சசி இனியன் கவிதைகள்

பெயரிடப்படாத ஆறு


இப்போது நான் ஓடும் ஆற்றைக் காண்கிறேன்

அருகே ஒரு பிணம் எரிகிறது

செக்கச் சிவப்பாக எரிகிறது..

உடல் உருகி எரிகிறது

உடலின் திரவங்கள்

தீயிற்கு நெய் வார்த்தது போல

தீ

மேலெழும்பி உச்சிக்குச் செல்கிறது.

இப்போது மேலெழும் தீப்பிழம்பைக்

காண்கிறேன்.

அதன் ஒளிச் சிதறல்கள்

பொன் உருகித் தெறித்து விழும்

குண்டு மணிகள் போல

விழுகிறது.

ஐயோ எனும் அழகு !


இப்போது

நான்

ஒர் எலும்புக் குச்சியைக் காண்கிறேன்.

அஃது அவ்வளவு நீளமாக

நீண்டு நீண்டு செல்கிறது..

இப்போது நான்

முடிவிலா நீளத்தைக் காண்கிறேன்.

(I)

இந்த ஆற்றுக்கு நான் பெயரிடமாட்டேன்.

அது

பெயரிடப்படாத ஒலியால் துடிக்கிறது

பெயரிடப்படாத பாடலை முணுமுணுக்கிறது.

பெயரிடப்படாத நறுமணத்தால்

நகர்ந்து செல்கிறது

பெயரிடப்படாத காட்டு மலர்களால்

தன்னை அலங்கரித்துக் கொள்கிறது.

(II)

பெயரிடப்படாத

அனைத்திற்கும்

அப்பால்

உள்ள ஆற்றங்கரையின்

சகதியில்

தான்

பால் நண்டு உள்ளேயும்

வெளியேயும்

அதன் குட்டி கால்களால்

எட்டிப் பார்க்கிறது.

(III)

பெயரிடப்படாத

அந்தச் சேற்றில் தான் .

அழகிய தாமரை மலர்

மலர்ந்திருக்கிறது.

(IV)

பெயரிடப்படாத அனுபவம் ஒன்றிற்குத் தானே 

இத்தனை அழகுகளையும் விட்டுத் தப்பிச் செல்ல 

வேண்டியிருக்கிறது?

(V)

நீர்மத்தின் நகர்வு

ஒரு கனவிலிருந்து

மற்றொன்றிற்கு

நகர்வது போல

எளிது அல்ல.


இடையில் ஆழங்கான

முடியாத

எவ்வளவோ உள்ளன.

***

சசி இனியன் தமிழ் விக்கி பக்கம்

மதார் தமிழ் விக்கி பக்கம்

***

Comments

தொடர்புக்கு

உங்கள் கவிதைகள், கருத்துகள், கேள்விகள்

உங்கள் கவிதைகளை Word கோப்பாக இணைத்து அனுப்புங்கள். இதழ் குறித்த கருத்துகளையும் கேள்விகளையும் இங்கே எழுதலாம். விரைவில் பதிலளிக்கிறோம்.