1
அங்கே துவங்கிய நவீன கவிதைக்குரிய பரிணாம வளர்சி, க நா சு வழியே புதுக்கவிதை என பெயர்பெற்று பல்வேறு விமர்சகர்கள் வழியே நா பிச்சமூர்த்தி, சுந்தர ராமசாமி, சுகுமாரன் போல பல்வேறு புனைவாளர்கள் வழியே அதன் வடிவமும் கூறுமுறையும் அழகியலும் உச்சம் தொட்டது. வெகு ஜன கவிதைகளுக்கு நேர் எதிராக வளர்த்த இக்கவிதைகள் இந்த வளர்சி நிலையின் ஒரு பகுதியாக (கவிஞர் அபி) அருவக் கவிதைகள், (கவிஞர் பிரமீள்) படிமக் கவிதைகள் போன்ற அழகியல் வழியாக எல்லாம் பயணித்து நவீன கவிதை தனது செறிவு ஆழம் இவற்றை அடைந்தது.
நவீன கவிதைகள் கொண்ட இந்த பரிணாம வளர்ச்சியின் முரண் இயக்கமாக அமைந்த இசை, முகுந்த் நாகராஜன், டிப் டிப் டிப் ஆனந்த குமார், மதார் என்று தொடரும் ஒரு கவி வரிசை உண்டு. (பிரமிள் உள்ளிட்ட இன்ன பிறர் எழுதிய சரியாக வராது போன ஆக்கங்களை வாசிக்கும் போது, அவர்கள் தங்கள் கவிதையின் அழகியலுக்கு "சேர்த்த விஷயங்கள்" எல்லாம் டெட் வெயிட் என இண்ட முள் புதர் ஆக மாறி நிற்பதை காணலாம். இண்ட முள் புதருக்குள் அதன் முட்களின் வடிவ லாவகம் அறிந்தே கையை நுழைக்க முடியும். தவறாக அசைந்தால் அந்த புதருக்குள் சிக்கிக் கொள்வோம்). தங்கள் கவிதை வழியே கவிதைக்கும் வாசகனுக்கும் இடையே இருந்த இண்ட முள் வேலியை இல்லாமல் செய்ததே தீவிர நவீன கவிதைக்குள் அவர்கள் கொண்டு வந்த வடிவ ஆசுவாசம்.
தீவிர கவிதை வெளிக்குள் முற்போக்கு இயக்கம், எழுத்து இயக்கம், வானம்பாடி இயக்கம் என்றெல்லாம் வளர்ந்த நவீன கவிதை பெரும்பாலும் நவீனத்துவ கவிதைகள் எனும் அழகியல் கொண்டே நிலை பெற்றது. அந்த நிலையை எதிர்த்து, அல்லது அதன் அடுத்த நிலையாக வந்தது பின்நவீனத்துவ கவிதைகள்.
பின்நவீனத்துவம் அடிப்படையிலேயே ஒரு குறை பிறவி. உதாரணமாக (எழுத்தாளர் அஜிதன் வசம் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு உரையாடலில் அவர் சொன்னது இது) "உலகளாவிய உண்மை என்ற ஒன்று கிடையாது" என்பது பின்நவீனத்துவ பிரகடனம். அதுவே தன்னனவில் உலகளாவிய உண்மை நிலை ஒன்றை குறித்த கூற்றுதானே. இந்த அடிப்படை கோணல் போல பல, அதில் இருந்து கிளைத்த, படைப்பு என்ற ஒன்று கிடையாது, பிரதியும் குறிகள் கொண்ட இயக்கம் இவை மட்டுமே உண்டு, ரசனை என்பது கட்டமைக்கப்பட்ட நுண்ணதிகாரம். ரசனை படிநிலைகள் என்பதெல்லாம் பாசிசம். இப்படி துவங்கி இன்னும் இன்னும் என பல உளறல்கள். இவை எல்லாமும்தான் தமிழுக்கு பின்நவீனத்துவ சிந்தனைகளாக வந்து சேர்ந்தது. அதன் விமர்சனம் புனைவாக்கம் இரண்டுமே சலிப்பூட்டும் கோட்பாட்டு குட்டிக்கரணங்களால் மட்டுமே ஆனது. அதன் ஒரு பகுதியான பின்நவீனத்துவ கவிதைகளில் நூற்றுக்கு தொண்ணூறு, மொழிச் சிதிலங்கள் என்பதன்றி வேறில்லை. (இதில் எதிர் கவிதைகள், சைடு கவிதைகள், நட்டுக்குத்து கவிதைகள் என்று பல்வேறு அழகியல்கள் உண்டு) தெரு முனைக்கு சென்று மக்காத குப்பைகள் என்று பெயர் பொறித்த சிகப்பு டப்பாவில் போடப்பட வேண்டியவை அவை என்பதற்கு மேல் அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை.
