அப்படி பார்வையில் படும் பொருள்கள் மீதான உணர்வுப்பூர்வமானதொரு பார்வை, இங்குப் படைப்பாளர்களுக்குத் தேவையானது. இதில், படைப்பாளரின் உணர்வுகள், எண்ணங்கள், புரிந்துக் கொள்ளப்படுகிறது. இவ்வெளிப்படுத்துதல் கவிதையில் நன்கமைந்துவிட்டால், அதனை மொழியும், உணர்வும் கூடிய ஒரு நிகழ்ந்தேறுதனெலலாம். இம்மாதிரியானதொரு சுவையினை,
“நிஜமான திராட்சைக்கொடியைத் தீட்டுவதற்கு/ திராட்சைக் கொடியாகவே மனதளவில் மாறவேண்டும்”
என்ற அடிகளை உணருமிடத்து, எப்பொழுதுமே மனதிற்கு மாற்றம் முக்கியம். வெறுமனவாகி, ஒரு திராட்சைக்கொடியைத் தாளில் வரைவதால், அது திராட்சைக் கொடியாக மாற, மனதளவில் மாறச் செய்வதே ஓவியமின்றி ஒரு நிஜத்தோடு ஒன்றிப் போதலாகும். இந்த வாழ்நாள் வரையில் நம்கூடவே வருஞ்சுவையுணர்வு காதல். காலங்கள் தூரமாகிப் போனாலும், அருகாமையில் நிற்பதும், சுவைபயப்பதும் காதலொன்றே. அது திராட்சையை உண்பதுபோல எளிதானது.
“ஆகவே காதல்செய்வீர்”
என் லாவண்யா சுந்தரராஜன் சொல்வது, மூளைக்கும் நமக்குமான தகவல் பரிமாற்றம். மிகமிக முக்கியமானது, அவ்வடிகளில் எடுத்தாளப்படும் எளிமை + விளக்கப்படும் பொருள் = தகவல் பரிமாறப்படுதல்.
இந்த வாழ்க்கை முறையென்பது அவரவர் நிலைப்பாடு. அது விளக்கப்படமுடியாதது. மாறாக அவரவர் இயல்பினூடாகவே நகரக்கூடியது. இது போல்வனவற்றிற்கெல்லாம் பார்வைப் புலணுணர்வு அவசியம். இந்தப் பார்வை அப்படிப்பட்டது.
“பசியாறி அசதியோடு அமர்ந்திருக்கும் வேளையில்/ தப்பி வந்து கை சேர்ந்த/ திராட்சைக் கனிகளை என்ன செய்வது?”
படைப்பாளரின் பார்வையில்,
“கொஞ்ச நேரம் கொஞ்சிப்பேசலாம்/ விரக்தியோடு வெறித்துப் பார்க்கலாம்/ மௌனமாக வேறெங்கேனும் பார்ப்பது போல நடிக்கலாம்/அல்லது/ ஒரு புகைப்படம் எடுத்து/ மனச்சுவரில் மாட்டி வைத்துக் கொள்ளலாம்”
கவிதையில் வரையறுக்கப்பட்ட சொல்லடிகளாக இல்லாமல், வாழ்க்கைமுறையினை மிகச் சாதாரணமாகச் சுட்டிச் செல்கின்றன திராட்சைகள். பார்க்கப்போனால், இங்கு எல்லாமே மனச்சுவரில் மாட்டி வைக்கப்பட்டுள்ளது. அவ்வப்பொழுது கழட்டுகிறார்கள். தூசி துடைக்கிறார்கள். திரும்பவும் மாட்டுகிறார்கள். இந்தப் பந்துகள் போலுள்ள திராட்சையை மனச்சுவரில் மாட்ட இயலாதபோது,
“அவை மெல்ல அங்கிருந்து உருண்டுபோய்/ குவளையுள் குதித்து/ தற்கொலைச் செய்துகொள்ளும்/ அங்கே ஊறும்/அளவில்லாத போதை தரும்/அது அபூர்வமான திராட்சை ரசம்.
