ரொம்ப சின்ன வயசுல… பிரைமரி ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்த டைம்… நான்காவது படிச்சிட்டு இருந்திருக்கலாம்னு நினைக்கிறேன். அப்ப நான் எப்பவுமே தனியா சுத்திட்டு இருக்கிற பையன். அதிகமா பேசுறது கிடையாது. ஆனா பசங்க கூடல்லாம் சேர்ந்து விளையாடுறதுல்லாம் ரொம்ப பிடிக்கும். நீச்சலடிப்பேன். எல்லா விதமான விளையாட்டிலும் ஈடுபட்டிருக்கேன். ஆனா ஊர், ஸ்கூல் எல்லாத்துலயும் நிறைய ஸ்பேஸ் இருந்ததுனால அங்க எல்லாம் தனியா சுத்தறது பழக்கமா இருந்தது.
எனக்கு ஞாபகம் இருக்கு.. எங்க வீட்டுக்குள்ள இருந்த பாத்ரூம் சுண்ணாம்பு சுவர்ல ”வேணு இறந்துவிட்டான்” அப்படின்னு எழுதினேன். ஒரு மூனாவது ஆளா நின்னு எழுதுவோம்ல. அதுமாதிரி. அதுதான் எனக்கு தெரிஞ்சு நான் கன்சிடர் பண்ற முதல் கவிதை. அல்லது முதல் எழுத்துனு சொல்லலாம். அப்ப எனக்கு ஒன்பது வயசு இருக்கலாம் இல்ல? அப்ப அதை நான் எக்ஸ்பிரஸ் பண்ணனும்னு நினைச்சிருக்கேன். ஒரு கதார்சிஸா இருக்கலாம். என்னோட உணர்வுகள எழுத்தா சொல்லிபார்த்திருக்கேன். அது ஒரு ரிலீஃப கொடுத்திருக்கு. தன்னைத்தானே உடல் அளவில ஹார்ம் பண்ணிக்கறதோ இல்ல வெறும் அட்டென்ஷனுக்கோ இல்ல. நான் வீட்ட விட்டு ஓடி போறேன்னு சொல்றதும் இல்ல. தெளிவா ஒரே வரில வேணு இறந்துவிட்டான் அப்படின்னு எழுதியிருக்கேன்.
எழுதின தருணத்தை பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா? எது அப்படி உங்களை எழுத வைத்தது? சொல்லனும்னா சொல்லலாம்.
நான் தனியா இருந்த சமயத்தை வெறும் தனிமைன்னு மட்டும் சொல்ல முடியாது. வீட்லயும், ஸ்கூல்லயும் நிறைய ரிலீஸ்க்கான ஸ்பேஸ் இருந்திருக்கு. வீட்டைச் சுற்றி வயல்களும், சிறு ஓடையும், சிறு கானகமும், குதித்து விளையாட நீர் நிறைந்த கிணறுகளும் இருந்தன.
ஸ்கூல்ல எனக்கு எந்த அழுத்தமும் இல்லாம இருந்துருக்கு, அக்காடமிக்கலா நல்ல படிக்கிற பையனா இருந்துருக்கேன். ஆனா எமோஷனல் பிரஷர் இருந்துருக்குனு நினைக்கிறேன். வீட்ல அடிக்கடி டொமஸ்டிக் வயலன்ஸ் நான் பார்த்துட்டு இருந்திருக்கேன். எங்க அப்பாக்கும் அம்மாக்கும் நிறைய சண்டை வந்துட்டே இருக்கும். அது ஒரு காரணமா இருந்திருக்கும்னு நெனக்றேன்.
இயற்கை வெளியும் விளையாட்டுகளும், எனக்கு அசாத்திய உடல் வலிமையையும் என் மனம் சஞ்சரிக்க பொழுதுகளையும் தந்தது, அது அப்பவும் இப்பவும் என்னை எல்லா crisis-ல இருந்தும் காப்பாத்திட்டு இருக்கு.
எனக்கு ஞாபகம் இருக்கு, என் ஸ்கூல் ப்ரெணாட் செந்தில். நானும் அவனும் தான் வழக்கமா கெணத்ல குளிக்க விளையாட போவோம். ஒரு நாள் மதியம், குளிக்கும் போது Challenge பண்ணான். இந்த கெணத்த விடாம நூறு தடவ விடாம சுத்தி நீச்சலிடிச்சா, உனக்கு ஐஸ் க்ரீம் வாங்கி தரேன்னான்.
நான் விடாம சுத்தி சுத்தி வந்துட்டு இருந்தேன். அவன் மேல் படியில உக்காந்து எண்ணிட்டு இருந்தான். நூறு ரவுண்ட் அடிச்சு முடிச்சிட்டு அவன்கிட்ட சொன்னேன். “நீ சொன்னேனு நூறு ரவுண்ட் அடிச்சேன், எனக்காக இன்னொரு ரவுண்ட் அடிச்சிக்கிறேனு நூத்தியொரு ரவுண்ட் அடிச்சிட்டு மேல் ஏறி வந்தேன்.
சிறுவயது முதலே, என்னை நான் வெல்வதே எனக்கு முக்கியமாக இருந்திருக்கிறது. என் உடல் இவ்வாறு களித்து வளர, என் மனம் எழுத்தை, ஓவியத்தை நாடி இருக்கிறது.
அதுக்கப்புறம் ஞாபகம் இருக்கறது நான் பதினேழு வயசுல எழுதினது. காலேஜ்ல இருந்து வீட்டுக்கு போறது அடிக்கடி நடுராத்திரியில தான் போவேன். சென்னை டு கிருஷ்ணகிரி. காவேரிபட்டனம்னு ஒரு ஊர் இருக்கு அங்கிருந்து எங்க ஊருக்கு நடந்து போற தூரம். பஸ் ஸ்டாண்ட்ல இருந்து ஒரு ரெண்டு கிலோமீட்டர் நடந்து போகனும். அப்ப டவுன்ல இருந்து வீடுகள் வழியா நடந்து போக வேண்டியதா இருக்கும். அப்பறம் வயல்கள் வழியா போற ரோடு வழியா போனா வீடு வந்துரும். அங்க வைக்கப்போர்லாம் வரிசையா போட்டு வச்சிருப்பாங்க. அதுக்குள்ள கொலைக்கருவிகள்லாம் இருக்கும். எங்க அப்பா நிறைய டைம் சொல்லிருக்காரு அந்த மாதிரிலாம் நான் நடுராத்திரில தனியா வரக்கூடாதுன்னு. ஏன்னா அவருக்கு எதிரிங்க நிறைய இருக்கதால என் உயிருக்கு ஆபத்துன்னுலாம் சொல்லிருக்கார். நாம குறுந்தொகைல வாசிச்சிருக்கோம்ல. பாலை நிலம் வழியா தலைவன் போகும் காட்சி அந்த மாதிரின்னு வச்சுக்கோ. ஆனால் அது எனக்கு என்னமோ தெரியல அது மாதிரி தனியா போறது தான் பிடிக்கும்.