மாறாக தமிழில் பின்நவீனத்துவ புனைவுகளை படைப்புத்திறனோடு உருவாக்கியவர்கள் என்று ரமேஷ் பிரேதன், பா. வெங்கடேசன், சாரு நிவேதிதா என்று வெகு சிலர் உண்டு. (இதில் பா. வெங்கடேசன் அவர்களின் புனைவு வெளி எனக்கானது அல்ல. ஆனால் அவர் படைப்புத்திறன் கொண்ட பின் நவீன புனைவாளர் என்பதே என் எண்ணம்) இதில் சாரு நிவேதிதா இங்கே இந்த வாழ்வில் இடையறாது கலந்திருக்கும் பின் நவீன அபத்த நிலையுடன் எங்கோ பொருந்தி இருப்பவர். அவரது புனைவுகள் அப்படி பொருந்தி இருக்கும் அவரது அந்த நிலையில் இருந்து எழுவது.
ஒரு முறை கள்ளக்குறிச்சி ஊருக்கு பெரிய மனிதர் சாவு ஒன்றுக்கு சென்றிருந்தேன். மிக பெரிய குடும்பி. உறவுகள் கூடி 12 மணி நேரத்துக்கும் மேலாக சாங்கியங்கள் நடந்து கொண்டே இருந்தது. எல்லாம் முடிந்த பிறகு ஒன்று கண்டேன். அவருக்கு வாய்க்கரிசி யாக விழுந்தது கிட்டதட்ட ஒரு மூட்டை அரிசி. ஒரு மூட்டை அரிசி என்பது இருபத்தி ஐந்து கிலோ. ஒருவர் ஒரு பிடி வாய்க்கரிசி போடுவார். இப்படி போட்டுதான் 25 கிலோ அரிசி. ஒரு கணம் இதில் உள்ள அபத்தம் என்னை நிலை குலைய வைத்தது. சாரு அங்கே இருந்திருந்தார் என்றால் என்னை போலவே இதை பார்த்திருப்பார். (இதுதான் பின்னவீன அபத்தம்) ஆனால் சடங்குகள் மேல் கவனம் குவிக்கும் என்னை போல அன்றி, இந்த வாய்க்கரிசி மூட்டை அபத்தத்தை புனைவுக்குள் கொண்டு வந்திருப்பார். எது சொல்லப்படாததோ, எதை சொல்லக்கூடாதோ, எதை சொல்ல முடியாதோ அதை, இதையெல்லாமா இப்படியெல்லாமா சொல்வது என்று வாசகன் துணுக்குறும் வண்ணம் ஒரு வடிவில் மொழியில் அதை வெளிப்படுத்துவது அதுதான் சாரு. இத்தகு சாரு நிவேதிதாவின் சமீபத்திய கவிதை தொகுதியான - சொர்க்கம் நரகம் மற்றும் ஒரு கால்ஃப் மைதானம் - வாசிக்கக் கிடைத்தது. நான் வாசிக்கும் அவரது முதல் கவிதைத் தொகுப்பு இது.
