கவிதை - இந்திய, உலக இலக்கியப்‌ போக்குகள் – 2: க.நா.சு

மனித இனத்தின்‌ முதல்‌ இலக்கிய வடிவம்‌ கவிதையே

காவியங்களை பற்றி இவ்வளவு போதும்‌. இப்போது கவிதை என்று பார்க்கலாம்‌.

பொதுவாக உலக மொழிகளில்‌ எல்லாம்‌ கவிதைதான்‌ முதலில்‌ தோன்றியது என்று ஒரு நினைப்பு இருக்கிறது, அப்படி முழுவதும்‌ சொல்லிவிட முடியாது என்றே தோன்றுகிறது. சீனத்தில்‌ ஆரம்ப காலத்தில்‌ கவிதை இருந்திருந்ததால்‌ அது இன்று வரை வந்திருப்பதாக தெரியவில்லை. ஜப்பானில்‌ கவிதையும்‌ வசனமும்‌ சற்றேறக்‌குறைய ஒரே காலத்தில்‌ தோன்றியதாகவே தெரிகிறது. இப்படி சில மொழிகளில்‌ மாறுபட்டாலும்‌ பொதுவாக இலக்கியம்‌ கவிதையாகத்‌தான்‌ சமுதாயங்களில்‌ உருவாகியிருக்கிறது என்று சொல்லலாம்‌.

அமெரிக்க இகாக்களின்‌ கவிதையை யுனெஸ்கோ ஒரு நூலாக பிரசுரித்திருக்கிறது. அதேபோல்‌, இந்திய மலைவாழ்‌ மக்கள்‌ கவிதைகளைப்‌ பலர்‌ மொழிபெயர்த்துத்‌ தந்திருக்கி‌றார்கள்‌. இலக்கியமாக உருவாகிய பல கவிதைகளையும்‌விட இதில்‌ சக்தியும்‌ வேகமும்‌ நேரடித்‌ தாக்கமும்‌ அதிகமாக இருப்பது போல தோன்றுகிறது. அது ஒருவகை கவிதை. உலகில்‌ பல பாகங்களிலும்‌ பரவலாக காணக்‌கிடக்கிற அற்புதமான கவிதை, சமீப காலத்தில்தான்‌. இதெல்‌லாம்‌ பற்றிய ஆராய்ச்சிகள்‌ விரிவாக நடக்கின்றன.

முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்‌ Great Poems of the West என்று ஒரு பெரிய நூல்‌ வழக்கிலிருந்தது. இப்போது அது கிடைக்குமா என்று தெரியவில்லை. அந்த நூலில்‌ முதற்கவிதைகள்‌ எகிப்தில்‌ கி.மு. 3000 ஆண்டில்‌ எழுதப்பட்டதாக வெளியாகியிருக்கிறது. அதுதான்‌ முதல்‌ உலக கவிதையா என்பதும்‌ நிச்சயமாகத்‌ தெரியவில்லை.

உலகக்‌ கவிதைகளின்‌ போக்கு

கவிதைகள்‌ மொழி அடிப்படையில்‌ உருவாவது மட்டுமல்ல பூகோள, பிராந்திய, சீதோஷ்ண நிலைகளாலும்‌ உருவாகின்றன. தேசத்துக்கு தேசம்‌, பிராந்தியத்துக்கு பிராந்தியம்‌, கவிதை மரபு வித்தியாசப்படுகிறது. இந்த வித்தியாசங்களுக்கு அப்பாற்‌பட்டதாக ஓர்‌ உலகக் கவிதை மரபு உருவாவதும்‌ நமக்குத்‌தெரிகிறது என்று சொல்லலாம்‌. ஒரு மொழியில்‌ உள்ள கவிதைகளையே அறிந்துகொள்ள ஒரு வாழ்நாள்‌ போதுவதில்லை. மறுபிறப்பிலும்‌ தொடர்பு விட்டுப்‌போகாமல்‌ இருந்தால்‌ நல்லது என்று தோன்றுகிறது. பல ஜென்மங்கள்‌ வேண்டும்‌ கவிதையை அனுபவிக்க. மாணிக்கவாசகர்‌, நடராஜ உருவத்தை அனுபவிக்க மானுடப்பிறவியும்‌ வேண்டியதே என்று பாடியதுபோல.

வேதகாலத்து கவிதைகளில்‌ இயற்கையையும்‌, அதன்‌ சக்திகளையும்‌ கண்டு வியந்து கவிதை செய்திருப்பது தெரியவருகிறது. உஷஸ்‌ என்றும்‌, இரவு என்றும்‌ பல பாடல்கள்‌ மனித அறிவு அனுபவத்தின்‌ சிகரங்களாக இடம்‌பெற்றுள்ளன.

ஹிப்ரு தீர்க்கதரிசிகள்‌ மக்கள்‌ போகிற போக்கை அவர்கள்‌ காலத்தில்‌ கண்டு மனிதகுலத்தையே உருப்படமாட்டாய்‌ என்று சபிப்பது போல தீர்க்கமாகச்‌ சாபக்‌கவிதைகள்‌ செய்திருக்‌கிறார்கள்‌. இந்த அளவுக்கு சாபக்‌ கவிதைகள்‌ இந்தியப்‌ புராணங்களில்‌ இடம்‌பெற்றதாக தெரியவில்லை. சாபங்கள்‌ இருக்கும்‌, நிவர்த்தியும்‌ இருக்கும்‌. சுருக்கமாக, அவசரமாக முடிந்துவிடும்‌. ஹிப்ரூ சாபக்‌கவிகள்‌ இலக்கிய நயத்துடன்‌ அன்றும்‌ இன்றும்‌ மனித குலத்துக்கு பொருந்துவதாக பைபிளில்‌ இடம்‌பெற்றுள்ளன.

சீனத்து கவிதைகளில்‌ யதார்த்தமும்‌ லட்சிய வேகமும்‌ கலந்து வருவது ஒரு சிறப்பு. குஃபூ; லீபோ என்று பல மகாகவிகள்‌ சீன இலக்கியத்தை அலங்கரித்திருக்கிறார்கள்‌. ஒரே ஒரு சுருக்கமான கவிதை மட்டும்‌ சொல்லுகிறேன்‌ நினைவிலிருந்து.

