பளபளக்கும் கூர்முனை - சிங்கப்பூர் கணேஷ் பாபு

நெடுங்காலத்திற்குப் பின் நண்பர்கள் எல்லோரும் ஒன்றுகூடியிருந்தோம், சாங்கி விமானநிலையத்தில். மதிவாணன் ஊருக்குச் செல்கிறார். நிரந்தரமாக. இனி இங்கு வரமாட்டார். பலரும் அப்படிச் சொல்லிவிட்டுச் செல்பவர்கள்தாம். “பட்டதெல்லாம் போதும், இந்த ஊருக்கு இனிமேல் திரும்பி வரப்போவதில்லை”, என்று உறுதியாக அறிவித்துவிட்டுப் போன நண்பர்கள் அடுத்த சில வருடங்களிலேயே மீண்டும் இங்கு வருவதைப் பார்த்திருக்கிறேன். அது இந்த ஊரின் மகிமையினால் அல்ல, வாழ்வின் நெருக்கடிகள் அளித்த அழுத்தங்களால் என்று அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், திரும்பி வந்தவர்களை ஆர்ப்பாட்டமாக வரவேற்பதே எங்கள் வழக்கம். தப்பிவிட்டார்கள் என்று நினைத்து மெல்லிய பொறாமையுடன் இருந்தவர்களுக்கு மீண்டும் அவர்கள் எங்களிடமே வந்துவிட்டதைப் பார்த்ததும் ஏற்படும் குரூர சந்தோஷமும் அதில் கலந்திருப்பதை என்னால் மறுக்கவியலாது.

ஆனால் மதிவாணனின் கதை வித்தியாசமானது. ஊரில் இருந்து வந்திருக்கும் நாங்கள் அனைவரும், எங்கள் பிரியத்தை ஊரில் விட்டுவிட்டு வந்திருப்பவர்கள். பிரியத்துக்குரியவர்கள் இருக்கும் ஊரின் நினைவே இனிதானது. அன்பு என்ற அந்தச் சங்கிலியின் ஒரு முனை அங்கே ஏதோ ஒரு கிராமம் அல்லது சிறுநகரின் வீடுகளில் ஒன்றில் இருக்கிறது. அதன் மறுமுனை கடல் கடந்து பிரமாண்டமாக நின்றிருக்கும் சிங்கப்பூரின் ஊழியர் தங்கும் அறைகளில் ஒன்றில் இருக்கிறது. அதனால் ஊரின் நினைவு என்கிற துடுப்பைப் போட்டு கால வெள்ளத்தைக் கடந்துவிட எங்களால் இயல்கிறது. மதிவாணனுக்குத் திரும்பிச் செல்வதற்கென ஒரு ஊர் இருக்கிறது, வீடு இருக்கிறது. ஆனால் அவருக்கான மனிதர்கள் இல்லை. இருந்தார்கள் ஒருகாலத்தில். இன்றில்லை. இறந்தெல்லாம் போய்விடவில்லை. உயிருடன் நலமுடன்தான் இருக்கிறார்கள். ஆனால், உயிர்ப்புடன் இல்லை.

மதிவாணன் இளமையில் விளையாட்டு வீரராக இருந்தவர். ஓட்டப்பந்தயத்தில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் வென்று தங்கப்பதக்கங்கள் பெற்றவர். விளையாட்டில் சிகரம் தொட்டு அதன் மூலம் அரசுப் பணியை அடைவதே அவரது இலக்காக இருந்தது. ஓட்டப்பந்தயத்தில் எளிதாக இலக்கைத் தொட முடிந்ததைப் போல அவரால் வாழ்வில் இலக்கை அடையமுடியவில்லை. காரணம், உங்களால் ஊகிக்க முடிந்ததைப் போல, குடும்ப வறுமைதான்.

“ஆழி சூழ் உலகமெலாம் பரதனே ஆள, நீ போய் புழுதியடைந்த வெங்கானகத்தில் உழன்று புண்ணியத் துறைகளாடி வா” என்று தசரதன் இயம்பியதாக கைகேயி சொன்னதும், “என் பின்னவன் பெற்ற செல்வம் நான் பெற்றதன்றோ” என்று பெருமிதம் பொங்கச் சொல்லிவிட்டு ராமன் அவளிடம் விடைபெறுகிறான். அவன் திரும்பிச் செல்லும்போது, “இழைக்கின்ற விதி முன்செல்ல தருமம் பின் இரங்கி ஏக” என்று அக்காட்சியைக் கம்பர் சித்தரிக்கிறார். விதி முன்னே இட்டுச் செல்கிறது, தருமம் பின்தொடர்கிறது.

