தேவைக்கு மேலாகவோ அல்லது
குறைவாகவோ கூறுவதில்லை
மோசமான கவிதையில்
எப்போதும் சிறிது கழிக்கலாம்
சிறிது சேர்க்கலாம்.
ஆங்கிலக் கவி.
(ரவீந்திரநாத தாகூரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர், பி.1951)
***
எது நல்ல கவிதை என்பதை ஒருவன், ஒருக்கால், உள்ளுணர்வால் அறியலாம். அல்லது உயரலாம். வறண்ட தருக்கம் கொண்ட உலர்ந்த வார்த்தைகளால் ஒருவன் வரையறை செய்ய இயலுமா? உதாரணமாக ஒருவனால் சுவையற்றும், வார்த்தைக் கூட்டமாக முடியாமலும், காதலையோ அல்லது இன்ப துன்பங்களையோ வரையறுக்க இயலுமா? சொல்ல எண்ணியதைச் சொல்ல முடியாத நிலைதானே அப்போது மிஞ்சும்?
ஒரு கவிதையின் ஆக்கம் வார்த்தைகளால் ஆனது, தனி மனிதனின் மனதிலும் கனவுகளிலும் வேர்விட்டுநிற்கும் அளவிற்கு வார்த்தைகள் சமூக மரபுரிமையும் கொண்டவை. வேசியர் விடுதிகளின் சந்தைப் பேரத்திலிருந்து சர்வதேச ராஜதந்திரம் வரையிலும் கூக்குரல்களிலும் முணுமுணுப்புகளிலும் வெற்றோசைகளிலும் வார்த்தைகள் இறைந்து கிடக்கின்றன. ஒரு நல்ல கவிதையிலோ ஒவ்வொரு வார்த்தையும் பேசுகிறது. ஒவ்வொன்றும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. மாற்று சொற்கள் அற்றவையாக இருக்கின்றன. ஒவ்வொரு வார்த்தையும் நுட்பமான அர்த்த பேதங்களின் தொடர்புகளால் வலுவேறியது. வசீகரம் கொண்டது. ஒரு நல்ல கவிதையில் வார்த்தைகள் அமைதியாகப் பேசுகின்றன. எளிமையாக, அமைதியைக் குலைக்கப் பயந்தபடி பேசுகின்றன. ‘மற்றொன்றை’ சந்திப்பதற்கான படிகளாக அவை அமைகின்றன. ‘மற்றொன்’றின் சந்திப்பை வரவேற்கின்றன. ‘இருள் வலிமை’ எனக் கவிஞன் லோர்க்கா அழைத்த அந்தச் சக்தியை - தன்னையும் அசைத்து நம்மையும் அசைக்கும் சக்தி - அவை கொண்டிருக்கின்றன. உள்ளுணர்வினால் மட்டுமே இந்த மாயத் தன்மையை அறிந்துகொள்ள முடியும்.
ஒரு நல்ல கவிதை, எந்த ஒரு நல்ல கலைப்பொருளைப் போலவே, இருப்புப் பற்றிச் சிந்திக்கிறது. ஒரு போதும் அது கற்றுத் தர முற்படுவதில்லை. நம் கருத்துக்களின் சேமிப்புக் கிடங்குக்கு மேலும் ஒரு சேர்மானம் அல்ல அது. இங்கு உறைந்திருக்கும் சகலப் பொருள்களின் பூடகத்தன்மை பற்றி, ஒரு சிலவற்றை, வார்த்தைகளின் நெசவினால் வெளிப்படுத்தும் அசையும் உருவம் அது. அவற்றுடன் இணைந்து கிடைக்கின்றன நம் சாவுகள், நம் கனவுகள், நம் ஆத்மா, நம் சதை. அது வெளிப்படுத்தல் மயமானது - தொலைதூர நட்சத்திரங்களின் கனவிலிருந்து வாய் மெல்லும் உணவின் ருசி வரையிலும். அதற்குமுன் இல்லாத ஒன்றை உருவாக்கித் தருவதில் கொள்ளும் சந்தோஷம் அதன் சாராம்சம். ஒரு நல்ல கவிதை வார்த்தை கள்பால் பக்திமயமான உறவும், முழுமையான அடக்கமும் கொண்டது. குயவனுக்கும் மண்ணுக்குமான; தச்சனுக்கும் மரத்திற்குமான உறவு வகை அது.
மனித துக்கத்தின் மொத்தச் சரித்திரங்களிலிருந்து ஒரு நல்ல கவிதை ஒரு போதும் கசப்பை மட்டும் ஏந்திக்கொள்வதில்லை. அது எடுத்துக்கொள்வது கருணையை; நம்பிக்கையின் உணர்ச்சியற்ற உறுதிப்பாட்டை. ஆமாம்; அது விளைபயனில் மிகுந்த வெறி கொண்டது. சரித்திரத்தைப் பற்றி அசிரத்தை கொண்டது. காலடியில் ஒரு எறும்பு மிதிபடும்போதுகூட நியாயம் கேட்டு, மூடி இருக்கும் கடவுள்களின் சகலக் கதவுகளையும் அது தட்டும். புல்லின் ஒரு கீற்று முளைத்த இடத்தில் இரண்டு முளைக்க அது பிரார்த்தனை செய்யும். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வாசகனும் கவிஞன் ஆவானாக. ஒரு நல்ல கவிதை, எதை அது சொல்லிற்றோ அது ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டது என்ற வருத்தத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. எதை அது சொல்ல விரும்புகிறதோ அதைச் சொல்ல முடியாமல் இருப்பதும் அதற்குத் தெரியும். உண்மையான மேலான கவிதை ஒன்றை, யாரோ ஒருவன், எங்கோ ஓரிடத்தில் புனைந்து விடுவான் என்ற நம்பிக்கையில் அது வாழ்ந்துகொண்டிருக்கிறது.