நமக்கெட்டாததொரு மனநிலையை சுதந்திரமான இருப்பை விட்டு விட்டு அலையும் மனப்போக்கினை, போதுமென மனம் சொல்வதைக் கேட்காத பிடிவாதத்தினை, இவ்வடிகள் அழகாகச் சொல்கிறது. முழுமையான மனநிலைப்போக்கினை, ஒரு திராட்சைக்கொடியோடு நகர்த்தி, பழத்தோடு சுவைத்து, பின் இறுதியில் அது என்னவாகின்றது. அது போலவே இம்மனித உடல்களும் என்ற நிகழ்ந்தேறுதல் சுவையாகப் பொருத்தப்பட்டுள்ளது.
இப்பார்வையில், வரையப்பட்ட ஜன்னலிலிருந்தும் எட்டிப்பார்க்கும் மனோபாவம் படைப்பாளருக்குக் கிட்டுகின்றது. நோக்கமாகப் பெரிதாக என்ன இருந்துவிடப்போகின்றது? பெரிதானதென்று பார்வையில் எதுவுமில்லை. எல்லாமே சாதாரணம். எல்லாமே இயல்பானது. அதனாலேயே,
“வரையப்பட்ட ஜன்னலிலிருந்து/ எட்டிப்பார்க்கிறேன்/தெரிகிறது துளிப்பிரபஞ்சம்”
எனத் தைரியமாகச் சொல்லமுடிகின்றது. எதையுமே புளகாங்கிதப்பட, செமசெம எனக் கூக்குரலிட ஒன்றுமில்லை. அனைத்துமே எளிமை. அவ்வளவுதான் விஷயம். அதனாலேயே, தனக்குள் எரிந்துக் கொண்டிருக்கும் “தீ”க்குள் எதையுமே எரிக்கும் தீவிரம் குடிகொண்டுள்ளது. முன்பு சொன்னதுபோல சுவைதான் பிரதானம். எந்நேரமும் சமைக்கும் மயக்கம். அனைவரின் பசியைத் தீர்க்கும் ஆற்றல் பெற்ற மனநிலை. இது எவ்வளவு பெரிய உத்வேகச் சிந்தனை. வாணலியில் எண்ணெயில் பிரபஞ்சத்தைக் கத்திரியாக்கி வதக்குவதில், “சுவை” அள்ளிக் கொள்கிறது. கூடுதலாக, நம் எல்லோருக்குமான சுவையுமதுதான். எல்லாமே சாதாரணமானது. விதந்தோத எதுவுமில்லை.
“வாணலியை ஏற்றி வைக்கிறேன்/ தகதக்கிறது/ எண்ணெய் வார்க்கிறேன்/ ”ஸ்ஸ்ஸ்” என்ற சத்தமெழுப்புகிறது/அவ்வளவுதான்/அதற்குமேல் எந்த பயமுறுத்தல்களுமில்லை/ பிரபஞ்சத்தைக் கத்திரிக்காயாக்கி/ வதக்கி வைக்கிறேன்/ ஆகா! என்ன ருசி”
இதில் “ஆகா என்ன ருசி”, என்பது ஒன்றே நமக்கானது. உலகைக் கடந்து போதல். அனைத்தையும் சுவைப்படுத்துதல். மனதை இலகுவாக்குதல். அவ்வளவுதான்.
ஆனால், கடினமானதென எதுவுமே இல்லையா? என்ற கேள்வி எழக்கூடும். அதற்கும் பதிலிருக்கிறது. ஒவ்வொருவருக்குமுள்ள துயரம்போல், என்னிடமும் ஒரு துயரமுண்டு. அதன் வெப்பத்தை நீர் விட்டலசி, துண்டால் துடைத்து, சாம்பிராணியை நறுமணமாக்கிச் செல்லமாய் கோதி, தூங்க வைத்தேன்.
