ஒளித்து வைக்க முடியாத ரகசியத்தின் மணம் - வி. சங்கர்

Begins in delight and ends in wisdom

Robert Frost, கவிதையை பற்றிய தன் வரியில், wisdom என குறிக்க விரும்புவது குழப்பத்திற்கு எதிரான ஒரு தற்காலிக தெளிவையோ அமைதியையோ மட்டுமே. ஆனந்த் குமாரின் பெரும்பாலான கவிதைகள் ஒரு ஆச்சரியத்தின் கண் கொண்டு தொடங்குகிறது. அதன் பார்வையில் படுவதனைத்தும் மகிழ்ச்சிக்குரியனவாக குதூகலம் நிறைந்து காணப்படுகிறது. கண்டதும் கைப்பற்ற முயலும் ஒரு படக்கருவி போல சில சமயம் அவை பணியாற்றுகின்றன. சில சமயம் கச்சிதமான ஒரு பாதையில் தன் பயணத்தை அமைதியாக நிகழ்த்தி பார்க்கின்றன.

உலகிற்கே புதிதாக வந்த ஒரு தோரணையில், உலகை பார்க்க விழையும் கவிதைகள் என்பதால் அந்த ஆச்சரியத்தின் கண் இல்லாமல் அவை இருக்க முடியாது. திருப்பித் திருப்பி பார்த்தாலும் மீண்டும் புதிதாக திரும்பும் கண் போன்ற உதவியாளன் கவிதைக்கு வேறில்லை. மழை பெய்துகொண்டிருந்த ஊரிலிருந்து மழை பெய்யாத ஊருக்குள் நுழைகிறது ஒரு வாகனம்.

காரின்மேல் குந்தியிருந்து
தனது குட்டிக் கண்களை
உருட்டி உருட்டி
மழை பெய்யாத ஊரை
முதல்முறையாகப்
பார்க்கிறது மழை

(ப்ளம் கேக்)

ஆச்சரியத்தில் விரியும் கண்ணிற்கு, மழை பெய்யாத ஊரைப் பார்க்கும் மழைத்துளியின் வடிவம். எந்த பக்கம் திருப்பினாலும் ஒரு கண்ணாடி போல தான் பார்க்கும் காட்சிகளை அது நமக்கு காட்டி தருகிறது. கண்ணாடி எப்போதும் நாலு முனைகள் கொண்டதாக இருக்க வேண்டியதில்லை. (I am a Mirror, The eye of a little god, four-cornered - Sylvia Plath). கொஞ்சம் மழுங்கலாக திருதிருவென்று முழித்துக் கொண்டிருக்கும் கண்ணாடியை கடவுள் நமக்கு வழிகாட்டும் கருவியாக அமைத்திருக்கிறார். அந்த கருவி கொண்டு நாம் திறந்து பார்க்காத பொருட்களே இல்லை நாம் உட்பட.

மர்மம் தாளாமல்
வழியில் நின்றவன்
ஒருமுறை
லேசாய் திறந்து
பார்த்துக் கொள்கிறான்
தானே மறைத்து வைத்த
ஆச்சரியத்தை

(டிப் டிப் டிப்)

நமக்குத் தெரியாமல் நாமே மறைத்து வைத்திருக்கும் அந்த ஆச்சரியத்தை திறந்து பார்க்க மீண்டுமொரு வாய்ப்பை வழங்க முயல்கின்றன ஆனந்த் குமார் கவிதைகள். திறந்து பார்த்ததுமே தெரிந்துகொள்கிறோம் அதற்கு ஒளித்து வைக்க முடியாத ரகசியத்தின் மணம். குழந்தை அப்படியொரு மணம் கொண்ட ஆச்சரிய வஸ்து அல்லவா?

வைத்துப் பார்த்திருந்து
ஒருநாள் பனிக்குடம் போல்
உடைந்தது அதன் மணம்
நாங்கள் அதை
வெட்டி திறந்தோம்
வீடெல்லாம் தவழ்கிறது
அந்த பலாப்பழம்


(டிப் டிப் டிப்)

மலர்வதற்கு முன் உள்ள மலர், மலரை காட்டிலும் மலர் அல்லவா? காளிதாசனின் சாகுந்தலத்தில் வண்டுகள் மிக மெல்லிய கண்ணாடி போன்ற தம் இறகுகளை காற்றில் இசைத்து மலர்களை திறக்கின்றன. தீரவே தீராத மணம் கொண்ட ஒரு ரகசியத்தை திறக்க முயலும் மென்மை கொண்டவை ஆனந்த் குமாரின் கவிதைகள். எந்தளவு மென்மை என அறிந்து கொள்ள அவர் வரிகளே போதும்.

மலரை தொட
மலருக்கு கொஞ்சம் மேலே
ஒரு மலரை தொடுவதுபோல் தொடு


(ப்ளம் கேக்)

***

மூடித்திறந்த
உனது உள்ளங்கை ஒன்றுமில்லாமல் பார்க்கிறது
எனக்கு
அதன் முன்னால் நிற்க
வெட்கமாயிருக்கிறது.


(ப்ளம் கேக்)


மென்மையாக திறந்திருக்கும் கண், அரிதாக அதன் முன்னால் நிற்கும் காட்சியாகவும் நடிக்கிறது. பார்த்துக் கொண்டிருப்பதன் குதூகலமும், பார்க்கப்படுவதன் பதற்றமும் ஒருங்கே பதிவாகி இருப்பது ஆனந்த் குமாரின் கவிதைகளை வாசிக்கும்போது ஒரு செயலை முழுமையாக செய்யும் அமைதியை வாசகர்களுக்கு அளிக்கிறது. பதிவு செய்யப்படும் தன்னையே பார்க்க வாய்த்திருக்கும் ஒரு படக்கருவி அந்த கண்.

