பனித்துளி போற்றுதும்
குளிரில்சில்லிட்டு விழிக்கும்
மேகங்களின் முதுகில் –
மறைந்திருக்கின்றன
மர்மக் கதவுகள்.
அவற்றுள்
யாரோ
ஒரு ஆணை பிறப்பிக்க-
உடனே
உருவாகிறது பனி.
தன் ஒளியின் கைகளால்
பனிப் படிகங்களை இழைத்து
வெண்மையின் உச்சிக்குக்
கொண்டு செல்கிறான்
ஷால்கியேல்.
காற்றுகளுக்குக் கட்டளையிட்டு
நிலமெங்கும்
புயலை அவிழ்த்து விடுகிறான்
அனானியேல்.
மழையோடு
ஆலங்கட்டிகளைக் கலக்கி,
உறைந்த காடுகளின் மீது
தன் பெருமூச்சை விடுகிறான்
மதாரியேல்.
பனிச்சரிவுகளின்
இருண்ட நரம்புகளில்
பாய்கிறான் உல்.
வடக்கத்திய காற்றுகளை
தன் கைகளில் ஏந்தியபடி.
புயல் தன் பெயரை
மறந்துவிடும் வரை
அதன் திசையை
மாற்றுகிறாள் ஸ்காடி.
விழும் ஒவ்வொரு துகளிலும்
ஒரு பழைய நினைவை
புதைக்கிறாள் கியோனே.
தவசிகளும்
தேவதைகளும்
இணைந்து நெய்கிறார்கள்
இந்த வெண்மையான போர்வையை.
தாண்டவம்.
லாஸ்யம் .
ஒரே தாளம்.
காணாத இசையில்
சுழன்று இறங்குகின்றன
நுண்துகள்கள்.
ஒன்று.
பின் ஒன்று.
பின் எண்ணிலடங்காதவை.
கூரைகளின் மீது
முதலில் கேட்கிறது
பனியின் மென்மையான
காலடி.
ஆசியின்
குளிர்ந்த பிரகாசம்.
உலகின்
பாதகங்களையெல்லாம்
கரைத்துவிட வேண்டும் போல -
சுழன்று இறங்குகின்றன
பனித்துகள்கள்.
எவ்வளவு உறுதி.
எவ்வளவு தீவிரம்.
எத்தனை மென்மை.
எத்தனை கருணை.
பனிச்சீவல்களை
வாஞ்சையுடன் அள்ளி,
கொஞ்சி,
மீன் குஞ்சுகளை
நீரில் விடுவதைப்போல -
தன் பிடியை
மெல்லத் தளர்த்தி,
புன்னகைத்து
கடந்து செல்கிறது
குளிரின் ஏந்தல்.
உறைந்த ஏரியின் கரையில்,
பிடுங்கி
தலைகீழாக நட்டதுபோல்
நிற்கின்றன
பிர்ச் மரங்கள்.
அவற்றின் கரிய தண்டுகள்
பனிக்குள்
மறந்துபோன
பிரார்த்தனைகளைப் போல.
அவற்றின் கீழ்
வெட்கிச் சிவந்த
உதிர்ந்த இலைகளின் மீது -
பரவி,
பெருகி,
முடிவற்று
நிறைகிறது
வெண்மை.
வெட்டவெளியில்
தனியனாய் நிற்கிறேன்.
நான் யார்
என்பதற்கும்,
பனி எது
என்பதற்கும்
இடையில் -
ஒரு வெண்மையான
மௌனம்.
என் பாதச்சுவடுகள்
ஒன்றன்பின் ஒன்றாக
அழிகின்றன.
மறைகின்றன
பாதைகள்.
பிறகு
மரங்களின் பெயர்கள்.
பின்னர்
ஏரியின் பெயர்.
கடைசியில் -
என் பெயரும்.
என்னை
என்னிடமிருந்து
மெல்ல
அகற்றிக்கொண்டிருக்கிறது.
இன்னும் பொழிகிறது.
இன்னும் நிறைகிறது.
என்மேல் பொழியும்
ஒவ்வொரு துளியிலும்
என் நட்சத்திரம் ஒன்று
அணைகிறது.
என் எரிமலைகளுள் ஒன்று
தன் தீக்குழம்புகளுடன்
குளிர்ந்து
உறைகிறது.
என் மூச்சு
வெளியேறுகிறது -
ஒரு சிறிய மேகமாகி
என்னைவிட்டு
பிரிகிறது.
கடைசியில் -
ஒரு பனித்துளி
என் இமையில்
தங்குகிறது.
அதைத் துடைக்க
கையை உயர்த்துகிறேன்.
அதற்குள்
நானே
ஒரு பனித்துளியாகி
ஒரு மனித உருவத்தில்
ஒட்டிக்கொண்டிருக்கிறேன்.
பனித்திரையில்
இந்த ஏரிக்கரை
பார்வையிலிருந்து
மறைந்துவிட்டது.
நான் மட்டும் –
இந்த வெண்மைக்குள்
எங்கோ
இன்னும்
பொழிந்துகொண்டிருக்கிறேன்.
தாயே -
என்னை அழிக்கிறாயா?
அல்லது
இந்த வெண்மைக்குள்
என்னை
மீண்டும்
பிறக்கச் செய்கிறாயா?
- வேணு தயாநிதி
Note: The figures Shalgiel, Ananiel, and Matariel are drawn from Jewish and Enochian angelology; Ullr and Skadi from Norse mythology; and Chione from Greek mythology. The concepts of tāṇḍava and lāsya are drawn from the Indian classical dance tradition. These figures and traditions are imaginatively reconfigured and woven together in the poem.
***

Comments
Post a Comment