2
பெரும்பாலான அறிமுக கவிஞர்களின் முதல் தொகுப்பு போல இதிலும் கவிதை குறித்தும் கவிஞன் குறித்தும் சில கவிதைகள் உண்டு. அதில் ஒன்று தேய் வழக்கை என்ன செய்ய நண்பா என்று கேட்கிறது. அது தெய்வழக்கு என்பதால் அதில் உள்ள உண்மை உண்மையின் மதிப்பை இழந்து விடுமா என்ன? மற்றொன்று கவிஞனாக தன்னை இரண்டாவது தேவன் என்றே பிரகடனம் செய்கிறது.
தொகுப்பின் முதல் கவிதையே முக்கியமான கவிதை. ஒருவன் கொண்ட நிழல் தொலைந்து போகிறது. அவனது அவஸ்தைகள் குறித்த கவிதை. சாதாரணமாக தோன்றும் இது உண்மையில் ஒரு விசித்திரமான உளவியல் வதை. எனது நண்பர் ஒருவர் வெளிநாடு சென்றார். அவர் சென்று இறங்கிய கால சூழல் விநோதமானது. அவர் அங்கே போன நாள் துவங்கி சூரியனையே மூன்று மாதம் கழித்துதான் முதன் முதலாக பார்த்தார். தனது நிழலை பல மாதம் கழித்து முதன் முதலாக கண்ட பரவசத்தை பகிர்ந்து கொண்டார். பின்னர் சென்று வாசித்த பிறகே அந்த நிலை அளிக்கும் உளவியல் அழுத்தம் எல்லாம் புரிந்தது. வெண்முரசு நாவலில் நிழலே இன்றி ஒளியில் எல்லாமே செயல்பாடு இன்றி உறைந்து நிற்கும் நகரம் ஒன்றின் சித்திரம் வரும். அந்த நகரத்தில் இருந்து வந்தவனின் கவிதையாக இதை மேலதிகமாக வாசிக்க முடிந்தது.
டியூரின் குதிரை வரும் ஐந்தாவது கவிதையில் முதல் பாதியில் இயங்கும் நிலமும் பொழுதும் உயர்திணையும் இரண்டாம் பாதியில் தலைகீழாக மாறி விடுகிறது. பொசுக்கும் வெயிலில் இருந்து நடுக்கும் குளிருக்கு மாறும் இந்த தலைகீழாக்கம் வழியே அது வாசகனுக்கு அளிக்கும் உணர்வு அலாதியானது.
பத்தாவது கவிதையும் இருபத்தி ஆறாவது இருபத்தி ஏழாவது கவிதையும் நேரடியாகவே நடை சித்திர வடிவில் அமைந்தவை. 19 ஆவது கவிதை வாசகனை மனிதனை விட்டு பறவைக்கு கூடுபாய வைக்கிறது என்றால், 29 ஆவது கவிதை விளிம்பு நிலை வாழ்வின் மௌன சாட்சியாக வாசகனை நிறுத்துகிறது. 21 ஆவது கவிதை மகிழ்சி எனும் நிலை மீதான வினோத உளவியல் தருணம் ஒன்றை தீண்டி பார்க்கிறது.
தொகுப்பின் 20 ஆவது கவிதை அழகிய வடிவம் கொண்டது. அதில் ஐந்து பகுப்பில் இருக்கும் ஒவ்வொன்றும் ஒரு தனி கவிதை. மொத்தமாக படித்தால் ஒரே கவிதை. மாய யதார்த அழகியல் கொண்டு அமைந்த அழகிய கவிதை. நேரடியாகவே ஜோக் ஆக அமைந்த கவிதை, பகடிக் கவிதை, விமர்சனக் கவிதை என பல்வேறு வகைகளை கொண்ட கவிதைகள் கொண்ட இந்த தொகுப்பு பிரமீள் கவிதை, பேலா தார் திரைப்படம், சங்க கவிதைகள் கொண்ட அழகியல் என பல்வேறு மூலகங்களில் இருந்து தனக்கான வெளிப்பாட்டு உருவங்களை எடுத்துக்கொள்கிறது.