படக்கருவி முன் நின்றவர்
மொத்தமாய் மூடி விட்டார்
தன்னையல்ல
பதிவு செய்யப்படும்
தன்னை பற்றிய
பதட்டம் அவருக்கு
தன்னின் எந்தக கோணம்
மற்றவருக்கு தெரியப்போகிறதென
அவர் குழம்புகிறார்.


(டிப் டிப் டிப்)


- - - 2 - - -

ஒழுக்கவாதி கலைத்து வைக்கும் வீடு

கவிதைக்குள் ஆனந்த் குமார் தொடர்ச்சியாக சென்று தொடும் இடங்களை பின் தொடர்வதன் மூலம் அவர் கவிமனம் உருவாகி வரும் செயல்பாட்டை புரிந்து கொள்ள முடியும். அவருக்கே உரிய ஒரு வீட்டில், அவருக்கும் மட்டுமே நிலுவையிலுள்ள ஓர் உலகில், அவர் வளர்ந்து (அல்லது வயதில் குறைந்து) வருவதன் சித்திரத்தை நாம் டிப் டிப் டிப் தொகுப்பு கொண்டு தோராயமாக வரைந்து விட முடியும்.

ஒழுங்குபடுத்தினேன்
ஒவ்வொரு பொருளையும்
அதனதன் இடத்தில்.

சிறு இடைவெளி போதும்
ஒவ்வொன்றும்
அதனதன் தனிமையில்.

சரியான இடத்தில் அமர்ந்தவுடன்
ஒவ்வொரு பொருளும்
அமைதி கொள்கிறது.


(டிப் டிப் டிப்)

சரியான இடம் என்ற நம்பிக்கையின் மேல் அமர்ந்திருக்கிறது ஒழுங்கு மீதான நம் விருப்பம். ஒவ்வொரு பொருளுக்கும் அதனதன் இடத்தை, அதனதன் தனிமையை அளிக்கும் நோக்கிலிருக்கும் ஆனந்த் குமாரின் கவிமனம் விரைவிலேயே நேர் எதிர்திசையில் ஒரு மாற்றத்தை அடைகிறது.

கலைத்துவைத்த வரிசையிலேயே
தியானத்தில் ஆழ்ந்திருக்கும்
குட்டி பொம்மைகள்
எடை இல்லாத
பந்து ஒன்று
உருண்டு உருண்டு
ஒவ்வொருவரையாய்
சீண்டுகிறது

(டிப் டிப் டிப்)

கலைத்து வைப்பதில் உருவாகும் வரிசையை காண்பதன் வழியாகவே ஆனந்த்குமார் தன் கவிமனத்தை உணர்ந்து கொள்ள தொடங்குகிறார். நகர் நடுவே வேலியிட்டு வைத்திருக்கும் ஏரி மணல் அளையத் தொடங்குகிறது. ஒழுங்கற்ற வரிசையை விளையாடும் குழந்தையை அல்ல, அதன் விளையாட்டை உறங்கச் செய்வதே கடினம். குழந்தை உறங்கும் அறையிலிருந்து கூடத்திற்குள் நுழைந்தால், வேட்டையாடுவதற்காக அந்த புலி அப்படியே காத்திருக்கிறது. தப்பி ஓடுவதற்காக புலியின் பக்கத்திலேயே மானும் காத்திருக்கிறது. உருண்டு உருண்டு ஒவ்வொருவரையாய் சீண்டும் பந்தை கடிந்து கொள்கிறது பாயக் காத்திருக்கும் புலி. உருண்டு கொண்டேயிருக்கும் பந்தை தூக்கத்திலும் விளையாடும் குழந்தை எந்த நேரத்திலும் குழந்தையை மட்டும் காட்டும் கடிகார முள்.

உறங்கும் குழந்தை
கடிகார முள்ளென
படுக்கையைச் சுற்றுகிறான்

கைகள் சின்ன முள்
கால்கள் பெரிய முள்

அம்மாவை எழுப்புகிறது ஒரு முள்
அப்பாவை ஓரமாய் தள்ளுகிறது
ஒரு முள்

…….

குழந்தை காட்டும் நேரம்
மிகச்சரியாக
குழந்தை

(ப்ளம் கேக்)

மீண்டும் ஒரு முறை அளிக்கப்படும் வாய்ப்பென வீட்டில் வளரும் குழந்தையை கண்டு கொள்கிறது ஏற்கனவே வளர்ந்து முடித்த மனம். குழந்தை எப்போது என் குழந்தை என நிலைவிளித்த தந்தை (காணாமல் போயிருந்த) தன் குழந்தையை கையில் எடுத்துக் கொள்கிறார். கையில் வந்து சேர்ந்த இந்த புதிய கண்டுபிடிப்பு அவரையும், அவர் வீட்டையும் என்றென்றைக்குமென மாற்றி விடுகிறது. வீடு குழந்தை வளரும் வீடாகிறது.

பல வருடங்களுக்கு பிறகு
பார்க்க சுருங்கியிருக்கிறது
நான் வளர்ந்த வீடு

(டிப் டிப் டிப்)

அம்மாவின் தலைவலி மருந்தை
இந்த மதியத்தில் யாரோ
திறந்துவிட்டார்கள்

………..

