லதாவின் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை ‘யாருக்கும் இல்லாத பாலை’. போருக்குரிய தெய்வம், நிலம் என்ற இரண்டு தொன்மங்கள் இந்தக் கவிதையில் இருக்கின்றன. வெம்மை வாட்டும் பாலை நிலத்தில் பெரும் போருக்குப் பின் களைத்து நிற்கும் காளி தனது கையிலிருக்கும் அனைத்து ஆயுதங்களையும் வீசி எறிகிறாள். பிணங்களைத் தூர் வாரும் இயந்திரங்களின் இசைப் பின்னணியில், தகப்பனை, சகோதரர்களை, கணவனை, மகனைப் போரில் பறிகொடுத்த பெண்கள் காளியின் வெற்றுக் கரங்களில் போருக்கு எதிரான கொடிகளை, அன்பை யாசிக்கும் கொடிகளைக் கட்டிச் செல்கின்றனர்.
பெண்களின் துயர் மிகுந்த பாடல்களுக்குச் செவிசாய்த்து, செம்மைக்குப் பதில் வண்ணங்களைப் பூசிக்கொள்ளும் காளி போர் தெய்வமென்ற நிலையிலிருந்து மென்மையான பெண்ணாக உருமாறத் தொடங்குகிறாள். ஆனால் ‘அடையாளம்’ என்ற கருத்துருவாக்கம் உலகக் குடிமகளாக மாற விரும்பும் அவளது மென்மையை, வண்ணங்களை, அன்பின் கொடிகளை, அமைதியின் பாடல்களை ஏற்க மறுத்து கேள்விகளால் துளைத்தெடுக்கிறது. அடையாளத்தைச் சுமக்க நிர்ப்பந்திக்கப்படும் அவளது மென்மை தேசக்கொடிகளால் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறது.
வலிந்து திணிக்கப்படும் அடையாளங்களைத் துறந்து, திணைகளைக் களைந்து கடலில் நீந்தும் காளி உடல் முழுதும் உயிர்களைச் சுமக்கும் பேரன்னையாக உருமாறுகிறாள். இரத்த வாடை வீசும் வெக்கையிலிருந்து கருணை கொண்ட நீர்மைக்கு இடம் பெயர்கிறாள். ஆயுதங்களைச் சுமந்த போர் தெய்வம் உயிர்களைச் சுமக்கும் பேரன்னையாக மாறி நிற்கும் அற்புத கணத்தில் அவளது கைகளில் இருக்கும் துப்பாக்கிகள் வேறு ஒரு காளியை நமக்கு அடையாளம் காட்டுகின்றன. அடையாளத்துக்காக ஆயுதம் ஏந்திய காளி மனிதம் காக்க ஆயுதம் ஏந்தி நீந்தும் காட்சி அழகானது.
யாருக்கும் இல்லாத பாலை
போர் களைத்து நிற்கிறாள் காளி.
மணல் காற்றின்
வெம்மை வாட்டும்
எல்லையற்ற வெளியில்
ஒவ்வொரு கையாய் வீசுகிறாள்
ஒலியுடன் விழுகின்றன ஆயுதங்கள்.
தூர் வாரும் இயந்திரங்களின் இசையில்
பாடிச் செல்லும் பலவிதப் பெண்கள்
அவள் வெற்றுக் கரங்களில் கொடிகள்
கட்டிச் செல்கின்றனர்.
பதினெட்டுக் கரங்களிலும் பல பாடல்கள்.
செம்மை களைந்து வண்ணங்கள் பூசிய
அவளை
சென்ற இடமெல்லாம் கேட்டனர்
“எந்த நாட்டவள்?”.
மென்மையேறிய கரங்களை
வலிக்க வலிக்க
தேசக்கொடிகளால் இறுகக் கட்டினாள்.
அதன் இடுக்குகளில்
துப்பாக்கிகள் செருகி
எவருமற்ற கடல் பரப்பில்
திணை களைந்து நீந்துகிறாள்.
உடலெங்கும் உயிர்கள் சுமந்து.
‘மென்மை’ என்ற தலைப்பிட்ட லதாவின் மற்றொரு கவிதை திரௌபதி என்ற தொன்மத்தைக் கையாளுகிறது. ‘உன் தோள் முறிக்க என் விரல் போதும்’ என்ற வரியின் மூலம் மென்மையும் அதற்குள் கரந்திருக்கும் வன்மையுமாக வேறு ஒரு திரௌபதி எழுந்து வருகிறாள். சத்தமின்றிக் கொத்தித் தின்னும் கழுகான அவளுக்கு குருசேத்திரம் அவசியமில்லைதான்.
யாருக்கும் இல்லாமல் போகவேண்டும் பாலை, எல்லா வாள்களையும் ஒன்றாய்ப் புதைக்க வேண்டுமென இரண்டு கவிதைகளும் போருக்கு எதிராக குரல் கொடுத்தாலும் சொருகப்பட்ட துப்பாக்கிகள் வழியாக மனிதம் காக்க விழையும் அன்னையையும் சும்மா ஒரு சபதம் என்பதன் வழியாக நிதர்சனம் உணர்ந்த பெண்மையையும் காட்டுகின்றன.
மென்மை
ஆடை களைந்தாய் என்றா
வாளைத் தூக்கச் செய்தேன்?
தாயக்கட்டையில்
சாயம் போனபின்
சுற்றி இருக்கும் சேலையிலா
தொக்கி நிற்கும் என் கற்பு?
தொடையில் அமரச் சொல்லி
நீ ஆதிக்கம் காட்டலாம்
கூந்தல் அவிழ்த்து விட்டு
நான் துவேஷம் தணிக்க மாட்டேன்
தோள்களில் தொலைத்த பலம் காட்ட
பூக்களின் இதழ் தேடி நீ வரலாம்.
உன் தோள் முறிக்க என் விரல் போதும்
குழல் ஊதும் இறைவனைக்
கூப்பிட மாட்டேன்
கொக்கரிப்புகளில் கும்பல் சேர்க்கும்
கோழி அல்ல;
சத்தமின்றிக் கொத்தித் தின்னும் கழுகு நான்
எல்லா வாள்களையும்
ஒன்றாய்ப் புதைக்கவே
சும்மா ஒரு சபதம்.
யாருக்கும் இல்லாத பாலை (க்ரியா பதிப்பகம்), பாம்புக் காட்டில் ஒரு தாழை (காலச்சுவடு பதிப்பகம்) தொகுப்புகளிலிருந்து எடுத்தாளப்பட்ட கவிதைகள்
***
0 comments:
Post a Comment