திரையை மொய்க்கும் ஈக்கள்
***
பளிங்கு மண்டபம்
சாலையோரத்தில் நின்று நின்று
கருவளையம் கூடிப்போனவொரு கண்காணிப்புக்
கேமரா
அதன்முன்னே தள்ளாடியபடி வந்து நிற்பவன்
CCTV ன் உள்ளிருந்து கண்காணிக்கும் காவலரை
முறைத்த
துவந்தம் புரிய அழைக்கின்றான
ஆபாச வசனம் வீசி கருவியை உடைக்க
முயல்கின்றான்
பிறகு சாலையிலிறங்கி நடக்கத் துவங்க
அதற்குள் தூரத்தில் வரும் வாகனத்தைப்
பார்த்துவிட்ட காவலர்
அறிந்துகொண்ட அவனின் எதிர்காலத்தை
அவனிடம் எப்படி தெரிவிப்பதெனத் தெரியாமல்
தான் இருக்குமிடம் ஒரு பளிங்கு மண்டபம்
என்பதையே மறந்துபோய்
பெருங்குரலெடுத்தார் – ஒரு பயனுமில்லை
கண்ணுக்கெட்டும் தொலைவில்தான் எல்லாமும்
நடக்கிறது
குருதி வெள்ளத்தில் அவன் சாலையில் கிடக்கும்
கோரமான காட்சி
ஒளிபரப்பும் மின்திரையை
ஈக்கள் மொய்க்கின்றன
***
நவீன தமிழ் கவிதையின் வளர்ச்சியில் காலாதீதமான மெய்யியல் தேடல்களுக்கு நிகராகவே, கால மாற்றங்களும் அம்மாற்றங்களின் காரணமாக ஏற்படும் அறச்சிக்கல்களும் முக்கியப் பங்காற்றியிருக்கின்றன. காலம்தோறும் ஏற்படும் சமூக, அரசியல், வாழ்வியல் மாற்றங்களே கவிதைக்கான புதிய களங்களையும், படிமங்களையும், மொழியையும் உருவாக்கியிருக்கின்றன. அவ்வாறாக நம் காலத்தின் மாற்றங்களும் அதனால் ஏற்படும் அறச்சிக்கல்களுமே பெரு விஷ்ணுகுமாரின் கவிதைகளாகின்றன. அவரது இன்று இறப்பது அவ்வளவு விசேசம் கவிதை நம் காலத்தின் அலட்சியத்தையும் பொருளின்மையையும் முன்வைக்கிறது. இங்கு வெளிப்படும் பொருளின்மை என்பது காலத்தின் முன்பு பொருளற்று போகும் இருத்தலியலின் பொருளின்மை அல்ல. இங்கு காலமே பொருளற்றுப்போகிறது. நேற்றும் இன்றும் எந்த வித்தியாசமும் இன்றி பிரித்தறிய முடியாதபடி கலந்துவிட்ட வாழ்வில் வாழ்வும் மரணமும் பொருளற்று போகின்றன. கவிதையில் நேற்றும் இன்றும் ஒன்றெனக் கலக்கையிலேயே நீயும் நானும் ஒன்றெனக் கலந்துவிடுகின்றன. எந்த மரணமும் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாத வாழ்வில் மரணிப்பது நீயாக இருந்தாலும் நானாக இருந்தாலும் வேறொருவனாக இருந்தாலும் ஒன்றுதானே. எந்த சகமனிதனின் மரணமும் அலட்சியப்படுத்தப்படும் சூழலில் நாம் அடையும் வெறுமையில் எந்த காலத்தில் நிகழும் எந்த மரணமும் பொருளிழந்துவிடுகிறது. நேற்றும் இன்றும் நீயும் நானும் பொருளிழந்துவிட்ட சூழலில் எந்த நேரமும் மரணத்திற்கு விசேசமான நேரம்தான்.
***
இன்று இறப்பது அவ்வளவு விசேசம்
1.
வீடுதிரும்ப நேரமாகிவிட்டதால்
வீட்டிற்குள் நுழையும் போதே
எல்லோரின் முகமும் பதற்றமாக இருந்தது
என்னைக் கண்டதும்
நெருங்கிவந்து ஆரத்தழுவிக்கொண்ட அப்பா
‘போனவருடம் நடந்த
சாலைவிபத்தில்
நீ அடிபட்டுவிட்டதாகச் சொன்னார்கள்’,
அப்பாடா
பத்திரமாக வந்துவிட்டாயே
சரி நீ இங்கேயே இரு
எதற்கும் நான் வெளியேசென்று
உன்னைத் தேடிவிட்டு வருகிறேன்’
என்று கூறிவிட்டு பதற்றத்துடனேயே
கிளம்பிப்போனார்
ஒருவேளை அவர் கூறுவது
உண்மையாகவும் இருக்கலாமென்று
நானும் தேடுவதற்கு உடன் சென்றேன்
2.
வெகுநாளைக்குப்பின்பு
இன்று சாலையில் ஒரு நல்ல விபத்து
சிறிய லாரிதான்
லேசாக நசுக்கியதற்கே
அனைத்து பற்களும் நொறுங்கிப்போய்
அடையாளம் தெரியாதளவு அவர்முகம்
சிதைந்து போயிருந்தது
‘எனக்கோ இதெல்லாம் பழகிவிட்டது’
போனவருடம் இதேபோல் இறந்துபோன
என் நண்பனை ஒப்பிடும்போது,
இதெதெல்லாம் ஒன்றுமேயில்லை
நினைவு நாளென்பது யாரையும் பாதிக்காமல்
இறந்துபோதலோ
என் நண்பா
பேசாமல் ‘நீயும்
இன்றே இறந்துபோயிருக்கலாம்’
***
முதுகலை இயற்பியல் பட்டதாரியான பெரு விஷ்ணுகுமார் பழனியைச் சார்ந்தவர்.
முதல் கவிதை தொகுப்பான “ழ என்ற பாதையில் நடப்பவன்” 2018 லும், இரண்டாவது கவிதை தொகுப்பான "அசகவ தாளம்" 2021 லும் வெளிவந்தன. தொடர்ந்து அச்சு இதழ்களிலும், இணைய இதழ்களிலும் கவிதை, கதை, கட்டுரை மற்றும் மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
***
கவிதை தேர்வு மற்றும் குறிப்பு: விக்னேஷ் ஹரிஹரன்
0 comments:
Post a Comment