். நம்மிடம் கவிதைநடைதான் இருந்ததென்கிற கூற்றை நான் இப்படிப் பார்க்கிறேன், அதாவது, கவிதையின் மொழிதான் காளி, பேய்கள் என்கிற மனித உயிர்க்கு அப்பாற்பட்ட உருவிலிகளால் மனிதனின் கதையைச் சொல்ல முடிகிறது. கவிதைக்குள் மொழி சிதறுவதால்தான் இவ்வாறு கற்பனைகளை கொண்டுவர முடிகிறது. 

நான் இங்கு பக்தி இலக்கியத்திற்குள் போகவே இல்லை. அதனுள் இதே போன்று அவ்வளவுக்கவ்ளவு அழகியலையும் கற்பனைகளையும் காண முடியும். காரைக்கால் அம்மையாரின் தொன்மக்கதையே அபாரமான ஒர் உதாரணம்.

  • ஒரு நல்ல கவிதையில் இருந்து நீங்கள் எதிர்ப்பார்ப்பது என்னனென்ன விஷயங்கள்? அவை குறித்துச் சொல்லுங்கள்.

சுனில் கிருஷ்ணன் :

நல்ல கவிதை என என்னுள் தங்கியவற்றை குறித்து யோசிக்கிறேன். கவிதையில் ஒருவித பூடகமும் மர்மமும் இருப்பதாக தோன்றுகிறது. முழுவதும் தன்னை புலப்படுத்தாத கவிதைகள் நம்மோடு நீண்டநாள் இருப்பதாக எனக்கு தோன்றுவதுண்டு. அபியின் கவிதைகளைச் சொல்லலாம். இப்படிச் சொல்கையில் நேரடியான சொற்களில் உள்ளத்தை தீண்டும் இசை, மனுஷின்  கவிதைகள் பல நினைவுக்கு வருகின்றன. மொழி, சிந்தனையில் புதுமையை கொண்டு வசீகரிக்கும் பெருந்தேவியின் கவிதைகள் ஒரு பாய்ச்சலென்றால், ஆட்கொண்ட தீவிரத்தை முன்வைக்கும் ஸ்ரீவள்ளி கவிதைகள் பெரும் உவகை அளிக்கிறது. அகவயமான பதிலையே சொல்ல முடியும். அந்தரங்கமாக இந்த கவிதை பாவனை செய்கிறது என்று நான் உணராமல் இருப்பதே நல்ல கவிதைகளாக தங்கி நிற்கின்றன.

கார்த்திக் பாலசுப்ரமணியன் : 

ஒரு நல்ல கவிதை என்னை ஏமாற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பேன். முதல் வாசிப்பில் 'அட இவ்வளவுதானே!' என்று நினைக்கச் செய்துவிட்டு வெவ்வேறு தருணங்களில் தன்னைப் புதிதாக தோலுரித்துப் புது வடிவம்கொண்டு ஆச்சரியப்படுத்தும் கவிதைகளே என்னை அதிகமாக ஈர்க்கின்றன

தூயன் : 

உதாரணத்திற்கு வள்ளுவர் எழுதிய பசப்புறு பருவரலையே எடுத்துக்கொள்ளலாம். சங்கப் பாடல்கள் அதிகமும் காதலையும் காமத்தையும் பேசுகின்றன. அதில் அத்தனையிலும் பசலை நோய் பாடுபொருளாக உண்டு. பசலை பெண்களுக்கு மட்டுமே உரித்தான நோய். காதலால் மட்டுமே வருகிற நோய்,அதற்கு காதல் மட்டுமே மருந்து இல்லையா? பசலையை மற்ற சங்கப்பாடல்கள் அனைத்தும் (நான் வாசித்த வரையில்) அதை ஒரு நோயாகவும் சில இடங்களில் ஒரு வரம் போலவும் (நேர்மறையாக) சில இடங்களில் காதலனின் நினைவு அடையாளம் போலவும் பேசுகின்றன. கபிலர், பரணர், வெள்ளிவீதியார் இப்படி நிறைய புலவர்கள் பசலையை வெவ்வேறு பொருள்களுடன் உருவகப்படுத்துகின்றனர். விடுவழி விடுவழிச சென்றாங்கு, அவர் தொடுவழித் தொடுவழி நீங்கினால் பசப்பே என்று கலித்தொகையில் பசலைப் பகைவருக்கு உவமையாக்குகிறது. முல்லையும் குறிஞ்சியும் திரிந்த வெம்மை உற்ற நிலம் எனப் பாலையைக் குறிப்பிடுவதுபோல பசலைக் கண்ட தேகம் இருப்பதாகப் பாடுகிறார்கள். இவை எல்லாவற்றையும் விட வள்ளுவர், பசலையைப் பேசுகிற இந்த பத்துக் குறள்களின் வழியே அதற்கு ஓர் உருவம் தர முயற்சிக்கிறார். பசலையை தனக்குத் துணை என்கிறாள் தலைவி, விளக்கு அணைய இருள் காத்திருந்ததுபோல எப்போது காதலன் அகல்வான் என்று காத்துக்கொண்டிருக்கிறதென்கறாள்(பிசாசு மாதிரி), பசலை வந்து என்னை ஆட்கொண்டதென்கிறாள், பசலை ஒரு டிராகுலா மாதிரி இங்கு தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே தனது இருப்பை மறைத்துக்கொண்டிருக்கிறது. பசலையை மட்டும் எடுத்து வாசித்தாலே இவ்வளவு விதவிதமான கற்பனைகளும் சிந்தனைகளும் நமக்குக் கிடைக்கும். சங்கப் பாடல்கள் முழுக்க போரும் காதலும்தான் அதிகம். இந்த நிலம் போருக்கும் காமத்திற்குமானது. 