அந்த டவுன்ல இருக்கற சின்ன வீடுகள் வழியா போகும்போது அந்த வீட்டுக்கு முன்னாடி வாசல்ல கொடி முல்லைகள் வளர்த்திருப்பாங்க. அதுல இருக்க ஒரு பூவ பறிச்சு எடுத்துட்டு நடந்து போனேன் ஒரு முறை. இதெல்லாமும் சேர்ந்து,
“ஒரே ஒரு மலரின்வாசம் கொண்டு
நீண்ட நெடும் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது”
அப்படின்னு ஒரு வரி எழுதினேன்.
இத என் தலையணை உறைல மறச்சி வச்சிருந்தேன். சில வருஷம் கழிச்சி அத என் சூட் கேஸ்ல பாத்தேன் எங்க அப்பா பத்திரமா எடுத்து வச்சிருந்தார். எனக்கு வசந்தினு ஒரு பொண்ணு மேல லவ். அது பத்தி எழுதினேன்.
என் வகுப்பறை வானில் தோன்றும் வானவில் நீ
நான் ஞாயிறோ என்னவோ
நாம் என்றுமே அருகருகே இருத்தல் இல்லை
எதிர்படும்போதும்
என் உயிரை உட்கொண்டு
வெறும் பார்வையை மட்டும் பரிசளித்துப் போய்விடுகிறாய்.
இதெல்லாம் அவைக்குறிப்பிலிருந்து இல்ல இல்ல.. வரலாற்றிலிருந்து நீக்கப்பட வேண்டியவை. (சிரிக்கிறார்…) இதுதான் அந்த எனக்கு தெரிஞ்ச மூணு வரிகள். அதுக்கப்புறம் 2004-05-ல இன்னொரு கேர்ள்ஃபிரெண்ட் ரொம்ப டிமாண்ட் பண்ணி கேட்டதுனால சில கவிதைகள் எழுதுனேன். அவளுக்காக.
சிலது இன்னும் ஞாபகம் இருக்கு.
‘நிலை நீரின் மேலிட்டு நீண்ட கோடு நான்’
‘உன் கூந்தலில் இருந்து உதிரும் மல்லிகை மலர்கள்
உன் காலடித் தடங்கள்’
இந்த மாதிரி
ர: தீவிர இலக்கிய அறிமுகம் எப்போது?
வேணு வேட்ராயன்: 2008-2009 இருக்கலாம். ஜெயமோகனோட ”நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்” நூல் வாசிச்சேன். அதில் அவர் குறிப்பிடப்பட்டிருந்த பல நூல்களை வாசிச்சேன். ஜெயமோகனை 2009ல் ஊட்டி காவிய முகாமில் சந்திச்சேன். அதுக்கு முன்னாடியே விஷ்ணுபுரம் வாசிச்சிருந்தேன். அதுக்கப்பறம் ஒரு ரெண்டு வருஷம் இண்டன்ஸ் ரீடிங் இருந்தது.
2009-ல் இருந்து 2019 வரை தொடர்ந்து ஊட்டி காவிய முகாம் போனேன். ஒவ்வொரு டைம் போகும்போது நான் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டேன். ஆரம்ப இரண்டு வருடங்கள் இன்டென்ஸான எக்ஸ்பீரியன்ஸ் எனக்கு இருந்தது. ஆட்கொள்ளல் என்று சொல்வோமே அது போல. அந்த காவிய முகாமிலயே கவிதை இயல் பற்றி அல்லது கவிதைகள் பற்றி சிறு சிறு உரைகள் ஒரு நான்கைந்து வருடம் தொடர்ந்து எடுத்திருக்கிறேன். தேவதேவன், நாஞ்சில் நாடன், எம்.கோபாலகிருஷ்ணன், மோகனரங்கன், கண்மணி குணசேகரன், ஓவியர் சந்ரு, கடலூர் சீனு, நிர்மால்யா, லட்சுமி மணிவண்ணன், இசை, வே.நி.சூர்யா ஆகியோரை அங்கு சந்தித்தேன்.
கிருஷ்ணன் எனக்கு எப்பவுமே எதிர்தரப்புல இருப்பார். ஆனா அது எனக்கு ஒரு ஒரு நல்ல விஷயமா இருந்தது. அந்த உரையாடல் எனக்கு தேவையா இருந்தது. ஏன்னா இலக்கியத்தில் புறவயம் (objective), அகவயம் (subjective) என்று விவாதிக்கும்போது, அனைத்தையும் வெறும் அகவயம் என்று மட்டும் கடந்துவிட முடியாது. ஒரு பொதுவான அகவயத்தன்மை (common subjectivity) உருவாவதுதான் புறவயமாக மாறுகிறது. ஆப்ஜெக்டிவிட்டி இஸ் நத்திங் பட் காமன் சப்ஜெக்டிவிட்டி இல்லையா?
முக்கியமாக கவிதையில் அகவயத்தன்மை மிக முதன்மையான இடத்தைப் பெறுகிறது. கவிதையை ‘உள்ளுணர்வு சார்ந்தது’, ’தன்மயம் சார்ந்தது’ அல்லது ‘சுயம் சார்ந்தது’ என்ற பெயரில் எதையும் சரிபார்த்துக் கொள்ளாமல் அப்படியே கடந்துவிட முடியாது. அதற்கொரு பொது அகவயத்தன்மை தேவைப்படுகிறது. அதே சமயம், கவிதையில் எல்லாவற்றையும் புறவயப்படுத்திவிடவும் முடியாது. புறவயத்திற்கு அங்க மிகச் சிறிய இடம்தான் இருக்கு. அதுக்கு மேல அதுக்கு இடம் கிடையாது.
ர: இரு கவிதை அமர்வுகளை “கவிஞர்களுடன் இருத்தல்” என்ற பெயரில் ஓசூரில் நிகழ்த்தியிருக்கிறீர்கள். அதை உங்கள் கவிதையை அணுகும் விதம் சார்ந்தது எனச் சொல்லலாமா?
வேணு வேட்ராயன்: முதல்ல இருந்தே கவிதை இயல் பற்றி ஏதோ ஒரு விதத்தில் எனக்கு ஒரு தொடர்ச்சியான ஒரு ஆராய்ச்சி இருந்திருக்கு. புரிந்து கொள்ளணும் அப்படின்ற ஒரு உந்துதல் இருந்திருக்கு. வெறும் எழுதுறதோட நான் எப்பவுமே நின்னது கிடையாது. எனக்கு கவிஞர்களோட நேரடியான உரையாடல மிக மிக குறைவு. ஜெயமோகனுடன் நூறு பேர் அமர்ந்திருக்கும் அவையில் ஒருவனாக அமர்ந்திருந்திருக்கிறேனே தவிர, அவருடன் தனிப்பட்ட நேரடி உரையாடல்கள் நிகழ்ந்ததில்லை. தேவதேவன் அருகில் உட்கார்ந்தா அவர் நூறு வார்த்தை கூட பேச மாட்டார். ஆனால் நாம அங்க உட்கார்ந்தா போதும். பின்னாடி என்னுடன் கொஞ்சம் அதிகம் பேசியிருக்கார் இருந்தாலும் உரையாடல் குறைவுன்னு சொல்றேன். அந்த இருப்பின் வழியா நான் அதிகமா கத்திருக்கேன். அதன் வழியாக ஆட்கொள்ளல் நிகழ்கிறது.
