1
பூச்சிகள் அண்டாமல் குழந்தையை தரையில் கிடத்த, நான்கு கால்கள் கொண்டு பயன்படுத்தப்படும் பிரம்பு ஊஞ்சல் அது. ஆட வேண்டும் எனில் ஊஞ்சலை சங்கிலியில் தொங்க விட அதன் ஓரத்தில் பிடிகள் இருக்கும். கிராமப்புறங்களில் பிள்ளை வரம் வேண்டி பிரார்த்தித்து தொங்கவிடும் ஊஞ்சல் இந்த வகை ஊஞ்சலே.
வெகு சில நாட்கள் பிள்ளை புழங்கிய ஒரே பொருள். தாய் தந்தை மடி விட்டால் அது கண்வளர்ந்த இடம். அதன் முதல் சிற்றில். பிள்ளை இல்லாத வெறும் தொட்டில், அது அளிக்கும் துயரத்தை தாள இயலாது. விட்டு எறியவோ மனமில்லை. ஆகவே அதையும் சேர்த்து மகனுடன் அதையே சவப்பெட்டியாக மாற்றி புதைத்து விட்டார்கள்.
நெடுநாள் என்னைத் துரத்திய ஒரு இருள் சித்திரம் அது. ஊஞ்சல் சவப்பெட்டி. பின்னர் ஒரு நாள் இனிய பயணங்களை முடித்தபின் என் வசம் அப்படி ஒரு பிரம்பு ஊஞ்சல் வந்து சேர்ந்தது. அது கிளர்த்தும் இருள் நினைவுகளை எவ்விதம் கடப்பது? ஊஞ்சலை நிற்கவைத்து பிரம்பு பின்னல் வரிசை இடையே இரண்டு பலகைகளை செருகி சிறியதொரு புத்தக அலமாரி என்று அதை மாற்றினேன். அதில் எடுத்து அடுக்கிய கவிதை தொகுதி வரிசையில் கண்டு, முதன் முறையாக தேவதச்சனின் இந்த கவிதை அன்றெனக்கு வாசிக்கக் கிடைத்தது.
தொட்டில்
இனிய தொட்டில் உடைகிறது
கீழே விழுந்து அல்ல
யாரோ தவற விட்டு அல்ல
இனிய தொட்டில் உடைகிறது
பரணில் பராமரிப்பு அற்று, படிமமாக கிடந்ததால் அல்ல.
இனிய தொட்டில் உடைந்தது.
குழந்தையின்
மெல்லிய மூச்சு
நிற்பதற்கு,
மேலும் கீழும் ஏறியபோது.
முதல் பார்வைக்கு வெகு சாதாரண தோற்றமளிக்கும் இக்கவிதை, தன்னுள் பொதிந்துவைத்திருக்கும் இரட்டை நிலை வெளிப்பாடு வழியே இதன் மைய உணர்வு நிலையான இருண்மையை சென்று தொடுகிறது. முதல் இரட்டை நிலை உடையும் ஊஞ்சல் எனும் ரொமான்டிச துவக்கமும் இறுதி மூச்சு எனும் குரூர முடிவும். இரண்டாம் இரட்டை நிலை முன்னும் பின்னுமாகவோ, இடமும் வலமுமாகவோ நிகழும் ஊஞ்சல் அசைவு. அதன் மேல் மெல்ல ஏறி இறங்கும் சிறு மகவின் நுரையீரல் அசைவு.
ஊஞ்சலில் அசைவை தொட்டெழுப்பிய கரம் அறிவோம். இந்த உயிர்க்கூட்டில் அசைவை தொட்டெழுப்பிய கரத்தை?
***
2
எனது பால்யம் முதலே கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்து, அதே அமைப்பில் இப்போதும் நீடிப்பவன் நான். பளீர் வெளிச்சம் பொழிய, ரேடியோ ஓலம் பொங்க இங்கே ஆட்கள் குறட்டை விட்டு தூங்குவார்கள் என்பதெல்லாம் எனக்கு சகஜம். என் பால்யத்தில் எல்லோரது வீடுகளும் இவ்விதமே இருக்கும் என்று நம்பி இருந்தேன். விடுமுறை ஒன்றுக்கு நெய்வேலி அரசினர் மருத்துவமனையின் தலைமை செவிலியாக பணியாற்றிய என் சித்தி வீட்டுக்கு செல்லும் வரை. முதல் நாள் எல்லோரும் பணிக்கு சென்றுவிட, மர நிழல்கள் வருடும் மௌனத்தில் செவிலியர் குடியிருப்பு மொத்தமும் முழு அமைதியில் உறைந்து நின்றது. என்னால் தாள இயலாமல் அடுத்த மூன்றாவது நாள் அழுது துடித்து வீடு வந்து சேர்ந்தேன். மனித சத்தம் இல்லாத வீட்டுக்கு கல்லறை என்றே பெயர் சூட்ட வேண்டும்.