மதிவாணன் போன்ற பலரையும் விதி முன்னே இட்டுச் செல்கிறது, ஆனால் தருமம்தான் பின்தொடரவில்லை. நம்மைப் பின் தொடர்வதெல்லாம் ஆற்ற மாட்டாத துயரங்களும், பாவக் கணக்குகளுமாகத்தானே இருக்கிறது.

மதிவாணனால் உயர்கல்வியைத் தொடர முடியவில்லை, வேலையற்ற தந்தை, உண்மையைச் சொல்வதாக இருந்தால் வேலைக்குப் போக விருப்பமற்ற தந்தை, நோயாளியான தாய், திருமண வயதை இன்னும் சில வருடங்களில் எட்டிவிடும் தங்கை. இழைக்கின்ற விதி முன்னே செல்ல, மதிவாணனும் சிங்கப்பூர் வந்துவிட்டார். ஜானகிராமனின் சிலிர்ப்பு கதையில் வரும் சிறுமியைப் போல மதிவாணனும் குடும்பத்தைக் காக்கப் புறப்பட்டுவிட்டார். குடும்பத்தின் மூத்த பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்காமலே வரும் இத்தகைய பொறுப்புணர்வு வியக்கத்தக்கதுதான்.

அதன்பின் இத்தனை வருடங்களில் வேலை வேலை என்று வேலையைத் தவிர மற்ற விஷயங்களில் அவரது நாட்டம் செல்லவில்லை. சம்பாதிக்கும் கடைசி காசையும் ஊருக்கு அனுப்பிவைத்து குடும்பத்தை மேடேற்றினார். வழக்கமாக மற்ற குடும்பங்களில் இத்தகையவர்களுக்குக் கிடைக்கும் அன்பும், மதிப்பும் அவருக்கு அவரது குடும்பத்தில் கிடைக்கவில்லை. பன்னாட்டுக் கம்பெனிகளில் ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுவதைப் போல, அவரது அப்பா மதிவாணனுக்கு அடுத்தடுத்து இலக்குகளை நிர்ணயித்தபடி இருந்தார். வீடு கட்டுவது, அதன்பின் நிலங்கள் வாங்குவது, தங்கையின் திருமணம் என்று இலக்குகள் வரிசையாக வந்துகொண்டேயிருந்தன. இந்த நீண்ட ஆட்டத்தில் அவரது வயதும் கடந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் திருமணம் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம், “அதற்கென்ன அவசரம், வீட்டில் மாடியறை எடுக்க வேண்டும், அதன்பின் திருமணத்தைப் பார்த்துக் கொள்ளலாம்”, என்பார் அவரது அப்பா. அதன்பின் சில காலம் கழித்து மறுபடியும், “தங்கைக்கு மணம் முடித்தாலும் அடுத்தடுத்து அவளுக்குச் சீர் செய்தால்தான் அவளுக்கு அவளது வீட்டில் முக்கியத்துவம் இருக்கும்“ என்பார். “ஒரு கார் வாங்க வேண்டும், அப்போதுதான் உறவுகளின் முன் மதிப்பு கூடும்” என்பார். இப்படி ஒவ்வொரு முறையும் திருமணப் பேச்செடுக்கும் போதெல்லாம் அதை ஒத்திப்போட்டபடியே வந்தார் அவரது அப்பா. ஒருகட்டத்தில் மதிவாணன் புரிந்துகொண்டார். வீடு அவரது பணத்தைத்தான் விரும்புகிறது, அவரை விரும்பவில்லை.

எவ்வளவு ஆடம்பரமான அழகிய மாளிகையாக இருந்தாலும் அதன் முகப்புதான் வசீகரமாக இருக்கும், பெரும்பாலான மாளிகைகளின் பின்பக்கம் சென்று பார்த்தால் அழுக்கு காம்பவுண்டு சுவர்களும், சாக்கடைகளுமே நிரம்பி ஓடும். அன்பு என்பதும் அப்படிப்பட்ட மாளிகைதானா. அதன்பின் ஓடுவதும் இத்தகைய சுயநல சாக்கடைகள்தானா என்று மதிவாணன் யோசிக்கத் துவங்கினார். ஒருவழிச்சாலையாக மாறிவிட்ட அன்பின் சுயரூபத்தை அவர் புரிந்துகொண்டபோது வயது கடந்திருந்தது.

