கள்சைவரி
உரசிக்கொள்கிறார்கள்
இடித்துக்கொள்கிறார்கள்
தள்ளிக்கொள்கிறார்கள்
வரிசைகள்
உரசிக்கொள்ளாதீர்கள்
இடித்துக்கொள்ளாதீர்கள்
தள்ளிக்கொள்ளாதீர்கள்
வரிசைகள்
கடைசி ரேஷன் தாள்
கடைசி திரையரங்க டிக்கெட்
கடைசி நுழைவுச் சீட்டு
கள்சைவரி
அப்படி ரயில்வே கேட்டுகளில் காத்திருந்த பொழுதுகள் ஏராளம். ரயில்வே கேட் மூடும்போதும், திறக்கும்போதும் அதிக தடவைகள் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். ஒரு சினிமா இயக்குநர் கிளிப் தட்டுவது போல இருக்கும். மூடிய ரயில்வே கேட்டின் இன்னொரு புறத்தில் சினிமா சூட்டிங் நடக்குது போல என்று மனதுக்குள் சொல்லி சிரித்துக் கொண்டதுண்டு.
மூடிய ரயில்வே கேட்டில் ரயில் வருவதற்குள் நடப்பவர்கள் அங்குமிங்கும் நடந்து கடந்து விடுவார்கள். அப்படி கடப்பவர்களை பார்க்கும்போது ரயில் திடீரென வந்துவிடக்கூடாதே என்ற பயத்தில் ஏனோ மனம் அவர்களுக்காக ரகசிய பிரார்த்தனையை என்னிடம் சொல்லாமலேயே செய்ய ஆரம்பிக்கும்.(கடப்பவர்களுக்கு தெரியும் தான், இருந்தும் ஏனோ மனது கிடந்து அடித்துக் கொள்ளும்). அப்படி கடப்பவர்களை தொடர்ந்து பார்த்து வரும்போது அவர்கள் யாரையோ ஏமாற்றிவிட்டு குடுகுடுவென குழந்தைச் சிரிப்புடன் ஓடுகிறார்கள் என்று ஒரு நாள் தோன்றியது. யாரை அவர்கள் ஏமாற்றுகிறார்கள்? அதைக் கண்டறிய இந்தக் கவிதையை எழுதிப் பார்த்தேன்.
மூடிய ரயில்வே கேட்டில்
இன்னும் ரயில் வரவில்லை
அதற்குள் நடப்பவர்கள்
அங்குமிங்கும்
நடந்து விடுகிறார்கள்
துயிலும் மரணத்தை எழுப்பாமல்
வாழ்வைத் திருடும் திருடர்கள் போல
வாகனத்தில்
அமர்ந்திருக்கும் எனக்கு
க்ராசிங்கின்
இரண்டு பக்கமும்
வாழ்வுள்ளது
இருந்தும்
ஒரு பேராசையில்
வாகனத்தை பூட்டிவிட்டு
வாழ்வை கொஞ்சம்
திருடிவிட்டு வருகிறேன்
இது முன் எப்போதோ எழுதிய கவிதை. தொகுப்பில் இடம்பெறவில்லை. இப்போது இதை வாசிக்கும் கணம் சமீபத்தில் ரயில் க்ராசிங்கில் இறந்த இரண்டு சிறார்கள் நினைவில் வந்து போகிறார்கள்.
வாழ்வைத் திருடும் திருடர்களை வாழ்வு திருடாதிருக்கட்டும் என்று வேண்டிக்கொண்டேன்.
***
0 comments:
Post a Comment