3
நாம் ஒரு கார் வாங்க விரும்புகிறோம். இதுவரை இருக்கும் மாடல் தாண்டி புதிய மாடல். முழு விலையும் முன் பணமாக செலுத்த வேண்டும். குறிப்பிட்ட தேதியில் நேரில் வந்து புதிய காரை வாங்கி செல்லுங்கள் என்று ஒரு விளம்பரம் கண்டு அதன்படியே நடக்கிறோம். நாள் வருகிறது. ஷோ ரூம் போகிறோம். இந்தாருங்கள் உங்கள் கார். எடுத்து செல்லுங்கள் என்று சொல்லி பெட்டி ஒன்று தருகிறார்கள். நாம் ஆவலுடன் திறந்து பார்க்கிறோம். உள்ளே நிறைய காயலான் கடை பொருட்கள் மட்டும் கிடக்கிறது. பதறி போய் என்னையா இது என்று கேட்கிறோம். இது பின்னவீன காலத்தை சேர்ந்த "எதிர்" கார். இது இப்படித்தான் இருக்கும். ஒட்டி செல்லுங்கள் என்று சொல்கிறார்கள். நாம் என்ன செய்வோம் கையில் கிடைத்தை எடுத்து ஆசாமி மண்டையை உடைப்போமா மாட்டோமா.
கடந்த பல வருடமாக பின்னவீன கவிதைகள் என்ற பெயரில் வரும் நூற்றுக்கு 75 கவிதைகள், இந்த எதிர் கார் போன்ற எத்துவாளித்தனம்தான். வெறும் மொழிச் சிதிலம். ஏனய்யா இப்படி என்று கேட்டால் வாசக பங்கேற்பு என்ற பெயரில் கோட்பாட்டு குச்சியை ஆட்டி நம்மை குரங்கு போல தாவ சொல்வார்கள். அப்போதுதான் அவர்களின் மொழிச் சிதிலத்தில் சிக்கி சின்னாபின்னம் ஆகி கிடக்கும் கவிதை கண்ணுக்கு தெரியும் என்று சொல்வார்கள்.
இத்தகு பைத்தியக்கார தனங்களில் இருந்து விலகிய, பின்னவீன கூறுகளை கையாண்ட, அதே சமயம் கவிதை அனுபவத்தை தவற விடாத தொகுப்பு இது. பின்னவீன கூறுகளை எடுத்தாண்ட கவிதைகள் என்றுதான் சொல்கிறேனே அன்றி இவை முற்ற முழுதான பின்நவீனத்துவ கவிதைகள் என்று நான் சொல்லவில்லை.
இந்த தொகுப்பில் உள்ள கவிதைகள் கொண்ட பின்னவீன கூறுகள் என்னென்ன? முதலாவதாக பேச்சு மொழி. சனிக் கிழமையும் அதுவுமா என்று ஒரு கவிதை துவங்குகிறது. இரண்டாவதாக வலிமையான படிமங்கள், உட் சிக்கல்கள் போன்ற எடைகளை உதிர்த்து விட்டு அதனால் இலகுதன்மை பெற்று பறந்து எழ முயலும் நிலை. கவிதைகளுக்குள் வரும் தேன்சிட்டு இந்த நிலையின் பிரதி நிதியாகவே வருகிறது. மூன்றாவது இந்த கவிதைகளை தொடலாம், பார்க்கலாம், நுகரலாம் என்பதை போன்ற புலன் மயக்கத்தை அளிக்கும் சித்தரிப்புகள். நான்காவது இந்த தொகுதி ஒவ்வொரு கவிதையாக தனித் தனியாகவும் மொத்தமாகவும் அளிக்கும் கசப்பே அற்ற இனிய வாசிப்பு இன்பம். ஐந்தவதானதும் அதி முக்கியமானதுமான இரண்டின்மை என்பது அளிக்கும் இனிமை. அந்த இனிமையின் உச்சம் ஒன்பதாவது கவிதையில் உள்ளது.