ஒரு நோய்தான் அதை எத்தனை விதமாகச் சொல்ல முடிகிறது!. இந்த “விதம்“ என்கிற சொல்லைப் பிரக்ஞையில் ஏற்றாமல் இருக்க இன்றைக்கு முடிகிறதா என்று தெரியவில்லை. காரணம் மாற்றுப் பார்வையென்று நாம் எதைப் புரிந்துகொள்கிறோம்? வள்ளுவர் பசலையை எழுதும்போது சங்கப்பாடல்களில் அது பேசப்பட்டதை வாசித்திருப்பாரா? அல்லது மற்றக் கவிஞர்கள் பசலைப் பற்றி பிற பாடல்களில் தெரிந்திருப்பார்களா? ஒவ்வொரு நிலமும் அந்தச் சூழலும் பாடுபொருட்களும் அதற்கான மொழியை அளிக்கின்றன. குறுந்தொகையில் தொழிற்படுகிற சொல்லின் சந்தம் வேறு, அகநானூறில் வேறு, பரிபாடலில் வேறு, கலிங்கத்துப்பரணியில் வேறு. ஆனால் அகநானூறுக்குள்ளோ குறுந்தொகைக்குள்ளோ வருகிற அத்தனை புலவர்களின் லயமும் சொற்களும் வெவ்வேறாக இருக்கின்றன. பரணருக்கும் கபிலருக்கும் வித்தியாசம் உண்டு  (இதை இவர்தான் பாடினாரென்று சொல்லுமளவு பாண்டித்தியம் எனக்கு இல்லை.) இருந்தாலும் பாடுபொருள் சார்ந்து அத்தனையும் ஒன்றாகிறது. ஒவ்வொரு கவிஞனும் வேறு வேறு திணைகளை, அரசர்களை, பூக்களை, நிலங்களை பாடியபடி ஆனால் அத்தனைபேரும் அகத்தைச் சொல்கிறார்கள். அதாவது, உள்ளுக்குள் எத்தனை முறைமை (pattern) இருக்கிறது.  இப்போது நாம் ஒட்டுமொத்த அகப்பாடல்களையும் அத்தனையும் இன்றையக் காலத்திலிருந்து வாசிக்கிறோம். எல்லாம் ஓவியத்தின் வெவ்வேறு முகபாவங்கள் என்றால் Gaze மாதிரியான ஒன்றைக் கற்பனைப் பண்ண முடிகிறது. இன்றைக்கு எழுதப்படுகிற கவிதைகளில் இந்த ஒழுங்கை நம்மால் எட்ட முடிந்தால் ஆச்சர்யம்தான். 

இத்தனை வடிவங்களையும் மரபுக்கவிதையிலும் புதுக்கவிதையிலும் செய்து காட்டிய முதலும் கடைசியுமான கவிஞன் பாரதியாகத்தான் இருக்க முடியும். 

  • உங்களது வாசிப்பில், கவிதை எனும் வடிவம் சந்திக்கிற சவால்கள்/ பிரச்சனைகள் என நீங்கள் எவற்றைக் குறிப்பிடுவீர்கள்? 