எங்காவது துயரத்தை உறங்கவிடச் செய்தல் நடைபெற முடியுமா என்ன? பெரும் உளவியல் மனம் சாத்தியப்பட்டாலே, அது சாத்தியமாகும். படைப்பாளருக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. அதையும் தாண்டி, துயரம் பறந்தே போனது எவ்வாறு?
“ஒவ்வொருவருக்கும் இருப்பதுபோல/ என்னிடமும் ஒரு துயரமிருந்தது/ அதன் வெப்பத்தைத் தணிக்க/ தினமும் நீர் விட்டலசி/ ஈரிழைத் துண்டால் துடைத்து/ சட்டெனெ அடித்து/ சொட்டும் நீர்த்துளிகளோடு நீங்கினேன்/ போதாதென்று சாம்பிராணி இட்டு நறுமணமூட்டினேன்/ சிடுக்கு நீக்கி செல்லமாய்க் கோதிக் கொடுத்தேன்/ மெல்லச் சுகமாய் உறங்கிவிடுமது”
இதோடு முடிந்ததா என்றால், இல்லை. இந்த வாழ்க்கையில் எப்பொழுதும் துயரத்தை ஏன் தூக்க வேண்டும்? பிரபஞ்சம் லேசானதென்றால், துயரமும் லேசானது. சூழல்கள் மாறும். காட்சிகள் மாறும் பார்க்கும் பார்வைதான் நமக்கானது. அதனால்தான்,
“எத்தனை செய்துமென்ன/துயரம் ஒருநாள்/ தடாகத்திலிருந்து எழும் பறவையென/ என் கூந்தலிலிருந்து பறந்துபோனது”
இங்குத் தேவைப்படும் கவிதையடி, ’என் கூந்தலிலிருந்துப் பறந்து போனது’
இது மட்டுமல்ல. பார்வையே பிரதானம். எல்லாவற்றையும் திட்டவட்டமாகப் பொருள் கொள்ளுதலில் யாதொன்றுமில்லை. வடிவம் என்பது மாறுதலுக்குரியது. அது மனித உடல்களை மையப்படுத்துவது. மேலும், நிச்சயிக்கப்பட முடியாதது. அகத்தாலானத் தோற்றத்தை, புறத்துக்குள் ஓடவிட்டு மாறும் வகையே இவ்வாழ்வு. அதனை பிரகாசமானதாக மாற்றிக்கொள்ளுதலும், பறக்கவிடச் செய்தலும் அவரவர் குறித்து. அசாதாரணமாக்கிக்கொள்வதை யாரும் விழையத்தேவையில்லை. அதனை, வெற்றுத்தாளாகப் பாருங்கள். அது எல்லாவுமாக உருப்பெறும். அதுவே பெரும் ஊக்கி. முன்னகர்த்துதல் கையூன்றி எழுதல். இது,
“வெற்றுத் தாளை/ உற்று நோக்கிகொண்டிருந்தேன்/ அங்கே பொழிந்துகொண்டிருந்தது/ ஓயாத வெண்மாமழை/ பொங்கி புரண்ட சீற்றக் கடலுக்கு வெள்ளை நிறம்/ இடைப்பட்ட நிலத்தில் ஓடிக்கொண்டிருந்தது கலங்காத நதி/ அதனடியாழத்தில் தெரிந்தது/ எந்த நீர்மையும் ஒட்டாத கூழாங்கல்/ அது எவ்வளவு தண்ணீரில் அணைப்பையும் தாங்கும்”
என்பதில்தான் எவ்வளவு விஷயங்கள் தெரிகிறது.