ஒரு சிறிய காற்றுக்கு
மலைமேலென உயர்ந்து விட்டது
என் வீடு

(டிப் டிப் டிப்)

சுருங்கவும், மலை மேலென உயரவும், இரண்டு தண்ணீர் தொட்டிகளின் நடுவில் நீந்தவும் முடிந்த ஆனந்த்குமாரின் வீடு மகிழ்ச்சிக்குரிய ஓர் இடமாக வளர்ந்தபடியே இருக்கிறது. நிலத்தை எடுத்துக் கொண்டதற்கு பிராயசித்தமாக மொட்டை மாடியை வழங்கும் தேவதேவனின் வீட்டைப்போல அதற்கு குற்றவுணர்ச்சி அடைய எந்த தேவையும் இருக்கவில்லை. ஆனந்த்குமாரின் இந்த பிரத்யேக வீட்டின் வரைபடத்தை துல்லியமாக அளிக்கிறது ஒரு கவிதை.

சின்னவன் ஏறிப் பல்தேய்க்க
சிறிய பிளாஸ்டிக் ஸ்டூல் ஒன்று உண்டு
வீட்டில்
சிலசமயம் அது
கட்டிலின் அருகில் கிடக்கும்
கதவின் தாழ்ப்பாளுக்கு
நேர் கீழே சில சமயம்
சில நேரம் கழிப்பறையிலும்
பல நேரங்களில் திறந்து கிடக்கும்
அலமாரியின் அருகிலும்
எப்பொழுதாவது உச்சியில் பூக்கும்
ரோஜச்செடியின் கீழ் அது இருக்கும்
இன்றைக்கது
கண்ணாடி முன் கிடந்தது
நான் அதில் ஏறி
என் உயரத்தை பார்த்தேன்

(டிப் டிப் டிப்)

வீடு சந்தோஷத்தின் வால் முளைத்து வளரும் இடம் ஆகிவிட்டதால், உலகையே கலைத்து வைக்கும் அந்த ஒழுக்கவாதி ஒரு குழந்தை என்ற நம்பிக்கையை குழந்தைக்கு அளிக்கிறது. வீட்டில் அந்த ஸ்டூல் எங்கெல்லாம் கிடக்கிறது என்ற வரிசையை ஒரு புதிர் போட்டி (treasure hunt) போல கவிதை விவரிக்கிறது. அது கிடக்குமிடங்களைக் கொண்டு வீட்டின் அன்றைய அறிக்கையை தயாரித்து விடலாம் என்பது போல. இந்த இடங்களின் வழியாக வளர்ந்து வந்த உயரத்தையா? உயரத்தில் ஏறி நிற்பதால் தெரியும் குழந்தையின் உருவத்தையா? எதை காட்டுகிறது அந்த வீட்டின் கண்ணாடி? எல்லாம் ஒழுங்காக, கச்சிதமாக நடைபெறும் வீட்டில் உயரத்தில் ஏறி நின்று பார்க்குமளவு உண்மையில் ஏதேனும் நடக்கிறதா? அடுக்கி வைத்தவர் இதுவரைக்கும் திறந்து பார்த்திராத அந்த ஞாயிற்றுக்கிழமையின் வண்ணப்பக்கத்தை தங்கள் பரண் மேல் ஏறிப் பார்க்க அந்த சிறிய மர ஸ்டூல் போதுமானது அல்லவா?

ஒழுக்கவாதி

நாளிதழ்களை
அடுக்கி வைக்கிறார்
ஒன்றின் மீது ஒன்றாக
அவர் நாட்களை அடுக்கி வைக்கிறார்.
மூன்று மாதங்கள் சேர்ந்ததும்
கட்டித்தூக்கி மேலே போடுகிறார்
பரணில் கொஞ்சம்
தூசி சேர்கையில்
எடைக்குப் போட மேலே ஏறுகிறார்
ஒவ்வொரு கட்டாய்
கீழே போட்டு
பெருமூச்சுடன் இறங்கியவர் தலையில்
ஆடி ஆடி வீழ்கிறது
போன வருடத்திற்கு இடையிலிருந்து
அவர் திறந்து பார்த்திராத
ஒரு ஞாயிற்றுக்கிழமையின்
வண்ணப்பக்கம்.

(டிப் டிப் டிப்)

***

மீன் போலத்தான் இருந்தேன். கால்கள் முளைக்குமென கனவா கண்டேன்? என்ற வரி நேரடியாக முகுந்த் நாகராஜனை நினைவு படுத்தக் கூடியது. குறுகிய பால்கனியில் முன்னும் பின்னும் நடந்து உதடுகள் முணுமுணுத்த வண்ணம் பாடம் படிக்கும் சிறுமிக்கு ‘மனப்பாட மீன்குட்டி’ என பெயர் போடும் முகுந்த் நாகராஜன், அவள் வயதே ஆன, அவளுடன் படிக்கும் சேக்காளியே தான். இந்த கேலியம்சம் இல்லாததினாலும், தேவதேவனின் தொடர்ச்சியாக செயல்படக் கூடிய கற்பனாவாதம்சம் கொண்ட ஒரு கவி மொழி காரணமாகவும் அவர் முகுந்த் நாகராஜனிலிருந்து விலகி தெரியவும் செய்கிறார்.

உனக்காக மட்டும் நிறைத்து வைத்த பாத்திரத்தில் ஒரு வாய் அல்ல கைவிடவும் அண்டமெல்லாம் பொங்கி வழியுது நீர் என்ற கவிதையின் மொழியும் உணர்வுநிலையும் தேவதேவனுடன் ஒப்பு வைக்கத் தக்கது. ஆனால் ஆன்மீகமான ஊடுபாவுகளை (spiritual complexity) தவிர்க்கும் தன்மையால் ஆனந்த்குமார் தேவதேவனிடமிருந்தும் விலகி நடக்கிறார். தனக்கு முன்பு விதைத்து கொய்தவர் பாகம் வழியாக தன் நிலத்தின் அறுவடைக்கு நடந்து செல்லும் ஒருவரையே நாம் காண்கிறோம்.