ஒரிய மொழிக் கவி பி.1937
***
நான் ஒரு கவிதை இதழை, உத்தேசமாக, இருபத்தைந்து ஆண்டுகள் பதிப்பித்தேன். அந்த நாட்களில் கணிசமான இளம் கவிஞர்களுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. நிச்சயமற்ற தன்மையும், பயமும், அடக்கமும், ரகசியச் சவால்களும் நிரம்பிய என் இளமைக் காலத்தை அடிக்கடி நினைவு கூருகிறேன். ஆசிரியரின் அலுவலகத்தில் நான் அமர்ந்திருக்க, நடுங்கும் கரங்களுடன் ஒரு இளம்கவிஞன் தனது கையெழுத்துப் பிரதியை என்னிடம் அளிக்கும்போது என் வளர்பருவத்தை அவனிடம் இனம் காண முயல்கிறேன். ஒரு இளம் கவிஞனின் கவிதைகளைப் படித்துப் பார்க்காமலேயே, அவனது பழக்கவழக்கங்களை ஆராய்ந்தே அவன் கவிதை உலகத்தில் நிலைத்திருப்பானா மாட்டானா என்பதைக் கண்டறிய முடியும் - இந்த மனப்பதிவு தோற்றுப்போகும் சந்தர்ப்பங்கள் மிகுதி என்றாலும், கலையின் உலகில், முன் கூட்டி வந்த முடிவுகள் எதுவும் முற்றாகப் பொருந்துவதில்லை. அதனால்தான் வாழ்க்கை இவ்வளவு வசீகரமாக இருக்கிறது.
ஒரு பெண்ணின் மனத்தைக் கொள்ளைகொள்ளும் நோக்கத்தில்தான் கவிதை எழுத்தின் முதல் முயற்சிகள் என்னிடம் தோன்றின. அவள் என் நண்பனின் சகோதரி; என் முதல் காதலி. அவளுக்காகத்தான் எழுதினேன் என்றாலும் எழுதியவை அனைத்தும் காதல் கவிதைகள் அல்ல. சீல்டாக் ஸ்டேஷனில் உள்ள வயோதிக அகதிப் பெண்ணைப் பற்றி எழுதிய கவிதையைக்கூட நான் அவளுக்கு அனுப்பியிருந்தேன். இதே காரணத்துக்காகத்தான் தங்கள் முதல் கவிதைகளை இன்றைய இளம் கவிஞர்கள் எழுத முற்படுகிறார்களா என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். கவிஞர் குழு ஒன்றுடன் இரண்டொரு ஆண்டுகளுக்குள் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது. கவிதையில் எங்கள் கலகம் அப்போதுதான் ஆரம்பம் ஆயிற்று. ஆவேசத்திற்கு ஆட்பட்டு அனைத்தையும் அழிக்க விரும்பினோம் - தாகூரின் பாதிப்பை, அப்போது ஆட்சியில் இருந்த கவிதையின் ஓசைகளை, இயற்கையின் வருணனைகளை. இவை வெளிப்படையான சவால்களாக இருந்தன. ஆனால் ரகசியத்தில், தன்னந்தனியாகக் கவிதை எழுதப்பட வேண்டிய புத்தகத்தின் முன்னால் இருந்தபோது, கூர்மையான கேள்விகள் என்னைப் பேய்போல் பிடித்து ஆட்டின. நான் படைக்கும் கவிதை, கவிதை உலகத்திற்கு உரியதுதானா? நான் பயன்படுத்தும் வார்த்தைகள் அவற்றிற்கே உரிய இசைத்தன்மையைக் கொண்டிருக்கின்றனவா? இந்த உலகில் எண்ணற்ற நல்ல கவிதைகள் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன. இதற்குமேல் நானும் கவிதைகள் எழுத வேண்டுமா?
சிறந்த கவிதைகள் எழுதும் பொருட்டுத் தங்களை எவ்வாறு தயார் செய்துகொள்ள வேண்டும் என்று இன்றைய இளம் கவிஞர்கள் என்னைப் பார்த்துக் கேட்கும்போது நான் விடை கூறுவதற்குப் பதில் புன்னகை புரிகிறேன். கவிதைகள் எழுதுவது பற்றிக் கூறப்படும் எந்த அறிவுரையும் விரும்பத்தக்கது அல்ல. ஒரு குறிப்பிட்ட வயதில் பலரும் கவிதை எழுதத் தொடங்குகின்றனர். பின், பருவகாலம் முடிந்த பூக்கள்போல் அவர்களில் பலரும் உதிர்ந்துவிடுகின்றனர். ஆனால் வார்த்தைகளின் தந்திர வசீகரத்தால் ஆட்டிப்படைக்கப்படுகிறவன் கவிதைகளைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பான். அவனால் எழுதாமல் இருக்க முடியாது. கட்டுரை, கதை, அரசியல் துண்டுப்பிரசுரம், சமூக ஆராய்ச்சி இவற்றிற்குப் பதிலாக எவன் ஒருவனுக்குத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள கவிதையை நாடவேண்டி இருக்கிறதோ அவன் அடிப்படையாக வார்த்தைகளின் அழகைப் பூஜிப்பவன். ஆனால் ஒருவன் வார்த்தைகளின் ஓசைகளில் சிறையுண்டுபோனால் அவன் கவிதையை உருவாக்குவதில்லை. அப்போது வார்த்தைகளின் விளையாட்டாக அது உருமாறிவிடுகிறது. வெறும் அருவம் அல்ல கவிதை. எவ்வளவு சுருக்கமாக இருப்பினும், எவ்வளவு குறியீட்டுப் பாங்காக அதன் மொழி இருப்பினும், தான் வாழும் காலத்தைப் பற்றியும், தேசத்தைப் பற்றியுமான ஒரு கவிஞனின் பார்வையை ஒரு கவிதை முன்வைக்கிறது. ஒரு சமூகத்தில் மாறி மாறி நிகழும் சாட்சிகளிடையே, மனசாட்சியின் பங்கைக் கவிஞன் ஒருவனாலேயே உருவாக்க முடியும். இந்த நூற்றாண்டின் சரித்திரத்தை, வரவிருக்கும் காலம் எழுத முற்படும்போது, நம்பத் தகுந்த சாட்சியாகக் கவிதை மட்டுமே வந்து நிற்கும்.