ஒரு வெற்றுத் தாளில் இதனையெல்லாம் கண்ட படைப்பாளர், லாவண்யா சுந்தரராஜன், காற்றிடம் நேருக்கு நேர் நிற்காமல் பாராமுகம் காட்டுகின்றார். காற்று என்பது விடுதலை. நம்மைச் சாரும் காற்றில் ஏகோபித்த உணர்வுகளைப் பாவித்துக்கொள்ள முடியும். குறிப்பாக இதம் மற்றும் மனதை நீவிக்கொள்ளுதல் “அப்பாட...” என்ற பெருமூச்சு. ஆனால், இக்காற்றை நீ என்ன பெரிய ஆளா? என உதறித் தள்ளவும் முடிகிறது. எப்படி?
பொதுவாக எல்லாச் சார்தல்களும் சில நேரங்களில் நமக்குத் தேவைப்படுவதில்லை. எல்லா நேரமும் விடுதலையில் கத்திப் பறக்கத் தோன்றுவதில்லை. ஒரு சில நேரங்களில், இருப்புகளில் பிடிப்பற்று, பார்க்கப் பிடிப்பற்று ஏதாவது ஒரு வேலையில் மிகத் தீவிரமாகயிருக்கும்போது, அதனுள் மூழ்கிப் போவது. அப்படியானபோதே இந்தக் காற்று இன்னொன்றாக மாறிப்போகிறது.
“அடுக்கி வைத்திருந்த காகிதங்களை வீசியெறிந்து/ மேசை அலங்காரப் பொருட்களில்/ அலட்சியமாய்த் தன் தூசிகளை படிய வைத்து/ படுக்கை விரிப்புகள் பதறியடிக்கிறது/திரைச்சீலைக்கும் பேய்பிடிக்க வைக்கிறது/என்னதான் செய்யட்டுமே இந்தக் காற்று/மடிக்கணிணியை பார்த்துக் கொண்டிருப்பவள்/இன்னும் திரும்பிப் பார்க்கவில்லை/பைத்தியம் பிடிக்கிறது காற்றுக்கு/”
இதில், இச்சமயம் காற்றை யாரும் கோரவில்லை. அதனோடு உறவாடுவது தாண்டி, அது உடலை வருடும் சுகானுபவம் தாண்டி வேறொன்றில் முகம் புதைத்து மனநீட்சி பெறும் மனித உடலைக் காணமுடிகின்றது. அதனாலேயே,
“பிடிவாதக் காற்றைத் தடுத்தாட்கொள்ள/விரிகூந்தலை வருடியபடியவள் வாசல் படியில்/ போதாதா காற்றுக்கு? /மதம் பிடித்த காற்றைத் தடுக்க/ மீச்சிறு தாழ்ப்பாள் போதும்”
எனக் காற்றை வேண்டாமென மறுக்க முடிகின்றது.
பிடிவாதக் காற்றுக்கு விரிகூந்தலும் மீச்சிறு தாழ்ப்பாளும் போதுமெனத் தோன்றுவது ஒன்றே இயல்பு. இயற்கையைக் கட்டிப்போடுதல், அல்லது கட்டிப்போடுவதாக நினைத்து பெருஉருக்கொள்ளுதல்.
காற்றை மறுத்தல் போலவே, ஒரு துண்டு உலகத்தைக் கண்ணாடிக் கோப்பையாக்கி, அதில் வானத்தைப் பிழிந்து நிறைக்கும் அதிபெரும் உறுதி கொண்ட தேவியும் இப்படைப்பாளர் கவிதைகளில் எளிமையாக வந்து போகிறார்கள். இதே தேவிதான் கோவில் பிரகாரத்தையும், கம்பிகளில் கட்டப்படும் வளையல்களையும், பசு தானத்தையும், அருள்தர அது வேண்டும், இது வேண்டுமென்பதையும், துலாபாரம் தருவதையும் ”வேண்டாம்”, என்று மறுக்கின்றாள்.