இதற்கு நேரெதிரானது துயரக் கூச்சல் வெளியிடும் இல்லங்கள்.முன்னது கல்லறை என்றால் இது சுடுகாடு. குடும்ப வன்முறையால் பெண்கள் குழந்தைகள் அடி வாங்கி எழுப்பும் ஓலத்தை, அது வெளியே செல்லாமல் தடுக்க வகையற்று கற்சுவர் புகையென்றே ஆகிவிட்டமை போல கையறு நிலையில் திகைத்து நிற்கும் வீடுகள்.
பார்த்து பார்த்து வளர்த்த குழந்தைகள், வளர்ந்து படித்து திருமணம் முடித்து வெளிநாடு சென்றுவிட, சூழல் காரணமாக வீட்டிலேயே தங்கி விட்ட முதியோர் தனித்து வாழும் இல்லங்களின், மீள இயலா நோயில் மரணம் நோக்கி காத்திருக்கும் நோயாளியின் வலி முனகலை அடைகாக்கும் வீடுகள்.
அந்த வீடுகளின் சப்தம் அல்லது நிசப்தம் குறித்த இருண்மை உணர்வைக் கிளர்த்தும் கவிதை இது.
நிசப்தம் நிசப்தமாக
சத்தங்களால்
கட்டப்பட்டிருக்கின்றன வீடுகள்.
வீட்டிற்கு உள்ளிருக்கும் நிசப்தம்
வீடல்ல என்று தெரியவரும்போது
ரொம்பவும் திடுக்கிடுகிறேன்
எப்பவாவது வீட்டுச் சத்தங்கள் வெளியே கேட்கும்போது
வீடு நீண்டு
வீடாக இல்லாது போகிறது. அப்பவும் திடுக்கிடுகிறேன்.
அங்கு
கிழக்கு மூலையில் அடுப்பின்
நீலநிற ஜ்வாலை
விழித்தெழும்போதும்
நோயுற்றவர்களைத் தொட்டுத்
தூக்கும்போதும்
நிசப்தத்துக்கு அப்பால்
நீண்டு சென்றுவிடுகிறது வீடு.
மழைக்காலத்தில் நள்ளிரவு மின்னலில் தெரியும்
தாமரை இலைகளைப் போல
வீட்டிற்குள்
மிதந்துகொண்டிருக்கின்றன, சத்தங்கள்.
அவைகளை நான்
மிகவும் விரும்புகிறேன்
நிசப்தம் நிசப்தமாக இல்லை என்று அவை எனக்குச் சொல்கின்றன.
***
3
பேர் லாகர் குவிஸ்ட் எழுதிய அப்பாவும் நானும் சிறுகதை மாலையில் துவங்கி இரவில் முடியும். ஒளியில் தெரியும் அழகிய உலகில் ஒரு பதற்றமும் இல்லை. எல்லாவற்றையும் குறித்து துணை வரும் அப்பாவுக்குத் தெரியும். மேலும் எப்போதும் துணையாக எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு கடவுள் துணை இருக்கிறார். அப்பாவும் மகனும் தண்டவாளத்தில் நடந்து குறுக்கு வழியில் இல்லம் செல்வார்கள்.
இரவு அடர்ந்து வர வர பையனுக்கு மெல்ல மெல்ல பயம் கிளம்பும். அடர் இருளில் தூரத்தில் ஏதோ ஒளி. நிச்சயமாக இது எந்த ரயிலும் வரும் நேரம் இல்லை. பின்னர் அது என்ன? புகைபோக்கி வழியே புகைக்கு பதிலாக நெருப்பு கொழுந்துவிட்டு எரிய அதி வேகத்தில் தடதடத்து வருவது ரயில்தான். மின்னல் வேகத்தில் மகனுடன் தண்டவாளத்தில் இருந்து எட்டி குதித்து தப்பிக்கிறார் அப்பா. ரயில் அவர்களை கிடக்கிறது. எஞ்சின் ட்ரைவர் ஒரு பிரேத மனிதன். எல்லா பெட்டியும் முற்றிருளில் இருக்க, தடதடத்து இருளுக்குள் சென்று மறைகிறது அந்த ரயில்.