கவிதைக்குள்ள வருவதற்கு முன்னரே பெரும்பாலான கவிஞர்களை வாசித்திருந்தேன். பிரமிள், தேவதேவன், தேவதச்சன், ஞானகூத்தன், வில்வரத்னம், ஜெயபாஸ்கரன், வண்ணதாசன், கலாப்ரியா, ப்ரான்சிஸ் கிருபா இந்த மாதிரியான எல்லா நவீன கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் வாசிச்சிருக்கேன். முழுமையான தொகுப்பை வாசிச்சதுனா பிரமிள், தேவதேவன், தேவதச்சன், அப்புறம் மனுஷ்ய புத்திரன், அபி. எனக்கு ரொம்ப இயல்பா மனசுக்கு நெருக்கமான கவிஞர்களாக பிரமிள், தேவதேவன் ஆகிட்டாங்க.
என்னுடைய மொழி வெளிப்பாட்டில் ஏதோ ஒரு தனித்தன்மை இருக்கு அப்படின்னு முதல்ல இருந்தே உணர்ந்தேன். அதுக்கே உரிய லிமிடேஷன்ல இருந்து ஒரு தனித்தன்மையோட வெளிப்பட்டது.
கவிதையை நான் ஒரு தனித் துறையாகவோ அல்லது என்னை முதன்மையாக ஒரு கவிஞனாகவோ அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. எனக்குக் கவிதை என்பது ஓர் அடிப்படை வெளிப்பாட்டு முறை. அதைவிட முக்கியமாக, அறிதலின் வழி. அறிதல் கவிதையின் வழியாக நிகழ்கிறது என்பதைவிட, வாழ்வின் ஏற்ற இறக்கங்களும் எனது அறிதலும் கவிதையின் வாயிலாக வெளிப்படுகின்றன என்பதே உண்மை.
ஒரு பூனை தாவுவதற்கு முன்பாக உடலைத் தயார்படுத்தும் அந்த நுண்ணிய அசைவுதான் அறிதல்; அந்தப் பாய்ச்சலின் தருணம்தான் (jumping moment) கவிதை. அந்த நுண்ணிய தயார்படுத்தலை நேரடியாகப் பார்ப்பது கடினம். ஆனால், அந்தப் பாய்ச்சல் கண்கூடாக வெளிப்படும் அழகிய கணமாகிறது. தத்துவம், கலை, உளவியல், இசை, கட்டிடக்கலை, கணிதம் மற்றும் விளையாட்டு, fashion, visual media எனப் பல்வேறு துறைகளின் மீதும் எனக்கு ஓர் இயல்பான ஆர்வம் உண்டு,இந்த அனைத்துத் துறைகளிலும் மனிதன் தன் அறிதலின் உச்சத்தை வெளிப்படுத்துகிறான் என்பதே என் பார்வை.
ர: கவிஞர்களுடன் அருகிருத்தல் அமர்வுகளின் நோக்கத்தை இன்னும் விரிவாகச் சொல்ல இயலுமா? தீவிர இலக்கியம் சார்ந்த கவிதையை அணுகுவதற்கு வாசகர்களிடம் ஒரு தயக்கம் இருக்கிறது இல்லயா?
வேணு வேட்ராயன்: கவிதையை அணுகுவதில் பொதுவான ஒரு தயக்கம் இருக்கிறது என்பது உண்மைதான். உதிர்ந்து தரையில் கிடக்கும் ஒரு மலரைக் கண்டு மனம் கொள்ளும் உணர்ச்சி என்பது அனைவருக்கும் பொதுவானதா என்ற கேள்வியை எழுப்பிக் கொள்ளலாம். காற்றில் சுழன்று விழும் இலையின் நடனம், உதிர்ந்த ஒரு பறவையின் இறகில் உள்ள வடிவ நேர்த்தி, தரையில் கிடக்கும் மரமல்லி மலர் என எல்லாவற்றிலும் ஓர் அழகியல் இருக்கிறது. இயற்கையில் உள்ள அந்த நிபந்தனையற்ற அழகு மனித மனதிற்கு இன்பத்தை அளிக்கிறது. அதிலிருந்தே கவிதையும் பிறக்கிறது. அடிப்படையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஓர் அழகுணர்ச்சி உண்டு. ஆனால் அன்றாட வாழ்வின் சுழற்சியில், சிறுசிறு விஷயங்களில் அந்த அழகுணர்ச்சியை நாம் இழந்துவிடுகிறோம். அந்த உணர்ச்சி மழுங்கும்போது கவிதையை அணுகுவதிலும் தடை ஏற்படுகிறது.
அதேபோல உணர்ச்சிகள் எழும்போது, அந்தத் தூண்டுதல்களை மனம் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதும் முக்கியமானது. தம்மபதத்தில் வருவது போல, உண்மையை உண்மை என்று அறியும் உள்ளம் இல்லாதபோது அகம் கலங்குகிறது. கலங்கிய உள்ளத்தில் எந்த உண்மையையும் காண முடிவதில்லை. இதனால் கவிதையை முழுமையாக அனுபவிக்க முடியாமல் போகிறது.
ஒவ்வொரு அகத்திற்கும் ஒரு பிரத்யேகமான அழகியலும் மன அமைப்பும் உண்டு. ஒரு கூர்மையான மனம் தன்னைச் சுற்றியுள்ள புறச்சூழலையும் காலத்தையும் தனித்துவமான முறையில் எதிர்கொள்ளும்போது, அது கவிதை மொழியாக வெளிப்படுகிறது. முகுந்த் நாகராஜனின் பிரத்யேக மனம் அவருடைய சூழலை எதிர்கொள்ளும்போது முகுந்த் நாகராஜனின் கவிதை பிறக்கிறது. தேவதேவனின் தரிசனமும் அக உலகமும் வேறொரு தளத்தில் இயங்குகிறது.
இந்த இரு வேறு கவிமனங்களை வாசகர்கள் எதிர்கொள்வதற்காகவே தேவதேவன் மற்றும் முகுந்த் நாகராஜன் ஆகியோருடன் இரண்டு அமர்வுகளை ஒருங்கிணைத்தோம். இந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் திட்டமிடப்பட்ட உரைகளோ விவாதங்களோ கிடையாது. உதாரணமாக “மீட் முகுந்த் நாகராஜன்” என்பது தான் சந்திப்புக்கான பெயர். கவிஞர்கள் நேரில் அமர்ந்திருந்தனர். நவீன கவிதையின் போக்குகள், அழகியல் கோட்பாடுகள் அல்லது கவிதையின் இசைத்தன்மை பற்றிய தத்துவார்த்த விவாதங்களுக்கு அங்கே இடமளிக்கவில்லை. ஒரு கனிவான சூழலில் கவிஞரின் அருகிருத்தல் (presence) மட்டுமே நிகழ்வின் மைய நோக்கமாக அமைந்தது.