உயிரற்ற பொருட்களுக்கும் குழந்தையின் வெகுளித்தன்மையை அளிப்பதனால் (Extended Personification) உண்டாகும் அவருடைய இந்த பிரத்யேக குழந்தையுலகம், தர்க்கங்களை மீறிய மிகை புனைவுத்தன்மை கொண்டது (Romanticisation of Innocence). குழந்தையிடமிருந்து குழந்தைமையை விடுவித்து, பின் அதை உலகாக விரித்தெடுக்க முயலும் கவியுள்ளம் கொண்டது ஆனந்த்குமாரின் குழந்தையுலகம். அழாமல் சமர்த்தாக படுத்திருக்கும் ஏரி நல்ல உதாரணம். ஆனந்த் குமாரின் கவிமொழியும் இத் தன்மைக்கு இசைந்து செல்லும்படி அமைந்திருக்கிறது.

இந்த மிகைபுனைவு அம்சம் காரணவாகவே தமிழ் பெண் கவிஞர்களின் கவிதைகளில் இந்த ‘குழந்தையுலகம்’ இத்தனை ஒளியுடன் வரவதில்லை. மரம் நிறைய பூத்திருந்தும் நீரில் போகும் பூவைக் கேட்டு அடம் பிடிக்கும் குழந்தையை உமா மகேஸ்வரி innocence என்பதற்கான குறியீடாகவே பயன்படுத்தவில்லை. மாறாக அதை (தன் விருப்பங்கள் அனைத்தும் கை நழுவிச் செல்லும்) பெண் உலகிற்கான ஒரு படிமமாகவே கையாள்கிறார். பெண் கவிஞர்களுக்கு (அதாவது பெண் உலகை ஒரு பெண்ணாக நின்று எழுத விழைபவர்களுக்கு) இது போன்ற நெருக்கடிகளை பேச வேண்டிய தேவையே முதன்மையாகப் படுகிறது என நாம் இதைப் புரிந்து கொள்ளலாம்.

- - - 3 - - -

பொய்த்த மழைக்காலம்

அந்த மழை அரை மணி நேரம் மட்டுமே பெய்ததா? என தன் இணையை பார்த்து கேட்கிறாள் கல்பற்றா நாராயணனின் கவிதையில் ஒரு பெண். காதல் பற்றியது (அல்லது ஆண் பெண் உறவு குறித்தது) என உறுதியாக கூற முடிகிற இரண்டு கவிதைகளை எடுத்து நோக்கும் போது ஒருவேளை அந்த மழை ஆனந்த்குமாரின் உலகில் ஒரு இடைவெளி விட்டு மீண்டும் மீண்டும் பெய்கிறதா என கேட்க தோன்றுகிறது.

அணி

அன்றைய நிகழ்வுகள்
முடிந்து வந்தவள்
அணிகளை கலைத்தாள்
இடது கையின்
வளையல்களை தவிர்த்து
மொத்தமாய் வீட்டிற்கு மாறினாள்

அன்றைய நாள் பற்றி
இவன் கேள்விகளுக்கு
அவள் அந்தக் கையால்தான்
பதில் சொன்னாள்
பேசி பேசி உறங்கிப்போனவளின் இடதுகை
இப்போதிவன் மார் மீது கிடக்கிறது.

எழுந்து நிற்கும் வளையல்களை
இவன் மெல்ல
வருடிப் பார்க்கிறான்.

(டிப் டிப் டிப்)

நீ இன்னும் வளையல்கள் அணிகிறாய்

……..

நழுவிவிழும் தோரணையில்
உன் கைநுனிவரை சென்று
துடிக்கவேண்டும் இல்லையா

……..

இந்தத் தேர் செல்லும் திசை
உனக்குத் தெரியுமா

முன்னும் பின்னும்
காலத்தில் ஓடும்
ஓட்டைச்சக்கரங்கள்
அப்படி
எங்குதான் கூட்டிச்செல்கின்றன உன்னை
அதன் மீது நீ
இப்படி அமர்ந்திருப்பதற்கு

(ப்ளம் கேக்)

இந்த இரண்டு கவிதைகளுக்கும் இடையிலான பரிணாமம் இரு கவிதை தொகுப்புகளுக்கு இடையேயான காலத்தில் நிகழ்ந்திருப்பது அப் பரிணாமத்திற்கான நியாயமான இடைவெளியை அளிக்கிறது. பேசி பேசி உறங்கிபோனவளின் வளையல்களை அவன் வருடிப் பார்க்கிறான். எவ்வளவு நேரம் என்று தெரியாத நேரம் அவன் அதை சுழற்றி சுழற்றி எண்ணும் பருவம் போலவே அதன் பிறகு நழுவி விழும் தோரணையில் கை நுனி வரை வந்து துடிக்க வேண்டிய பருவமும் காதலுக்குரியது.

ஆனால் முன்பு அவன் மார் மீது கிடந்த அவளது இடதுகை வளையல் இப்போது ஒரு ஓட்டை சக்கரம். இந்த முறை அப்படி காலத்தில் முன்னும் பின்னும் துடித்து ஓடும் ஓட்டைச்சக்கரங்கள் மேல் அமர்த்திருப்பதன் வெறுமை சற்றே தலை காட்ட ஆரம்பித்து விட்டதா? அதனால் தான் நீ இன்னும் ஏன் வளையல்களை அணிகிறாய் என அவன் கேட்பது போன்ற ஒரு மயக்கம் வாசிப்பவருக்கு தோன்றுகிறதா?

