‘சென்ற இதழில் வெளியான க.நா.சு.வின் ‘தமிழில் புதுக் கவிதை’ (‘சரஸ்வதி’ ஆண்டு மலர், 1959) என்ற கட்டுரை பரவலாக வாசிக்கப்பட்டுள்ளது. பலரும் கட்டுரையை வாசித்துப் பகிர்ந்திருந்தார்கள். கவிஞர் க. மோகனரங்கன் அக்கட்டுரையின் சிறப்புகளைக் குறிப்பிட்டு வாசகர்களுக்குப் பரிந்துரை செய்திருந்தார். அவரது பதிவில் மறுமொழியிட்ட ‘காலச்சுவடு’ கண்ணன் அக்கட்டுரை வெளியான காலத்தையொட்டி ‘எழுத்து’ இதழிலும் க.நா.சு. கவிதை பற்றி எழுதியிருப்பதை நினைவுகூர்ந்தார்.
இந்த இதழில் ‘விமர்சனக் கலை’ (1959) நூலிலிருந்து ஒரு பகுதியும், ‘எழுத்து’ ஆரம்ப இதழ்களில் வெளியான குறிப்புகளும் இடம்பெறுகின்றன. இந்தக் குறிப்புகள் அனைத்தும் ஒரே காலத்தில் எழுதப்பட்டவை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.’
புதுமைப்பித்தனதும் அவ்வளவாக மரபு பிறழாத கவிதை தான்; ஆனால் புது முறையில் செய்தார். மரபை ஒட்டிச் செய்யப்படுகிற இன்றையக் கவிதை நன்றாக இல்லாதிருப்பதற்கோ, பிரமாதமாக ஒன்றும் சாதிக்காதிருப்பதற்கோ காரணம் மரபு, எதுகை, மோனை, அணி அலங்கார கனம் அல்ல. இன்று கவி என்று எழுதத் தொடங்குகிறவர்களிடம் சரக்கும் ஒரு புது இலக்கிய நோக்கும் ஒரு தனித்துவம் இல்லாமையும்தான் காரணம்.
சமீபகாலத்திய தமிழ்க் கவிகளிலே பாரதியாரிடம் ஒரு வேகமும் Personality-யும் உண்டு. விஷயத் தெளிவும், வாக்கினிலே உண்மை ஒளியும் உண்டு. பாரதிதாசனின் ஆரம்பக் கவிதைகளிலே இத்துடன் ஒரு முழுமையும் இருந்து, பின்னர் மறைந்துவிட்டது. விஷயத்தை மட்டும் வைத்துச் சொல்லவில்லை, நான். புரட்சி மோகத்தை வைத்தும் சொல்லவில்லை. கவியாகவும் அவர் சக்திகள் குன்றிவிட்டன. தேசிகவிநாயகம் பிள்ளையின் எழுத்திலே ஒரு சுக பாவம் உண்டு; அதற்குமேல் அவர் கவிதையில் சிறப்பாகச் சொல்ல ஒன்றுமில்லை. நாமக்கல் கவிஞரைப் பிற்காலத் தலைமுறைகள் கவியாக நினைவில் வைத்துக்கொள்ளுமா என்பது சந்தேகமே. ச.து.சு. யோகியாரின் கவிதையிலே கம்பனின் வேகம் இருக்கிறது - அவ்வளவுதான். அந்த வேகம் கம்பனுடையதே தவிர, யோகியாருடையதல்ல. மற்றப்படி இன்று எழுதுகிற கவிகளிலே பிக்ஷுவும், தமிழ் ஒளியும் ஏதோ கொஞ்சம் முயற்சி செய்கிறார்கள். கலைவாணனும், சாலிவாஹனனும் சில சமயங்களில் பளிச்சென்று ஒரு உருவம், ஒரு சிந்தனைத் திரி ஏற்றுகிறார்கள் - அவ்வளவுதான். புதுமைப்பித்தனைப் பின்பற்றி ரகுநாதன் புதுக்கவிதை எழுதியிருக்கிறார். நான் படித்த வரையில் மற்றவருடைய கவிதை பூராவும் வெறும் வார்த்தைக் குப்பைதான் என்று சொல்ல வேண்டும். இந்த வார்த்தை குப்பைகளிலே சில சமயம், நிறைய எழுதுகிற தோஷத்தினாலும், விஷய முக்கியத்தினாலும், கொத்தமங்கலம் சுப்பு கவிதை செய்துவிடுகிற மாதிரி தோன்றுகிறது.
புதுமைப்பித்தனின் கவிதையிலே நம்பிக்கை வறட்சியும், அவருடைய தனித்துவமும் சேர்ந்து அற்புதமாகச் செயல் - அதாவது கவிதையாகச் சொல் - பட்டிருக்கின்றன. ஒரு கிண்டல் பாவம் அற்புதமாக அமைந்துள்ள கவிதை அவருடையது. இன்றைய வாழ்க்கைக்கேற்ற விமரிசனமாக அவர் கவிதை அமைந்துவிட்டது என்பதை அவருடைய தனிச்சிறப்பாகச் சொல்லவேண்டும். அதாவது இன்றைய கவிதைக்கான சந்தமும் போக்கும் அவர் கவிகளிலே அமைந்துவிட்டன. ‘மாகாவியம்’ என்னும் அவர் முயற்சி மிகவும் சிறப்பானது. அதைப் பின்பற்றி இன்னும் பலர் முயற்சி செய்துபார்த்தால் தற்காலத் தமிழ்க் கவிதை இலக்கிய அந்தஸ்தை எட்டிவிடும்.
எதுகை மோனை இலக்கணங்களைக் கையாண்டும், மேலை நாடுகளில் செய்கிறமாதிரி பலரகமான வசன கவிதையிலும் முயற்சிகள், இலக்கிய நினைவுடன், இலக்கியப் பிரக்ஞையுடன் செய்யப்படுகிற முயற்சிகள், தமிழ்க் கவிதை வளர மிகவும் அவசியம். அந்த அவசியத்தை உணர்ந்து நூற்றுக்கணக்கானவர்கள் முயன்று பார்த்தால், கவிதை வளம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் தமிழ்க் கவிதை அரசி மஹோன்னதமான ஸ்தானத்திலே வீற்றிருக்கத் தொடங்குவாள். நூற்றுக்கணக்கான முயற்சிகளிலே ஒன்றிரண்டு கவிதையாகவும் தேறலாம் என்பது நம்பிக்கையைப் பொறுத்த விஷயம்.
(‘விமரிசனக் கலை’ (1959) நூலில் ‘சில குறிப்புகள்’ என்ற கட்டுரையில் ‘கவிதை’ என்ற தலைப்பின் கீழ் வரும் பகுதி)
கவிதை
எனக்கும்
கவிதை பிடிக்காது, மனிதன் எத்தனையோ
எட்டுக்கள் எடுத்துவைத்துவிட்டான்: இவற்றில்
எத்தனை எட்டுக்கள் கவிதையால்
சாத்திய மாயின
என்று யார்
தீர்மானித்துச் சொல்ல இயலும்? பின்
எதற்காகத்தான் கவிதை தோன்றுகிறது?
மொழியின் மழலை அழகுதான்.
ஆனால் அது போதவே
போதாது.
போதுமானால் கவிதையைத் தவிர வேறு
இலக்கியம் தோன்றியிராதே. போதாது
என்றுதான், ஒன்றன்பின் ஒன்றாக
இத்தனை இலக்கியத்
துறைகள்
தோன்றின—நாடகமும், நாவலும், நீள்
கதையும், கட்டுரையும் இல்லாவிட்டால்
தோன்றியிராது; ஆனால் அவையும்தான்
திருப்தி தருவதில்லையே!
அதனால்
தான் நானும் கவிதை எழுதுகிறேன்.
மனிதனுக்குக் கலை எதுவும் திருப்தி தராது.
மேலே, மேலே என்கிற ஏக்கத்தைத்தான்
தரும். கலையின்
பிறப்பு
இந்த அடிப்படையில் ஏற்படுவது. கடவுளே
இன்னமும் உயிர்வைத்துக்கொண்டிருப்பது
இந்த அடிப்படையில்தான் சாத்தியம்
என்று சொல்லலாம்.
‘எழுத்து’, இதழ் 1, ஜனவரி 1959
***
‘எழுத்து’ம் அதன் முயற்சிகளும்
...3-வது ‘எழுத்’தில் வெளிவந்திருக்கிற ‘உன் கை நகம்’ என்கிற கவிதை அவசியமான ஒரு இன்றைய சோதனை முயற்சி. அது இருப்பதால்தான் உங்களுடைய ‘ஜீவா தயவு காட்டு’ என்கிற அசட்டு கலீல் கிப்ரான் பாட்டுக்கும்கூட ஓர் அர்த்தம் ஏற்படுகிற மாதிரி எனக்குத் தோன்றுகிறது...
‘எழுத்து’, இதழ் 4, ஏப்ரல் 1959
***
க.நா. சுப்ரமணியம் தமிழ் விக்கி பக்கம்
***
0 comments:
Post a Comment