அந்த அமர்வுகளுக்காகத் தீவிரமான முன் தயாரிப்புகளை மேற்கொண்டோம். உதாரணமாக, தன்னறம் வெளியிட்ட முகுந்த் நாகராஜனின் முழுத் தொகுப்பிலிருந்த நானூறுக்கும் மேற்பட்ட கவிதைகளை ஆழ்ந்து வாசித்து, அவரது கவிதைகளுக்கு இடையே உள்ள குறுக்கு இணைப்புகளைக் கண்டறிந்தோம். ஒருவரின் தொடக்க காலக் கவிதையில் உள்ள படிமம் அல்லது உணர்வு, பிற்காலக் கவிதைகளில் எவ்வாறு உருமாற்றம் பெற்றுள்ளது என்பதைப் பதிவு செய்தோம்.
உதாரணமாக, முகுந்த் நாகராஜின் ஒரு கவிதையில் தட்டில்கவிழ்த்து வைக்கப்பட்ட வட்ட வடிவ சோற்றில் விளிம்பில் பிரதிபலிக்கும் தனிமை வரும். பிற்காலக் கவிதையொன்றில் அதே வட்ட வடிவத்தில் நிலவு தோன்றும். கிராமத்து வீட்டின் விசாலமும், நகர நெருக்கடியில் வீட்டின் குறுகலான தன்மையும், தனிமையைக் கடக்கும் தருணங்களும் அவரது கவிதைகளில் தொடர்ச்சியாகப் பதிவாகியுள்ளன. ஒரு கவிஞன் தன் அகச்சிக்கல்களையும், உள நெருக்குதல்களையும் கவிதையின் வழியாக எதிர்கொள்வது என்பது 'நோய்நாடி நோய்முதல் நாடி' போல, ஒரு சிகிச்சையைப் (therapeutic) போன்றது. முகுந்த் நாகராஜன் தன் அக இருளைக் கவிதைகள் வழியே எதிர்கொண்டு மீண்டெழுந்த சித்திரத்தைக் காண முடிகிறது. ஒரு கவிஞனின் தொடர்ச்சியான தொகுப்புகளை வாசிக்கும்போது, அவரது அக வளர்ச்சியையும் மாற்றத்தையும் வாசகனால் உள்வாங்க முடிகிறது.
ர: நீங்கள் கவிதையை ஓர் 'இலக்கிய வகைமை' என்பதைத் தாண்டி, ஒரு 'வாழ்வு முறை' என்று குறிப்பிடுகிறீர்கள். நாவல், சிறுகதை போன்ற பிற இலக்கிய வடிவங்களை உருவாக்கும் எழுத்தாளர்களுக்கும் இது பொருந்தும் தானே? கவிதைக்கு மட்டும் வாழ்வுமுறை என்று குறிப்பிட என்ன தனித்துவம் இருக்கிறது?
வேணு வேட்ராயன்: கவிதை என்பதை லிட்ரரி மூவ்மெண்ட்டாக நான் பார்க்க விரும்பல. அது ஒரு வாழ்வு முறை, என் வாழ்வின் வெளிப்பாடு. நான் இங்கே ஒரு லட்சியவாதத்தையோ, கருத்தியலையோ அல்லது உயர்ந்த விழுமியங்களையோ முன்வைத்துப் பேசவில்லை.
கவிதைக்கு மட்டுமேயான தனித்துவமாக நான் கருதுவது என்னவென்றால்—ஒரு மனிதன் தன் வரம்புகள் (limitations), சபலங்கள் (temptations), பலவீனங்கள் மற்றும் பாதிப்புக்குள்ளாகும் நிலைகள் (vulnerabilities) அனைத்தையும் மறைக்காமல், தன்னை முழுமையாகத் தனக்குதானே திறந்து காட்டி (baring himself), அகத்தளவில் முற்றிலுமாகத் திகம்பரமாக நிற்பதுதான். அதுவே கவிதைக்குரிய அடிப்படைத் தேவை. கவிதை அங்கிருந்துதான் தொடங்க முடியும்.
நவீன கவிதைக்கான எஸ்ரா பவுண்டின் (Ezra Pound) கோட்பாடுகள் வரையறைகளில் கவிதைமொழி, படிமம் பற்றி எழுதியுள்ளார். "வாழ்நாளில் நிறைய எழுதுவதை விட, உருப்படியாக ஒரே ஒரு குறிப்பிட்ட படிமத்தை (Image) மட்டும் சரியாகக் கையாண்டால் போதும்" என்று அவர் கூறுகிறார்.
உண்மையில், இதை தற்போதைய நமது எழுத்திற்கு அப்படியே பொருத்திக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், படிமத்தைப் பற்றிப் பேசும் போது எனக்கு ஒன்று தோன்றியது. ஒரு குறிப்பிட்ட படைப்பாளி, தான் அடைய விரும்பும் அந்த ஆழமான படிமத்தைத் தொடுவதற்காகத்தான் மீண்டும் மீண்டும் பல கவிதைகளை (ஓவியங்களை) எழுதிப் பார்க்கிறாரோ? இறுதியில், அவையனைத்தும் அவர்தம் அசல் தேடலை நோக்கியே சென்றடைகின்றன. கலை என்பது படிமங்களை உருவாக்குவதுதான் என்று கலைக் கோட்பாடுகள் பலவும் குறிப்பிடுகின்றன. ஆனால், படிமங்களை உருவாக்குவதான இந்தப் ‘படிமவியல்’ (Imagism) என்ற சொல் எஸ்ரா பவுண்டிற்கு முன்பே புழக்கத்தில் இருந்ததா, அல்லது அவர்தான் இதை முதன்முதலில் அறிமுகப்படுத்தினாரா?
படிமங்களைப் பற்றிப் பலரும் பேசியிருக்கிறார்கள் என்றாலும், அதைப் பற்றிய ஒரு தெளிவான புரிதல் நமக்குத் தேவையாக இருக்கிறது. ஆம், அவர் இதை 'படிமக் கவிதை இயக்கம்' என்று குறிப்பிடுகிறார். அந்த இயக்கத்தின் ஒரு பகுதியாகவே எஸ்ரா பவுண்ட் தன்னைக் கருதிக் கொள்கிறார். ரிச்சர்ட் ஆல்டிங்டன் (Richard Aldington) போன்ற பல பெயர்களை அவர் குறிப்பிடுகிறார். எஸ்ரா பவுண்ட் படிமத்திற்கு அளிக்கும் வரையறை, நம் சங்க இலக்கியக் கவிதைகளுக்கு மிகத் துல்லியமாகப் பொருந்துகிறது.
"அறிவு மற்றும் உணர்வு சார்ந்த ஒரு சிக்கலை (Intellectual and emotional complex), அதன் அத்தனை சிக்கல்களுடனும் ஒரு கணத்தில் காட்சிப்படுத்துவதே படிமம்". நாம் எளிமையாக யோசித்தால் இது மிகவும் நுணுக்கமானது. ஒரு படிமத்தைக் கண்டதும் நம் மனத்திற்குள் அது சட்டென்று ஒரு புதிய திறப்பைத் தரும். அதற்கு அறிவுசார்ந்தும் உணர்வுசார்ந்தும் பல தளங்களில் அர்த்தங்கள் விரிவடையலாம். அதனை நம்மால் வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது. அந்த அவதிதான் படிமம்.
