ஆனால் அவரது இளமைக்கால புகைப்படம் ஒன்றை சமீபத்தில் அவர் எனக்களித்த அவரது மூன்றாம் தொகுப்பான ‘மாற்றப்படாத வீடு’ (1984) தொகுதியில் கண்டேன். பழைய புகைப்படங்கள் ஒருவரது வாழ்வின் இடைப்பட்ட பயணத்தை இட்டுநிரப்பும் கனவாக விரியக்கூடியது. தேடலும் தீவிரமும் நிறைந்த அந்த முகத்தின் வழியே அவரது கவிதைகளையும் பொருள்கொள்ளத் தோன்றியது. அந்த பழைய முதல் பதிப்பும் சற்று அதிகமாக என் கவனத்தை ஈர்த்தது. அதன் பழுப்பேறிய பக்கங்கள் கடந்த காலத்தின் ஒரு பகுதியாக என்னை உள்ளிழுத்துக்கொண்டது.
சிறகுகள்
வானம் விழுந்து, நீர்;
சிறகுதிர்ந்து மீனாகிவிட்டது பறவை.
நீரில் எழுந்தது வானம்;
சிறகு முளைத்து விட்டது மீனுக்கு.
சிறகினுள் எரியும் சூரியத் தகிப்பே
சிறகடிப்பின் ரகஸ்யம்; ஆகவேதான்
சுயவொளியற்ற வெறும் ஒரு பொருளை
சிறகுகள் விரும்புவதில்லை;
பூமி போன்ற கிரகங்களை அது நோக்கவில்லை.
(சிறகடிக்கையில்
சிறகின் கீழே வெட்கி ஒடுங்கிக் கொள்கின்றன
பறவையின் கூர்நகக் கால்கள்)
சூர்யனுள் புகுந்து, வெறுமே
சுற்றிச் சுற்றி வருகின்றன சிறகுகள்.
சிறகின் இயல்பெல்லைக்குள்
நிற்குமிடமென்று ஏதுமில்லை.
வெளியில் அலையும் சிறகுகளுக்கு
இரவு பகல்களுமில்லை.
’சிறகுகள்’ என்ற ஒற்றை வார்த்தையின் மூலம் ஓயாத பெரும் ஆற்றலை, தகிக்கும் சூரியன் போன்ற அதன் தன்மையை இக்கவிதை உணர்துகிறது. ‘பறவை – மீன்’, ‘சூரியன் – பூமி’ என்ற இரட்டைப் படிமங்களை கொண்டு ஒரு பிரபஞ்ச தத்துவத்தையே மனதில் விரியச்செய்கிறது. வானத்தில் இருந்து தோன்றிய நீரில் சிறகிழந்து மீனாக மாறும் பறவை மீண்டும் நீரில் தோன்றிய வானத்தை நோக்கி சிறகடிக்கிறது. ஆதியில் சென்று அணையும் ஆற்றலென அமைகிறது.
சில சமயங்களில் ஒரு பறவையின் உடலே கூட அதன் சிறகுகளுக்கு தடையெனத் தோன்றும். இவ்வுலகியல் தேவைகளும் ஆசைகளும் அச்சூரியனைத் தேடி நம் உள்ளில் எழும் சிறகுகளுக்கு கீழ் வெட்கி ஒடுங்கும் ‘கூர்நகக் கால்களாக’ கொள்ளலாம்.
’ஆற்றல்’ அனைத்தையும் அறியும் தவிப்புடன் கால, நேரம், இடம் போன்ற எல்லைகளை கடக்க துனியும் ஒன்றாகவே இருக்கமுடியும்; இதையே கவிஞர் தேவதேவன் சிறகின் இயல்பெனக் காண்கிறார்.
இந்தக் கவிதையை நான் எனக்கு மிகவும் பிடித்த அஜிதனின் மைத்ரி நாவல் வரிகளுடனே மேலும் விரித்துக் கொள்கிறேன்.
’எங்கள் வருகையால் பாதையின் ஓரத்திலிருந்து கலைந்த சிறீய நீலநிற குருவிக்கூட்டம் ஒன்று காற்றில் பந்து போல அலையலையாக எழுந்து அமைந்து கண்ணுக்கே தெரியாத கீழாழத்தில் எங்கோ சென்று அமர்ந்தது. ஏன் இவ்வளவு எச்சரிக்கை,ஏன் இத்தனை ஆற்றல். இயற்கையில் எதற்கும் ஒரு தர்க்க சமநிலையில்லை என தோன்றியது. ஆற்றல், எங்கும் ஆற்றல் மட்டுமே.’
நாளின் முடிவு
மேற்கே தொடுவானில்
மேகங்களை அடுக்கி
எரிந்து அழியும்
ஒரு சிதை.
மரங்களின் பச்சை
நிறம் மாறிக் கறுக்கும்.
பறவைகள் கூடிப்
பதைக்கும் குரல்களும்
அமுங்கிக் கனக்கும்.
என் குடிசையில் –
விளக்கேற்றினாலும்
விளக்கடியிலேயே வந்து
குந்தி விடும்.
அரிக்கேன் விளக்கொளி
உதட்டைப் பிதுக்கும்
தினக் காலண்டரின் மேல்தாள்
வெளுத்து விடும்.
இதே தொகுப்பில் உள்ள ‘நாளின் முடிவு’ என்ற இந்தக் கவிதை ‘ஆற்றலின்’ முரணான ‘அடங்குதலைக்’ கொண்டு மீண்டும் அப்பிரபஞ்ச தரிசனத்தை நோக்கிச் செல்கிறது. நாளின் முடிவு இருளை நோக்கிச்செல்வது; ஓர் சிதையாக, கறுக்கும் பசுமையாக, கனக்கும் அமைதியாக அது தூய இருளை சென்று சேர்கிறது.
இவ்விரு கவிதைகளிலும் வரும் இயற்கையின் பல நுண்ணிய படிமங்கள் இப்பிரபஞ்சதின் அழகையும் பயங்கரத்தையும் ஒருசேர காட்டுகிறது; இரண்டுமே ஒளியும் இருளும் கடந்த ஒரு நிசப்தத்தில் கலந்து மறைகிறது.
***
***
0 comments:
Post a Comment