கவிஞர் அபி, அரிதினும் அரிது என்று கருதப்படும் வாழ்க்கையில், லயிப்பைத் தவறவிடும் இடங்களைச் சுட்டிக்காட்டுகிறார். லயிப்பின்மையின் வெளி எதனால் நிரப்பப்படுகிறது என்று பார்த்தால் கேலியாக இருக்கிறது. எத்தனை பெரிய இழப்பு, லயிப்பை அறியாத துயர். அதைவிடவும் நடுங்கச்செய்யும் புள்ளி - திருப்திப் பட்டுக் கொள்வது.
"வார்த்தைகள் செய்துகொடுத்த
இடவசதிக்குள்
வாழ்க்கை
மீண்டும் நுழைந்து
திருப்திப் பட்டுக் கொண்டது"
***
லயிப்பு
லயிப்பைத் தவறவிட்ட போது -
வெயிலடித்துக் கொண்டிருந்தது
வழமைபோல்
பொறிகளிலும் கதிர்களிலும்
அடையாளம் கொடுத்துக் கொண்டிருந்தது
ஒளி
தோற்றங்களிடம்
தோற்றுக் கொண்டிருந்தோம்
தலைப்புக்களில் அடங்கிப்
பத்தி பிரிந்திருந்தனர் மக்கள்
சங்கீதம்
நிறங்களைக்
கற்பித்துக் கொண்டிருந்தது
வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தது
தத்துவம்
வார்த்தைகள் செய்துகொடுத்த
இடவசதிக்குள்
வாழ்க்கை
மீண்டும் நுழைந்து
திருப்திப் பட்டுக் கொண்டது
ஏகமாய்ப் போர்த்திருந்த சுருதி
விலகவும்
மீண்டும்
தன் பொய்வடிவங்களில்
வியாபித்தது வெளி
- அபி
***
முதன்முதலில் விபாசனா பயிலும் பொழுது, மூக்கிற்கும் மேலுதட்டிற்கும் நடுவில் உள்ள முக்கோண பகுதியை, அங்கு வந்தும் சென்றுகொண்டிருக்கும் சுவாசத்தைக் கவனிக்கக் கற்றுக்கொடுப்பார்கள். மனம் விலகிச் செல்வதை நிதானமாகக் கொண்டுவந்து நாசியைக் கவனிக்கப் பழக்கியதும், மூக்கின் நுழைவாயிலை அறியமுடியும், அதைத் தொடர்ந்து சுவாசத்தையே அறிய முடியும், இன்னும் கவனித்தால் உள் செல்லும் சுவாசத்திற்கும் வெளிவரும் காற்றுக்கும் இடையில் உள்ள இடைவெளியையும் அறியமுடியும். இந்த அனுபவம் உடலில் நடந்துகொண்டிருக்கும் செயலை கூர்ந்து கவனிப்பதால் சாத்தியமாகிறது.
கவிஞர் அபியின் "மாற்றல்" கவிதை அப்படி ஒரு சாத்தியத்தை அகவயமான ஒன்றை வைத்து நிகழ்த்திக் காட்டுகிறது. அகவயமாக உருவகிக்கப் படும் ஒன்றை இன்னும் கூர்ந்து இன்னும் கூர்ந்து கவனித்து, கவனிக்கும் பொருளைப் பிளந்து, பிளந்ததன் இடையில் உள்ள பொழுதையும், தளத்தையும், சூழலையும், சாயையையும் அதற்கப்பால் உள்ளதைத் தேடுவதாக அல்லது கண்டடைவதாக இருந்தது.
பொருள் ரீதியாகக் கவிதையை வாசித்தாலும் அதே சாத்தியத்தைத் தொட்டுக்காட்டுகிறது. இரண்டு அணுக்கள் இடத்தை மாற்றிக்கொள்வதாக, ஒன்றுடன் மற்றொன்று பரிமாறிக்கொள்ளும் நடனத்தை, நிரந்தர தன்மை இல்லாத ஒரு கெமிக்கல் ரியாக்ஷனை (இரசாயன மாற்றத்தை) , அதற்குள் நடக்கும் அணைத்து விதமான மாற்றங்களையும் ஆளுள்ளதை வைத்து அறியமுடிந்தது.
***
மாற்றல்
பின்னணி உண்டு
மாற்றிக் கொள்வோம்
உன்னுடையதை நான்
என்னுடையதை நீ
மாற்றிக் கொண்ட இடைப் பொழுது
பின்னணி இல்லாதது
இடைப் பொழுதுகளையும்
மாற்றிக் கொள்வோம்
உன்னுடையதை நான்
என்னுடையதை நீ
பின்னணிக்குத் தளங்கள் உண்டு
மாற்றிக் கொண்டபின்
மற்றிக் கொள்வோம்
தளங்களை
தளங்களில் நடமாட்டங்கள் உண்டு
மற்றிக் கொள்வோம்
நடமாட்டங்களை
நடமாட்டங்களில்
பின்னணி
சூழலாக
மாறியிருக்கக் கூடும்
சூழலில்
எனது உனது சாயைகள்
நிர்ணயம் நோக்கி
வீண் முயற்சிகளில்
அலைந்து திரியக் கூடும்
மாற்றிக் கொள்வோம்
சாயைகளை
எனது உனது இன்றி
எதாவதாகவோ
இருக்க நேரிடும்
மாற்றிக் கொள்வோம்
எதாவதுகளை
வேகம் வேகமாக
மாற்றல் நிரந்தரப் படுகிறதா
உடனே
மாற்றிக் கொள்வோம்
மாற்றல்களை
- அபி
***
0 comments:
Post a Comment