இருப்பினும், தன் வாழ்நாள் பூராவும் கவிஞனின் மனதை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் கேள்வி ஒன்று உண்டு. இன்று வரையிலும், மேலான கவிதையின் ஒரு வரியையேனும் எழுதுவதில் தான் வெற்றி பெற்றிருக்கிறேனா என்பதுதான் அது.
வங்காளக் கவி, நாவலாசிரியர் பி.1934
***
கடிவாளத்தை
சிந்தனை பற்றும் போது
மொழி
சாதுவாக விரையும் போது
கவிதையின் பிறப்பு நிகழ்கிறது...
ஆங்கிலப் பெண் கவி.
மாதவிக்குட்டி என்ற பெயரில்
மலையாளத்திலும் எழுதி வருகிறார். பி.1934
***
ஒரு நல்ல கவிதையை வரையறுக்க இயலாது. ஏனெனில் நல்ல கவிதைக்கான வரையறுப்பு என்று ஒன்றும் இல்லை. ஆனால் வாழக்கையின் ஆழமான அனுபவத்தின் சாராம்சம் போல் ஒருவனின் ஆத்மாவை அது தொடும்போது ஒருவனால் அதை இனம் கண்டுகொள்ள முடியும்.
ஒரு நல்ல கவிதை அதன் செய்தியை நம் மனதில் மின்னலைப் போல் பாய்ச்சுகிறது - ஆழங்காண முடியாத அனுபவம், பரவசம், தனித்துவக் களிப்பு ஆகியவற்றின் செய்தியை.
ஒரு நல்ல கவிதை ஒரு உலகத்திலிருந்து மற்றொரு உலகத்திற்கும், மேன்மையிலிருந்து மேன்மை தாண்டியும், காணக் கிடைப்பவையும் காணக் கிடைக்காதவையும், அசைபவையும் அசையாது நிற்பவையும், உயிரும் அஃறிணையும் உடன் வாழும் உலகத்திற்கும் உங்களை அழைத்துச் செல்கிறது.
ஒரு நல்ல கவிதை மௌனத்திற்கு மொழியும் அளவுகோலும், மொழிக்கு உருவமும் மணமும், பூடகங்களுக்கு வலுவும், உண்மைக்குக் கொடியும், வெற்றுச் சொற்களுக்கு அழகும் தருகிறது.
ஒரு நல்ல கவிதை தொனிகளின் நிரந்தரம் கொண்டது. அசைய அசையத் தன் அர்த்தத்தை வெளிப்படுத்துவது. நிமிஷத்திக்கு அது நித்தியத்துவம் அளிக்கிறது. அது அறிவிற்கும் இதயத்திற்கும் ஒரு இன்ப அதிர்ச்சியைத் தருகிறது. வார்த்தைக்கும், இசைக்கும், ஓசைக்கும் அது தெய்வப் பதவியை அளிக்கிறது.
ஒரு நல்ல கவிதை விளக்க முடியாத ஒரு பேரனுபவம்.
அஸ்ஸாமிய பெண் கவி. பி. 1933
***
நல்ல கவிதை என்று ஒன்று இல்லை என அறிவித்து ஒருவன் இக்கேள்வியிலிருந்து தப்பித்துக்கொண்டுவிட முடியுமா? அவ்வாறு ஒருவன் உண்மையாகவே உணர்ந்தான் என்றால் அப்படிச் செய்யலாம்தான். ஆனால் நல்ல கவிதைகள் இருக்கின்றன. சந்தேகம் இல்லை. நல்ல கவிதைகளுக்குரிய வரையறைகள் சார்ந்த எண்ணங்களுடன் அவை ஒத்துப் போகாதவை என்பதால் தரமானவையாக அவை ஏற்றுக் கொள்ளப்படாமல் இருக்கலாம். பிடித்து வைக்கப்பட்ட எல்லா வரையறைகளையும் மீறுபவைதான் நல்ல கவிதை என்றுகூடச் சொல்லிவிடலாம். வரையறுக்கப்பட்ட பின்புதானே வரையறை சார்ந்த அளவுகோல்கள் உருவாகின்றன. மேலும் வரையறைகளும் அப்படி ஒன்றும் உறுதியானவையும் அல்ல. நல்ல கவிதை பற்றிய சிந்தனை வழுக்கிக்கொண்டு போகக்கூடியது - அக்கவிதைகளைப் போலவே.
ஒவ்வொரு நல்ல கவிதையும் ஒரு புதிய விடை பெறுதல். வேறு எந்தக் கவிதைக்கும் செல்லுபடி ஆகாத ஒரு புதிய வரையறையை அது உருவாக்குகிறது. எண்ணற்ற கவிதைகளுக்கு ஒரு வரையறை செல்லுபடி ஆகுமென்றால், அது அதிகம் பொதுமைப்பட்டு, உபயோகம் இல்லாமலே போய்விடும். கவிதையில் வரையறைகளைத் தேடுபவர்கள் நிச்சயம் தோற்றுப் போவார்கள்.
ஒரு நல்ல கவிதை சுயமானதாக இருக்க வேண்டும் என்று சொல்லலாம். அது ஒரு மோசமான கவிஞனை ஆசை காட்டி ஏமாற்றும். அது ஒரு நல்ல வாசகன் மனத்தில் - சஹிருதயன் மனத்தில் - அதை அவன் கவனிக்கும் முன்னரே விர்ரென்று புகுந்துவிடும்.
சுருங்கக் கூறுவது எனில் ஒரு நல்ல கவிதை நல்ல கவிதையாக இருக்க வேண்டும்.
மலையாளக் கவி. பி. 1936
***
கவிஞன் பொருந்திப் போகாதவன், அவன் உண்மையான கவிஞன் எனில். அத்துடன் அவன் தன் வாசகர்களையும் பொருந்திப் போகாதவர்களாக ஆக்குவதில் சந்தோஷம் அடைகிறான்.
கவிதை ஒரு மன நிர்ப்பந்தத்தின் விளைவு என்று கூறுவது ஒரு சூத்திரம். அந்த மன நிர்ப்பந்தத்தின் குணம் என்ன? எவ்வாறு அதை நான் சமாளிக்கிறேன்?
இதன் விடை சுருக்கமாக, கவிஞன் ஒட்டி ஒழுகுகிறவர்களின் தாக்குதலுக்கு ஆளாகும் தன் சுதந்திரத்தை, தன் ஆளுமையை ஒருங்கிணைத்து வளர்த்துக்கொள்வதன் மூலம் காப்பாற்றிக் கொள்கிறான். தன்னைத் தாண்டி அவன் வளர்வதற்கு முன்னரே இது நிகழ்கிறது. இந்த நேரங்களில்தான் அவன் கவிதைகள் பிறக்கின்றன. என் கவிதை ஒன்றிலிருந்து மேற்கோள் காட்டுகிறேன்:
என் படிமம் ஒன்றை உருவாக்கி
பின்னர் அதை நான் உடைக்கின்றேன்
அப்போது நீங்கள் கூறுகிறீர்கள்
நான் ஒரு கவிதையை
உருவாக்கி விட்டேனென்று.
தன் அகநிலையைத் தாண்டி வளர்வது என்பது கவிஞன் என்று கூறிக்கொள்பவர்களுக்கு மட்டுமே உரித்தான நிகழ்வு அல்ல என்றே நான் நம்புகிறேன். இது போன்ற அனுபவங்களுக்கு என் சக மனிதர்கள் பலரும் ஆளாகிறார்கள். அவர்கள் எப்போதும் எழுதுவதில்லை என்பதுதான் வித்தியாசம். சிலர் முழு மனிதர்களாக வளர்ந்தும் விடுகின்றனர்; அல்லது வேறு துறைகளைத் தேடிச் செல்கின்றனர். ஒருக்கால் அத்துறைகளில், அவர்கள் எழுத்துத் துறையைவிட அதிகத் தயாரிப்புக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறை ஒரு கவிஞன் எழுதும் போதும் பொருந்திப் போகாதவர்களின் சமூகத்தை விரித்துக்கொண்டே போகிறான். உயிர் வாழ்வதற்காக ஒட்டி ஒழுகுபவர்களின் சமூகத்தில், கவிதை நின்று நிலைக்க, வேறு மார்க்கம் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்திக் கவி. பி.1929
***
சமீபத்தில் முப்பதாண்டு கவிதை எழுத்தின் முடிவில், என் படைப்பு முறைகளைத் திரும்பிப் பார்ப்பது அவசியம் என்று எனக்குத் தோன்றிற்று. இதன் விளைவாகப் பதினைந்து கவிதைகளின் தொடர் வரிசை உருவாயிற்று. கடைசி பதினான்கு வரி கவிதையின் கடைசி இரண்டு வரிகள், எப்போதாவது ஒரு முறை எப்படி ஒரு நல்ல கவிதை நிகழ்கிறது என்பது பற்றிய என் எண்ணத்தைத் தொகுப்பதாக இருக்கிறது.
ஒவ்வொரு கவிதையும்
நம்பிக்கையின் ஒரு பயிர்
ஆழத்திலிருந்து மேலெழும்
முத்துக்குளிப்போனின் அதிருஷ்டம்
எது நல்ல கவிதை? நம் முன்னோர்கள் கடவுளின் கருத்தாக்கத்தைப் பற்றி நமக்குக் கூற முயன்றபோது, ‘எவை எவை அல்ல’ என்று கூறியதைப் போலத்தான் நாமும் முயல வேண்டி இருக்கிறது.
ஒரு கவிதை கருத்துக்களைப் பரிவர்த்தனை செய்யும் நோக்கம் கொண்டதல்ல. கதை கூறவோ, கருத்தாக்கங்களைக் கூறவோ அவை இல்லை. ஒரு விஞ்ஞான விந்நியாசத்தின் தர்க்கமல்ல அதன் தர்க்கம். ஜீரணித்து முடித்துவிட்ட தன் அனுபவங்களை ஒரு கவிஞன் திணிப்பதற்கான அச்சும் அல்ல கவிதை.
அடிப்படையாக, உணர்ச்சியின் தளத்தில் தொழில்படும் தன்மையில், கவிதை வசனத்திலிருந்து வேறுபட்டு நிற்கிறது. ஒரு முத்து மாலையில் முத்துக்களை இணைக்கும் சரடு போன்றது கவிஞன் தன் அனுபவத்தைத் தொற்ற வைக்கப் பயன்படுத்தும் தர்க்கம். கவிஞனின் வார்த்தைகளும், படிமங்களும் உருவாக்கும் உணர்வுகளும், பிரதிபலிப்புகளும் இணைந்து அந்தத் தர்க்கம் உருவாகிறது. ஒரு அனுபவத்திற்கு உருவம் தரக் கவிஞன் மேற்கொள்ளும் முயற்சியின் விளைவே கவிதை. இந்தச் செயல்பாட்டில் எது தன் வாசகனுக்கும் உரிய பங்களிப்பைத் தருகிறதோ அதுதான் நல்ல கவிதை.
முத்துக்குளித்தெடுக்கும் கவிதைகள் அடிக்கடி நிகழ்வதில்லை என்பது வருந்தத்தக்கதுதான். மனதில் நம்பிக்கையுடன் ஆழ்கடலில் மீண்டும் மீண்டும் மூழ்குவதைத் தவிரக் கவிஞன் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை.
கன்னடக் கவி. பி.1925
***
ஒரு நல்ல கவிதையை வரையறுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என்னால் முடியவில்லை என்பதை வருத்தத்துடன் ஏற்றுக்கொள்கிறேன். ஒரு நல்ல மனிதனின் முன்னால் நிற்கும்போது அவனுடைய நற்குணத்தை நாம் உணருவதைப் போலவே படிக்கும்போதோ அல்லது கேட்கும்போதோ ஒரு நல்ல கவிதையை நாம் இனம் கண்டுகொள்ள முடியும். ஒரு நல்ல கவிதை ருசி சார்ந்த விஷயமும்கூட. அறிவும் உணர்வும் கொண்ட பண்பட்ட மனிதனின் ருசி.