நீண்டகாலம் ஏங்கி நின்ற மாபெரும் கட்டுமானம் ஒரு பருவத்தில், தன் கட்டுப்பாடின்றி இழுத்து செல்லப்படுகிறது. சரியாக கண்ணுக்கு புலப்படாத பல விசைகள். தேர் செல்லும் திசையெல்லாம் நின்ற இடத்திற்கே திரும்பி வருவதற்கு மட்டும் தானே? வந்து சேர்ந்தபின் மீண்டும் நீண்ட ஒரு காத்திருப்பு காலம். அந்த புராதனமான தேரில் பூட்டியிருப்பதென்னவோ ஓட்டை சக்கரம் தானே என்ற சந்தேகம் வலுத்து விட்ட ஒரு பருவமா இது? போனமுறை தருணத்தில் பெய்த பருவ மழை இப்போது பொய்த்து விட்டதா? கேள்விகளை போட்டு நிரப்பும் இடைவெளி எந்த இரு பருவத்தின் இடையில் வருகிறது?

- - - 4 - - -

எளிமையின் கூர்முனை

மறைமுகமாக பேசுவதற்கான ஆர்வமே, வெளிச்சம் குறைவான இடத்தில் கவிதை நின்றுகொள்ளக் காரணம். நிற்குமிடத்தை திட்டவட்டமாக காட்டும் விளக்குகளை விட்டில்கள் மொய்க்கின்றன. தாமே வழிபிடித்து அங்கே வருபவர்களுக்கு அதன் வெளிச்சம் கண்ணைக் கூசுகிறது. வெளிச்சத்திலிருந்து விலகி மறைவான இடம் நோக்கி நடக்க பிடித்தவர்களை கவிதைக்கும் பிடிக்கும். ஆனந்த் குமார் கவிதைகளின் முதன்மையான எல்லை, (குறிப்பாக இரண்டாம் தொகுப்பான ப்ளம் கேக் -ல்) கவிதையின் வடிவமைதியும், உணர்வமைதியும் குலையுமளவுக்கு (கவிதையை விளக்கும்) மிகையான வரிகள் உள்ளன என்பதே. மிக குறைவான சொற்களைக் கொண்டு, நேரடியாக கூறுவதை நவீன கவிதைகளில் நாம் ஏற்றுக் கொண்டு வெகுகாலம் ஆகிறது (Direct treatment of the ‘thing’ & Absolute word economy - A Retrospect, Ezra Pound). இந்த மிகை வரிகளுக்கு அவர் இரண்டாம் தொகுப்பிற்கு தலைப்பாக உள்ள ப்ளம் கேக் என்ற கவிதையே உதாரணம்.

ப்ளம் கேக்

கிருஸ்துமஸுக்கு முந்தைய இரவு
நாங்கள் ஒரு
மலைப்பாறையின் மீதமர்ந்து
பேசிக்கொண்டிருந்தோம்
இந்த பிறந்தநாளை
எப்படி சிறப்பாகக் கொண்டாடலாமென

வானமோ அன்றுபார்த்து
ஒரு ப்ளம் கேக்கைப் போல்
பொங்கி வந்தது
நாங்கள் உற்சாகமானோம்

“அவன் வயது
எண்ணிலடங்காததென” மினுங்கின
அதன்மீது
ஏற்றிவைத்த நட்சத்திரங்கள்

நாங்கள் குழம்பினோம்
இதுவரை
எத்தனை தீபங்கள்
அவன் பொருட்டு ஏற்றப்பட்டனவோ
அத்தனையும் அங்கு இருந்தன

அவனோ
தன்னை நோக்கி ஏற்றிவைத்த தீபமெதையும்
இதுவரை அணையவிட்டதுமில்லை

இருந்தாலும் நாங்கள் குழந்தைகள்
இன்று அவன் பிறந்தநாள்
நாங்கள் சொன்னோம்
“ஏற்றும் ஒவ்வொரு மெழுகுவர்த்திக்கும்
அவனின் ஒரு வயது கூடுகிறது..
ஒவ்வொன்றாய் அணைத்து
நாம் அவன்
வயதைக் குறைப்போம்..”

அப்படி நாங்கள்
இரவெல்லாம் விழித்திருந்து
ஊதி ஊதி தளர்ந்தோம்

ஒருவழியாய்
முடித்தோம் என நினைக்கையில்
ஒரு அறுந்தவால் நட்சத்திரமொன்று
அங்குமிங்கும் ஓடித்திரிந்தது

சரியாக அப்போதே
பாதி அழுந்திய செர்ரிப் பழம்போல்
அவனின் ஒரு விரல் நுனி
மெல்ல எழுந்தது

கண்கள் கூசும்படி
அவன் மீண்டும் தோன்றினான்

நாங்கள் பாடினோம்
“ஹேப்பி.. பர்த்டே.. இயேசுகுட்டி..”

(ப்ளம் கேக்)

இக்கவிதையை படித்து முடிப்பதற்குள் உண்டாகும் அயர்ச்சி, அதன் கச்சிதமற்ற நீண்ட விவரிப்பு காரணமாகவும், ‘நாங்கள் குழம்பினோம்’, ‘நாங்கள் சொன்னோம்’, 'சரியாக அப்போதே’ என்பது போன்ற கவிதைக்கு நேரடியாக பங்களிப்பு ஆற்றாத தட்டை வரிகள் மீண்டும் மீண்டும் வருவதால் இருக்கலாம். கவிதையை செப்பனிடும் போது இது போன்ற வரிகள் நீக்கப் பட்டிருக்க வேண்டும். கவிஞரின் கவித் தன்னிலை (poetic self) பலவீனமாக வெளிப்படும் இடங்களில் அவரின் விமர்சனப் பூர்வமான ரசனை மனம் (critical connoissuer self) கவனத்துடன் கவிதையை தொகுத்து செப்பனிட வேண்டிய தேவை உருவாகிறது.

மலர்
மலர்ந்து
அறிகிறது
தனக்குள்ளிருந்தது வானமென

(ப்ளம் கேக்)

எவ்வளவு
சிக்கலான பாதை
ஆனாலும் வந்துவிட்டேன்
இந்த
எளிய இடத்திற்கு

(ப்ளம் கேக்)

மேலுள்ள இரண்டு சிறிய கவிதைகளிலும் ஏற்கனவே பலரும் அறிந்த கருத்துகள், வெளிப்படும் விதத்திலும் எவ்வித புதுமையும், கவித்துவ எழுச்சியுமின்றி நேரடியாகவே அளிக்கப்பட்டிருக்கிறது. மன எழுச்சி குன்றிய இது போன்ற நேரடி கூற்றுகள் ஆனந்த் குமார் கவிதைகளின் பிறிதொரு எல்லை (limitation).

ஓடும் நீர்
துள்ளிப் பார்த்தது
ஒரு துளி காட்டை

(டிப் டிப் டிப்)

என்ற வரிகள் கண் திறந்துமூடும் முன்பு துளைத்துவிடும் அம்பு போன்ற கவித்துவ வேகம் கொண்டது. ஒரு புகைப்படத் தருணம் போல தனக்குள்ளிருக்கும் ஒரு துளி காட்டை துள்ளிப் பார்க்கும் நீர், காட்டின் சாரத்தை தன்னில் பிரதிபலித்துக் காட்டும் ஒரு துளி என மின்னி மறைகிறது காட்சி. ஆனால் இதை அடுத்து வரும்

சேர்ந்து பின்
செல்லுமிடமெல்லாம்
சல சலவென பேச்சு

என்ற (பல சந்தர்பங்களில் பல விதமாக விரித்தெடுக்க முடியாத) வரிகள் தொடக்கத்தின் கவித்துவ வெற்றியை மீண்டும் மண்ணிற்கு பிடித்து இழுக்கும் எடையாகி விடுகிறது.

ஒரு அறைக்கு எதற்கு
இத்தனை வெளிச்சம்?

(டிப் டிப் டிப்)

என்ற உண்மையான தீவிரம் கொண்ட கேள்வியுடன் ஆரம்பிக்கும் ஒரு கவிதை, ‘யாரும் பருகாமல் வீணாகிறது எங்கெங்கும் வழிந்து’ என அடுத்த வரியிலேயே அதை தவற விடுகிறது.

பல நாட்கள் தாகம் கொண்ட
மிருகமென அவன்
விழித்து விழித்துப் பருகுகிறான்

என்ற ஒரு தேய்வழக்கான உவமையோடு கவிதை முடிகிறது. வழிகாட்ட ஒரு கண் திறந்ததும் தன் பாதையை தவறவிட்ட பரிதவிப்பு மட்டுமாக இது போன்ற கவிதைகள் நின்று விடுகின்றன.

வாழ்க்கை நாடகத்தின் முன் ஒரு புனிதமான அறியாமையுடன் நிற்கும் போது உருவாகும் எளிமை கொண்டு எழுதப்பட்டவை என ஆனந்த் குமாரின் கவிதைகளை வரையறுக்கிறார் ஜெயமோகன் (டிப் டிப் டிப் முன்னுரை). ஆனால் அந்த எளிமை, (அதன் அத்தனை சாதக அம்சங்களுடனும்) மொழிக்கூர்மை மீதான தன் கட்டுப்பாட்டை இழப்பதன் அபாயத்தை எப்போதும் தன்னுள் கொண்டிருக்கிறது. கவித்துவ உட்குறிப்பை (poetic suggestion) உருவாக்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல் கவிதையை மிகையாக விளக்கும் தன்மையும், சுற்றி வளைத்து சொல்லும் மொழியும் அமைந்துவிடும் அபாயம் உண்டு. எளிமையின் கூர்முனை எப்போதும் தீட்டப்பட்ட படியே இருந்தாக வேண்டும்.

பென்சில்

……….

குறுகிக்கறுகி
கூர்மை முடியுமிடம்
குழப்பமானதொரு எல்லை
எப்படியும்
கூர்மைக்கு மேல்
ஒரு புள்ளி
அதில் ஒரு மழுங்கல்
அதன் கருணையால் மட்டுமே
எழுத முடிகிறது
தெளிவாக

(ப்ளம் கேக்)

கவிதையில் கூர்மைக்கு மேல் எழும் மழுங்கலே கருணை என கொள்ளப்படும். அப்படி அல்லாமல் ஏற்படும் மழுங்கல் கவிதையை நேரடியான அர்த்த தளம் மட்டுமே கொண்ட உரைநடையை நோக்கியே கொண்டு செல்லும் (Linguistic bluntness). ஆனால் எப்போதுமே அது குழப்பமானதொரு எல்லை. எளிமையின் அந்த கூர்முனையில் ஸ்திரமாக நிற்பதற்கே கவிதை தன் வாழ்நாளெல்லாம் தவம் செய்கிறது.

