சில தமிழ்க் கவிதைகள் - இரா. கவியரசு

1

அழியாத சாட்சியம்


பிடுங்கிய மலர்களை

உயிருள்ள மலர்களினிடையே 

செடியில் நான் 

சூடியிருக்கக் கூடாது.



தொட்டுப் பார்த்துக் 

காற்றிலாடி விளையாடத் 

துவங்கும்போது

பயம் கூடிவிட்டது.



புகைப்படத்துக்காகவே 

அழைத்து வந்தேன் 

போகலாம்  என்கிறேன்.



பூங்காவின் 

வட்ட ராட்டினத்திலிருந்து 

இறங்க விரும்பாத குழந்தைகளாய் 

தலையாட்டுகின்றன

எல்லா மலர்களும் 



புகைப்படத்தை 

நிரந்தரமாக 

அழித்துவிட்டு

செடியின் காலடியில் 

மண்டியிடுகிறேன் 



தலைவாரி முடித்து

ஓடிவரும் மகளுக்காக 

ஒரேயொரு மலரை 

உதிர்க்கிறது செடி.

***

2

தரையின் தாராளம்

மெத்தென்ற இருக்கையிலிருந்து

திரும்புகிறேன்

ரயிலின் தரைக்கு.

மரங்களின் வயிற்றை

வீடுகளின் பெரிய வாயை

வாசல் விளக்குகளின் கண்களை

உயரத்தைக் குறைத்துக் கொள்கிற

உலகத்தை

இருபுறமும் திறந்திருக்கும் திரையில் 

படமோட்டிக் கொண்டிருக்கிறது.

ஐன்னலில் பார்த்தவனல்ல

வாசலில் அமர்ந்திருப்பவன்

வழிநெடுகிலும் ஊற்றுகிறது

காற்றின் அபிஷேகத்தை.

பூட்ஸ்களுக்கும் காலணிகளுக்கும்

தொற்றிப் பரவுகிறது

வெறுங்கால்களின் விடுதலை.

ஹாரனைப் பீறிட விடுகிறார்

எங்கும் அசைகிறது

கொண்டாட்டத்தின் கொடி.

நான்

இன்னும் என்னைப்

பரவ விடுகிறேன்.

தரை

தாராளமாகத் திறந்திருக்கிறது 

பிருஷ்டங்களை

அணைத்துக் கொள்கிறது

***

Comments

தொடர்புக்கு

உங்கள் கவிதைகள், கருத்துகள், கேள்விகள்

உங்கள் கவிதைகளை Word கோப்பாக இணைத்து அனுப்புங்கள். இதழ் குறித்த கருத்துகளையும் கேள்விகளையும் இங்கே எழுதலாம். விரைவில் பதிலளிக்கிறோம்.