ஒரு கவிதைத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு தனித் தனிக் கவிதையும் தன் அருகாமை கவிதைகளுடன் நட்பில் உள்ளனவா?
ஆம்! நிச்சயமாக...
ஒரு கவிதை தனியாக இருக்கும்போது அதற்கென்ற ஒரு தன்மை உண்டு. தொகுப்பில் கூட்டமாக இடம் பெறும்போதும் அதே தனித் தன்மையோடுதான் அது திகழும். ஆனால் வாசகனின் தொடர் வாசிப்புச் செயல்பாட்டில் அவன் ஒரு தனிக் கவிதை என்றில்லாமல் கவிஞரின் மொத்தத் தொகுப்பின் கவிதைகள் என்று வகைப்படுத்தும்போது அங்கே அந்தக் கவிதை இன்னொரு பணியையும் சேர்த்து செய்ய வேண்டியிருக்கிறது.
'இந்தத் தொகுப்புல இந்தக் கவிதை மட்டும் தனியா நிக்குது, தொகுப்போட சேரல' என்று வரும் விமர்சனங்களை நாம் கவனிக்கலாம். அப்படியென்றால் ஒரு தொகுப்பின் எல்லா கவிதைகளும் ஒன்றுக்கொன்று ஒத்த தன்மையை சற்றேனும் கொண்டிருப்பவையா? அப்படி யாரோடும் சேராத ஒரு கவிதை தொகுப்பில் உள்ளது என்றால் அதன் அர்த்தம் என்ன?
அந்தக் கவிஞனுக்கென்று நாம் கற்பிதம் செய்திருக்கும் மொழிக்கு வெளியே, ஆளுமைக்கு வெளியே ஒரு கவிதை தோன்றிவிட்டதாக அர்த்தமா?
அப்படியென்றால் அதை கவிஞரின் மாறுபட்ட கவிதை பாணி என்று எடுத்துக் கொள்ளக்கூடாதா, கவிஞன் எப்போதும் ஒரே உலகத்தில்தான் உழல வேண்டுமா, இல்லை. கவிஞன் எல்லா உலகங்களிலும் உலவுபவன் தான். ஆனால் எல்லா உலகத்தையும் தன் உலகமாகவே ஆக்கிவிடுவான். இந்த அம்சம் தான் கவிதையில் மேலே குறிப்பிட்ட ஒத்த தன்மை. இதுவல்லாத கவிஞன் தன் உலகுக்குள் கொண்டு வராத இன்னொரு கவிதையையே நாம் தொகுப்பில் சேரல தனியா நிக்குது என்கிறோம்.
சிறுகதைகளில் அந்தப் பிரச்சினையில்லை. நாவலில் இல்லவே இல்லை. ஆனால் கவிதையில் மட்டும் தொகுப்பின் ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு வேஷத்தைக் கவிஞன் கட்டிவந்தாலும் இது அவன் தான் என்பதை வாசகன் கண்டுபிடித்துவிட வேண்டும் என்கிற கட்டாயம் உள்ளது. அப்படி அல்லாதபோது அந்தக் கவிதை வாசகனுக்கு துருத்துகிறது.
அதற்காக ஒரு கவிஞன் எழுத வேண்டுமா? இல்லை, அப்படியில்லை. இதில் வாசகன் எனக் குறிப்பிடப்படுபவன் வாசகன் மட்டுமல்லாது அந்தக் கவிஞனாகவும் இருக்கலாம். கவிஞன் தனக்கு உள்ளே உள்ளே செல்ல வேண்டும். தன்னை விட்டு பிரிந்துபட்டு வெளியே வெளியே போகக்கூடாது.
ஒவ்வொரு கவிஞனும் அவன் உலகத்தைச் சார்ந்தவனே. அதற்குள் என்ன வித்தியாசமான கவிதைகளை எழுதினாலும் அதன் மைய அச்சு ஒன்றே.
மாறுபட்ட மொழியைக் கவிஞன் கையிலெடுக்க வேண்டும். மாறுபட்ட உலகங்களுக்குள் கவிஞன் புக வேண்டும். ஆனால் அவை யாவும், 'பாருங்களேன் அதற்கு உள் இந்தக் கவிஞர் சென்றுவிட்டார், இப்போது இந்தக் கலவை எப்படி இருக்கும்' என்றே, அந்தக் கவிஞரை முதன்மைப்படுத்தியே அது நிகழ வேண்டும். ஏனெனில், கவிஞன் ஒவ்வொரு உலகங்களையும் அவன் படைப்பதில்லை. ஏற்கனவே உள்ள உலகத்தைத்தான் பார்க்கிறான். பார்ப்பதன் வழியே அதை அவன் என்னவாக ஆக்குவான் என்கிற மாபெரும் சாத்தியத்தை உருவாக்குகிறான். அதுதான் இதுநாள்வரை கவிஞன் உலகில் இருந்துகொண்டே உலகைப் படைத்திருக்கிற வழிமுறையாகவும் இருந்து வருகிறது.
***

Comments
Post a Comment