கம்பருக்குப் பின் - க. நா. சுப்ரமண்யம்



['சரஸ்வதி’ இதழின் புத்தக விமர்சனப் பகுதியில் கு. அழகிரிசாமியின் மூன்று நூல்களை முன்வைத்து எழுதிய கட்டுரை. இம்மூன்று நூல்களும் பழ. அதியமான் பதிப்பித்துள்ள ‘கு. அழகிரிசாமி கட்டுரைகள்’ (காலச்சுவடு, டிச. 2023) தொகுதி 2-ல் உள்ளன.]

*

(1) இலக்கியத் தேன் (2) இலக்கிய அமுதம் (3) இலக்கிய விருந்து எழுதியவர்: கு. அழகிரிசாமி. வெளியிட்டவர்கள்: தமிழ்ப் புத்தகாலயம், சென்னை 5. விலை: ஒவ்வொன்றும் ரூ. 2 : 25.

***

ஆயிரம் வருஷத்துக்கொரு முறைதான் கம்பனைப் போன்றதோர் கவி தோன்ற முடியும் என்று டி.கே.சி. அவர்கள் அடிக்கடி சொல்லுவார்கள். அவர் கணக்குப் பிசகு—ஆயிரம் வருஷத்துக்கொரு முறைகூடக் கம்பனைப் போன்ற ஒரு மஹாகவி ஒரு மொழியில் தோன்றுவதில்லை என்று சொல்ல வேண்டும். உலகத்திலுள்ள மொழிகள் எல்லாவற்றையும் கணக்கெடுத்தாலும்கூட நாலைந்து மஹாகவிகளுக்கு மேல் தேறாது என்பது தெரிகிறது.

ஆனால் கவிதை என்கிற இலக்கியத்துறை மனிதகுலத்தின் ஆரம்ப காலத்திலிருந்து இன்றுவரை தொடர்பறாத சங்கிலியாக இருந்து வந்திருக்கிறது. எல்லா மொழிகளுக்குமே உள்ள ஒரு இலக்கியப் பெருமைதான் இது. இந்தக் கவிதை எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்கும்போது மஹாகவி என்று ஒருவன் தோன்றுவது எப்பவோ ஏதோ புண்ணியவசத்தால் நேருகிறகாரியம் என்றும், நல்ல கவிகள் என்று சொல்லக்கூடியவர்கள் எல்லா மொழி இலக்கியங்களிலுமே நூற்றுக்கணக்கானவர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் தெரியவருகிறது. இந்த நூற்றுக்கணக்கான கவிகளிலே தரங்கண்டு அனுபவிக்க அந்தந்த மொழிகளில் விமர்சகர்கள் அவ்வப்போது முயற்சிகள் செய்து வந்திருக்கிறார்கள்.

தமிழர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று அடிக்கடி டி.கே.சி. அவர்கள் சொல்லுவார்கள். தமிழ்க் கவிதை கம்பன் என்கிற மஹாகவியைப் படைத்திருந்தது மட்டுமின்றி நல்ல கவிகளையும் ஏராளமாகப் படைத்து வளம்பெற்று வந்திருக்கிறது. ரகம் ரகமான சோதனைகளை நடத்திப் பலதரப்பட்ட கவிகள் நமக்குக் கவிதை மரபு என்று ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார்கள். ஆனால் இந்த அதிர்ஷ்டத்திலும் ஒரு இழுக்கு இல்லாமல் இல்லை. சமீப காலத்தில், அதாவது ஒரு நூறு இருநூறு அல்லது முந்நூறு வருஷங்களாக கவிதை என்கிற அடிப்படை தேய்ந்து, மொழி, இனம், பாண்டித்தியம், புலமை என்கிற ஆதாரங்களையெல்லாம் வைத்துக் கவிதையைக் குப்பை மூடிவிட்டது. பண்டிதர்களும் புளியங்குடிப் புலவர்களும் சேர்ந்துகொண்டு நல்ல கவிதையை ஆழக்குழி வெட்டி மூட வெகுவாகப் பாடுபட்டிருக்கிறார்கள். “மெள்ளத் தமிழினிச் சாகும்” என்று கும்மாளமிட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்க் கவிதை அவர்களையெல்லாம் ஏமாற்றிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தமிழைப் பண்டிதர்களிடமிருந்தும் புளியங்குடியார்களிடமிருந்தும் காப்பாற்ற ஒரு பாரதியாரும் ஒரு டி.கே.சி.யும் தோன்றினார்கள் என்று சொல்லலாம். தமிழ்க் கவிதையை, டி.கே.சி. பாஷையில் இனங்கண்டுகொள்வது, இப்போது ஓரளவிற்குச் சாத்தியமாக இருக்கிறது.