ஒரு நல்ல கவிதையை வரையறுக்க இயலாது என்றாலும் கூட ஒரு நல்ல கவிதையை உருவாக்கும் சில குணங்கள் பற்றி நிச்சயமாகச் சொல்ல முடியும். மிக அதிகமானவற்றை மிகக் குறைந்த வார்த்தைகளில் வெளியிடுவதால் இலக்கியத்தில் ஆகப் பெரிய உருவம் கவிதைதான் என்று சொல்வேன். ஒரு நல்ல கவிதை ஆழ்ந்த அர்த்தம் கொண்டிருக்க வேண்டும். சுருங்கக் கூறலும், நேர்த்தியும் கொண்டிருக்க வேண்டும். அதன் வார்த்தைகளின் கூட்டுத் தொகையைவிட மிக அதிகம் அது சொல்ல வேண்டும்.
வார்த்தைகள் நடனம் புரியும்போது கவிதைகள் பிறக்கின்றன. ஒரு நல்ல கவிதை இசையும் ஒத்திசைவும் கொண்டதாக இருக்க வேண்டும். மந்திரம்போல் இருக்க வேண்டும் அது. ஆதி ஓசையில் முழு உடலும் அதிரும் உச்சாடனமாக இருக்க வேண்டும். கலை வெளியீட்டின் தெய்வீகச் சக்தியாக, மிக வலுவான ஊடகமாக நிற்பவை வார்தைகள். அவை ஓசையாகவும், நிறமாகவும், சிந்தனையாகவும், உணர்வாகவும், காட்சிப் புலனாகவும் இருக்கின்றன. இந்தக் குணங்கள் எல்லாம் கொண்டிருக்க வேண்டும் ஒரு நல்ல கவிதை. அது உங்களைச் சிந்திக்கத் தூண்ட வேண்டும். வண்ணப் படிமங்களை அது உங்கள் மனக்கண் முன் உருவாக்க வேண்டும். உங்கள் மனதை மேலெடுத்துச் செல்ல வேண்டும். வாழ்க்கையின் செழுமையையும் அழகையும் வெளிப்படுத்தக்கூடியவையாக அவை இருக்க வேண்டும். அது பாதிப்புக்கு ஆட்பட்டது மட்டுமல்ல; ஊக்கத்தை அளிக்கக்கூடியதும் ஆகும்.
கொங்கணிக் கவி. பி.1925
***
பரவலாகத் தெரிய வந்ததும், எல்லோரும் அறிந்திருப்பதுமான சூத்திரம் ஒன்று உண்டு. கவிதையில் உருவமும் உள்ளடக்கமும் வேறுபட்டு நிற்கக் கூடாது என்பதுதான் அது. வாசகனுக்கு இரண்டும் ஒன்றாகத் தெரிய வேண்டும். நல்லதாகவோ, மோசமாகவோ, பலவீனமாகவோ, உறுதி யாகவோ, ஏதோ ஒன்று எடுத்து உரைக்கப்படுகிறது என்ற தோற்றம் தரக் கூடாது. மற்றொரு உருவத்தில் இதனை அளித்திருக்க முடியாது என்றும் தோன்ற வேண்டும். இதை நிரூபிக்க வழி ஒன்றும் இல்லை என்றாலும் அவ்வாறு தோன்ற வேண்டும்.
உள்ளடக்கமும் உருவமும் ஒருங்கிணைந்து நிற்க வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்றால் தொடர்ந்து பல கேள்விகள் முளைக்கின்றன. உதாரணமாகப் படைப்பாளியின் உத்தியினால் உருவத்தில் பல ஊனங்களும் பலவீனங்களும் இருக்கலாம். அவற்றைச் சமன் செய்துகொண்டுபோகும் வேறு கூறுகளும் கவிதையில் இருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால் உருவ பலவீனங்கள் - நாம் அவற்றைச் சுட்டிக்காட்டக் கூடுமென்றாலும் - அவற்றால் நாம் பாதிக்கப்படாமல் இருக்கும் அளவுக்குக் கவிதையில் கூறப்பட்டவை முக்கியத்துவம் பெற்றவையாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, ஒத்திசைவு பற்றிக் கூறுவதென்றால், அது மிகுந்த ஒருங்கிணைந்த உறவைக் கொண்டிருக்க வேண்டும். வார்த்தை வளம் சார்ந்தும் இதைச் சொல்லலாம். உதாரணமாக, சொல்ல வந்த விஷயம் எளிமையாக இருக்க, வார்த்தைகள் அலங்காரமானவையாக இருக்குமென்றால் - நிறைய இளம் கவிஞர்கள் விஷயத்தில் இவ்வாறு நேருகிறது; எளிய விஷயங்களைச் சிக்கலான வழியில் கூறுவது மோஸ்தராகக்கூடக் கருதப்படுகிறது - நான் என்னளவில் இதை ஒரு சிறந்த கவிதையாக ஏற்றுக்கொள்ளமாட்டேன். கவிதையின் ஊற்றுக்கண் உணர்ச்சி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு தத்துவக் கருத்தையோ அல்லது ஒரு அரசியல் கருத்தையோ அல்லது தனிப்பட்ட உறவையோ இவற்றில் உணர்ச்சிகள் உறவாட இல்லையென்றால் எவரும் அதைக் கவிதையாக எழுதப்போவதில்லை. அப்படி எழுதினால் கவிதை எழுதியதற்கான உந்துதல் பலவீனமாகவே இருக்கும்.
குறியீட்டையும் படிவத்தையும் அலங்காரப் பொருட்களாக நான் கருதவில்லை. இவை கவிஞனின் குரலை வெளிப்படுத்துவதோடு கவிதையின் தவிர்க்க முடியாத பகுதியாகவும் இருக்க வேண்டும். படிமங்களாகவும் குறியீடுகளாகவும் நிறைய வார்த்தைகள் இருக்கும் வகையைச் சேர்ந்த கவிஞன் என்றால் அவனுடைய வெளியீட்டுப் பாங்காக அவற்றைத்தான் நாம் எதிர்பார்க்க முடியும். ஆனால் வேறு சில கவிஞர்கள் குறியீடு களுக்கு அதிமுக்கியத்துவம் அளிக்கும் விமர்சகர்கள் அல்லது வாசகர்கள் பார்வையில் தன் கவிதையின் தரத்தைத் தூக்குவதற்காகக் குறியீடுகளைத் திணிப்பார்கள். குறியீட்டுயியல் என்று கூறும்போதே நல்ல குறியீட்டுயியல் என்று தீர்மானித்துக் கொண்டுவிடுகிறார்கள். அப்படி அமைய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மதிப்பீடுகள் சார்ந்த அளவுகோல்கள் உள்ளன. பொதுவாக இவை கற்றுத்தரப்படுகின்றன; விவாதிக் கப்படுகின்றன; கற்பிக்கப்படுகின்றன. இவ்விஷயங்கள் சார்ந்து ஏகோபித்த அபிப்பிராயம் என்று ஒன்றும் இல்லை.