உதாரணத்திற்கு ஒரு சீனக்கவிதை

லூஉகி என்னும்‌ ஒரு சீனக்கவி கி.பி. ஒன்பதாம்‌ நூற்றாண்‌டை சேர்ந்தவன்‌. பல பெரும்‌ பதவிகளை வகித்துவிட்டு நடுவயதில்‌ அவற்றையெல்லாம்‌ இழந்து ஏழையாக மலைச்சரிவில்‌ ஒரு கிராமத்தில்‌ வசிக்கிறான்‌. அவனை ஒருவரும்‌ வந்து தொந்‌தரவு செய்வதில்லை. வறுமையில்‌ கிடைப்பதை சாப்பிட்டுக்‌கொண்டு எழுபது வயது தாண்டிவிட்டான்‌. ஊரில்‌ பிறந்த ஒரு குழந்தைக்கு நாமகரணம்‌ செய்கிற சடங்குக்கு ஒரு ஏழைப்‌ பெற்றோர்‌ அவனை தெரியாத்தனமாக அழைத்துவிட்டனர்‌. அவரிடம்‌ இனாம்‌ தர எதுவுமில்லை. பிறந்து பதினோரு நாள்‌ ஆன குழந்தைக்கு ஒரு கவிதை எழுதித்‌ தருகிறான்‌. அந்தக்‌ கவிதை பின்வருமாறு அமைந்தது.

‘என்‌ அறிவை நான்‌ பூரணமாக வளர்த்துக்‌கொண்டு புத்திமான்‌ என்று பெயர்‌ பெற்றுப்‌ பதவி வகிக்க திறனில்லாமல்‌ வறுமையில்‌ வாடுகிறேன்‌. குழந்தாய்‌! நீ வளர்ந்து பெரியவனாகி அறிவேயில்லாமல்‌ வாழ்ந்து பெரியவனாக மந்திரியாகி சுகப்படுவாயாக என்று எனக்குத்‌ தெரிந்த தேவனை வேண்டுகிறேன்‌’.

இது ஒரு மாதிரிக்‌ கவிதை. இந்த மாதிரி நடப்பு அறிவு அதிகமுள்ள கவிதைகள்‌ சீனத்தில்‌ அதிகம்‌ உண்டு. வேறு இயற்கையை பாடும்‌ கவிகளும் வாழ்க்கை நிலையாமை பற்றிய கவிகளும்‌ உண்டு.

இந்தியாவிலும்‌ சமஸ்‌கிருதத்தில்‌, தமிழில்‌, மற்ற மொழிகளிலும்‌ இந்த மாதிரி கவிதைகள்‌ உண்டு.

தர்மகீர்த்தி என்பவர்‌ பாடிய கவிதை:

ஏ நிஜ அன்னமே, இங்கு நீ வராதே; இங்கு வாத்துகள்‌ 

அன்னம்‌ என்று சொல்லி நடைபோடுகின்றன. நிஜ அன்னமான

உன்னைக்‌ கண்டால்‌ அவை கொன்று போட்டுவிடும்‌”.

வேறு ஒருவர்‌ பாடுகிறார்‌!

“காதுக்கு ஆபரணங்கள்‌ செய்கிற கலைஞரே! இங்கு ஏன்‌

வந்தீர்‌! இந்தத்‌ தேசத்தில்‌ உள்ள ஒருவருக்கும்‌ காதுகளே 

இல்லை என்று உமக்குத்‌ தெரியாதா!

ஜப்பானில்‌ கவிதை 8-வது நூற்றாண்டு முதல்‌ வழக்கிலிருந்து வந்திருப்பதாக தெரிகிறது. சங்கத்‌ தொகுப்பு நூல்‌ போல 4440 கவிதைகள்‌ அடங்கிய ஒரு பழங்கவிதை தொகுப்பு வெளியாகி இருக்கிறது. ‘மன்யோஷா’ என்று பெயர்‌. பிரிவு, அன்பு, காதல்‌, போர்‌, வீரம்‌ என்று பல விஷயங்களை பாடுகிற கவிதைகள்‌ உண்டு.

கையேந்திக்‌ கவிகள்‌

தமிழில்‌ சங்க இலக்கியத்தில்‌ உள்ளது போல ‘கையேந்தும்‌ கவிதைகள்‌’ இதில்‌ இல்லை என்பது கவனிக்கவேண்டிய விஷயம்‌. எந்த சமுதாயக்‌ கட்டாயத்தில்‌ தமிழில்‌ இத்தனை கையேந்தித்‌ தருமவான்களைப்‌ புகழும்‌ கவிதைகள்‌ உண்டாயின என்பது தெரியவில்லை. ஏற்பதிகழ்ச்சி என்று சொல்லிக்கொண்டே புலவர்கள்‌ கொடுப்பவர்களை தேடியலைந்திருப்பது தமிழில்‌ ஒரு மரபாக வந்திருக்கிறது. நானும்‌ அந்த மரபில்‌ வந்தவன்தான்‌. இது ஏன்‌ என்று ஆய்ந்து பார்ப்பது அவசியம்‌.

கிரேக்கக்‌ கவிதைப்‌ போக்கு

கிரேக்க இலக்கியத்தில்‌ நடுப்பகுதியில்‌ பல சில்லறை கவிதைகள்‌ தோன்றின, துளக்ரியான்‌, பிண்டார்‌, ஸாஃபோ என்று பலர்‌ தோன்றினர்‌. ஸாஃபோ என்கிற கவியரசி பற்றி ஒரு வார்த்தை. அவள்‌ லெஸ்பாஸ்‌ என்கிற தீவில்‌ பெண்கள்‌ பள்ளிக்‌கூடம்‌ நடத்தியதாக தெரிகிறது. பெண்‌ அழகில்‌ ஸ்பெஷலிஸ்டு என்று சொல்ல வேண்டும்‌. பெண்கள் பெண்களைக்‌ காதலிப்பதை ஸாஃபிக்‌ லவ்‌, லெஸ்பியன்‌ லவ்‌ என்று சொல்வது இங்கு இவருடன்‌ தொடங்குகிறது. இவர்‌ கவிதைகள்‌ பெண்களின்‌ அழகையும்‌ காதலையும்‌ பாராட்டுவதாக அமைந்துள்ளன. இவருடைய கவிதைகளில்‌ ஒன்றுகூட முழுசாக கிடைக்கவில்லை என்றாலும்‌ கிடைக்கிற பகுதியிலிருந்து இவருடைய உணர்ச்சி வேகமும்‌ வார்த்தைத்‌ திறனும்‌ கவிதாசக்தியும்‌ உலகம்‌ பூராவையும்‌ கவர்ந்த ஒரு விஷயம்‌.

வள்ளுவர்‌ குறள்‌ வடிவத்தைக்‌ கையாண்டது ஏன்‌?