இவை போக பின்நவீனத்துவம் பிரதிநிதித்துவம் செய்த முக்கிய அம்சமான வெளிப்படைத் தன்மை. (இங்கே வெளிப்படை தன்மை என்பது தபு சங்கர் போன்றோரின் கேளிக்கை கவிதைகளில் இருக்கும் வெளிப்படை தன்மை அல்ல) உள்ளபடிக்கே பாரங்களை உதறி இலகு கொண்டு எழ வைக்கும், அந்த விடுதலையை அளிக்கும் வெளிப்படைத் தன்மை. "உள்ளே" ஏதோ இருக்கிறது என்று கிண்டிக்கொண்டு கிடக்காமல் எது அளிக்கப்பட்டிருக்கிறதோ அதில் வெளிப்படையாக எல்லாம் இருக்கிறது எனும் தன்மை. மூளையை சற்றே மூட்டை கட்டி வைத்து விட்டு புலன் அனுபவம் போல காதல் போல கவிதைகளில் ஈடுபாடு கொள்ள செய்யும் தன்மை.
பூமியில் இருந்து பார்த்தால் நமக்கு மிக அருகில் இருக்கும் நெபுலாக்களில் ஒன்று ஹெலிக்ஸ். நட்சத்திரத்துக்கான கச்சா பொருட்கள் எல்லாம் அடங்கியது. ஆனால் நட்சத்திரம் அல்ல. ஒரு புகை மண்டலம் மட்டுமே. ஆனால் நட்சத்திரம் உமிழும் ஒளியை விட வசீகரமான வர்ண ஜாலம் கொண்ட ஒளியை தன்னில் கொண்டது. நல்ல நவீன கவிதைகளை வடிவத்தால் வெளிப்பட்டால் நட்சத்திரங்கள் என்று கொண்டால், நல்ல பின்னவீன (கூறுகள் கொண்ட) கவிதைகளை நெபுலாக்கள் என்று சொல்லலாம். அத்தகு நெபுலாவின் வர்ண ஜாலம் கொண்டது சாரு திவேதிதாவின்
சொர்க்கம் நரகம் மற்றும் ஒரு கால்ஃப் மைதானம் என்ற தலைப்பில் அமைந்த இந்த கவிதை தொகுப்பு.
பின்குறிப்புகள்:|
- இந்த கவிதை தொகுப்பு சற்று இடைவெளி விட்டு இரண்டு வெவ்வேறு ஆண்டுகளில் சாரு எழுதிய கவிதைகள் அடங்கியது. முதல் வருடம் எழுதிய கவிதைகள் தொகுப்புக்குள் - காற்றிலாவது - எனும் தலைப்பில் முதல் பகுதி என்றும், அடுத்த வருடங்களில் எழுதிய கவிதைகள் - உதிர்ந்த நட்சத்திரங்களின் ஒரு குரல் பாடல் - எனும் தலைப்பில் இரண்டாம் பகுதி என்றும் தலைப்பிட்டு ஒரே கவிதை நூலாக தொகுப்பாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் இந்த இரண்டு பகுதியில் ஒவ்வொன்றும் தனி தனி கவிதை தொகுப்பு என்றும், இரண்டும் ஒரே தொகுப்பு என்றும் வாசிக்க முடியும். அதில் காற்றிலாவது எனும் முதல் பகுதியை மட்டுமே பேசுபொருளாக கொண்ட கட்டுரை இது. இரண்டாம் பகுதி குறித்து மேலதிகமாக பேச சில உண்டு என்பதால் அதை தனி கட்டுரையாக பிரிதொரு சமயம் எழுதுவேன்.
- தொகுப்பில் இருந்து ஒரே ஒரு கவிதை வரியை கூட மேற்கோள் காட்டாது இந்த கட்டுரையை எழுதவேண்டும் என்பதை போதபூர்வமாகவே செய்திருக்கிறேன். இந்த தொகுப்பை பொறுத்த வரை ஒரே ஒரு வரி எனினும் வாசகர்கள் அதை நூலுக்குள் சென்று வாசிக்கட்டும் என்று ஒரு எண்ணம்.
- நெபுலா மண்டலத்துக்கு தமிழில் ஒண்முகில் என்று பெயர்.







0 comments:
Post a Comment