- - - 5 - - -

தனக்கிருக்கும் எல்லைகள் அனைத்தையும் மீறி வெளிப்பாடு கொள்ளும் கவிதைகளை மட்டுமே நாம் கவிதைகள் என்கிறோம். அக்கவிதைகளுக்காகவே (காலத்தில் மறைந்து போகும்) வேறு பல கவிதைகள் எழுதப்படுகின்றன. எழுதியவரும், வாசிப்பவரும் அதற்காகவே கவிதையில் நீண்டகாலம் காத்திருக்கின்றனர். எல்லைகளை மீறி வந்த கவிதை வெளிப்பாடுகளில் எல்லாம், தனக்காக மட்டுமே நிறைத்து வைத்த பாத்திரம் என வாசிக்கும் அனைவரையும் உணரச் செய்யும் வல்லமை (எக்காலத்தியும்) உண்டு.

உனக்காக மட்டும்
நிறைத்துவைத்த பாத்திரத்தில்
ஒருவாய் அள்ளக்
கைவிடவும்

அண்டமெல்லாம்
பொங்கிவழியுது
நீர்

நம் மனதில் உட்பொருளையோ, ஒரு மங்கலான எண்ணத்தையோ உருவாக்காமல், அகத்தாளம் கொண்ட மொழியழகையும், இன்னதென அறிந்து கொள்ளமுடியாத ஒரு உணர்வுத்தளத்தை மட்டும் உருவாக்குவதுடன் நின்று கொள்கிறது இக்கவிதை. காதல் அல்லது பக்தி பற்றியதாக வாசிக்க இடமிருந்தாலும் இது compassion எனும் உணர்வுநிலை வரை நம்மை கொண்டு செல்லக் கூடியது. ஒரு பழைய நீதி நூலின் வசனம் போல ஒலிப்பதனால், இவ்வரிகள் எதிர்காலத்திலும் எங்கோ இருந்து கொண்டிருப்பது போன்ற மயக்கத்தை நமக்கு அளிக்கின்றன.

***

அவன் ஒரு புழுவை கொன்றான்

எந்தவித குரூரமோ
எந்தவித கருணையோ இன்றி

ஒரு புழுவை
அவன் நசுக்கிக் கொன்றான்.

அது வெயிலில் கிடந்து தவிப்பதைக் காணச் சகியாமல் அல்ல

தனது உணவிலோ தேகத்திலோ ஊர்ந்ததால் அல்ல

காரணத்தின் மெல்லிய காற்றுபோலும் தீண்டாத

தவறுதலின் சிறிய ஓசை கூட கேட்காத

ஒரு ஏகாந்த தருணத்தில்

சின்னப் புன்னகையோ
சிறுதுளி கண்ணீரோ இன்றி

முழு விழிப்புடன்

மிக நிதாதனமாக

அவன் அந்தப் புழுவைக் கொன்றான்.

- (எந்த தொகுப்பிலும் சேர்க்கப்படாத கவிதை)

அதிகமும் ஒற்றைச்சொல் தலைப்புகளை பயன்படுத்தும் இயல்பு கொண்டு ஆனந்த்குமாரின் ‘அவன் ஒரு புழுவை கொன்றான்’ என்ற இந்த தலைப்பே இக்கவிதையை மேலும் கவிதையாக்குகிறது. கவிதையை வாசித்து முடித்தவுடன் அந்த ஒற்றை வரி மட்டுமே போதுமானது என எண்ண செய்யும் அளவு அந்த கவிதையை, அந்த கவிதையை விடவும் பிரதிநிதித்துவம் செய்கிறது அதன் தலைப்பு. அல்லவென்றும் இல்லையென்றும் இக்கவிதை நீங்கள் கூறும் காரணத்தை, நீங்கள் எண்ணும் உணர்ச்சியை நீக்கம் செய்த பிறகு ஒரு வெளிப்பாட்டின் ஊற்றுகண்ணாக எஞ்சுவது எது என தொட முயல்கிறது. நம் அடிப்படை உணர்ச்சிகளின் பிறப்பிடத்திற்கும் தோற்றுவாய் என ஒன்றிருக்குமானால் அது எந்த அடையாளமுமின்றி கையில் அள்ளிய புத்தம் புதிய நீர் போல மணமும் நிறமுமற்றிருக்கும். வெளிப்பாடுகள் அனைத்தும் தங்கள் தூய நிலையில் பிரித்தறிய முடியாத ஒரே தோற்றம் கொண்டவை. அதன் படைப்பு வல்லமை (அழிக்கும் வல்லமையும்) கருதியே நாம் அதை புனிதமான நீர் என வணங்குகிறோம்.

எரிந்து பரவத் தொடங்குமிடம் போலவே கயிற்றின் மறுமுனையில் அனைத்தும் குளிரத்துவங்குமிடத்தை தேடி செல்கிறது வழி என்னும் பிறிதொரு கவிதை. வரிக்கு ஒன்றிரண்டு சொற்கள் என ஒடித்து வைக்கப்பட்டிருக்கும் அதன் வடிவத்தை நான் என் சுதந்திரத்திற்கு நீண்ட சொற்றொடர்களாக மாற்றிக் கொள்கிறேன். இந்த மாற்றம் மடித்து மடித்து வைக்கப்பட்டிருந்த அதன் ஒழுக்கை நீவி சரி செய்கிறது. இறுதி சடங்கு நடக்கும் இந்த வீடு இயல்பாக நாம் காணும் ஆனந்த் குமாரின் உலகில் இல்லை. ஆனால் அதை கண்பதற்காக அவர் அறியாத ஊருக்கு கிளம்பி செல்கிறார்.

