கேள்வியும் பதிலும் - சஹானா சாவித்திரி

'கண் அறியாக் காற்று' கவிதைத் தொகுப்பின் வழியாக நவீன கவிதைப் பரப்பில் அறியப்பட்ட கவிஞர் சஹானா சாவித்திரி 'அஞ்சனக் கண்ணி', 'ரியா என்கிற பூனை என்கிற சூரியன்' ஆகிய அடுத்தடுத்த தொகுப்புகளின் வழியாகவும் கவனம் பெற்றார். நாகர்கோவில் வில்லுக்குறியில் வசிக்கும் சஹானா கல்லூரி மாணவியாவார். தன் கவிதை உலகிற்கு உண்மையாக இருக்கும் கவிதைகள் சஹானாவினுடையவை. இயற்கையும், உறவுகளும், இதயத்தில் முளைக்கிற கேள்விகளும் சஹானாவின் கவிதைகளில் தொடர்ந்து வெளிப்படுகின்றன. கவிதைகள் இதழுக்கான கேள்வியும் பதிலும் பகுதிக்காக கவிஞர் சஹானா சாவித்திரியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும்...

1) பள்ளிப் பருவத்திலேயே ஒருவர் கவிதைகள் எழுத ஆரம்பிக்கும்போது, புறம் சார்ந்த காட்சிகள், சமூகம் சார்ந்த கவிதைகளை விரும்பி எழுதுவார். நீங்களும் அப்படித்தானா? ஆம் எனில், உங்களின் மனம் அகம் சார்ந்த கவிதைகளை நோக்கி நகர்ந்தது எப்படி?

நான் அகம் புறம் என்ற வரையறைகளோடு கவிதையை அணுகி எழுதத் தொடங்கியவள் அல்ல.
'பறவையிலிருந்து பிரிந்து சென்ற இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில் பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது'
என்ற பிரமிளின் வரிகளை வாசித்த தருணம் என்னை கவர்ந்தது. கவிதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அந்த அழகியல் தாக்கம் மட்டுமே என்னுள் கவிதையைத் தொடங்கச் செய்தது. அகம் சார்ந்ததா, புறம் சார்ந்ததா என்ற சிந்தனை அப்போது எனக்கு இருக்கவில்லை.

2) உங்களின் கவிதை மொழி எளிமையாகவும், அசலாகவும் உள்ளதே. அதை எப்படி கைவரப் பெற்றீர்கள்? அதை உணர்ந்த முதற் கணம் பற்றிச் சொல்லுங்கள்?

எளிமை என்பது கூட நான் உணர்ந்து செய்த விஷயம் அல்ல. எளிமை என்பது நாம் செயற்கையாகக் கொண்டுவருவதல்ல என்று இப்போது நினைக்கிறேன். அது அனுபவத்தின் வெளிப்படைத்தன்மை. நம்ம பாட்டி பேசுற பேச்சுல, நம்ம ஊரு மண் வாசனையில, அன்றாடம் நாம் கடந்துபோற மனிதர்களின் சொற்கள்ல்ல இருக்கிற பலம் தான் அது. நான் உணர்ந்தவற்றையும் உள்வாங்கியவற்றையும் அனுபவித்தவற்றையும் அப்படியே எழுதுவதால் அது அசலான தோற்றத்தை தந்து இருக்கலாம்.

நாகர்கோயிலில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிறிய அறைக்கு சென்று, அங்கே இருந்த சொற்ப ஆள்களின் முன்னால் எனது கவிதையை முதல் தடவையாக வாசித்துக் காட்டிய அந்தத் கணத்தை என்னால் என்றும் மறக்க முடியாது. என் கவிதையைக் கேட்டுவிட்டு அவர்கள் கொடுத்த அந்த நெகிழ்வான பாராட்டும் அங்கீகாரமும் தான், நமது எளிய சொல் கூட மனிதர்களின் மனதைத் தொட்டுவிடும் ஆற்றல் கொண்டது என்பதை எனக்கு உணர்த்தியது. அந்தத் தருணம் தந்த உற்சாகம் தான் கவிதை உலகத்தில் எனது தொடக்கம்.

3) உறவுகள் குறித்த கவிதைகளை எழுதுகிறீர்கள். 'ஆச்சிகளை நம்பாதீர்கள் சஹானா' என்று இசையும், 'ஆச்சிகளை நம்புங்கள் சஹானா' என்று கல்யாண்ஜியும் கூறுகிறார்களே.. உங்களது தற்போதைய மனநிலை என்ன? ஆச்சிகளை நம்புகிறீர்களா நம்பவில்லையா?