“உதடுகள் அசைத்து மறுபடி சொன்னாள் தேவி/ வேண்டாம்/ இதைத்தானே சொன்னாள் சௌடேஸ்வரி”
இதில் வேண்டாமென்பதுதான் தேவையானது. கடவுளின் பொருட்டு எல்லாமே கட்டாயமாக்கும்போது, கடவுள் அதனை வேண்டாமென மறுக்கின்றார். மனித உடல்களின் கூடுதல் சுமையினைத் தவிர்க்க, ’வேண்டாம்’, என்று சொல்லப்படுகின்றது. இதனுள் மறுத்தலென்பது மிகப்பெரும் விஷயம். அதுவே முன்னெச்சரிக்கையும்கூட.
இதே தேவியின் முன்னால் ஏற்றப்படும் எலுமிச்சம்பழ இரு கிண்ண விளக்கில்தான் தன் பதின்மவயது முதற் பருவமெய்திய அந்த நாளில் விளக்கேற்றும் ஒரு பெண்ணைக் காணமுடிகின்றது. சிறாரிலிருந்துப் பார்த்த அந்தப் பழம் அதே மினுமினுப்போடு, அதே சாறோடு, சருமத்தில் தேய்க்கும் தோலோடு, “இப்பொழுது நான்/என் வீட்டில் இருக்கிறேன்/அம்மா அவர் வீட்டில் இருக்கிறார்/அம்மாவுக்கு வயதாகி விட்டது/ஆனால் எலுமிச்சைக்கு வயதே ஏறுவதில்லை”
மனித உடல்களின் வடிவங்கள் வாழ்வின் சுமையினால் நிலைத்தடுமாறும்போது, பிரதானமாக நம்மை மீட்டெடுக்கப் பட வேண்டியது. ’புதுப்பித்துக் கொள்ளுதல்’ சோர்ந்து சுருங்காமல், முழுமைப் படுத்திக் கொள்ளல், என்பதே இவ்வடிகளின் எதிர்பார்ப்பு.
இதுபோல படைப்பாளரின் பார்வை ஒவ்வொரு விதமாக மாறிமாறித் தாவுகின்றது. கழிவறையில் சுத்திகரிப்புத் திரவம் ஊற்றித் தூய்மைப் படுத்தும்போது, அதில் தெரியும் மலர் போன்ற ஒன்றை எங்கிலும் பார்க்க இயலாது, ஏனெனில் இது செடியில் பூக்கவில்லை. என் கைக்கொண்டுப் பூத்தது, எனச் சொல்லுமிடம் பேரழகு. தூய்மையென்பது, தூய்மைபடுத்துவதென்பது யாவர்க்குமானது.
இவ்வாறான நேசித்தலின் பொருட்டே, கோவில் பிரகாரத்தில் சட்டென்று பறக்கும் காதல் கிளிகளோடு தேவியிடம் கேட்டுக்கொள்ளமுடிகின்றது. நமக்கான விருப்பத்தை நாம் கேட்பது என்பது வெறும் கற்பனையல்ல. நல் விளைவுகளுக்கான வலிமைகள். இரட்டைக் கிளிகளில், ’ஒன்று நீ மற்றது நான்’, என்றாலும் யார் கற்பனை செய்தாலும் ஒன்று நீயாகவே இருப்பாய் என்பதும், கிளிகளின் சத்தத்தில் காதல் வலியே அதிகம், மற்றும் அவைகள் பறந்து பறந்து பிரபஞ்சத்தின் சிறகுகளை விரிக்கின்றன, எனுமிடத்து வரும் கவிதையடிகள் அழகுடைத்து.
இப்படியாகவே, இப்பிரபஞ்சம் பெண்களுக்கானது. பெண்ணால் ஆனது, இவ்வுலக உயிர்களெல்லாம் நன்மை அமைதிபெற, கண் திறக்கும் ஒரு பெண்ணே சுழல்கின்றாள். அவள் பின்னே இயற்கையும் சுழன்றது. அவள் எங்கிருந்து அமர்வது? அமர முடியாமல் போனால்தான் என்ன? அதனாலேயே,
” "தேவி தனது
மெனோபாஸ் தொப்பையை
தடவிக்கொண்டெழுந்தாள்..”

Comments
Post a Comment