வழி

அறிந்திருந்த ஒருவரின் இறுதிச்சடங்கிற்கு அறியாத ஊருக்கு கிளம்பிச்சென்றேன்.

நான் வந்திறங்கியபோது உடல் கிளம்பிவிட்டதைச் சொன்னது
பாதை மறித்துக்கிடந்த மலர்கள்

சுடுகாட்டிற்கு எப்படி வழி கேட்பதெனத் தயங்கி
ஒளிரும் மஞ்சள் பூக்களை பின்தொடர்ந்தேன்

நடுவேயொரு கோவிலின் வாசலுக்கு மட்டும்
இடைவெளி விட்டு
தொடர்ந்தது பூக்களின் வழித்தடம்

குறுகிய தெருக்களுள் சென்ற பூக்களின் வண்ணம் மாறிற்று
இப்போது அரளி இதழ்கள் என்னை அழைத்துச் சென்றன

அமைதி தவழும் ஒரு தோட்டத்துள் இறங்கிச் சென்றது பூவிரிப்பு

அதன் ஒழுக்கில் இறங்கி (திரும்பி) கண்டேன்
எரிந்தணைந்து நீர்தெளித்து குளிரத்துவங்கியிருந்த அவர் வீட்டை.

நேரடியான கூற்று போல எவ்வித மிகையில்லாமல் எழுதப்பட்ட கவிதை இது. இறுதியில் இந்த பாதை சென்று முடியுமிடம் அல்ல இக்கவிதையின் இலக்கு. அறியாத ஒருவரின் இறுதி பற்றிய ஆர்வம் அல்ல (இறுதி வரைக்கும் யாரும் தன்னைப் பற்றி முழுதாக அறிந்திருப்பதில்லை) இக்கவிதையின் மையம். சுடுகாட்டிற்கு வழி தெரியாதவன் மலர்களைத் தொடர்ந்து சென்றால் அவை வீட்டை காண்பிக்கின்றன. ஆனால் அதுவும் கூட கவிதை முதன்மைப்படுத்த விரும்பும் நெருக்கடி அல்ல. துவங்க வேண்டிய தருணத்தை ஒரு பாதையின் நடுவிலிருந்து அமைத்ததினால், முழுமையான ஒரு அறியாமையின் முன் நிற்பதிலிருந்து தொடங்குவதால் இந்த கவிதை தன்னை நிகழ்த்துகிறது. பாதையை மறித்து கிடக்கும் மலர்களை நம்பி அதில் நடப்பவன் அடைவது எந்த வீட்டை? இரு பக்கமும் எதிரெதிராய் விரிந்து கிடக்கும் மலர்களில் ஒருவன் தேர்தெடுக்க வேண்டியது எந்த மலர்? அதிர்ஷ்டவசமாக அதிலொரு மலர் கற்சிலையின் காலடி வரை வந்து விடுகிறது.

கற்சிலையின்
காலடி வரை
வந்து விட்டது
ஒரு மலர்

மலரெனும் தகுதி கொண்டு
ஒளிரெழில் வடிவம் கொண்டு
நறுமண குரலைக் கொண்டு
மோதிற்று கதவை
சிலையோ
கேளாதது

மனமற்ற ஒன்றுள்
நுழைய
மலர் என்ன செய்தது?

அது
உதிர்ந்தது
இன்னும் ஒரு முறை

இப்போது
மனமற்றதுள் நுழைகிறது
மலரற்றது

ஒன்றிணைத்தலுக்கான ஓர் ஏக்கம் இக்கவிதையில் உண்டு. ஏக்கத்தை கொண்டு கேளாத எந்த கதவின் இணைவை சாதிக்க முயல்கிறது இக்கவிதை? உலகற்றது உலகற்றதினோடு இணைவதற்கான உலகின் ஏக்கமா இது?

இதுவரை ஒவ்வொன்றையும் ஆச்சரியத்துடன் திறந்து பார்த்த கண் இறுதியாக இக்கவிதையில் தன் இமைகள் தாழும் தியானத்தில் நிறைவு கொள்கிறது. கண்ணை உதிர்த்த பிறகு, கண்ணற்றதுள் நுழைகிறது கண். அங்கே மனமற்றதும், மலரற்றதும் இல்லை. ஒன்றிணைவதற்கான ஏக்கமும் இல்லை. அங்கிருப்பது எப்போது திறந்து பார்த்தாலும் அமைதி நிறைந்திருக்கும் ஒரு ரகசியம் மாத்திரமே. ஏனெனில் அது இருக்குமிடத்தில் காண அந்த கண்ணற்றதும் கூட இல்லை.

(‘டிப் டிப் டிப்’, ‘ப்ளம் கேக்’ ஆகிய இரு தொகுப்புகள் வரையுள்ள ஆனந்த் குமாரின் கவியுலகு குறித்து எழுதப்பட்ட கட்டுரை)

***

ஆனந்த் குமார் தமிழ் விக்கி பக்கம்

வி. சங்கர் தமிழ் விக்கி பக்கம்

***

***

Comments

தொடர்புக்கு

உங்கள் கவிதைகள், கருத்துகள், கேள்விகள்

உங்கள் கவிதைகளை Word கோப்பாக இணைத்து அனுப்புங்கள். இதழ் குறித்த கருத்துகளையும் கேள்விகளையும் இங்கே எழுதலாம். விரைவில் பதிலளிக்கிறோம்.