சபரிநாதன் கவிதைகள்

கவிதையில் அதிகம் பயின்று வந்த சொல் விடுதலை எனலாம். நவீன தமிழின் முதல் கவியின் பாட்டே விடுதலை என்னும் சொல்லில் இருந்து தான் தொடங்குகிறது.

அக விடுதலை என்றாலோ, புறவிடுதலை என்றாலோ அதனைப் பற்றி அத்தனை பேசிய பின்னும் கவிஞர்களுக்கு மட்டும் விடுதலையைப் பற்றி சொல்ல வார்த்தைகள் இருந்துக் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு கவிதையிலும் விடுதலை வெவ்வேறு படிமமாக வளர்கிறது.

பாரதி தன் கவிதையில் விடுதலையை வேட்கையாக்குகிறார். ஞானக்கூத்தன் பகடியாக்குகிறார். சபரிநாதனின் இந்த கவிதையில் விடுதலை என்பது வீடுபேறு மட்டுமல்ல அதற்கு மேல் சென்று ஒலிக்கும் வெண்கல மணிநாதமாக மாற்றுகிறார்.

- மதார்

***

விடுதலை

நல்லிரவு அண்மிக்க

நல்ல மழை வெளியே

மாசிலா நிர்வாணம் அணிந்து நனையும் செழும் பெண்ணென

முத்துத்தாரை தெறித்த மடல்கள் விரிந்து

மௌனம்.

யார் செய்குவதோ எங்கிருந்து வருகுவதோ வெண்கல மணிநாதம்

சட்டென்று உள்ளுள் ஓருணர்வு... விடுபட்டு விட்டதாய்

எதில் இருந்து, யாரிடம் இருந்து, நானறியேன்

உடல் தணிகிறது. இப்போது அதனால்

ஒரு தோட்டக் குடில் அளவிற்குப் பெரிதாக முடியும்.

அப்படியே எழும்பி நீந்த முடியும். ஆனால்

இது முடிய அதைக் கவ்வியிருந்தது எது?

சுற்றும் முற்றும் பார்க்கிறேன்

நல்ல மழை, வெண்கல மணிநாதம்.

- சபரிநாதன்

***

நம் வாழ்வில் பெரிய பெரிய வடுக்கள் எல்லாம் தடமில்லாமல் மறைந்து போகும் தன்மை கொண்டவையே. வரலாறு நெடுக அப்படி தான். வரலாற்றில் எத்தனை பெரிய வடுக்களுக்கும் இடமில்லை. மிஞ்சி போனால் சிறிய தழும்பு. அதற்கு மேல் அதனை நம் வாழ்வில் வளர்த்துக் கொள்ள விரும்புவதில்லை.

ஆனால் நம் வாழ்வில் ஒரு சிறு பிரச்சனை என்றால் அந்த பிரச்சனையின் காலங்களில் அவை பூதாகரமான ஒன்றாக பூதக்கண்ணாடி இட்டு நம்முன் நிக்கும். 

அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக அவதானித்து வந்தால் நமக்கு தெரியும் அவை ஒரு பெரும் கொப்பளத்தில் இருந்து சிறு புண்ணாக மாறி வடுவாகி மறைவதை. அவை மறைந்து சுவடின்றி ஆன பின்பும் அந்த காலம் ஆள்மனத்தின் ஓர் மூலையில் தேங்கியிருக்கும். நாம் வரலாறு என்று அந்த காலத்தையே தேக்கி வைத்திருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

சபரிநாதனின் முன்பனிக்காலம் 2015 அந்த மறைந்து தேங்குவதையே சுட்டி நிற்கிறது என எனக்கு இதனை வாசிக்கும் போது தோன்றியது.

- மதார்

***

முன்பனிக்காலம் 2015

சரிவின் பசுஞ்செறிவிடை உலுத்து நிற்கும் கைவிடப்பட்ட வீடு ஒன்று

காட்டின் பகுதியாவதைப் போல


அதன் உடைந்த ஓடுகளும் பெயர்ந்த கற்களும்

சிறிய பெரிய இலைநிழலில் இளைப்பாறும் நகப்பிறைகளாவதைப் போல


அங்குலவிய நினைவுகள்

இரவாடிகள் மட்டுமே அறியும் வாசனையாவதைப் போல 


அங்கு நடந்த கொலை

மண்ணடைத்துத் தூரந்த மலைச்சுனையாவதைப் போல


அதன் மொத்த கடந்த காலமும்

ஒரு நிலக்காட்சியாய் மாறுவதைப் போல


அதன் ரகசியங்கள் 

அந்நிலக்காட்சி  ஓவியத்தின் கித்தானைப் போல மறைவதைப் போல


ஒரு புண் ஆறுகிறது

இது முன்பனிக்காலம்

- சபரிநாதன்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

தேடு

Most Popular

Blog Archive