நாம் நம் வாழ்வின் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண நினைத்து நாம் பெருக்கிக் கொள்வது அந்த பிரச்சனையை மட்டுமாக தான் இருக்கும். யோசித்து பார்த்தால் அவை எளிதில் கடந்து செல்லக் கூடியதாக இருக்கும். பெரும்பாலும் உப்புசப்பற்றது. ஆனால் மனம் அந்த பிரச்சனை என்னும் நெருப்பிற்கு நம்மையே அவிசாக்கிக் கொண்டிருக்கும்.
தேவதேவனின் கவிதைகள் ஒற்றை படிமத்தால் ஆனவை. அவரின் ஒரு கவிதையில், “மகிழ்ச்சியாக இருக்கிறது ஞாயிறுகிழமை மனத்துடன் முகங்களைப் பார்ப்பதற்கு” என எதையும் சுட்டாமல் அருவமான ஞாயிறுகிழமை மனத்தை மட்டும் சொல்லி அந்த கவிதை நம்முள் வளர செய்கிறார்.
அதே போல் தான் கீழுள்ள கவிதையும் நம்முள் தாகவெறியுடன் எரியும் நெருப்பிற்கு நாம் தேடிக் கொள்ள வேண்டியது தண்ணீரை தான் ஆனால் நாம் எப்போது அளிப்பது அவை உண்டு வளரும் நெய்களை தான்.
- நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.
***
தாகவெறியுடன்
தாகவெறியுடன்
எரிகிறது நெருப்பு.
அதற்குத் தேவை தண்ணீர்
நாம் சொரிந்துகொண்டிருப்பதோ
வகை வகையான நெய்கள் !
- தேவதேவன்
***
பூங்கொத்தோடு என்ற கீழே உள்ள கவிதையும் மேலே சொன்னது போல் ஒரு காட்சி படிமத்தை மட்டும் நம்முள் சுட்டுக்காட்டுவது. அதனைச் சொல்லி கவிதையை நம் வாசிப்பில் வளர்த்தெடுக்கும் சவாலைக் கோருவது.
நான் வாசித்த போது, நாம் எப்போதும் மனிதர்களை எடைபோட்டுக் கொண்டேயிருக்கிறோம். பிற மனிதனை எடைப் போடாமல் நம்மால் வாழ முடிவதில்லை.
தேவதேவனின் இந்த கவிதையில் அப்படி நம் முன் வரும் பிற மனிதனின் கையில் பூங்கொத்தோடு அனுப்புகிறார். அந்த பூங்கொத்தோடு வந்தவனை மட்டும் நாம் பாராமல் அதன்பின் உள்ள வெளியையும் யோசித்துக் கொண்டேயிருக்கிறோம். இறுதியில் மறைத்து வைத்த வெளியையும் நமக்காக தானே கொண்டு வந்தான் அவன் என நம்மை வினவுகிறார்.
- நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.
***
பூங்கொத்தோடு
பூங்கொத்தோடு வந்தவனை
வாங்கி வரவேற்று
அமர்த்தி மகிழாமல்
வழியெல்லாம் அவர்களைச்
சீராட்டிக் கொண்டுவந்த
வெளியைக் கண்டு
பொறாமை கொண்டு என்ன பயன்?
அதையும் நமக்கே அளிக்கத்
தூக்கிக் கொண்டுதானே வந்து நிற்கிறான்
அவன்?
- தேவதேவன்
***
0 comments:
Post a Comment