வானுச்சியிற் பறந்து செல்லும் ஒரு பறவை - பார்கவி

மரபார்ந்த படிமங்களான மலர், பறவை, நிலவு ஆகியவைகளுக்கு இணையாகவே தேவதேவன் புத்தரை பல கவிதைகளில் கையாள்கிறார்.  புத்தர் வழக்கமான மெய்மையின் திருவுருவாகத் தான் வலம் வருகிறார் என்றாலும் தேவதேவனுக்கு அவர் நண்பர் என்ற உணர்வு ஏனோ வந்து போகின்றது. அவர் கவிதையில் இளமை காமம் போலவே மெய்மை அளிக்கும் தனித்துவமான விடுதலை உணர்வும் வாழ்வின் ஓர் அங்கமாக அமைகிறது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். மெய்யியல் பயணத்தில் சென்றடையும் தூரம் பற்றி தேவதேவனுக்கு எவ்விதமான அச்சமும் கவலையும் இல்லை.  ஏனென்றால் அது கவிஞருக்கு எட்டிப்பிடிக்க முடியாத தூரத்தில் இல்லை.  வீட்டின் விளக்கு வெளியை இருளாக்குகின்றது என்ற தொடக்கம் மெய்மையைவிட பொதுவுடைமை கோட்பாட்டிற்கு அண்மையிலிருப்பத்து. ஆனால் ‘இதய ரகசியமாய்’ சித்தார்த்தன் தன் இளவரச வாய்ப்பை துறப்பதில் தான் அது பூரணத்துவம் பெறுகின்றது. தன்னெஞ்சறிந்து துறப்பவனுக்குத் தெரிவது அமைதி என்னும் நிலவொளியில் மிளிரும் இப்பூமியில் பேரெழில்.  நிறைவு மேலும் நிறைவுறும் நாள்.


புத்த பூர்ணிமா

சித்தார்த்தா!

வீட்டின் நான்கு சுவர்களுக்குள் எரியும் விளக்கு
வெளியே இருளைத்தான் வீசும்.
ஓங்கி வளர்ந்ததோர் கம்பத்தின் தேசியக் கொடிக்கு
போர்க்குரல் ஒன்றே தெரியும்.
உன் இளவரச வாய்ப்பும் சுகபோகமும்-
விரிந்துகொண்டே போகும் வறுமை, கொடுமைகளை
நிறுத்த அறியாது

உன் ஆருயிரும் இன்பமுமே போன்ற
வீட்டினையும்
ஆன்மிகப் பெருமைகளும் பற்பல பவிஷுகளுமிக்க
உன் நாட்டினையும்
நாளை அதனை ஆளப் போகும்
இளவரசன் நான் எனும் வாய்ப்பினையும்
வெளியே யாருக்குமே தெரியாதபடி
இவ்விரவில் நடந்து முடிந்துவிடும் ஒரு காரியம் போல்
இதய ரகசியமாய்
நீ இப்போதே உணர்ந்து துறந்து
விட்ட பின்னே-

பார் மகனே!
இம் முழுநிலவொளியில்
சாந்தி மிளிரும் இப் பூமியின் பேரெழிலை!


திபெத்திய பெளத்தத்தில் புத்தருக்கான எண்மங்கலங்களில் ஒன்றான ‘ஸ்ரீவதஸ்யம்’ எனப்படும் முடிவறு முடிச்சு வடிவம் உண்டு. அது உலகத்தின் இயக்கம் ஒன்றுடன் ஒன்று இணைந்து பிணைந்து செயல்படுவதைக் குறிக்கின்றது. தேவதேவன் கவிதைகளில் இயற்கையின் சார்பும் சுழற்சியும் இணைவும் கலந்த அலகிலா விளையாட்டுத் தருணங்கள் வந்து போகின்றன. இடையறாத கொந்தளிப்புடன் பாயும் நதிக்கு மறு எல்லையில் விம்மிப் புடைத்துக் காத்திருக்கும் விண் அங்கு. இடையில் கடல் பாவம், விண்ணிடம் இறைஞ்சும் பிறவி. இதில் பொறுமையும் அமைதியும் வேண்டி நிற்கும் அவர் எவர்? கடல் நதியையும், விண் கடலையும் ஆற்றுப்படுத்தின்றதா அல்லது ஏற்றித் தூண்டுகிறதா? பிரம்மமுடி கோலமிடும் வளையணிந்த கைகள் பலவாக பெருகியிருக்கின்றனவா? துயரை முற்றுவிக்கக் கனலும் அந்த பிரம்மாண்டம் எத்தகையது? நேற்றிட்ட கோலத்தை அழிக்கும் மழையைத்தெளிக்கும் கரங்களும் அவை தானா? என்றுமுள தவிப்புடன் ஒடுவதலாமல் செய்வதற்கு என்ன உள்ளது? கவனிப்போம்.