சுகுமாரனின் இக்கவிதை அன்பு என்ற விழுமியத்தின் வேறொரு முகத்தை எனக்குக் காட்டியது.

இங்கே இருக்கிறேன்

விசாரிப்புக்கு நன்றி
எறும்புகள் சுமந்துபோகும் பாம்புச் சட்டைபோல
நகர்கிறது வாழ்க்கை

சிறகுகளுடன் முட்டைக்குள்ளிருப்பது அசௌகரியம்
யத்தனித்தால்
பறக்கக் கிடைக்கும் வெளியோ
கொசு வலைக்குள் அடக்கம்

தைத்த அம்புகளைப்
பிடுங்கி விடுகிறேன் அவ்வப்போதே
ஆனாலும்
வலிகள் இதயத்தின் தசையைக் கிழிக்கின்றன

இப்போது அன்பு -
ஊதாரிப் பிள்ளை வீடு திரும்பக் காத்திருக்கும்
கருணையோ
சாகாத பிடிகடுகுக்காய் நடந்த
ஆற்றாமையோ
தொட்டில் இல்லாமல் வந்த குழந்தைக்கு
சவப்பெட்டி வாங்கக் காசில்லாத
தவிப்போ அல்ல

இப்போது அன்பு -
சவரக் கத்தியின் பளபளக்கும் கூர்முனை
யதார்த்தம்
கழைக்கூத்தாடியின் வளையத்தில் சிக்கிய
உடலாய் நெளிகிறது

எனினும்
இங்கே இருக்கிறேன் நான்;
துயர் தாளாமல் சிந்தும் கண்ணில் ஈரமாய்
தாமதமாகும் ரயிலுக்குக் காத்திருப்பவனின் பதற்றமாய்
சிகரத்தை அடைந்த சுருதியின் சிலிர்ப்பாய்
தற்கொலையில் தோற்றவனின் மௌனமாய்...

மதிவாணனின் வாழ்வில் நடந்ததும் இதுதான். அவரது வீடு அவரைப் பயன்படுத்திக் கொண்டது. வடிவம் மாறிவிட்ட அன்பின் கொடுக்கு அவரைக் கொட்டிக்கொண்டே இருந்தது. அன்பு என்பதன் அர்த்தம் அவரது அகராதியில் திரிந்துவிட்டது. சுகுமாரனின் கவிதையில் சொல்லப்பட்டிருப்பதைப் போல- இப்போது அன்பு என்பது சவரக்கத்தியின் பளபளக்கும் கூர்முனையாக மாறிவிட்டது. அது போர்வாளாக மாறிப்போவதற்கு முன்பாகவே மதிவாணன் ஊருக்குப் போய்விட்டார். எல்லாப் புன்னகைகளும் மண்டையோட்டில் ஒட்டப்பட்டிருக்கும்போது, எல்லா உறவுகளும் உலோகக் கம்பிகளால் பின்னப்படும்போது அவரால் இயல்பாக இருக்க முடியவில்லை.

சுகுமாரனின் இன்னொரு கவிதையில் வரும் இந்த வரிகள், மதிவாணன் தந்தையை நோக்கி எழுதப்பட்டது போலவே இருக்கிறது.

“அப்பா
உன்னுடைய மனித முகம் கழன்று
கழுதைப் புலியாகி நெடுநாட்களாயிற்று”

பரிவற்ற வீடும், உறவுகளும் அறுத்தெடுத்தது போக மீதமிருந்த அவரது இதயத்தசையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஊர்திரும்பிவிட்டார் மதிவாணன். யாருக்காக அவர் இனியும் இங்கு இருந்து பொருளீட்ட வேண்டும்? தான் யாருடைய ஏடிஎம் இயந்திரமும் அல்ல என்று முடிவெடுத்துவிட்டார். இனி அவர் சிங்கை திரும்புவது சந்தேகம் தான். 

***

சுகுமாரன் தமிழ் விக்கி பக்கம்

(நன்றி சிங்கப்பூர் சிராங்கூன் டைம்ஸ் அச்சிதழ்)

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (141) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (2) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (8) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (5) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive