தான் வாழ்ந்த நகரைப் பற்றி எழுதாத கவிஞனே இல்லை. விக்ரமாதித்யன் ஒரு கவிதையை, “ஊரென்றால் திருநெல்வேலி, அம்மை என்றால் காந்திமதி” என முடிக்கிறார். அவரது பல கவிதைகளில் திருநெல்வேலியும், தென்காசியும் வந்துக் கொண்டேயிருக்கிறது. நேரடியாக அவை வரவில்லையென்றால் காந்திமதி, நெல்லையப்பர்; விசுவநாதன், உலகம்மை என தெய்வங்கள் மூலம் அவரது ஊர் அவர் கவிதையில் நிலைப்பெற்றிருக்கிறது.
விக்கி அண்ணாச்சி கவிதைகளை வாசிக்கும் போது அவர் திருநெல்வேலி நிலம் முழுவதும் அலைந்து திரிந்து அந்நிலம் பற்றி பாடிய பாணன் மரபின் நவீன கவிஞர் என்றே சொல்ல தோன்றுகிறது.
கீழே உள்ள பாணதீர்த்தம் என்னும் கவிதை அம்மரபின் நீட்சி பாடலாக தான் நான் வாசித்தேன். ஆனால் இதனை ஏன் நவீன கவிஞனான விக்ரமாதித்யன் எழுத வேண்டும் என என்னுள் கேட்டுக் கொண்டேன். அந்த கேள்வியை வைத்துக் கொண்டு மீண்டும் கவிதையை வாசித்ததில் அது நவீன கவிதை தான் என அதன் இறுதி வரிகள் பதில் சொல்கிறது. இக்கவிதையை, “ஆறென்றால் அழகு, இயற்கையென்றால் ரகசியம்” என முடித்திருந்தால் அது மரபு கவிதையாக நின்றிருக்கும்.
ஆனால் அதற்கு மேலுள்ள “காவுவாங்கப் பார்த்துக்கொண்டிருக்கும்” என்னும் வரி இது நவீன கவிதை எனப் பிரித்துக் காட்டுகிறது.
- நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.
பாணதீர்த்தம்
தேக்கி வைத்ததில்
திறந்து விடுவது
திமிறிப்பாயும் வெண்புகைப்படலம்
அணைக்கட்டு
ஏக
பெரிய ஏரி போல
இயந்திரப் படகேறி
இறங்கினால்
விழும் சப்தலயம்
மலைமேல்
பாறைகளில்
மோதிச்சுழித்து உருண்டோடி வரும்
காலமற
மனம் லேசாக
குழந்தை போலாக
காவுவாங்கப் பார்த்துக்கொண்டிருக்கும்
ஆறென்றால் அழகு
இயற்கையென்றால் ரகசியம்
- விக்ரமாதித்யன்
***
தமிழில் கூத்து கலைஞனின் வாழ்க்கையை நான் அதிகமாக படித்தது இருவரிடத்தில். ஒருவர் ஜெயமோகன், அவர் கொரோனா காலத்தில் எழுதிய நூறு கதைகளில் முக்கியமான கதை வனவாசம். அதற்கு முன்னரும் லிங்கா தகனம் போன்ற குறுநாவல் எழுதியுள்ளார்.
மற்றொருவர் பேரா. அ.கா.பெருமாள். அவர் கூத்து கலைஞனை, ஆட்டக் கலைஞன் என்றே சொல்ல வேண்டும் என்கிறார். சடங்கில் கரைந்த கலைகள் நூலில் தென் தமிழகத்தின் முக்கியமான நான்கு நிகழ்த்துக் கலையை தொகுத்துள்ளார்.
ஏனென்றால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி என்பது நிகழ்த்துக் கலையின் மாவட்டங்கள். கணியான் கூத்து, தோல் பாவை கூத்து, வில்லுப்பாட்டு, கண்ணன் பாட்டு, கரகாட்டம், அம்மன் பாட்டு என நீண்டு செல்லும் கூத்து மரபுகள் இங்கே உள்ளன.
விக்ரமாதித்யனின் “கூத்தாடி வாழ்க்கை” கவிதை ஜெயமோகனின் வனவாசம் சிறுகதைக்கு நிகரானது. அந்த ஆட்டக் கலைஞனின் வாழ்வில் நிகழும் ஒரு நாள் தித்திப்பை சுட்டி செல்வது. நிகழ்த்து கலை கலைஞர்கள் படும் அவமானங்கள், கஷ்டங்கள் எல்லாம் நான் பேரா.அ.கா.பெருமாள் சொல்லி கேட்டிருக்கிறேன்.
இந்த கவிதையும் அந்த அவலத்தை தான் சொல்கிறது. ஆனால் அந்த கூத்தாடியின் வாழ்க்கை வழியே கூத்தாடியின் மனதை தொட்டு கவிதை முடிகிறது. இன்றொரு நாள் மட்டும் இஷ்டத்துக்கு கொண்டாடும் மனதை தொடும் போதே அ.கா.பெருமாள் தொகுத்த கலைஞனின் வாழ்க்கை நிகழ்வில் இருந்து விலகி இது கவிதையாகிறது.
- நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.
***
கூத்தாடி வாழ்க்கை
இதோ
இன்னும் சிறிது நேரத்தில் விடிந்துவிடும்
இந்த
பவளக்கொடி கூத்து முடிந்துவிடும்
இவன்
அர்ச்சுனமகாராசாவேஷம் கலைந்து ஊர்திரும்பலாம்
இன்னும்
இரண்டு மூன்று நாளைக்குக் கவலையில்லை
குடிக்கூலி பாக்கி
கொடுத்துவிடலாம்
கொஞ்சம்
அரிசிவாங்கிப் போட்டுவிடலாம்
வீட்டுச் செலவுக்கும்
திட்டமாகத் தந்துவிடலாம்
பிள்ளைகளுக்கு
பண்டம் வாங்கிக்கொண்டு போகலாம்
சொர்க்கம் ஒயின்ஸில்
கடன் சொல்ல வேண்டாம்
இன்னொருநாள் இன்னொரு திருவிழாவில்
கூத்துப்போடும்வரை எதிர்பார்த்து
காத்திருக்கவேண்டிய மனசு
இஷ்டத்துக்கும் கொண்டாடும் இன்று .
- விக்ரமாதித்யன்
***
கவிஞர் விக்ரமாதித்யன் விக்கி பக்கம்
விக்ரமாதித்யன் நூல்கள் வாங்க: விக்ரமாதித்யன் நூல்
0 comments:
Post a Comment