இது மிகவும் சுவாரஸ்யமான ஒரு கேள்வி. கவிஞர் இசையின் பார்வையும் சரி, கல்யாண்ஜியின் பார்வையும் சரி இரண்டுமே ஆச்சிகள் மீதான வெவ்வேறு பரிமாணங்களைக் கொண்டவை. ஆச்சிகளை மட்டுமல்ல குழந்தைகளை உறவுகளை மனிதர்களை பூனைகளை மலைகளை பறவைகளை நீர் நிலைகளை புல் பூண்டுகளை ஒவ்வொன்றையும் நம்புகிறேன்.

4) பெண் தொட்டு எழுதும் இயற்கைக்கு தனி அழகுண்டு. அதற்கு நிறைய உதாரணங்களும் உண்டு. சமகால இளம் தமிழ்க் கவிஞர்களில் நீங்கள் அதற்கொரு தனித்துவமான உதாரணம். இந்த அம்சத்தை நீங்கள் ஈட்டிக்கொண்டது எப்படி? இதற்கு நீங்கள் முன்னோடியாக முன்மாதிரியாகக் கருதும் கவிஞர்கள் யார் யார்?

இயற்கையும் பெண்ணின் அகமும் வெவ்வேறானவை அல்ல. இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. பெண் தன் உற்றுநோக்குதலின் மூலமாக இயற்கையைத் தொடும்போது அது வெறும் வர்ணனையாக இருப்பதில்லை. அது அவளது மூச்சாக வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது.

குறுந்தொகைப் பாடல் ஒன்றில், மழைக் காலத்தின் தொடக்கத்தையும் காட்டில் முல்லை மலர்கள் பூத்துக் குலுங்குவதையும் ஒரு கவித்துவமான காட்சியாகப் பதிவாக்கியுள்ளார் சங்ககால அள்ளூர் நன்முல்லையார்.

கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியதும் காடுகளில் முல்லைப் பூக்கள் வெண்மையாகச் சிரித்து நிலத்தை நனைக்கும் அழகை,


"கனைத்து எழும் கார் தளி பொழிய,
நினைந்த முல்லை மலர்ந்தன"

என்று எழுதியிருக்கிறார்.

வெண்ணிக்குயத்தியார் என்ற பெண் புலவர், புறநானூற்றுப் பாடலில் வயல்களில் செந்நெல் கதிர்கள் முதிர்ந்து சாய்ந்திருக்கும் அழகிய இயற்கைச் சூழலை "கழனி மாத்து விளை நிலத்து" என்ற அழகான பாடல் வரியின் மூலம் விவரிக்கிறார்.

வெண்ணிக்குயத்தியார் தொடங்கி இன்றைய தேன்மொழி தாஸ், சுகிர்தராணி, குட்டி ரேவதி வரையிலான பெண் கவிஞர்களின் இயற்கைச் சித்தரிப்புகள் எழுத தூண்டுபவையாக இருக்கின்றன. குறிப்பாகத் தேன்மொழி தாஸின் 'ஒளி அறியா காட்டுக்குள்' நூலின் தாய்க்கருப் போன்ற பனிக்காலக் கற்பனை என்னை ஆழமாகக் கவர்ந்தது. இயற்கையோடு பெண்ணின் அகத்தையும் உடலையும் தடையின்றி இணைத்துப் பேசும் குரலே நங்கையின் கூறல்.

5) உங்களின் மூன்று கவிதைத் தொகுப்புகளையும் புரட்டிப் பார்க்கும்போது நீங்களே உணர்வது என்ன?

இந்தத் தொகுப்புகளைத் தாள் தாளாகத் திருப்பிப் பார்க்கும் அந்தத் கணங்களில், புகைப்பட ஆல்பத்தை பார்ப்பதை காட்டிலும் கடந்த காலத்தின் அத்தனை நினைவு அலைகளும் என் நெஞ்சுக்குள் எழும்பி அடங்கும். அந்த நினைவுகளின் சங்கீதத்தையே ஒவ்வொரு வரியிலும் உணர்வேன்.

6) எழுதுவதில் இப்போது என்ன செய்து வருகிறீர்கள்? திட்டங்கள் ஏதாவது உண்டா?

கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வமாக இருக்கிறேன். 'இந்தியாவின் தென்கோடியில் இருந்து கரப்பான் பூச்சி பேசுகிறேன்' என்ற ஒரு கட்டுரை சமீபத்தில் எழுதியுள்ளேன். அடுத்து ஒரு கட்டுரைத் தொகுப்பு கொண்டு வருவேன் என்று நினைக்கிறேன்.

***

Comments

தொடர்புக்கு

உங்கள் கவிதைகள், கருத்துகள், கேள்விகள்

உங்கள் கவிதைகளை Word கோப்பாக இணைத்து அனுப்புங்கள். இதழ் குறித்த கருத்துகளையும் கேள்விகளையும் இங்கே எழுதலாம். விரைவில் பதிலளிக்கிறோம்.