சுனில் கிருஷ்ணன் :

கவிதை உயர்ந்தது. அந்த மதிப்பின் காரணமாகவே அதிகமும் போலி செய்யப் படுகிறது. எல்லா காலத்திலும் உள்ளது தான். வடிவ ரீதியாக தனது எல்லைகளை காலத்துக்கேற்ப புதுப்பித்துக்கொண்டே தான் இருக்கிறது.  மற்றபடி எழுத்தாளர்களும் கவிஞர்களும் ஒரே வித நெருக்கடிகளைத்தான் இன்றைய காலத்தில் எதிர்கொள்கிறார்கள் என்று எண்ணுகிறேன்.

கார்த்திக் பாலசுப்ரமணியன் : 

இன்றைய கவிதையின் பலம் மற்றும் பலவீனம் என இரண்டுமே அவற்றின் பரவலாக்கம்தான் என்று எண்ணுகிறேன். பரவலாக்கமும் ஜனநாயகப்படுத்தப்பட்டிருக்கும் இன்றைய கவிதையும் ஒரு நல்ல கவிதையிலிருந்து நல்லதைப் போலிருக்கும் ஒரு கவிதையை வேறுபடுத்திப் புரிந்துகொள்வதில் வாசகனுக்குச் சிக்கலை ஏற்படுத்துகின்றன. ஏதேனும் ஒரு கவிதை பரவலான கவனத்தைப் பெற்றுவிடும்போது உடனடியாக அக்கவிதையின் எண்ணற்ற நகல்கள் நடமாடத் தொடங்கிவிடுகின்றன. அங்கிருந்து தொடங்கும் ஒருவருக்கு சிறந்த கவிதைகளைத் தேடிக் கண்டடைவதற்கான வழி இன்னும் கடினமாக மாறியுள்ளது. 

தூயன் : 

சங்கக் கவிதைகளில் புழங்கிய சந்தம் அணி பண் சீர் இதெல்லாம் இல்லாத சுதந்திரமான வடிவமென நவீனக் கவிதைக்கு நாம் வந்தபோது இத்தனையாலும் சமைகிற கதைப்பாடலுடன் கற்பனையையும் சேர்த்தே கலட்டிவிட்டுவிட்டோமோ என்கிற ஐயம் உண்டு. இப்போது நம்மிடம் கவிதைசொல்லி மட்டுமே எஞ்சியிருக்கிறார் கூடவே அவரிடம் சில போத்தல்களும் கோப்பைகளும் லிங்கமும் யோனியும் மிச்சம்.

அதற்காக நாம் மறுபடியும் மரபுக் கவிதைக்கும் சங்கப்பாடல்களுக்கும் போக வேண்டுமா என்று கேட்கவில்லை. இன்றைக்கிருக்கிற இந்த வடிவமும்கூட கவிதையால்தான் நிகழ்ந்திருக்கிறது. கவிதைதான் முதலில் தனது வடிவத்தைக் குலைத்தது. பாம்பு சட்டை உரிப்பதுபோல, தன்னை நிர்வாணமாக மாற்றிக்கொள்வதுபோல கவிதையால் மொழிக்குள் இத்தனை லாவகங்களை நிகழ்த்த முடிகிறது. இப்போது அது எதிர்கவிதைக்குத் திரும்புகிறது. கவிதைப்போல தன்னைத்தானே தற்கொலை செய்துகொள்கிற (துணிந்து!) வெறொரு வகைமை இலக்கியத்தில் இல்லை.

இத்தனை சாதனையும் கவிதை நிகழ்த்தியபின்னும் எங்கோ ஒரு ரசத்தைத் தவறவிடுவதாக உணர்வது இல்லையா? உங்கள் கேள்வியே அதனால்தானே எழுகிறது. இந்த நூற்றாண்டில் இலக்கியம் எதிர்கொண்டிருக்கும் பெரும் சவால் என “பேசாதவற்றைப் பேசுதல்” என்கிறார் டி.தருமராஜ். அது கவிதைக்கும்தான். ஆனால் அது, தான் தொலைத்த அத்தனைக் கற்பனைகளையும் வைத்துக்கொண்டு பேசாதவற்றை எப்படிப் பேசப்போகிறது என்றுதான் தெரியவில்லை.

  • உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள்/ பிடித்த கவிதைகளைக் குறித்துச் சொல்லுங்கள். வாய்ப்பிருந்தால் ஏன் என்பதையும் பகிரலாம்.

சுனில் கிருஷ்ணன் :

எனக்கான கவி என ஒருவரை முதல்முறையாக உணர்ந்தது கல்பற்றா நாராயணனைத்தான். பிடித்த கவிதைகள் கவிஞர்கள் பற்றி என்றால் ஒரு தொடர்தான் எழுத வேண்டும். ஆக சமீபத்திய பித்து என்பது பிரம்மராஜன் மொழியாக்கம் செய்த பிரெக்ட் கவிதைகள் மீது. என் நாவலின் தரிசனத்திற்கு  பிரெக்ட் கவிதைகள் ஒரு கருவியாக இருந்தது.

கார்த்திக் பாலசுப்ரமணியன் : 

க.மோகனரங்கன், தேவதச்சன், சுகுமாரன், இசை, முகுந்த் நாகராஜன் ஆகியோரின் கவிதைகளை விரும்பி வாசித்திருக்கிறேன். 

முகுந்தின் எனக்குப் பிடித்த கவிதை ஒன்றை இங்கே தருகிறேன். ஏன் பிடித்திருக்கிறது என்பதை விளக்கவே தேவையில்லை என்பதே கூடுதலாகப் பிடிப்பதற்கு ஒரு காரணம். 

நீர் தெளித்து விளையாடுதல்

முன் பின் பழக்கம் இல்லாத

பயண வழி உணவு விடுதியில்

சாப்பிட்டு விட்டு

கை கழுவப் போனேன்.

சாதாரண உயரத்தில்

இரண்டு வாஷ்பேசின்களும்

மிகக்குறைந்த உயரத்தில்

ஒரு வாஷ்பேசினும் இருந்தன.

கை கழுவும்போது

காரணம் தெரிந்து விட்டது.

குள்ள வாஷ்பேசின் முன்

இல்லாத குழந்தையின் மேல்

செல்லமாக தண்ணீர் தெளித்து

விளையாடி விட்டு

விரைவாக வெளியே வந்து விட்டேன்.

தண்ணீர் என்றதும் சுகுமாரனின் இந்தக் கவிதை நினைவுக்கு வந்தது. முகுந்தின் கவிதை குழந்தைகளின் எளிய உலகத்தோடு நாம் பரிச்சயம்கொள்ளும் தருணத்தை கவிதையாக்குகிறது. சுகுமாரனுடையதோ மாபெரும் பிரபஞ்சத்துடன் நம்மை எங்கே பொருத்திக்கொள்வது என்ற தத்தளிப்பைக் கவிதையாக்குகிறது. இரண்டிலும் இருப்பது ஒரு கை நீர்தான் என்றாலும் இரண்டுக்கும் எவ்வளவு பார தூரம்!

கையில் அள்ளிய நீர்

அள்ளி

கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்

நதிக்கு அந்நியமாச்சு

இது நிச்சலனம்

ஆகாயம் அலை புரளும் அதில்

கை நீரை கவிழ்த்தேன்

போகும் நதியில் எது என் நீர்?

தூயன் : 

ஓரளவுக்கு சங்கப் பாடல்களில் வாசிப்பு உண்டு. குறிப்பாக பரணரின் பாடல்கள் பிடிக்கும். அகம் புறம் சார்ந்து கபிலர் அதிகம் எழுதியிருந்தாலும் பரணர்தான் எனது தேர்வு. ஏனென்றால் எப்படி இவரால் ஒவ்வொரு பாடல்களிலும் வரலாற்றுத் தரவுகளை இவ்வளவு அழகாய் சரடாக்க முடிகிறதென ஆச்சர்யம். குறுந்தொகையில் தலைவி தலைவன் உறவைத் தோழி கூறுகிற இடத்தில் ”உங்கள் இருவருடையக் கதை, வாகைப்போரில் பசும்பூண் பாண்டியனுக்காக இறந்த அதிகனின் சாவைக் கொங்கர்கள் பேசியதைவிட அதிகமாகத்தான் ஊர்ப்பேசுகிறது” என்கிறார். நம் ஊர்களில் திண்ணைகளில் அமர்ந்து பெருசுகள் பேசுகிறதாட்டம் இருக்கிறது இந்தத் தொனி. அகநானூறு பாடல் ஒன்றில் தலைவன் வருகையின் தடையைச் சொல்கிற தலைவி, ஊர் உறங்கினாலும் தாய் உறங்கவில்லை, தாய் உறங்கினாலும் காவலன் உறங்கவில்லை, காவலன் உறங்கினாலும் நாய் உறங்கவில்லையென்று அடுக்கியபடியே வந்து உறையூர் அரசன் தித்தனும் விழித்துவிடுவான் என்பதாக ஓர் இடைச் செறுகல் வரும். இப்படி ஒவ்வொரு பாடலிலும் எப்படி இத்தனையும் கொண்டு வருகிறாரென வியந்திருக்கிறேன். 