லட்சியபூர்வமான கவிதைகள் பற்றி நான் யோசிப்பது இல்லை. ஏனெனில் வெவ்வேறு மட்டங்களில் கவிதைகள் நன்றாக இருக்கலாம். ஒரு சிறிய கிண்டல் கவிதை நன்றாக இருக்கலாம். அதன் மதிப்பை நாம் மிகைப்படுத்த வேண்டியதில்லை. ஆனால் எந்த மட்டத்தில் அது இயங்குகிறதோ அந்த மட்டத்தில் வைத்துத்தான் நாம் அதை மதிப்பிட வேண்டும். அந்த மட்டம் திருப்திகரமாக இருந்தால் அது ஒரு நல்ல கவிதை, என்னைப் பொருத்தவரையில், யாரேனும் ஒருவர் அதைப் பெரிய கவிதை என்று என்னிடம் சொன்னால் ‘இல்லை’ என்பேன். ஆகப் பெரியவை எந்த மட்டத்தில் இயங்குகின்றன என்பதும் எனக்குத் தெரியும்.
ஆங்கிலத்தில் எழுதும் இந்தியக் கவி பி.1924
***
அறிவுபூர்வமான தீவிரமும், உணர்ச்சிபூர்வமான தீவிரமும் எங்கு கூடி முயங்குகிறதோ அங்கு ஒரு கவிதை உயிர் கொள்கிறது என்பது என் அபிப்பிராயம். மனமும், இதயமும், ஆத்மாவும் இணைகின்றன. ஒரு நல்ல கவிதையின் உருவாக்கத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்த உருதுக் கவி முஸ்ஸஃபர் ஷா தன்னுடைய இரட்டை வரிப் பாடலொன்றில் கூறுகிறார்:
சுடர் விடும் நெருப்பென உண்மையை
நீ அறிந்து கொண்டாய் எனில்
ஏந்து அதனை நாவில் களிப்புடன்.
இதை ஒரு நல்ல கவிதை என்று நான் அழைப்பேன். நெருப்பின் தணியாத தணல் மேற்கொண்ட தவத்திலிருந்து பிறந்த வரிகள்.
இர்வின் வாலஸோ அல்லது வேறுயாரோ ஒருவர் எழுதியிருக்கிறார். பலருடைய அனுபவமாகவும் இது இருக்கிறது. ‘உத்தியில் கைதேர்ந்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குச் சொல்ல ஒன்றும் இராது. அவர்களால் எதையும் சாதிக்க இயலாது. உள்ளே ஒன்றும் இல்லாதபோது எப்படி அவர்கள் தேடிக்கொள்ள முடியும். நிறையச் சொல்ல இருக்கும்; ஆனால் செம்மையாகச் சொல்லத் துணைபோகும் உத்தி இராது. இவர்கள் மற்றொரு வகை. இவர்கள்மீது சிறிது நம்பிக்கை கொள்ளலாம். ஏனெனில் உத்தி என்பது முயற்சியால் கற்றுக்கொள்ளக்கூடியது என்பதால்.’
உள்ளடக்கம் இருக்கும்போதுதான் உத்தியின் தேவையே முளைக்கிறது. உள்ளடக்கத்திற்கு மாறாக உத்திக்கு, அதிக அழுத்தம் இந்நாட்களில் தரப்படுகிறது. நம் வாழ்வும் உள்ளடக்கம் இல்லாதுபோனதே இதற்குக் காரணம். நாம் வாழும் முறையிலும் நம் பார்வையிலும்கூட உள்ளடக்கம் இல்லாது போயிற்று. அதனால்தான் நம் எழுத்திலும் சாரம் இல்லாமல் போயிற்று. வார்த்தைகள் அவற்றின் வலுவை இழந்தவைபோல் காட்சியளிக்கின்றன. ஏதோ ஒரு குறை நம்மிடம் தோன்றிவிட்டது. நம் வார்த்தைகளில் ஒளியும் இல்லை; நிழலும் இல்லை.
உத்தி என்றால் என்ன? நமக்குச் சொல்ல இருக்கிறது. அதற்குச் சொல்லும் முறை ஒன்று வேண்டும். உத்தி என்றால் ஒரு விஷயத்தை எப்படிச் சொல்வது என்பதுதான். அதன் முறைதான் ஒரு எழுத்தாளனை உருவாக்குகிறது. மனதிற் குள்ளும் இதயத்திற்குள்ளும் நேரடியாகப் போகும்படி, ஒருவனை ஸ்பரிசிக்கும்படி, மொழிமீது முழு ஆற்றலுடனும், தீவிரத் துடனும், புதிய பதச் சேர்க்கைகளில் ஒரு எழுத்தாளனால் வெளியிட முடிந்தால் அதுதான் கவிதை. இல்லாதவரையிலும் வார்த்தைகள் சூனியங்களாக, அறிவுரைகளாக மிஞ்சும். வார்த்தைகள் கவிதைகளாக நம் உணர்ச்சியைத் தொட வேண்டும். நம் அறிவையும் தர்க்க புத்தியையும்கூடத் தொட வேண்டும்.
பஞ்சாபிப் பெண் கவி பி.1919
***
எனக்கு ஒரு கவிதை அசலானதாகவும் மனித ஜீவன்போல் ஒருங்கிணைந்தும் இருக்க வேண்டும். அதற்கு ஒரு உடல் இருக்க வேண்டும். அதன் பல்வேறு அங்கங்களும் அந்தந்த இடங்களில் அந்தந்த அளவில் இருக்க வேண்டும். இவை மட்டும் போதாது; அதற்கு ஒரு மனமும் இருக்க வேண்டும். அதற்கே உரித்தான ஒரு உள் வாழ்க்கையும் இருக்க வேண்டும். மனித ஜீவன் எவ்வளவு அசலோ அவ்வளவு அசலாக அது இருக்க வேண்டும். மறைபொருள் என்பது ஒவ்வொன்றினுடையவும் ஒரு பகுதியாக இருக்கிறது. உயிர் மூச்சு எங்கிருந்து, எவ்வாறு புகுந்தது என்பதைக் கூறுவது கடினம். அதைப் போல் ஒரு கவிதை தயாரிப்பாக இல்லாமல், உண்மையாக எவ்வாறு உருவாகிறது என்பதைக் கூறுவதும் கடினம்.
ஒரு கவிதை அசலாக இருக்கும்போது மற்றொன்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டும் இருக்கிறது. அது தனியானது, தனித்துவம் கொண்டது. உள்ளடக்கத்தோடும் பொருளோடும் இணைந்து அசையும் ஒத்திசைவின் மூலம் ஒரு கவிதைக்குத் தனித்தன்மை ஏற்படுகிறது. இந்த ஒத்திசைவு கவிதைக்கே உரித்தானது. வார்த்தைகளின் ஏற்றமும் இறக்கமும் அது. வார்த்தைகளுக்கு ஓசைகள் உள்ளன. ஆனால் இசை சார்ந்த ஓசைகளை அல்ல நான் கவிதைகளில் வேண்டுவது. இசை ஒரு கவிதையிலிருந்து பலவற்றையும் வெளியே தள்ளிவிடுகிறது. உயிர்மூச்சு இந்த ஒத்திசைவின் வழியாகத்தான் கவிதைக்குள் நுழைகிறது. அர்த்தத்தைத் தீர்மானிக்கும் ஒத்திசைவுதான் கவிதையை வாசிக்கும்போது களிப்பைத் தருகிறது. இந்த ஒத்திசைவுதான் வசனத்தில் இருந்து கவிதையைப் பிரித்துக் காட்டுகிறது. நுட்பமான இந்த ஓசைதான் கவிதையின் சாரம். சிறிது இசைக்கு இடம் தரும் பாங்கு அதில் இருக்கலாம். கவிதை அசலானதாக இருந்து, இட்டுக் கெட்டியதாக இல்லாமல் இருக்கும்போது சில சமயம் சிறிது இசைக்கும் இது இடம் தரலாம். வார்த்தைகளின் ஓசைகளை சரிவரப் பயன்படுத்தும்போது, மொழியின் முழு ஆற்றலையும் பயன் படுத்தும்போது, அதில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் போது கவிதை படிக்கும் இன்பத்தைத் தருகிறது. ஓசையின் அசைவு கவிதையின் பொருளுக்குச் செழுமை ஊட்டவில்லை என்றால் அதைக் கவிதை அல்ல என்று சொல்லிவிடலாம். அது இறந்துபோன ஒன்று. வெறும் சடலம், அதற்கு வெளி உறுப்புகள் இருக்கலாம். ஆனால் உயிர் இல்லை.
கவிதை தீவிரமானதும், சிந்தனையைத் துண்டுவதுமாக இருந்தால் கவிதையின் பொருள் இவ்வாறு உருவாக்கம் பெறும்போது அதன் உள்ளடக்கம் நம் அனுபவமாக மாறுகிறது. இல்லாதவரையிலும் அது மூளை லகான் பிடிக்கும் வெறும் உணர்ச்சிப் பெருக்கு. அதில் உணர்ச்சி மட்டுமே இருக்கு மென்றால் அது ஒரு மதிகெட்ட பொருள். மதிகெட்ட கவிதை அது.
ஒரு கவிதை, அது தனித்துவம் மிகுந்த பொருள் என்றாலும் அதே நேரத்தில் அது சமூகக் விளைவும்கூட. மொழியால் ஆக்கப்பட்டது என்பதாலேயே அது சமூக காரியம்தான். தனி மனிதனின் உணர்வையோ அனுபவத்தையோ சமூக மாக்கும் முயற்சிதான் உண்மையில் கவிதை. சமூகப் பேச்சு மொழியில் இருந்து கவிதைக்கு ஏற்ற மொழி உருப்பெற்று வருகிறது. இது உருவகம் மூலமோ இலக்கிய அணிகள் மூலமோ படைக்கப்படுகிறது. ஆகவே கவிதை, வசனம்போல் அல்லாமல் தொனிகள் மூலம் பல்வேறு தளங்களில் கூடும் அர்த்தங்கள் மூலமும் செழுமை பெறுகிறது. மிகக் குறைந்த வார்த்தைகளில் மிக அதிகம் சொல்வதற்கான முயற்சிதான் கவிதை. ஆக அது ஒரு சமூகக் காரியம். தனி மனிதனின் காரியமும். ஒவ்வொன்றும் மற்றொன்றால் பாதிக்கப்படுகிறது. இதுகாறும் நான் கூறியவையெல்லாம், ஒருக்கால், விஷயத்திற்கு அப்பாற் பட்டவையாகக்கூட இருக்கலாம். முடிவாக ஆராயும்போது ஒரு நல்ல கவிதை நல்ல கவிதையாக இருக்க வேண்டும். படிக்கும்போது நாம் அதை இனம் கண்டுகொள்கிறோம்.
கன்னடக் கவி பி.1918
***
‘மோசமான கவிதை’ என்று ஒன்றும் இல்லை என்பதுதான் என் நம்பிக்கை. நமக்குக் கவிதைகள் இருக்கின்றன. மிக அபூர்வமாக ஒரு பெரிய கவிதை பிறக்கிறது. செய்யுள் முயற்சிகளும் நிறையவே உள்ளன. ஆனால் அவற்றை வேறு வகை யானவையாகக் கருதுகிறேன். கவிதை என்பது அடிப்படையில் வார்த்தைகள். ஓசையின் மனத்தையும், நுட்பங்களையும் மொழியின் குரலையும் அது பயன்படுத்திக்கொள்கிறது. கவிஞனின் கவலைகளிலிருந்தும், காலத்தைப் பற்றிய அவனது கவலைகளிலிருந்தும் கவிதைக்கான விவேகம் கூடுகிறது. அது அசலாக இருக்க அனுபவம் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். பெரிய கவிதை எல்லாக் காலங்களிலும் சலனத்தை ஏற்படுத்துவது தற்செயல் விளைவு அல்ல. கவிதை காலத்தின் சோதனையைத் தாண்டக்கூடியது. இருப்பினும் பொதுவாக அவை மனிதர் களைப் பற்றியும், அவர்களுடைய வருத்தங்கள் பற்றியும், பயங்கள் பற்றியும், சந்தோஷங்கள் பற்றியும், ஆசைகள் பற்றியும் பேசு கின்றன. நூற்றாண்டுகளில் இந்த அடிப்படை மாறிவிடவில்லை.
பெரிய கவிஞனின் நிகழ்வுக்காக நாம் காத்துக்கொண்டிருக்கிறோம் என்று நம்புகிறேன். ஏனெனில் அது நிகழ மட்டுமே முடியும்.
காஷ்மீரிக் கவி 1914
***
கவிதை வரையறைகளை ஏற்றுக்கொள்வதில்லை. இருப்பினும் நல்ல கவிதையின் ஒரு சில குணங்களைத் தொட்டுக்காட்ட முடியும்.
ஒரு நல்ல கவிதைக்கு, அது எந்த உருவத்தில் இருப்பினும் சரி, உயிர் இருக்க வேண்டும். அதில் ஆற்றல் குமிழியிட்டுக் கொண்டிருக்க வேண்டும். இந்த ஆற்றல் கவிஞனின் மனதில் இருந்து தோன்றுகிறது. இதை விளக்க தாமஸ்ஹூட் என்ற கவிஞனின் ‘பெரும் மூச்சுக்களின் பாலம்’ என்ற கவிதை ஒரு நல்ல உதாரணம்: ‘மிருதுவாக அவளை எடு, கவனத்துடன் அவளைத் தூக்கு.’ வேகமான வெளிப்பாடு. கவர்ச்சிகரமாகவும் அமைந்துவிட்டது.
அழகியல் ரீதியான திருப்தியையும் ஒரு நல்ல கவிதை அளிக்க வேண்டும். வெள்ளி மீன்களும் நீல வானமும்தான் அழகானவை என்ற கட்டாயம் எதுவும் இல்லை. ஒரு கவிதையில் கூறப்படும்போது ஒரு இருட்டறையும் அழகானதாக இருக்கலாம். அழகு நீக்கமற நிறைந்திருக்கிறது, கடவுளைப் போல்.
பொருத்தமான சொல்லாக்கமும் ஒரு நல்ல கவிதையின் தவிர்க்க இயலாத குணமாகும். கவிதை சாரத்தின் ஒரே வாகனம் சொல்லாக்கம்தான். சொல்லாக்கம் பல வழிகளில் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. குறியீடுகளாக, படிமங்களாக, கனம் பொருந்திய வார்த்தைகளாக, வார்த்தைகளின் வரிசைகளாக. ஒரு உதாரணம் தரலாம்.
பல பூக்கள் பூக்கின்றன
பார்க்காதவர்கள் நாணமுறும்படி
அவற்றின் இனிப்பனைத்தும் வீண்
அந்த பாலைவனக் காற்றில்.
கவிதை மொழிக்குரிய மொழியீட்டுப் பாங்குகளையும், சொற்றொடர்களையும் ஒரு நல்ல கவிதை பயன்படுத்திக் கொள்கிறது. இல்லாதவரையிலும் நாம் விரும்பும்படி அது இராது. இதனால்தான் கவிதையின் மொழிபெயர்ப்பு, அதன் மூலத்தின் அளவிற்குச் சிறப்பாக இல்லாமல் போகிறது.
மராத்திக் கவி பி.1910
***
என் அபிப்பிராயத்தில் ஒரு நல்ல கவிதை என்பது பொருளும் ஓசையும் சுமுகமாக இணைந்திருப்பதுதான். நடைமுறையில் ஓசை பொருளைவிடச் சற்றுத் தூக்கலாக இருக்கலாம். அல்லது நேர்மாறியும் இருக்கலாம். ஆனால் இரண்டுக்கும் சம முக்கியத்துவம் அளிப்பதுதான் மிகச் சரியானது. உடலுக்கு ஆத்மா எதுவோ அதுதான் கவிதைக்கு ஓசை. சமஸ்கிருதக் கவிஞர்கள் கவிதையை ஒரு காதலன் காதலியிடம் விரும்பும் வனப்பு மிகுந்த உடலுடன் ஒப்பிட்டுப் பேசுகின்றனர். ஆனால் உருவ அழகு உள்ளடக்கச் சாராம்சம் இல்லாததாக இருக்கக் கூடாது. கவிதையில் கவிஞனின் பார்வை இருக்க வேண்டும். செய்தியோ, இன்ப துன்பங்கள் சார்ந்த அனுபவமோ, மனத்தோற்றமோ, விநோதமான கற்பனையோ, விமர்சனமோ, கதைப் பாங்கோ, விவரிப்போ கவிதையில் இருக்க வேண்டும். வகைகள்தான் வாழ்கையின் ஜீவன். வகைகளால் இலக்கியம் செழுமை பெறுகிறது. கவிதை அறநோக்குக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கக் கூடாது. சமூகத்தின் ரட்சகர்கள் அல்லர் கவிஞர்கள். ஒரு சிவப்பு ரோஜா நல்ல மணம் தருவதைப் போலவோ, பழுத்த மாம்பழம் நல்ல ருசியைத் தருவதைப் போலவோ, ஒரு கவிதை நல்லதாக இருக்க வேண்டும்.வங்காளக் கவி, நாவலாசிரியர் பி.1904
***
(இண்டியன் லிட்டரேச்சர் ஆங்கில இதழ், மார்ச் - ஏப்ரல்1987)
தமிழில்: அவதானி
(காலசுவடு இதழில் வெளிவந்தது, நன்றி: காலசுவடு)
***
0 comments:
Post a Comment