நதி

இடையறாத கொந்தளிப்புடன்
பாய்ந்து ஓடிவருகிறது கடலை நோக்கி.
பொறு நதியே, பொறு.
கடலோ, விண்ணிடம் இறைஞ்சும் பிறவி.

அமைதி கொள்ளுங்கள் நண்பர்களே
அமைதி கொள்ளுங்கள்.
விண், விம்மி விடைத்துத் துடித்தபடி
ஒவ்வோர் உயிருள்ளும் புகுந்து
ஆங்குள கோபுரங்கள் தேவாலயங்கள் மசூதிகள்
இன்ன அனைத்தையும் தகர்த்து
ஆங்கே தன்னை நிறுத்தித்
துயரனைத்திற்குமாய்
ஓர் முற்றுப்புள்ளி வைத்துவிடக்
கனலும் பிரம்மாண்டம்;
காத்திருக்கிறது;
கவனியுங்கள் நண்பர்களே, கவனியுங்கள்.


ஆய்ந்துணர்ந்து பொருள் கோர வைக்கும் வகை கவிதைகள் ஒரு வகையான இன்பத்தைத் தருபவை. பொருள் புரிந்ததாக நாடகமாடி ஏமாற்றுபவை. தேவதேவனின் சில கவிதைகள் இசைத்துச் சுவைத்து வாயிலூறுபவை. அதிலும் ஆழ்கணங்கள் இருக்கும், ஆனாலும் மனம் தானம் இசைப்பது போல் ஒரே சொல் கட்டை மீண்டும் மீண்டும் மீட்டி எடுத்துக்கொண்டு ஆடும். வானுச்சியில் திரியும் பறவை போன்ற ஒருத்திக்கு நீர் நிலையையும் நிழல் தருவையும் கட்டும் அருத்தி ஏற்பட வேண்டியதில்லை. கண்டடைதலின் ஆசுவாசத்தில் அல்லது பரவசத்தில் பிறக்கும் பேரின்பம் அது. பறவை அங்கேயே நின்றாடட்டும்.


வானுச்சியிற் பறந்து செல்லும் ஒரு பறவை

கண்டடைகிறது,
ஒரு நீர் நிலையை,
நிழல் தருவை,
அது நினைப்பதுண்டோ,
பேசுவதுண்டோ,
அவற்றைத்
தான் கட்ட வேண்டுமென்று?

***

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

மலைமேல் ஒளிரும் லாந்தர் விளக்கு - எம்.கோபாலகிருஷ்ணன்

இந்திக் கவிதைகளை மொழிபெயர்க்கத் தொடங்கியது ஒரு தற்செயல் நிகழ்வு. யாரை மொழிபெயர்க்க வேண்டும், கவிதைகள் எங்கிருந்து கிடைக்கும் என்பது பற்றியெல...

தேடு

Labels

Most Popular

Labels

அபி (10) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (1) ஆனந்த் குமார் (7) இசை (3) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) க. மோகனரங்கன் (1) கட்டுரை (5) கப (1) கமலதேவி (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (88) காஸ்மிக் தூசி (1) குன்வர் நாராயண் (1) கோ யுன் (1) ச. துரை (2) சதீஷ்குமார் சீனிவாசன் (1) சபரிநாதன் (2) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (1) ஞானக்கூத்தன் (1) தேவதச்சன் (3) தேவதேவன் (12) தேவேந்திர பூபதி (1) நகுலன் (2) நேர்காண (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) போகன் சங்கர் (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (2) மோகனரங்கன் (1) யுவன் சந்திரசேகர் (2) ரமாகாந்த் ரத் (1) லட்சுமி மணிவண்ணன் (1) லதா (1) லாரா கில்பின் (1) விக்ரமாதித்யன் (5) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1)

Blog Archive