நண்பர் கு. அழகிரிசாமியின் இலக்கியக் கட்டுரைகளைப் பற்றி விமர்சனம் எழுதுகிறபோது காலஞ்சென்ற டி.கே.சி. அவர்களை இரண்டு மூன்று இடங்களில் பெயர் சொல்லிச் சுட்டியதற்குக் காரணம் உண்டு. அழகிரிசாமி தன்னுடைய கவிதை விமர்சனத்தில் ஓரளவுக்கு டி.கே.சி.யின் பாணியைப் பின்பற்றுகிறார். கவிதைக்கு முக்கியத்துவம் தந்து, அதை ஒட்டி விமரிசிக்கிறார், விளக்குகிறார். இன்று தமிழ்நாட்டில் வழக்கிலுள்ளது போல, என்னைப் பார், என் கெட்டிக்காரத்தனத்தைப் பார், எனக்கு எவ்வளவு தெரியும் கேள் என்று மேடைப் பிரசங்கம் செய்வதில் இறங்கி, கவிதையை மென்னியைப் பிடித்துவிடுகிற காரியம் அல்ல அழகிரிசாமி செய்வது. எடுத்துக்கொண்ட கவிதைக்கப்பாலுள்ளதை ஊரெல்லாம் தேடிக் கண்டுபிடித்துக்கொண்டு கொட்டுவதற்குப் பதில், அந்தக் கவிதையை ஆதாரமாக வைத்துக்கொண்டு தமிழ்க் கவிதையின் சிறப்பான தன்மையை விளக்குகிறார்.

உதாரணங்கள் பல இடங்களிலிருந்து எடுத்துச் சொல்லலாம். ஒன்றே ஒன்றேமட்டும் சொல்லுகிறேன். ‘இலக்கியத் தேன்’ என்கிற தொகுப்பில் ‘காக்கத் திருவுளமோ? துயர் காணத் திருவுளமோ?’ என்கிற கட்டுரையில் நந்திக் கலம்பகம் பாட்டு ஒன்றை எடுத்துச் சொல்கிற இடம். கடவுளைப் பற்றிக் காதல் கொண்ட மங்கையைப் பற்றித் திவ்ய கவி பாடியதைச் சொல்லிவிட்டுச் சொல்லுகிறார்: “வேறொரு மங்கை நந்திவர்ம பல்லவன் மீது காதல் கொண்டாள். அவளுடைய மயக்க நிலையில் சந்தனத்தை அவள் உடம்பில் தடவினார்கள். மயக்கம் தெளிந்த பிறகு அவள் இதைப் பற்றிக் கூறுகிறாள்: “‘நெருப்பின் சாற்றைப் பிழிந்து, அதைக் குளிர்ச்சி பொருந்திய சந்தனம் என்று என் உடம்பில் யாரோ தடவினார்கள்.’

செந்தழலின் சாற்றைப்
பிழிந்து, செழுஞ்சீதச்
சந்தனமென்று
ஆரோ தடவினார்.