அப்பா இது என்ன? இப்போது என்ன நடந்தது?
தெரியவில்லை மகனே.
அப்பாவுக்கு எதுவும் தெரியாது. துணை வர கடவுள் இல்லை. வெளிச்சத்தில் இருந்து இருட்டுக்குள் வந்து விட்டோம். என்ன ஒரு பயங்கரம். என்று சிறுவன் நினைப்பதாக கதை முடியும்.
ரயில் நவீன யுகத்தின் குறியீடு. நேரடியாகவே வெளிச்சத்திலிருந்து இருளுக்கு நழுவும் வாழ்வு மீதான இருத்தலியல் நோக்கிலான சித்தரிப்புக் கதை.
இந்தக் கதையின் அதே ரயில் தேவதச்சனின் கவிதைக்குள் வந்தால்? முதல் இரண்டு கவிதையின் அதே இருண்மை இந்த மூன்றாவது கவிதையில் இருந்தாலும், இந்தக் கவிதை மேலும் நகர்ந்து அமானுஷ்ய உணர்வு நிலை ஒன்றை தொட்டு விடுகிறது.
ரயில்
காட்டு விலங்கின் துல்லியமான
பாகம் ஒன்று கிடக்கிறது
செம்மண் பொட்டலில்.
அந்த மானின் எலும்புக்
கூட்டுக்கிடையே நாவை விட்டு இன்னொரு மான் புல்லைக் கடித்துவிட்டு நகர்கிறது.
நகரும் மானின் கண்கள்
சிமிட்டிக்கொண்டிருக்கின்றன.
அருகில் செல்லும்
தண்டவாளத்தில்
ஒரு நாளைக்கு நிறையவே
ரயில்கள் செல்கின்றன
ஒவ்வொரு ஜன்னலிலும் ஒவ்வொரு சூரியன்
லட்சக்கணக்கான பயணிகளின் லட்சக்கணக்கான கண்கள்
சிமிட்டி சிமிட்டி
விபரீதமான குமிழ் ஒன்று ஒரே திசையை பார்த்துக்கொண்டிருக்கிறது.
உடையாத நிசப்தத்தில்
குலுங்கும் இந்தக் குமிழை இழுத்துச் செல்லவா
இத்தனை பெரிய ரயில்?
ஒவ்வொரு ஜன்னலிலும் ஒவ்வொரு சூரியன் எனும் வரி வரை இந்தக் கவிதை அளிக்கும் காட்சி அனுபவம் சினிமாட்டிக் ஆனது.
முன்னொரு காலத்தில் வாழ்ந்து சடலம் என மிஞ்சும் மான்.
பின்னொரு காலத்தில் அங்கே புல் மேயும் மான் முந்தைய காட்சி மீது ஓவர் எக்ஸ்போஸ் ஆகி அந்த காலத்தை முடித்து இந்த காலமாக தொடர்கிறது.
இந்த நிலக்காட்சி கொண்ட ஆதி காலத்தை முடித்து வைக்கிறது ரயில் தண்டவாளம் வழியே வரும் நவீன காலம்.
மாலை மஞ்சள் ஒளியில் சில் அவுட் ஆக விரையும் ரயிலில் ஒவ்வொரு ஜன்னலிலும் மாலைச் சூரியன் மின்னி மின்னி மறைகிறது.
அன்று காட்டில் மானின் விழிக் குமிழ் சிமிட்டி சிமிட்டி அதில் பிரதிபலித்த அதே சூரியன்தான்.
இன்று லட்சக்கணாக்கான பயணிகள் விழிக்குமிழ்கள் சிமிட்டி சிமிட்டி அதில் பிரதிபலிக்கும் இந்த சூரியன்.
விபரீதக் குமிழ் வரும் இறுதி வரிகள் அமானுஷ்யம் கொண்டு விடுகிறது. காலங்கள் மாறிக்கொண்டே இருக்க, விலங்குகள் மனிதர்கள் பிறந்து பிறந்து இறக்க, நித்யமாக இந்த சுழலைப் பார்த்துக்கொண்டிருக்கும் அது என்ன? வாழ்விலிருந்து மரணத்துக்கு செல்வதுதான் இந்த ரயிலின் இலக்கா?
தமிழில் மிக அபூர்வமான அமானுஷ்யக் கவிதைகளில் ஒன்று இக்கவிதை.
***
மரம் நபர்: தேவதச்சன் கவிதைகள். பெருந்தொகுதி உயிர்மை வெளியீடு.
***
0 comments:
Post a Comment