சங்கப் பாடல்களை மொழிபெயர்த்த ஏ. கே. ராமானுஜன், 'அக நிலக்காட்சி' (Interior Landscapes) என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். 'இன்டீரியர் லேண்ட்ஸ்கேப்' (Interior Landscape) என்பதை நாம் 'அகவெளி நிலக்காட்சிகள்' என்று சொல்லலாம்.
சம்யுக்தா மாயாவின் கவிதைகள் வாசகனிடம் எளிதில் சென்றடைவதற்குக் காரணம், அவர் மரபு சார்ந்த படிமங்களைப் பெருமளவில் கையாண்டிருப்பதுதான் என்று ஜெயமோகன் தன் உரையில் குறிப்பிட்டிருந்தார். 'தீ நின்ற பாதம் எனக்கு' போன்ற வரிகளை அவர் உதாரணமாகக் காட்டினார். இதனை நான் இரு வழிகளில் பார்க்கிறேன். இதில் நேர்மறையான அம்சங்களும் உள்ளன. அதாவது, நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒரு தத்துவமோ அல்லது அது சார்ந்த படிமமோ கவிதையாகவோ அல்லது தொல்தொடராகவோ உருவெடுக்கும் போது, அது ஆழமான உணர்வு நிலைகளையும் காட்சிகளையும் கடத்தும் வல்லமையைப் பெறுகிறது. அதே சமயம், மற்றொரு கோணத்தில் பார்த்தால், அது பழைய நினைவுகளை அறுபடாமல் தக்கவைத்துக் கொள்வதன் மூலம், அந்த நினைவுகளின் எல்லையைத் தாண்டிப் போக முடியாத ஒரு தேக்க நிலையையும் கவிதைக்கு ஏற்படுத்தி விடுகிறது.
கலை அல்லது கவிதையின் அடிப்படைப் பண்புகளில் ஒன்று புதிய சொல்லாட்சிகளும் புத்தம் புதிய படிமங்களும் ஆகும். அந்தப் புதுமைத்தன்மை (Newness) ஒரு சவாலாக அமைகிறது. மரபு சார்ந்த படிமங்களில் சொல்லாட்சியின் வழியாகப் புதுமையை உருவாக்க முடியும் என்றாலும், அதே படிமம் திரும்பத் திரும்ப வரும்போது தேக்கம் நேர்கிறது. உதாரணமாக,
கோடையில் உச்சியில்
சூரிய கிரணங்களில்
தகித்துக் கொதித்து
விழித்திருக்கும் அதுவே
ஒற்றைக் கரும் பனை மர உச்சியில்
குலை குலையாய்
காய்த்திருக்கும் நுங்குகளில்
குளிர் கண்களில்
வெண்ணிற இமைகள் மூடி
துயில் கொள்கிறது
என்ற என் கவிதை வரிகளில் ஒரு புதிய படிமம் வெளிப்படுகிறது. பனைமரத்தின் உச்சியில் உள்ள நுங்குகளின் கண்கள் வெண்ணிற இமைகள் மூடித் துயில் கொள்கின்றன என்ற படிமம், கோடைச் சூரியனின் தகிப்பையும் தாண்டி ஒரு புதிய அழகியலைத் தருகிறது. மரபு சார்ந்த அடையாளங்களைக் கடந்து, தூய தத்துவத்தை மட்டுமே இது கையில் எடுக்கிறது. 'தீ நின்ற பாதம் எனக்கு' என்று சொல்லும்போது அது சைவத் தத்துவ மரபுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது. ஆனால், பனைமரக் கவிதையில் தத்துவம் சொல்லப்படும் விதம் முற்றிலும் புதிய படிமத்தைக் கொண்டிருக்கிறது. மரபு சார்ந்த படிமங்களைக் கையாளாமல், ஒரு தன்னியல்பான விலகலோடு புதிய படிமங்களையும் புதிய தத்துவப் பார்வைகளையும் நோக்கி அது நகர்கிறது.
"ஒரு கவிதை பிறரிடமிருந்து உத்வேகம் (Inspiration) பெறுவது என்பது, அவர்களின் சொற்களை அப்படியே பெயர்த்து எழுதுவது அல்ல" என்று எஸ்ரா பவுண்ட் குறிப்பிடுகிறார். பிறரிடமிருந்து உத்வேகம் பெறுவதில் தவறில்லை, ஆனால் அது அசல் படைப்பாக மாற வேண்டும்.
நாம் ஓவியங்களைப் பார்த்துக் கலந்துரையாடியது நினைவிருக்கிறதா? நவீன கவிதையின் லட்சியம் என்னவென்றால் - அலங்காரங்கள், அணிகள், இசையின் இன்பம், மரபு சார்ந்த படிமங்கள் போன்ற அனைத்தையும் நீக்கிவிட்டு, "கவிதை என்றால் என்ன?" என்ற தூய வடிவத்தைத் தேடுவதும்தான்.
ஆம், நினைவிருக்கிறது. நீங்கள் சொல்வதை ஓவியக் கலையின் வளர்ச்சியுடன் இணை வைத்து பார்க்க முடிகிறது.
ஓவியக் கலையிலும் தொடக்கத்தில் இயற்கையை அப்படியே தத்ரூபமாகப் பிரதிபலிப்பதுதான் கலை (Photographic reproduction of nature) என்று கருதப்பட்டது. பின்னர், குறிப்பிட்ட சட்டத்திற்குள் வண்ணங்களைக் கையாள்வது, மனிதர்களை வெவ்வேறான ஒளி அமைப்புகளில் வரைவது, வரலாற்றுத் தொன்மங்களை வரைவது என அதன் பாடுபொருள் மாறியது. அதன் தொடர்ச்சியாக எளிய மனிதர்களின் வாழ்க்கை ஓவியங்களாக வரையப்பட்டது. அந்த நேரத்தில் கேமராவின் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. இந்தச் சவாலை எதிர்கொள்ள முற்பட்டபோதுதான் 'நவீன ஓவியக் கலை' (Modern Art) உருவானது. அது அரூப ஓவியங்களாகவும் (Abstract art), இன்ஸ்டலேஷன் (Installation art) கலை வடிவங்களாகவும் பரிணமித்தது.
ஒரு கட்டத்தில் கேன்வாஸில் வெறும் வண்ணங்களைத் தீட்டுவதே கலை என்ற நிலையை அது அடைந்தது. அதாவது, பிற கலை வடிவங்களின் சாத்தியங்களை விடுத்து, ஓவியக் கலைக்கே உரித்தான தனித்துவமான சாத்தியத்தை மட்டும் முன்னிறுத்துவது.
இந்த இடத்தில்தான் கவிதையின் தனித்துவமான சாத்தியம் என்ன என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது.
ஆனால், இந்தக் கோட்பாடுகளை நாம் அப்படியே பின்பற்றி எழுத முயலும்போது பல அபத்தங்கள் நிகழ்கின்றன அல்லவா? எஸ்ரா பவுண்ட் சொன்னார் என்பதற்காக நாமும் அப்படியே எழுதிவிட முடியுமா?
அவரே பல இடங்களில் "இவை எதுவும் முற்றுப்புள்ளிகள் அல்ல, விவாதத்திற்குரியவைதான்" என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். நாம் கடந்த அறுபது அல்லது நூறு ஆண்டு கால நவீன கவிதை வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, சில மரபான கூறுகளை நாம் கைவிடாமல் இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.
நாம் இப்போது மரபிலிருந்து வெகுதூரம் கடந்து வந்துவிட்டோம். ஊரை விட்டு, இந்த உலகை விட்டே தூரப் போய்விட்டு, ஒரு மலையின் உச்சியில் நின்று பார்க்கும்போது, "அடடா! நாம் கடந்து வந்த ஊர் எவ்வளவு அழகாக இருக்கிறது" என்று தோன்றுவதைப் போன்றது இது.
நவீன தமிழ்க் கவிதை மரபின் தன்மைகளை உள்வாங்கிக் கொள்ளாமல் (assimilate) செல்லும் போக்கைக் கொண்டுள்ளது. குறிப்பாக, கவிதையின் இசைத்தன்மையை நாம் முற்றாகக் கைவிட்டுவிட்டோம். மேற்கத்திய சமூகத்தின் தனிநபர் சார்ந்த அன்னியமாதல் (Alienation) மற்றும் மனச்சிக்கல்களின் வெளிப்பாடாகவே அங்கு நவீன கலைக் கோட்பாடுகள் உருவாயின. அங்கு உருவான தத்துவம் அரசியல், கலை, பண்பாடு எல்லாமே அந்தச் சிக்கல்களிலிருந்து கிளைத்தவைதான்.
அது அவர்களின் மொழியிலும் கவிதைகளிலும் பிற கலை வடிவங்களிலும் வெளிப்பட்டது. அதில் அவர்களின் அசல் தன்மை இருந்தது. அவர்கள் தங்களின் வேர்களான கிரேக்கம், லத்தீன் மற்றும் பழங்குடிக் கலைகளில் இருந்தும் கூடக் கூறுகளை எடுத்துக் கையாண்டார்கள். அவர்கள் தங்களின் வேர்களிலிருந்து கிளைத்து எழுந்தார்கள். ஆனால், நாம் நம் வேர்களிலிருந்து துண்டிக்கப்பட்டு அந்தரத்தில் தொங்குவதைப் போன்ற நிலையில் இருக்கிறோம். 1960 மற்றும் 70-களில் நவீன தமிழ் இலக்கியத்தின் தொடக்கக் காலத்தில் ஏன் இந்த இருத்தலியல் இருள் அலை (existential darkness) இவ்வளவு பெரிதாக உருவானது?
அதைப்பற்றி நீங்கள் நிறைய வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நீலியின் தேடல் அதை ஒட்டியது இல்லயா?
ஆம், நம் நவீன தமிழ் இலக்கியத்தின் தொடக்கமே அப்படித்தான் அமைந்தது. என் அவதானிப்பு என்னவென்றால், க.நா.சுப்பிரமணியம் போன்ற தொடக்க கால நவீனத்துவவாதிகள் மேற்கத்தியப் படைப்பாளிகள் தங்களின் பழங்காலக் கிரேக்கம் மற்றும் பேகன் (Pagan) மரபுகளை நோக்கிச் சென்றது போல, தமிழின் இதிகாசங்களையும் புராணங்களையும் நவீன இலக்கியத்திற்குள் கொண்டுவர முயன்றனர். இது கேரள இலக்கியத்தில் மிகச் சரியாக நிகழ்ந்தது. அவர்கள் ராமாயணம் போன்ற இதிகாசங்களை முற்றிலும் வேறுபட்ட கோணங்களில் அணுகினார்கள். புதுமைப்பித்தன் கூட 'அகல்யை' போன்ற கதைகளின் மூலம் இதைச் செய்திருக்கிறார். ஆனால், மேற்கத்திய நவீனத்துவத்தின் கச்சிதத் தன்மைக்கும் நம்மிடம் இருக்கும் கட்டற்ற தன்மைக்கும் இடையே ஒரு பொருந்தாமை (mismatch) இருந்தது. இதனால் அவர்களால் அதை முழுமையாகச் சாதிக்க முடியாமல் போனது. 1990-களுக்குப் பிறகு ஜெயமோகன், கோணங்கி போன்றோரின் வருகைக்குப் பிறகே இது சாத்தியமானது.
ஓ
ஆனால், நவீனத்துவ காலகட்டத்தில் மொழியின் இயல்பான வீச்சு பெரிதாகக் காணப்படுவதில்லை. ஏனெனில் அதன் உரைநடை அமைப்பு என்பது பெரும்பாலும் ஆங்கில மொழியின் உரைநடைச் செல்வாக்கிலிருந்து உருவானதுதான்.
ஆமாம், ஆங்கில உரைநடை மற்றும் வசன கவிதையின் (Prose poetry) செல்வாக்கு இங்கு அதிகமாக இருக்கிறது. அதனால்தான் கவிதையில் அணிகள் தேவையா இல்லையா என்ற விவாதம் எழுகிறது. அணிகள் இல்லாமல் எழுதுவது எப்படி என்ற கேள்வியைப் பற்றி ஜெயமோகன் தொடர்ந்து பேசி வருகிறார். அன்று (குமரகுருபரன் விழா) கவி யாகோப்பிடம் அவர் எழுப்பிய கேள்வியும் இதுவேதான். கவிதை இசைத்தன்மையோடு இருக்க வேண்டுமா வேண்டாமா, இசைத்தன்மையின் சாதக பாதகங்கள் என்ன என்பது பற்றிய கேள்விகளை அவர் யாகோபிடம் எழுப்பினார். உதாரணமாக, பாரதியாரின்:
"தேடிச் சோறு நிதந்தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" என்ற பாடலில் ஒரு பிரவாகமான இசைத்தன்மை இருக்கிறது அல்லவா?
எதுகை மோனைத் தன்மையோடு சொற்கள் இணைந்து தரும் இந்த இசைத்தன்மையை நாம் மிக எளிதாகப் பாடிவிட முடியும். ஆனால், ஒரு நவீன கவிதையை நாம் அப்படிப் பாடிவிடவோ அல்லது வரையறுத்துவிடவோ முடியாது.
அதை ஒரு எல்லைக்குள் சுருக்கிட முடியாது. வாசகனுக்கு வாசகன் அதன் வாசிப்பு மாறுபடும். ஆனால், இதற்கு முற்றிலும் வேறாக வள்ளலாரின் திருவருட்பா வரிகளைப் பாருங்கள்:
"பொங்குபல சமயமெனும் நதிகளெல்லாம்
புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரை காணாத கடலே எங்கும்
கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர் தங்க
நிழல் பரப்பி
மயல் சோடையெல்லாம்
தணிக்கின்ற தருவே பூந் தடமே
ஞானச்செங்குமுதம் மலரவரும் மதியே எல்லாம் செய்யவல்ல கடவுளே
தேவ தேவே"
இதிலும் ஒரு அற்புதமான இசைத்தன்மை அமைந்திருக்கிறது அல்லவா?
ஆம், ஆனால் இத்தகைய இசைத்தன்மையும் பாடல் தரும் லிரிக்கல் அழகும் (lyrical beauty) கவித்துவத் தருணத்தில் இயல்பாக நிகழும் ஸ்பாண்டேனியஸ் (spontaneous) வெளிப்பாட்டின் மூலமே சாத்தியமாகும். இதை நாம் திட்டமிட்டு யோசித்து எழுத முடியாது. அதற்கு மொழியின் மீது ஆழமான பாண்டித்தியமும் இசை குறித்த நுட்பமான அறிவும் உள்மனதில் பதிந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
இசை குறித்த அறிவோ அல்லது பாண்டித்தியமோ வெளிப்படையாகத் தெரிய வேண்டியதில்லை. அது படைப்பாளியின் மனதிற்குள் இயல்பாக ஊறியிருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
உதாரணமாக, நவீன கவிஞரான குமரகுருபரனிடம் ஒரு நேர்காணலில், "உங்கள் கவிதைகளில் இத்தனை இயல்பாக இசைத்தன்மை எவ்வாறு கூடி வருகிறது?" என்று கேட்கப்பட்டபோது, அவர் தனக்கு இசைக் கோவைகளை உருவாக்குவது (DJ-ing) மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டார். அதில் ஒரு உண்மை இருக்கிறது.
சிறுவயது முதலே தமிழ்சினிமா பாடல்களை கேட்டு வளர்ந்தேன். வீட்டில் உயர்தரமான ஃபிலிப்ஸ் ரேடியோ, லவுட் ஸ்பீக்கர்ஸுடன் இருந்தது. ஒரு பெட்டி நிறைய ஆடொயோ கேசட்டுகள் வீட்டில் இருந்தது.
மாலைகளில் இரவுகளில் என் வீட்டு வாசல் மாடியில் இருந்த ஸ்பீக்கரில் பாடல்கள் மெலிதாய் ஒலித்து கொண்டிருக்கும். இயல்பிலேயே அந்த மெல்லிசைக்கு என் செவிகள் பழகியிருந்தது.
ர: ஆன்மாவின் உச்சபட்ச களிப்புநிலை என்று எதை நினைக்கிறீர்கள்?
வேணு வேட்ராயன்: மனிதமனம் அடையக்கூடிய உச்சபட்சமான களிப்பு நிலை (megalomaniac pleasure of creation) பற்றி ஒரு வாட்ஸாப் குழுவில் சிறு உரையாடல் நடந்தது. அதில் பார்கவி தான் முதலில் Edmund Bergler-ன் Megalomaniac pleasure of creation பற்றி சொன்னார். அது பற்றி முன்னர் நான் கேள்விபட்டதில்ல.
நான் அதற்கு மறுப்புரைத்தேன். உச்சபட்ச களிப்பு நிலை (Highest bliss) என்பது தான் அழிதல் (self annihilation) தான் என்றேன். களிப்பு என்பதை விட அதீத அல்லது உச்சபட்ச சாத்தியமான உணர்வு நிலை எனலாம். படைப்பூக்க மனநிலையில் அடையக்கூடிய ஆனந்தம், களிப்பு என்பது தானழியும் நிலையில் நிகழும்ஆனந்தத்தைவிட பல மடங்கு குறைவு. படைப்பூக்க மனநிலையிலும் தானழிதல் நிகழும். ஆனால் உண்மையான தானழிதல் நிலை அதை விட பலமடங்கு அதீதமானது.
தான் அழிதல் என்பது படைப்புக்கு அப்பாற்பட்ட அனைத்து எல்லைகளையும் கடந்து, தன்னை முழுமையாக இழக்கும் நிலை. எனவே, படைப்பூக்கத்தின் பேரானந்தம் என்பது 'தான் அழிதலின்' பேரானந்தத்திற்குப் பின்னால் வெகுதொலைவில்தான் வருகிறது.
The bliss of Self annihilation is profound exponential boundless
The bliss of creation comes a far distant second
என் அனுபவத்திலிருந்து இதைச் சொன்னேன். இந்த அனுபவமும் ஒரு மாயையாக இருக்கலாம். ஆனா அந்த மாயை அந்த மனத்துக்கு உண்மை நிலை. ஆனால், மனம் அந்த குறிப்பிட்ட அகச்செயல்முறையைப் புரிந்துகொள்ளத் தொடங்கும்போது, அந்த மாயையிலிருந்து அது விடுபடுகிறது. அதுவே தன்மயக்கத்திலிருந்து வெளியேறுவதற்கான வழியைக் கண்டடைய உதவுகிறது.
இது மிகவும் அகவயமான (Subjective) விஷயம். இதனால்தான் உண்மை (Truth), யதார்த்தம் (Actuality), மெய்மை (Reality) ஆகியவற்றிற்கு இடையிலான உறவு என்ன என்ற இயல்பான தத்துவக் கேள்விகள் எழுகின்றன. இது குறித்து இயற்பியலாளர் டேவிட் போமும் (David Bohm) தத்துவஞானி ஜே. கிருஷ்ணமூர்த்தியும் பல மணிநேரம் உரையாடியிருக்கிறார்கள்.
கவிஞர் ஆனந்தின் கவிதைகள் குறித்த உங்கள் உரையில் கவிதையில் செயல்படும் நனவு மனம், நனவிலி மனம் குறித்து உரையாடினீர்கள். அதையும் இதனுடன் இணைத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
அவருடைய சொற்களில் சொல்வதென்றால், இது "அக வளர்ச்சியின் முறைப்பாடு". நனவு மனத்திற்கும் நனவிலிக்கும் (Conscious and Unconscious) இடையில் இப்போது மூடி வைக்கப்பட்டிருக்கும் கதவு திறப்பதிலிருந்துதான் இது தொடங்குகிறது. இது எல்லோருக்கும் நிகழ்வதில்லை. யாருக்கு எப்போது நிகழும் என்பதற்கான விதியையும் எவரும் முன்கூட்டி வரையறுக்க முடியாது. ஆனால், ஒருமுறை அந்த கதவு திறந்துவிட்டால், அதை மீண்டும் மூடுவது சாத்தியமில்லை.
ஆனந்த் இதை நனவு-நனவிலி என்ற மன இயக்கத்தின் பின்னணியில், உளவியல் ரீதியாக அணுகுகிறார். ஆனால் நான் இதை மனம் கடந்த நிலையாகப் பார்க்கிறேன். நாம் நனவிலிக்கு அப்பாற்பட்டுச் செல்ல வேண்டும். நனவிலி என்பது கடந்த காலத்தின் ஒட்டுமொத்தப் பொதி. காலம் எவ்வாறு கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற தோற்றமயக்கத் தொடர்ச்சியாக இருக்கிறதோ, அதேபோல நனவு, நனவிலி, அடிமனம் (Subconscious) எல்லாமே ஒரு தொடர்ச்சிதான். காலம் நம் மனதைக் கட்டமைத்திருக்கிறது.
அவர் குறிப்பிடும் அந்தப் பொழுது திறக்கும் கணம் என்பது, அறிந்தவற்றிலிருந்து அறிய முடியாத நிலைக்கு நாம் கடந்து செல்வதாகும். அது அறிவு கடந்த நிலை. இதுவே எனக்கும் ஆனந்துக்கும் உள்ள பொதுவான தத்துவப் பின்னணியாகப் பார்க்கிறேன். காலத்தையும், வெளியையும் எவ்வாறு புரிந்துகொள்கிறோம்? "திக்கற்று முடிவிலியில் சஞ்சரிக்கும் கணம்" என்பதுதான் இங்கு முக்கியமானது. நாம் புறவயமான காலத்தை (Chronological time) அன்றாட வாழ்வின் வழியே அணுகுகிறோம். அகவயமான காலத்தை (Psychological time) நாம் எவ்வாறு பார்க்கிறோம்?
நான் எழுதிய ஒரு கவிதை வரி நினைவுக்கு வருகிறது:
நிச்சயமற்ற
அந்தியில் வைகறையில்
உலவுகிறேன்.
நிச்சயமான
நண்பகலில் நடுநிசியில்
நான் ஒளிந்துகொள்கிறேன்
ஆனந்தும் தன் கவிதை ஒன்றில் இதே போன்றதொரு பொருளில் எழுதியிருக்கிறார். அவர் நண்பகலையும் நடுநிசியையும் செங்குத்தாகவும் (Vertical), அந்தியையும் வைகறையையும் கிடைமட்டமாகவும் (Horizontal) ஒரு வரைபடம் போலக் காண்கிறார். அகவயமான பார்வையில், அந்தியும் வைகறையும் என்பவை கனவுக்கும் நனவுக்கும், நனவுக்கும் நனவிலிக்கும், அல்லது தான் அழிதலுக்கும் இடைப்பட்ட ஒரு மெல்லிய எல்லைக் கோடு.
அதை பகல் என்றும் சொல்ல முடியாது, இரவு என்றும் சொல்ல முடியாது. அந்த நிச்சயமற்ற தன்மையிலிருந்துதான் அனைத்தும் பிறக்கின்றன. அது ஒரு மாற்றுப் பரிமாணம். அகம் இந்த மாற்றுப் பரிமாணத்தை எதிர்கொள்ளும்போது, புற உலகைக் காணும் பார்வையில் ஒரு தவிர்க்க முடியாத, மீளமுடியாத மாற்றம் (Irreversible transformation) நிகழ்கிறது.
இத்தகைய அனுபவத்தை அடைந்த ஒரு புதிய மனம், புற உலகை எதிர்கொள்ளும்போது அங்கு ஒரு புதியஒளி வீசுகிறது. அது புற உலகம் மட்டுமல்ல, அக உலகமும்தான். புற உலகம் அகத்திலும், அக உலகம் புறத்திலும் மாறி மாறிப் பிரதிபலிக்கிறது. அகம் மிக வேகமாகத் தன்னை மறுஒழுங்கு செய்துகொள்கிறது (Re-arranges itself). அதுவரை அடைந்த குழப்பங்களையும் நிச்சயமற்ற தன்மைகளையும் ஒரு கணத்தில் ஒழுங்குக்குக் கொண்டு வருகிறது.
ஆனந்த் நனவு-நனவிலிக்கு இடையிலான 'கதவு' என்கிறார். நான் அதை 'நுழைவாயில்' என்கிறேன்.
அலகில் அலகு பொருத்தி
அலைகளில் ஆடும் தன்னை
அருந்திச் செல்லும் கணம் அது
ஆனால், தத்துவமாகவும் உளவியலாகவும் மிக முக்கியமான இந்த நிகழ்வு, கவிதையாக வரும்போது மொழியில் செயல்பட வேண்டும். தத்துவம் கவிதையாகுமா, அல்லது தத்துவத்திற்கும் கவிதைக்கும் உள்ள உறவு என்ன என்ற கேள்வி இங்குதான் எழுகிறது. தத்துவம் கவித்துவமான மொழியைக் கையாளலாம், ஆனால் அது கவிதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எனக்கு இந்த இடத்தில் வெறும் கவிதை முக்கியமல்ல. தத்துவத்தில் இருக்கும் கவித்துவமும், அந்த கவித்துவத்தில் இருக்கும் சத்தியமும்தான் முக்கியம். சத்தியம் தன் இயல்பிலேயே கவித்துவமானது. அறிவைக் காட்டிலும் சத்தியமே மேலானது.
கவிதையின் உச்சம் என்பது சமநிலை தானா?
மனம் அடைந்த ஒரு அனுபவத்தை மீண்டும் மீண்டும் நினைவில் மீட்டிக்கொண்டே இருக்கும்போது, அதுவே புதிய தரிசனங்களுக்குத் தடையாக மாறிவிடுகிறது. அதனால்தான் அந்த அடையாளங்களையும் நினைவுகளையும் உடனே உதறிவிட வேண்டியிருக்கிறது. 'Freedom from the known' (அறிந்தவற்றிலிருந்து விடுதலை) என்று ஜே. கிருஷ்ணமூர்த்தி கூறுவது இதைத்தான்.
ஒரு கட்டத்தில் நாம் அகம் மற்றும் புறத்தின் ஒருமைப்பாட்டை உணர்ந்து, சமநிலையை அடைகிறோம். அது நம் இயல்பான வாழ்க்கையாகவே மாறிவிடுகிறது. "அலகில் அலகு பொருத்தி..." என்ற தத்துவார்த்தமான வரியை, நான் எனது மற்றொரு கவிதையில் எளிய பேச்சு மொழியில் எழுதியிருக்கிறேன்: "என்னை அணைத்து நீ சென்றபின் அங்கு நானும் இல்லை." இரண்டும் ஒரே பொருள்தானே? ஆனால், ஒன்று தீவிரமான கவிதை மொழியிலும், மற்றொன்று எளிய பேச்சு மொழியிலும் அமைந்துள்ளது. இந்தத் தன்னை அறிதலின் மூலமாகத்தான் நாம் சமநிலையை அடைகிறோம்.
வேணு வேட்ராயன்: (சிரிக்கிறார்…) எனக்கும் கூட அப்படியொரு எண்ணம் உண்டு. நான் ஒரு ரொம்ப பழைய ஆள்னு. சின்ன வயசில் இருந்தே நான் வயதுக்கு மீறிய பொறுப்புடன் இருந்திருக்கிறேன்.
கவிஞர் மோகனரங்கன் மொழிபெயர்ப்பு வழியா சமீபத்தில் படிச்ச கவிதை ஒன்னு இப்ப நினைவுக்கு வருது… Humberto Akʼabal எழுதியது.
Poets are born old:
as the years pass
we make ourselves into children.
***
வேணு வேட்ராயன் தமிழ் விக்கி பக்கம்
நீர்வழிப் படூஉம் நிலா தொகுப்பு வாங்க
***



Comments
Post a Comment