நவீனக் கவிதைகளில் சி.மணி, ஞானக்கூத்தன், பெருந்தேவி இவர்களது கவிதைகள் பிடிக்கும். அன்றாடத்தில் நிகழும் சில அனுபவங்களை இக்கவிதைகள் நினைவூட்டும். சி.மணியின் “வரும் போகும்“, “நிலவு“ 

நல்ல பெண்ணடி நீ 

முகத்திரை இழுத்துவிட இரண்டு வாரம் 

முகத்திரை எடுத்துவிட இரண்டு வாரம் 

வேறு வேலையே இல்லையா 

உனக்கு 

ஞானக்கூத்தனின் “சைக்கிள் கமலம்“, “கீழ்வெண்மணி“, “குரங்குள் பேசுகின்றன" பெருந்தேவியின் கவிதை ஒன்று, நவீன வாழ்வின் அதிகாரத்தின்மீதான் ஆசையின் வெளிப்பாட்டை வெளிப்படுத்துகிற கவிதை.

தம்ளர் காப்பியில் ஓர்  எறும்பு நீந்திச் செல்கிறது 

கடவுளைப் போல் நான் சக்தியோடிருக்கிற 

அபூர்வத் தருணம் 

எறும்பே இன்னும் படபடத்து நீந்தேன் 

உன் ஆறு கால்களில் ஏதாவது இரண்டைத் 

தூக்கித்தான் கும்பிடேன்

இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் சில சங்கச் சித்திரங்களை வரைய யத்தனிக்கும். அத்தகைய இடங்களில் அவ்வுலகம் கார்காலத்தில் சிரிக்கும் அந்திச் சூரியனாட்டம் எட்டிப்பார்க்கும்

கண்டராதித்தன் கவிதைகள் எனக்கு எப்போதும் பிடிக்கிறது. காரணம் அவருடையது ஏதோவொருவிதத்தில் சங்கப்பாடல்களுக்கு நெருக்கமானதான உள்ளது. அல்லது நான் அப்படி வாசிக்கிறேனா தெரியவில்லை.

உன் அன்பிற்கும் பிரியத்திற்குமிடையில் 

காரணங்களற்ற வெறுப்பும் கசப்பும் திரண்டுவிட்டது

அந்தத் தாழி உடைந்தால் அதுதன்னுடையதே என

இந்த இரவும் பகலும் மாய்ந்து கொண்டன 

ஒரு பகலில் நானுமு ஒரு இரவில நீயும் 

சமாதானத்துடன் பிரிந்துகொண்டோம் 

உடையாத தாழியொன்று இரவுக்குமு பகலுக்குமாய்

ஆடிக்கொண்டிருக்றது தீராத துக்கத்தோடு

இந்தக் கவிதை மனைசேர் பெண்ணை மடிவாய் அன்றில் துணை ஒன்று பிரியினும் துஞ்சா காண் மாதிரியான சங்கக் கவிதையின் பிரிதல் நிமித்தங்களுக்கு நிகரானது. கண்டரின் இப்பிரிதலில் சங்கக்கவிதையில் சொல்லப்படாத இருவருக்குமான சமாதானம் ஒன்று தலைப்படுகிறது அற்புதம். அம்சம் என்கிற கவிதையில் வருகிற பிருஷ்டத்தில் ஆடியக் கூந்தலை வலக்கையால் அள்ளி வரப்புகளைத் தாண்டி எனும் கற்பனை வள்ளுவரின் புல்லிக்கிடந்தேன் குறளில் வரும் காலத்தாவலைக் கொண்டுவருகிறது. கண்டராதித்தனின் கவிதைசொல்லி அதிஷ்டவசமாக சங்கக்காலத்தில் வாழ்கிறார். நல்ல கொடுப்பினை.

***



***
Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

இருப்பின் நெசவு - அஜிதன் நேர்காணல்

புனைவெழுத்துக்கு அப்பால் நீங்கள் கவிதை எழுத முயற்சி செய்தது உண்டா? கவிதையுடனான உங்களது உறவு குறித்துச் சொல்லுங்கள்?  ஆம். நான் முதன்முதலாக ஏ...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (13) அரவிந்தர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (8) இசை (10) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (14) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (241) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சாரு நிவேதிதா (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (5) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) தாகூர் (1) தூயன் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (28) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (7) மரபு கவிதை (8) மராட்டி (1) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (1) விக்ரமாதித்யன் (8) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (13) அரவிந்தர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (8) இசை (10) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (14) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (241) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சாரு நிவேதிதா (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (5) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) தாகூர் (1) தூயன் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (28) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (7) மரபு கவிதை (8) மராட்டி (1) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (1) விக்ரமாதித்யன் (8) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive