தேவதேவன் கணங்கள் - தமிழ்மணி

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்
தேவதேவனின் உலகில் வாழ்வின் அத்துணை தருணங்களும் இருக்கின்றன. பறவைகள், மலர்கள், மலைகள், கடல், சூரியன் என்று ஆகப்பெரிய அம்சங்கள் அவரின் விரல் நுனியில் குடியிருக்கின்றன. மென்னுணர்வின் பொருட்டு மேலெழும் அழகியல் நிரம்பிய கவிதைகள் மட்டுமே அவரால் படைக்க முடியும் என்கிற பொதுப்புத்தி பலரிடத்தில் உண்டு. அழகியலுக்குள் அமைந்த அரசியல் கவிதையும் அவரால் எழுத முடியும். அப்படி ஒரு கவிதை உண்டு.

மானுடத்தின் மீது நம்பிக்கையிழக்கும் போதெல்லாம் அங்கொரு உயிரற்ற மற்றும் உயிருள்ள ஏதோ ஒன்றின் இருப்பு நம்மை நிலைநிறுத்தி வைக்கும். தாழ்த்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு  உலகில் எதுவுமே சொந்தமில்லாமல் சமூக கூட்டிலிருந்து தூக்கியெறியப்படும் ஒரு மனிதன் தனக்கு நேர்ந்த இடர்களை எப்படிக் கடக்க முடியும்?

ஒரு பூவின் மலர்ச்சி அவனின் பின்னிருந்து முன் நகர்த்தும்; அந்தப் பூதான் அவனது நிலம்; அவனது வானம்; அவனது உடைமை. இனத்தேசியம், மொழித்தேசியம் கடந்து உலவுகின்ற வாய்ப்பினை ஒரு சிறு மலரின் மலர்ச்சியில் அடையை முடியும் என்கிறது இக்கவிதை.

***

சின்னஞ் சிறிய மலர்

குத்தவைத்து
குனிந்து பார்க்கவைத்தது அவனை
இத்துணை அழகிய பூமியையும்
இத்துணை பெரிய வானத்தையும்
சொந்தமாக்கிக் கொண்ட புன்னகையுடன்
புல்லில் ஒரு சின்னஞ் சிறிய மலர்
பெண்ணின் மூக்குத்தி அளவேயானது.

அவனோ தனது சக மனிதர்களாலேயே
தாழ்த்தப்பட்ட ஒருவன்
எல்லையற்ற துகள்களும்
வலிகளுமானவன்
அவனுக்குத் தன் ஊரும் சொந்தமில்லை
இந்த பூமியும் சொந்தமில்லை
இந்த வானமும் சொந்தமில்லை

எல்லாம் ஒரு கணம் முன்புதான்.

***

நாம் இந்த உலகின் மையத்தை நோக்கி நகரவேண்டும் அல்லது பால்வெளியை நோக்கி. என்னைப் பொறுத்தவரை நாம் அனைவருமே இந்தப் பிரபஞ்சத்தின் சிறுதுகள் தான். " மௌனத்தின் முகத்தில் வீசப்பட்ட பேச்சே வாழ்வு" என்கிறார் ஜோசப்  பிராட்ஸ்கி. இங்கு வாழ்வே கணங்களால் கட்டமைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புதான்.  ஒவ்வொரு கதவிற்கு பின்னும் நம்மை வியப்பூட்டுகிற, எதிர்பார்க்காத கணங்கள் ஒளிந்திருக்கும். நம் மனம் பல வேறாக கணங்களைப் பொருத்தி இயங்கும். சிலபொழுது மீனாக, சிலபொழுது பறவையாக, சிலபொழுது பொழுதுகளாக, பாறையாக, ஆகாசமாக என சுழன்றடிக்கும். மரிப்பதற்கு முன்பு வரை நாம் கொண்டிருக்கும் அடையாளங்களை நாமே உருவாக்கியிருப்போம். மரித்த பின் வந்து ஒட்டும் அடையாளங்களோ ஜனரஞ்சகம் அவர்களின் தலையிலேயே ஏற்றிக் கொள்வது ஆகும். அதுவே காலகாலத்திற்கு நம் ஆன்மாவைத் தொடரும்.

துள்ளல்


நீரின் மேற்பரப்பில் ஒரு மீன்.
துள்ளி விழுகையில் கண்டது சுடும்பாறை.
மீண்டும் துள்ளியதில் பறவையின் கொடுங்கால்.
மேலும் ஒரு துள்ளலில் மரணம்.
மரித்த கணமே பறவை.இந்தக் கவிதையில் இறப்பெய்திய மீனின் ஆன்மா பறவைக்குள் சென்றுவிட்டது அல்லது இறகு முளைத்து பறந்துவிட்டது. மரிப்பதற்கு முன்னும் பின்னும் இருந்த கணங்கள் வேறு வேறு. ஆனால் கணங்களே வாழ்வின் நகர்வை நிச்சயிக்கின்றன, தேவதேவனும்தான்.

***

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம் 

தன்னறம் தேவதேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு 

வம்சி தேவதேவன் கவிதைகள் முழுத்தொகுப்புShare:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

தேடு

Most Popular

Blog Archive