ஆங்கில மகாகவி மில்டன் திரவ ரூபமான நெருப்பு என்று கூறினார். Liquid Fire என்ற அந்த அழகு மிக்க தொடரை ரசிகர்கள் பாராட்டுவார்கள். அதைவிட அழகாக இருக்கிறது ‘செந்தழலின் சாற்றைப் பிழிந்து’ என்ற தொடர்.

‘நெருப்பின் சாற்றைத் தடவினார்கள் — பசுமையான செழுந்தமிழை ஆராய்ச்சி செய்கின்ற நந்திவர்மனுடைய மார்பைத் தழுவாமல் போகின்ற இந்தப் பாவியின் உடம்பில்.’

செந்தழலின் சாற்றைப்
பிழிந்து, செழுஞ்சீதச்
சந்தனம் என்று
ஆரோ தடவினார்—பைந்தமிழை
ஆய்கின்ற கோன் நந்தி
ஆகந் தழுவாமல்
போகின்ற பாவியேன்
மீது.

பைந்தமிழின் அழகெல்லாம் திரண்டு உருவெடுத்தது போல இருக்கிறது இந்த அற்புதக்கவி. ‘ஆரோ’ என்ற ஒரு சொல்லே போதும், அவளுடைய மயக்க நிலையைத் தெரிவிப்பதற்கு. அப்படி அற்புதமான இடத்தில் அந்தச் சொல் விழுந்திருக்கிறது.”

சாதாரணமாக இந்தமாதிரி ஒரு விஷயம் அகப்பட்டுவிட்டால் விமர்சகர்கள் என்று சொல்லிக்கொள்கிற கதாகாலக்ஷேபக்காரர்கள் நச்சு நச்சு என்று நம் உயிரையே எடுத்துவிடுவார்கள். எந்த அளவில் எழுதினால் போதும், எதற்குமேல் எழுதக் கூடாது என்று தெரிவதைத்தான் விமர்சனக் கலையில் ஒரு பெரிய அம்சமாகப் போற்ற வேண்டும். அழகிரிசாமி அவர்களுக்குச் சொல்ல வேண்டிய விஷயத்தை அதிகமான வார்த்தைகளில் போட்டு நச்சுப் பண்ணாதிருக்கும் கலை கைவந்திருக்கிறது என்பது இந்த மூன்று நூல்களிலும் உள்ள கட்டுரைகளில் தெரிகிறது.

அழகிரிசாமியின் விமர்சன பாணியுடன் இன்னொரு அம்சத்துக்கும் இந்தக் கட்டுரையிலிருந்தே உதாரணம் காட்டலாம் என்று தோன்றுகிறது. விரக தாபத்தை விவரிக்கிற இந்தக் கட்டுரையிலே காலத்தால் வெகுவாக வித்தியாசப்பட்ட நல்ல கவிகள் ஒரு ஆறு பேரை எடுத்துக் கையாண்டு விமர்சனம் செய்திருக்கிறார் அவர். ஆண்டாள், எட்டயபுரம் நாகூர் முத்துப் புலவர், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், நந்திக் கலம்பக ஆசிரியர், முத்தொள்ளாயிர ஆசிரியர், பெயர் தெரியாத ஒருவர் எழுதிய பழம்பாடல் என்று ஆறு பேருடைய கவிதைகளைத் எடுத்துத் தந்திருக்கிறார். இதேமாதிரி அவர் பல கட்டுரைகளிலும் பல இடங்களிலிருந்தும் காலங்களிலிருந்தும் கவிகளைத் தரம் பார்த்து எடுத்துத் தந்திருக்கிறார். சாதாரணமாக எல்லாம் வழக்கில் எடுத்துக் கையாளப்படுபவை என்று சொல்ல முடியாது. சில இடங்களில் தொகுப்பு கவிதை ரீதியில் ஒரே தரத்ததாக இருக்கிறது என்றும் சொல்ல முடியாது. ஆனால் விளக்கம் கவிதை நயத்தை எடுத்துக் காட்டுவதாகப் பெரும்பாலும் அமைந்திருக்கிறது.

அழகிரிசாமி தமிழ்க் கவிதையில் எல்லாக் காலப்பகுதியிலுமிருந்தும் இந்த மூன்று கட்டுரைத் தொகுப்புகளுக்கும் விஷயம் தேடிக் கொணர்ந்திருக்கிறார் என்றாலும் சிறப்பாக கம்பனுக்குப் பிற்காலக் கவிகளைத்தான் அதிகமாகக் கையாண்டிருக்கிறார் என்று சொல்லலாம். வல்லி பரத நாடகம், நொண்டி நாடகம், நாடோடிப் பாடல்கள், சீதக்காதியின் தம்பி, தாயுமானவர் உலாமடல் முதலியன பற்றியும் ஆராய்ச்சிகள் நடத்தியிருக்கிறார். தன் முடிவுகளையும் விவாதத்துக்குரிய விஷயங்களையும் தெளிவுபடுத்திச் சீராகப் பிரித்துச் சொல்லியிருக்கிறார் என்பது ஒரு தனிச் சிறப்பு. சொல் வல்லமையையும் கவிதைத் திறமையையும் ஆங்காங்கே பாகுபடுத்தியும் காட்டிவந்திருக்கிறார். மற்ற கட்டுரைகளுடன் சேராத விதத்தில் சிந்து தேசத்து சூபிக் கவிஞர் ஷா லத்தீப் என்பவர் பற்றியும் ஒரு கட்டுரை சேர்த்திருக்கிறார். அதிலும் மாணிக்கவாசகர் கவி யொன்றை ஷா லத்தீபின் கவி யொன்றோடு ஒப்பிட்டும் பார்த்திருக்கிறார்.

இந்த மூன்று தொகுதிகளிலும் உள்ள நாற்பதுக்கு மேற்பட்ட கட்டுரைகள் தமிழ்க் கவிதை வளத்தை ஒருவாறு அறிந்துகொள்ள இன்றையத் தமிழனுக்கு உதவுகின்றன. கவிதையில் தரம்பார்த்து அனுபவிப்பது என்பது இப்போதுதான் தமிழில் விமர்சன ரீதியாக ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது என்று சொல்ல வேண்டும். அந்தத் தரம் பார்க்கும் முயற்சியிலே அழகிரிசாமி வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொல்லத்தான் வேண்டும். கவிதையைக் கவிதையாக அனுபவிக்க இந்த நூல்கள் பலருக்கும் உபயோகப்படும்.

கடைசியாக அழகிரிசாமியின் நடையைப் பற்றி ஒரு வார்த்தை. விஷயத்தில் குறுக்கிடாமல், அர்த்தக் குழப்பம் விளைவிக்காமல், நேராக நடக்கிற நடை அவருடையது. சொல்ல வந்ததை நேராகச் சொல்கிற நடையுடன் விஷயத்தெளிவும் இருப்பது தமிழ்க் கவிதை பற்றிய சமீப காலத்திய நூல்களில் மிகவும் அருமையாகிக்கொண்டிருப்பது கண்கூடு. அழகிரிசாமியிடம் நேர் நடையும் விஷயத் தெளிவும் இருக்கின்றன.

***

‘சரஸ்வதி’, 10-11-1958

***

க.நா.சு தமிழ் விக்கி பக்கம்

கு. அழகிரிசாமி தமிழ் விக்கி பக்கம்

Comments

தொடர்புக்கு

உங்கள் கவிதைகள், கருத்துகள், கேள்விகள்

உங்கள் கவிதைகளை Word கோப்பாக இணைத்து அனுப்புங்கள். இதழ் குறித்த கருத்துகளையும் கேள்விகளையும் இங்கே எழுதலாம். விரைவில் பதிலளிக்கிறோம்.