கிரேக்க லத்தின்‌ மொழிகளில்‌ எபிக்ரம்ன்‌ என்கிற அளவில்‌, சொற்செட்டுடன்‌ செயலாற்றகிற கவிதைகளை சிருஷ்டித்தார்‌கள். ஓர்‌ உதாரணம்‌:

அவன்‌ பேச்செல்லாம்‌ பெண்‌ அழகு பற்றியும்‌

பெண்களோடு பழகுவது பற்றியும்தான்‌ இருக்கிறது.

என்றாலும் அவன் மனைவி ஒரு பிள்ளையைப் பெற 

இரண்டு பேருடன் சோரம் போக வேண்டியிருந்தது.

இந்த அளவுக்குச் சொற்செட்டு என்பதை திருவள்ளுவரில் நாம் காணமுடிகிறது. குறள் என்கிற உருவம் ஆசிரியருக்கு எப்படி கிடைத்தது என்று யோசித்துப் பார்க்கும்போது எனக்கு ஒன்று தோன்றுகிறது. அவர் தன் மனைவியிடமும் தாயாரிடமும் கேட்ட பழமொழிகளைப்போல இலக்கியமாக செய்து பார்க்க ஆசைப்பட்டு செய்திருக்கிறார். அனுபவமும் வார்த்தைகளும் ஒருங்கிணைந்து இழைந்து வந்த கவிதைகள் என்று உலகில் குறள் போலத் தேடினாலும் ஒரு சிலவேதான், மிகச் சிலவேதான் கிடைக்கும்.

இந்திய கவிகளுக்கு மேல்நாட்டு கவிகளின் தாக்கம்

பொதுவாக மேலைநாட்டு கவிதைப்போக்குகள் நம்மில் பலருக்கு தெரியும். ஆங்கிலப் படிப்பின் மூலம் முதலில் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்திய போக்கு. ஷெல்லி, கீட்ஸ், வேர்ட்ஸ்வர்த், டென்னிஸன், எட்வின் ஆர்னால்டு என்கிற பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கவிகளில் ரொமாண்டிக் கவிதைத்தாக்கம். அதிலும் புரட்சியில் நம்பிக்கையுள்ள ஷெல்லிதான் கவியாக அதிகமாக தாக்கம். ஷெல்லியிடம் நமது ஆரம்பக்கால நவீன கவிகள் பலருக்கு அபார நம்பிக்கை. தாகூர், பாரதியார், குமாரன் ஆசான் என்பவர்கள் எல்லோரும் ஒரு காலத்தில் தங்களை ஷெல்லிதாஸன் என்று சொல்லிக்கொண்டதாகவே தெரிகிறது. மைக்கேல் மதுசூதனன் தத் என்பவரை வங்க மில்டன் என்று சொல்லுகிற பழக்கமும் இருந்தது.

பழங்கால கவிகளில் அலெக்ஸாண்டர் போப், ஜான் டிரைடன், ஜான்ஸன் என்கிற ரொமாண்டிக் கவிகளுக்கு முந்திய கவிகள் படிக்கப்பட்டாலும், பரவலாக இந்தியாவில் படிக்கப்படவில்லை. வில்லியம் ஷேக்ஸ்பியரை நாடகாசிரியராக மட்டும் கருத இயலாது. மிகச்சிறந்த கவியாகவும் கருதவேண்டும். அவர் எழுதியுள்ள ஸானெட்டுகள் மிகவும் சிறப்பானவை என்றும் அவர் கவிதை செய்கிறபோது ஒரு நித்தியத்துவ எல்லையை எட்டிவிடுகிறார் என்றும் சொல்லலாம். ஆண்ட்ரூ மார்வெல், நாடகம் எழுதிய கிறிஸ்டஃபா, மார்லோ முதலியவர்கள் நல்ல ஆங்கிலக் கவிகள். சாஸர் என்பவருடன் நவீன ஆங்கிலக் கவிதை தொடங்குகிறது. அதற்கு முன் ‘மிடில் இங்கிலீஷ்’ என்றும் பழைய ஆங்கிலம் என்றும் மாறுபட்ட மொழிகளில் இலக்கியம் இருந்து வந்திருக்கிறது.

ஐரோப்பிய கவிதை இலக்கியப்போக்கு

ஐரோப்பிய கவிதை இலக்கியத்தை மிகவும் பாதித்தவர்கள் என்று ‘புரொவன்ஸல்’ கவிஞர்களை சொல்ல வேண்டும். கிறிஸ்தவ க்ரூஸேடுகள் நடந்த காலத்தில் பிரபுக்கள் வீரர்கள் புடைசூழ போருக்கும் போய்விடுவார்கள். அவர்கள் மனைவிமார்கள் காதல் வேண்டி தவிப்பார்கள். இந்தக் காதல் தவிப்பை (உடல் அளவில் இல்லாமல் மனஅளவில்) தீர்ப்பவர்களாக ‘பிரபடார் புரொவன்சல்’ கவிகள், ஊர்ஊராகச் சுற்றிக்கொண்டு போய் தங்கள் கவிதை உருவங்களுக்கு காரண கர்த்தாக்களாக விளங்கினார்கள் என்பதுடன் பிற்காலத்தில் ஐரோப்பா பூராவிலும், ஏன், இன்று இந்திய தமிழ் இலக்கியங்களும் கையாளும் காதல் என்கிற ஒரு சித்தாத்தத்துக்கும் பிதாமகர்கள் ஆனார்கள் என்று சொல்லலாம். எஸ்ரா பவுண்டு என்பவர் இந்த புரொவன்ஸல் கவிகள் பற்றி நிறையவே எழுதியிருக்கிறார். படித்துத் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம்.

‘ஸானெட்’ என்கிற 14 வரிக் கவிதை அதன் சக்தி வாய்ந்த உருவத்தில் இத்தாலியில் தோன்றி ஐரோப்பாவில் பரவிற்று என்று சொல்வார்கள். தன் மானஸிக நித்திய காதலி பியாட்ரிஸையும் அவள் தனக்கு அளித்த புது வாழ்வு பற்றியும் டாண்டே நூறு ஸானெட்டுகள் எழுதியிருக்கிறார். உலகத்தின் மிக அற்புதமான கவிதை என்று அதை சொல்ல வேண்டும்

மக்கள் கதைகளை சொல்லும் பாவகம், மற்றும் பல நாடக ரீதியான கவிதைகளும் அந்தந்த மொழிகளுக்கேற்ப வெவ்வேறு மொழிகளில் உண்டாகிச் சில சமயம் வேறு இடங்களுக்கும் பரவியிருக்கின்றன, ‘லிரிக்’ என்கிற உருவம் கிரேக்க ‘லைர்’ இசை வாத்தியத்துக்கு பொருந்தப் பாடுகிற வழக்கத்தில் ஏற்பட்டுத் தன் உணர்ச்சிகள் சொல்கிற கவிதைகளுக்கு என்று பெயர் சொல்வது பரவியது. அதை குறுந்தொகை கவிதைகளுக்கு உபயோகிப்பது வழக்கிலிருந்தாலும் சரியல்ல என்றே எனக்கு தோன்றுகிறது.

கவிதை நாடகங்கள் பல மொழிகளில் தோன்றியுள்ளன. கவிதைச் சிறப்புடன் நாடகச்சிறப்பும் பெற்று அவை உயர்வு பெறுகின்றன.

பெருங்காவியங்கள் தவிர, சிறு காவியங்களும் குறுங்காவியங்களும் பல மொழிகளில் உள்ளன. சமஸ்கிருதத்தில் காளிதாஸனின் ‘மேகசங்கேதம்’, ‘குமார ஸம்பவம்’, ‘ரகுவம்சம்’ என்பவற்றை சிறு காப்பியங்களாக ஏற்றுக்கொள்ளலாம். அதேபோல தமிழிலும் வேறு பல இந்திய மொழிகளிலும் உண்டு. பல ஐரோப்பிய மொழிகளிலும் சீனத்திலும் ஜப்பானிலும் கொரியாவிலும் குறுங்காவியங்கள் இருக்கின்றன.

மொழிவளம், மரபு, பிராந்திய பழக்க வழக்கங்கள் இவற்றால் கட்டுப்படுத்தப்பட்டுதான் கவிதை சிருஷ்டியாகிறது. என்றாலும்கூட இவற்றைத்தாண்டி ஒரு மனிதகுலத்தன்மையையும் பொது உலகையும் உணர்ச்சியையும் காலம் கடந்த ஒரு தன்மையையும் காட்டும்போதுதான் உலகக் கவிதை என்பது தோன்றுகிறது. இதை உலகத்தின் சொத்தாக, தங்கம், வயிரம் என்பதுடன் சேர்த்து கணிக்க வேண்டும் என்றே சொல்ல வேண்டும்.

கவிதை உலகின் புதிய போக்கு

தொன்றுதொட்டு வந்திருக்கிற கவிதை உலகில் நவீன காலம் என்று பத்தொன்பதாம் நூற்றாண்டை குறிப்பிடலாம். விஞ்ஞானம், தொழில் வளம் என்பதெல்லாம் ஏற்பட்டதுடன், கலோனியல் ஆதிக்க தேய்வு, தொழிலாளர் வர்க்க மேன்மை, மார்க்ஸியம், மனோத்தத்துவத்தில் சிக்மண்ட் பிராய்ட், அதற்கு முன் சார்லஸ் டார்வின் என்பவர்கள் எல்லாம் தோன்றி இலக்கியத்தில் மனிதச்சிந்தனையில் கவிதைகளில் ஒரு மாறுதலை தோற்றுவித்தார்கள்.

எட்கர் ஆலன் போ என்பவர் 1830 கடைசி ஆண்டுகளில் கவிதை பற்றி ஒரு விமர்சனக் கட்டுரை எழுதினார். போவை அவர் தேசத்து (அமெரிக்க) கவிகள் அதிகமாக பாராட்டாவிட்டாலும் ஃபிரெஞ்சு இலக்கியக்கர்த்தாக்கள் அவர் சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்டு செயலாற்றினார்கள். இவர்களில் முக்கியமானவர்கள் என்று பாடலேர், ஸ்டீஃபன் மல்லார்மே, ஆர்தர் ரிம்போ முதலியவர்களை சொல்லலாம். இவர்களை புதுக்கவிதை உத்திகளையும் பாணிகளையும் துவக்கி வைத்தவர்களாக மேலைநாட்டுக் கவிதையுலகம் போற்றுகிறது.

புதுக் கவிதைகளின் போக்கு

அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த இன்னொரு புரட்சியும் முக்கியமானது. இதை செய்தவர் வால்ட் விட்மென் என்பவர். இவருடைய நூல் கவிதையானாலும் வசன ரூபத்திலே அமையலாம் என்று நிருபித்துக்காட்டியது. அதைத்தொடர்ந்து உலகம் பூராவும், இந்தியாவிலும், தமிழிலும்கூட, ஒரு புதுக்கவிதை இயக்கம் தோன்றி வளம் பெற்றது. பாரதியார்கூட வசன கவிதை என்று ‘காட்சி’களை எழுதினார். தொடர்ந்து கம்பன், நகுலன், ஷண்முக சுப்பையா, பசுவய்யா, ஞானக்கூத்தன் முதலியவர்கள் இன்று புதுக்கவிதை செய்கிறார்கள். சிலருக்கு நவீன ஆங்கிலக் கவிகளான டி. எஸ். எலியட்டும் டபுள்யூ. பி. யேட்ஸும் வழிகாட்டிகள்.

எந்த மொழியிலும் கவிதை என்கிற இலக்கியத்துறை ஓரளவு காலத்துக்கு ஏற்ற அளவில் புதுமை பெற்றுப் புதுப் பொலிவுடன் புது வளத்துடன் செயல்படுகிறது என்பதைக் காண இயலுகிறது. இதுபோக பல பழைய கவிதைகளில் புதுமைகளை இன்றும் காண இயலுகிறது. வள்ளுவர் குறளிலும், இளங்கோவின் சிலப்பதிகாரத்திலும், திருமூலரின் திருமந்திரத்திலும், காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதியிலும், சித்தர்பாடல் சிலவற்றிலும் பெரும் அளவில் இந்த புதுமை காணக்கிடக்கிறது என்பது அவற்றின் பெருமையாகும். இது தமிழின் தனிச்சிறப்பு என்பதுடன், உலக மொழிகளில் உள்ள எல்லா நல்ல கவிகளைப்போல் சிறப்பாகவும் கருதப்பட்ட வேண்டும். ஆங்கிலத்தில் பிரெஞ்சில், ஜெர்மனில், ஸ்பானிஷில், இத்தாலியனில், அராபிக்கில், பெர்சியனில், இந்தியாவில் மற்ற மொழிகளில், சீனத்தில், ஜப்பானில், லத்தீன் அமெரிக்காவில் என்று உலகத்தில் எந்த மொழிக் கவிதையை எடுத்துக்கொண்டாலும் அதில் புதுமை தலைமுறைக்குத் தலைமுறையாகக் காணக்கிடக்கிறது என்பது கவிதை பற்றிய வரையில் மிகச்சிறந்த உண்மை. ஷேக்ஸ்பியர் சொல்லதும், ‘யாயும் ஞாயும் யாராகியரோ’ என்று செம்புலப்பெயல் நீரார் சொல்வதும், ‘பழசு என்பதில் பெருமையில்லை; புதுசு என்பதில் சிறுமையில்லை’ என்பதும், ‘உலகில் ஒரு தடவை செய்யப்பட்டதை மீண்டும் செய்யாதே’ என்று எஸ்ரா பவுண்டு சொல்வதும், சென்ற காலமும் இறந்த காலமும் என்று டி. எஸ். எலியட் சொல்வதும், அழகைப் பாடிய பல கவிஞர்கள் குருடர்கள் என்று சொல்லிய டபிள்யூ. பி. யேட்ஸும் புதுமையை நாடியவர்கள், ஸ்தாபித்தவர்கள்.

இன்றைய கவிதையை தெரிந்துகொள்வதற்கு சில சமீப காலத்திய கவிஞர்களைப் படித்திருக்க வேண்டும் என்று நிச்சயமாக சொல்லலாம். ஜெர்மன் மொழியில் எழுதிய ரெயினர் மெரியா ரில்கே, பிரெஞ்சு மொழியில் எழுதிய பால் வலேரி, ரெனே சார், செயின்ட் ஜான் பெர்ஸ், ஆங்கிலத்தில் எழுதிய டி. எஸ். எலியட், டபுள்யூ. பி. யேட்ஸ், ஸ்பானிஷ் மொழியில் எழுதிய ஃபிரடரெக் கார்சியா வோர்க்கா, அமெரிக்காவில் எழுதிய எஸ்ரா பவுண்டு, மரியாள் மூர், வில்லியம் கார்லாஸ் வில்லியம்ஸ் என்பவர்களுடைய கவிதைகளைப் படித்து அறிந்துகொள்வது மிகமிக அவசியம்.

பூரணமான கலையே கவிதை

இலக்கியம் என்பது பல்கலைக்கழக ஆய்வுகளுக்காகவோ, யாரோ ஒருவர் தங்கள் விஷயம் பற்றி பிரத்யேமாக சலுகை காட்டி ஆராய்ந்து படிக்கப் போகிறார்கள் என்பதற்காகவோ தோன்றுகிற விஷயம் அல்ல. இயக்கம், சிருஷ்டி என்பது கவிதை போன்ற சிருஷ்டி மேன்மை காட்டுகிற துறைகளில் மிகவும் தனிமையில், ரகசியத்தில்கூட நடக்கிறது என்று சொல்லலாம். இது அம்பலமாகும்போது எல்லோருக்கும் இல்லாவிட்டாலும் பலருக்கும் சில நூதன அனுபவங்களை உண்டாக்குகிறது. வாக்கினிலே தெளிவாக்குகிறது; மன சந்துஷ்டியும் ஆனந்தமும் உண்டாக்குகிறது. வாக்கினியே தெளிவும், உண்மையும் எப்படி வருகிறது என்று பாரதி சொன்னான் - உள்ளத்திலே உண்மை உண்டானால் வாக்கினியே உண்மை உண்டென்று. உலகத்தில் மிகச்சிறந்த கவிஞர்கள் எல்லாம் உள்ளத்திலே உண்மையுள்ளவர்கள். அந்த உண்மை வார்த்தைகளிலும் வெளிப்படப் பிரகாசிக்கிறவர்கள் ஒளி தருகிறார்கள். கவிதை என்கிற கலையை பூரணமான கலை என்றே சொல்லலாம். வ.வே.சு. ஐயர் கூறுகிறார், பூரணமான கலை என்பதற்கு அர்த்தம். கவிதை தருகிற அனுபவத்தை வேறு ஒரு கலையும் மனிதனுக்குத் தர இயலாது என்று அர்த்தப்படுத்திக்கொண்டால் அது மிகமிகப்பூரணமான கலைதான்.

இன்னும் மணிக்கணக்காக பேசிக்கொண்டிருக்கிற அளவுக்கு என் கவிதை அனுபவம் எனக்குக் கைகொடுக்கிறது. என்னைக் கேட்பவர்களில் ஒருசிலரேனும் இந்த உலகக்கவிதைகளை அனுபவிப்பதற்கு ஒரு அளவுக்கேனும் முயற்சி செய்வார்களேயானால் நான் பேசியதற்கும், எடுத்து சொன்னதற்கும் பயன் உண்டு என்று நினைப்பேன்.

***

‘உலக இலக்கியம்’, 1989

[இந்தக் கட்டுரை ‘உலக இலக்கியம்’ நூலிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. க.நா.சு. மறைவுக்குப்பின் நூலாக்கம் பெற்றதால், இதனை நம்பகமான பாடமாகக் கொள்ள முடியாது. பொதுவாக, க.நா.சு. நீண்ட கட்டுரைகளுக்குக்கூட உட்தலைப்புகளைப் பயன்படுத்துவதில்லை. இந்நூல் முழுவதும் பல உட்தலைப்புகள் உள்ளன. இவற்றை க.நா.சு.வே இட்டிருக்க வாய்ப்பில்லை. இந்நூலில் உள்ள கட்டுரைகள் சொற்பொழிவாக வழங்கப்பட்டவை என்பதையும் கருத்தில்கொண்டு பார்க்கும்போது பிரதியில் பல திருத்தங்கள் நிகழ்ந்திருக்கும் என அனுமானிக்கலாம். இக்கட்டுரைகளின் மூலவடிவத்தைச் சேகரித்து ஒப்புநோக்குவது அவசியம்.

புதுக்கவிதை தொடர்பான கடைசி கட்டுரை இது. இதுவரை வெளிவந்துள்ள ஒன்பது கட்டுரைகளில் பல இடங்களில் க.நா.சு.வுக்கு இருந்த மரபிலக்கிய ஈடுபாட்டைக் கண்டிருக்கலாம். அடுத்த இதழிலிருந்து மரபிலக்கியம் பற்றி க.நா.சு. எழுதிய கட்டுரைகள் வெளியாகும்.]

***

***
Share:

கவிதையில் சொல்லாட்சிகள் - மதார்

சொல் - உரைநடையில் வைக்கப்படுவதற்கும் கவிதைக்குள் வைக்கப்படுவதற்கும் மலையளவு வேறுபாடு உண்டு. சொல்லே கவிஞனின் கருவி, அதுவே அவனது சொத்து. கவிஞனின் பெரிய தொந்தரவும் கூட சொல்தான். சொல் கவிதையில் எப்படி எப்படியெல்லாம் இயங்குகிறது என்பதையும், புதிய சொல்லாட்சிகள் பிறக்க என்னென்ன காரணிகள் துணை நின்று உதவுகின்றன என்பதையும் ஆராய்வதே இந்த அமர்வின் நோக்கம். 

முதலில் ஒரு கவிதையில் புதிய சொல்லாட்சி எவ்விதம் பிறக்கிறது என்பதை ஆராய்வோம். கவிதையில் ஒரு கருந்துளை உள்ளது. கவிஞன் தன் கவிதையை எழுதத் துவங்கி ஒரு கட்டத்தில் அந்தக் கருந்துளைக்குள் சென்று விழுகிறான். அப்படி விழுந்ததும் அவன் தான் அதுவரை அறியாதவற்றையெல்லாம் அறிகிறான், உணராதவற்றையெல்லாம் உணர்கிறான், சொல்லாதவற்றையெல்லாம் சொல்கிறான், எழுதாதவற்றையெல்லாம் எழுதுகிறான். சொல்லப் போனால் சொல்லாட்சி ஒன்றைக் கவிஞன் கண்டடையும் கணம் அதுதான். "ஆச்சர்ய மாயை" என்கிறார் பாரதி.

"காலாதீதம்" என்கிறார் பிரமிள். ஒருவேளை அந்தக் கருந்துளையை அடையும் முன்னரே கவிஞனுக்கு ஒரு சொல் தேவைப்பட்டு அது அவனுக்குத் தெரியாது இருந்தால் கவிதை கருந்துளையை அடைவதில்லை. அதற்குச் சில காத தூரம் முன்னரே சொற்பிரச்சினையால் கவிதை நின்று உடைந்துவிடுகிறது. கவிஞனும் உடைகிறான். இதனால்தானோ என்னவோ கவிஞன் நிறைய சொற்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள். 

மேலும் சொல்லாட்சிகளில் இன்னொரு முக்கியமான ஒன்று - ஒரு சொல்லாட்சி கவிதைப் பரப்பில் எங்கு தன் இடத்தை அமைக்கிறது என்பதுதான். புனைவில் ஒரு சொல்லாட்சி எங்கும் தன் இடத்தை அமைக்கும்; எளிதில் உள் நுழையும். ஏற்கனவே அங்கு குழுமியிருக்கும் சொற்கூட்டங்களின் அனுமதியை அது பெறவேண்டியதில்லை. அதற்கு பட்டா இடமும் ஒன்றுதான், புறம்போக்கு இடமும் ஒன்றுதான். ஆனால் கவிதையில் அப்படி அல்ல. கவிதைக்குள் ஒரு சொல்லாட்சி நுழைய அது கவிதையின் பிற சொற்களால் அனுமதிக்கப்பட்டே இருக்கவேண்டும். அப்படித்தான் இருக்க முடியும். இன்னும் நுணுக்கமாகச் சொன்னால் ஒரு சொல்லாட்சிக்கு இடம் விட்டே கவிதை கட்டப்படுகிறது. அது வந்ததும் கவிதை நிறைவடைகிறது. 

கம்பன் இதைச் சொன்னான் என்பதை விட இந்த இடத்தில் இப்படிச் சொல்லிட்டான் பா என்று சொல்பவர்களே அதிகம். ஆக கவிதைக்குள் சொல்லாட்சி என்பது அது எந்த விதத்தில் சொல்லப்படுகிறது, எந்த இடத்தில் சொல்லப்படுகிறது என்பதையும் பொருத்தே அமைகிறது. மேற்கூறியதை என் தனி அனுபவத்தில் விளக்குகிறேன் : கல்லூரி முடியுந்தருவாயில் என் நெருங்கிய தோழியொருத்தி தூக்கு மாட்டி இறந்துபோனார். என் மனதுக்கு மிக நெருக்கமானவர். அவர் இறந்து சில ஆண்டுகளுக்கு அவரது பெயரைத்தான் புனைபெயராக நான் வைத்திருந்தேன். அவரது இறுதி நிகழ்வுக்கு நான் சென்றிருந்தேன். முதலில் மருத்துவமனைக்குச் சென்றேன். பிணவறை வாசலில் நின்று ஊரே அழுகிறது. என் உடன் படித்த நண்பர்கள் உடைந்து அழுகின்றனர். நான் அவர்களையெல்லாம் பார்க்கிறேன். எனக்கு அழுகை வரவேயில்லை. சரியாகச் சொன்னால் அந்தச் சூழல் அது என்ன என்ற பெரும் வினாவே எனக்குள். பின் அவரது வீட்டுக்கு உடலை எடுத்துச் சென்றார்கள். அங்கும் கும்பலோடு கும்பலாய் நிற்கிறேன். அழுகை வரவில்லை. மின்மயானத்திற்கு வேண்டுமென்றே தாமதமாகக் கிளம்புகிறேன். தூத்துக்குடி பாலத்தில் நான் கீழிருந்து மேலாக பைக்கில் ஏறுகையில் எனக்கெதிரே மேலிருந்து கீழாக இறுதிக் கிரியைகளை முடித்தவர்கள் திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். நான் வந்தவர்களில் ஒருவரை நிறுத்தி "அண்ணே! எல்லாம் முடிஞ்சிட்டான்னே" என்றேன். அதற்கு அவர் "ஆமாம்!தம்பி, பச்சப் பொடவ சுத்தி அம்மன் மாதிரி இருந்தாளே தம்பி நீங்க பாக்கலயா" என்றார். பச்சைப் புடவை சுற்றிய அம்மன் என்பது என்னை ஏதோ செய்து கண்களிலிருந்து பொள பொளவென கண்ணீரை வரவழைத்தது. ஆக கவிதைக்கும் இந்த ஆற்றல் அதன் இடம், விதம் பொருத்து அமையப் பெறுகிற சொல்லாட்சிகளால் கிடைக்கிறது. உரைநடையிலும் இப்படி சில இடங்கள் வருவதுண்டு. அவை கவிதைகள் அன்றி வேறில்லை. 

மேலும் ஒரு புதிய சொல்லாட்சி பிறக்கையில் கவிஞன் என்ன செய்யவேண்டும் ? அவன் பணி என்ன? வெறுமனே கை கட்டி நின்றால் போதுமா? ஆம் போதும்! ஆனால் அதற்கு 'முன்னர்' அவன் எவ்வளவோ விஷயங்களைச் செய்திருக்க வேண்டும். வழக்கமாக கவிதை நிகழும் கணத்திலே கூட அப்படித்தான். கவிஞன் வெறுமனே தான் கைகட்டி நிற்பதாகவே உணர்வான். ஆனால் அது அப்படி அல்ல. கவிஞன் முன்னரே ஒரு கவிதையை பார்க்கத் துவங்கிவிடுவான். கண்ணால் பார்ப்பான், மனதால் தொடுவான். கவிதை எழுதுதல் என்பதே ஏற்கனவே மொழியில் எழுதாத ஒன்றை மொழிக்குள் கொண்டுவந்து வைப்பதுதான். அப்படி பார்க்கையில் கவிதை எழுதும் கணம் மட்டும் அல்ல கவிதை எழுதும் கணம். ஆயுளின் ஒவ்வொரு நொடியும் கவிஞன் தன் கவிதை உருவாக்கத்தில் தான் இருக்கிறான். கவிஞனின் ஆளுமையும், முனைப்பும், சோம்பலும், கொந்தளிப்பும் கவிதை உருவாக்கம்தான்.புதிய சொல்லாட்சியிலும் அப்படித்தான். சொல்லாட்சிகள் கவிதையின் உறுப்பன்றி வேறென்ன. 

கண்மூடித் தனமாக, அசட்டுத்தனமாக, முழு நம்பிக்கையோடு சொல்லை நம்பி அதன் பின் சென்றால் அவன் கவிஞன்.

சற்றே தந்திரத்துடன், சூது வாதோடு, உஷாராகச் சென்றானேயானால் அவன் உரைநடைக்காரன். உரைநடைக்காரன் ஏமாறுவதில்லை. கவிஞன் ஏமாறுவான் ஆனால் வென்றால் அவன் அடைவது எந்த உரைநடைக்காரனும் நினைத்துப் பார்க்க முடியாத சன்மானத்தை. 

இப்போது சொல்லாட்சிகளுக்கு உதாரணங்களாக ஐந்து மாறுபட்ட சொல்லாட்சியில் அமைந்த கவிதைகளைப் பார்க்கலாம்.

அ) சொல் - கவிதைக்கு உள்

கூடாரமொன்றினுள்  அடுக்கிய

டம்ளர் கோபுரத்தின்மீது

பந்து எறியப்படுகிறது

டம்ளர்கள் சரிகின்றன

துளிமோதி நினைவுகள்

உதிருமே அதுபோல

பெரிய எலும்புத்துண்டை

கவ்விய டாபர்மானைப்போல துள்ளுகிறான்

எல்லாரும் கைதட்டுகிறார்கள்

கூடாரத்தின் பின்னிருந்து மீண்டும்

பழையபடி டம்ளர்களை

சோர்வோடு கோபுரங்களாய்

அடுக்குகிற கிழவனே

நீயே நீயேதான்

பழஞ்சேர்த்தி

ஞாபக அழுத்தி

நினைவடர்த்தி

மீள்மனதி

- ச.துரை

ச.துரையின் இந்தக் கவிதையில் அமைந்த சொல்லாட்சியை "சொல் கவிதைக்கு - உள்" என்று தலைப்பிட்டுள்ளேன். இந்தக் கவிதையின் இறுதியில் புதிய சொல்லாட்சிகள் பிறந்து வருவதைக் காணலாம். பழஞ்சேர்த்தி, ஞாபக அடர்த்தி, நினைவடர்த்தி, மீள்மனதி. இந்தக் கவிதையின் அபூர்வம் என்னவெனில் நாம் இந்தச் சொற்களை புரிந்துகொள்ள முயல்வதற்கு முன்னரே அவை நமக்கு உணர்த்தப்பட்டுவிடுகின்றன. வழக்கமாகக் கவிதைக்குத்தான் இந்த வரையறையை சொல்வோம் இல்லையா. இதில் அமைந்த சொல்லாட்சிகளுக்கு இந்த வரையறையைச் சொல்லலாம். கவிதை நமக்கு - உள் இருக்கையில் கவிதை உணர்த்தப்படுகிறது. இந்தக் கவிதையில் சொல் கவிதைக்கு - உள் இருப்பதால் சொல் உணர்த்தப்படுகிறது. செடிக்கு நீர் ஊற்றிக்கொண்டே வரும்போது திடீரென பூ பூத்துவிடுவதைப் போல கவிதை நிகழ்ந்துகொண்டே இருக்கும்போது சொல்லாட்சிகள் மலர்ந்துவிடுகின்றன. இறுதியில் கிழவன் அடுக்குகிற டம்ளர் கோபுரங்கள்தான் - பழஞ்சேர்த்தி, ஞாபக அடர்த்தி, நினைவடர்த்தி, மீள்மனதி என்றும் தோன்றுகிறது. சொல்லாட்சிக்கு ஒரு அழகிய உதாரணமாக இந்தச் சமகாலக் கவிதை திகழ்கிறது. 

ஆ) சொல் - தனியே இயங்கி கவிதையை உருவாக்குதல்

மாயையின் பேரெழில்

தலைவாசலில் வந்து நிற்கிறது கோழி.

கண் விழித்ததும் வாழ்வினில் நுழைந்திடும்.


இன்னும் சேர்க்கப்படாத பாலகியென

நிலைப்படியில் நின்று பார்க்கிறது அவநியை


தயக்கமின்றி

சஞ்சலமின்றி


ஒரு குதி

குதித்து


அடுத்த படியில் கால் பதிக்கிறது:

மதி அடையா வைகறையில் மாயையின் பேரெழில்.


ஏது நினைத்ததோ ஒரு கணம் சிலைத்து வெறிக்கிறது:

நிரந்தரத்தின் ஸ்தம்பிதம்.


பின் திமிறி அடிக்கிறது றெக்கையை: 

நிலையற்றதின் தித்திப்பு.


அதிமிக மெதுவாக சிறு மென் தாவல் இட்டு நிலம்சேர்கிறது:

ஒரு சமன் தேடும் சலனம்.


அதோ,கூவி ஓடுகிறதே தெருவில்

அன்னமாக்காவின் கோழி.

- சபரிநாதன்

சபரிநாதனின் இந்தக் கவிதைக்கு "சொல் - தனியே இயங்கி கவிதையை உருவாக்குதல்" என்று தலைப்பிட்டுள்ளேன். சபரிநாதனின் இந்தக் கவிதையில் அமையப்பெறும் சொல்லாட்சிகள் தனித்தனி சொற்களாக இயங்கி கவிதையை உருவாக்கம் செய்கின்றன. ஒரு இயந்திரத்தின் பல்வேறு பாகங்கள் தனித்தனியே வேலை செய்து இயந்திரத்தை ஓட வைக்கும் காட்சியைக் கற்பனை செய்வது இந்த இடத்தில் பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். பாலகி, அதிமிக மெதுவாக என நமக்கு ஏற்கனவே பரிட்சயப்பட்ட சொற்களும் வேறு விதமாக இந்தக் கவிதையில் பயன்படுத்தபட்டுள்ளதைப் பார்க்கலாம். நிரந்தரத்தின் ஸ்தம்பிதம், மதி அடையா வைகறையில் மாயையின் பேரெழில் போன்ற அபாரமான வேறுவகைப்பட்ட சொல்லாட்சிகளையும் இந்தக் கவிதையில் காணலாம். இதில் "மதி அடையா வைகறையில் மாயையின் பேரெழில்" என்பதை சிறப்பாகக் குறிப்பிடலாம். இதில் அடையா என்பதை அடையாத என்ற பொருளில் வாசித்தால் இதில் வரும் "மதி" - அறிவைக் குறிப்பதாகிறது. அறிவானது இன்னும் அடைந்துவிடாத அல்லது தொட்டுவிடாத வைகறையில் மாயையின் பேரெழில் என வாசிக்கலாம். அதுவே அடையா என்பதை ஆடு கோழிகள் பட்டியில் அடையும் பொருளில் வரும் "அடைதல்" என்ற பொருளில் வாசிப்போமேயானால் இதில் வரும் "மதி" - அறிவு, நிலவு இரண்டையுமே குறிப்பதைக் காணலாம். அறிவானது தனது முழுமையை எட்டாத வைகறையில் மாயையின் பேரெழில், நிலவானது இன்னும் வானில் மறைந்துவிடாத வைகறையில் மாயையின் பேரெழில் என்றும் வாசிக்கலாம். இந்தக் கவிதையே கோழியைப் பற்றிது என்பதால் நாம் இதனை ஆடு கோழிகள் பட்டியில் அடையும் "அடைதல்" என்ற பொருளில் வாசிப்பதே பொருத்தமாக இருக்கும். ஆக இதில் கவிதையின் பாடுபொருளே புதிய சொல்லாட்சி பிறக்கப் பின் புலமாக அமைவதைப் பார்க்கலாம். 

மேலும் சபரிநாதனின் கவிதைகளில் சொல்லாட்சிகளைக் குறித்து பேசுகிறபோது இங்கே இன்னொரு விஷயத்தையும் சுட்டவேண்டியது அவசியமாகிறது. வழக்கமாக சபரிநாதன் கவிதைகளை வகைப்படுத்துபவர்கள் அதனை "prose poetry" என்ற சொல்லால் குறிப்பதைப் பார்க்கலாம். புதுக்கவிதை என்பதே மரபுக்கவிதைக்கு எதிராக எழுந்த ஒரு இயக்கம். புதுப் புது சொல்லாட்சிகளையும், சொற்சேர்க்கைகளையும் மரபு தன்னகத்தே கொண்டிருக்கும். அதிலிருந்து மாற்றான பாதையில் கவிதை பயணிக்கத் துவங்கியபோது கவிதையில் உரைநடை கலந்து நவீன கவிதைக்கான வடிவம் வரை கவிதை மாறுதலடைகிறது. அதில் புதிய சொல்லாட்சி முற்றிலுமாக மறைந்துபோனது என்று கூற முடியாது. ஆனால் பெருமளவு குறைந்துபோனது. முதலில் கடந்த பத்து வருடங்களுக்குள் எழுத வந்த புதிய கவிஞர்களின் கவிதைகளில் தென்படும் சொல்லாட்சிகளைத்தான் நான் இந்த அமர்வில் பேச விரும்பினேன். ஆனால் அவை மிகவும் குறைவாக அல்லது இல்லாமலேயே இருந்தன. மரபைத் தன் கவிதையின் பின்புலமாகச் சேர்த்துக் கொண்ட கவிஞர்களின் கவிதைகளில் இயல்பாகவே புதிய சொல்லாட்சிகள் அரும்புகின்றன. உதாரணத்துக்கு இசை, கண்டராதித்தன், சு.வில்வரத்தினம் இன்னும் பலர். இங்கு சுட்ட வந்தது என்னவெனில் - சபரிநாதனின் கவிதைகளை prose poetry என்கிறோம். ஆனால் முரண் நகையாக புதிய சொல்லாட்சிகளும் அவரது கவிதையில் காணக் கிடைக்கின்றன. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவது போல் சபரிநாதன் இங்கு தென்படுகிறார். 

இ)கவிதை குவிந்து ஒரு சொல்லைப் பெற்றெடுக்கும் நிகழ்வு 

கீறல் விழுந்த மேஜை


தெரு முனையில்

பூ விற்கும்

பூக்கார மூதாட்டி

சில நாளாய்

அங்கு இல்லை

அவள் அமர்ந்திருக்கும்

உடைந்த நாற்காலியும்

கீறல் விழுந்த நீலநிற மேஜையும்

வர்ணம் இழந்த பிளாஸ்டிக்

வாளியும்

அங்கு இல்லை

இனி

எங்கு போய் வாங்குவேன்

நிரந்தரத்தின்

மலர்ச்சரத்தை 

- தேவதச்சன்

தேவதச்சனின் இந்தக் கவிதையில் ஒரு பிரசவம் நடக்கிறது. வழக்கமாக சொற்கள் தன் வயிறை எக்கி கவிதையைப் பெற்றெடுக்கும். இதில் தலைகீழாக கவிதை (கவிதைக்கான கணம், களம், கதாபாத்திரம்) தன் வயிறை எக்கிப் பார்த்து ஒரு சொல்லைப் பெற்றெடுத்து விடுகிறது -  "நிரந்தரத்தின் மலர்ச்சரம்". அந்தச் சொல் கிடைத்ததும் கவிதை அதைக் கொண்டாடுகிறது; உச்சி முகர்கிறது, கண்ணீர் வடிக்கிறது. கவிதையின் கருந்துளைக்குள் தவறிவிழுந்த தேவதச்சனும் முகம் மலர மேலே வருகிறார். 

ஈ) மரபின் தண்டவாளத்தில் நவீன சொல் ஒன்று ஓடுதல்

எதேச்சையாக பட்டுவிட்டது

உன் கைகள் எவ்வளவு நைஸாக இருக்கின்றன


இந்த நைஸிற்குத்தான் மணிமுடிகள் சரிந்தனவா

முனிகள் பிறழ்ந்தனரா


இதற்காகத்தான் இப்படி

தேம்பி தேம்பி அழுகிறார்களா

இதற்காகத்தான் இவ்வளவு ஓயாத மன்றாட்டமா


இந்த நைஸிற்காகத்தான் அம்மையப்பனை எதிர்க்கிறார்களா

செங்குருதியில் மடலிடுகிறார்களா

இதுமட்டும் போதுமென்றுதான்

கண்காணாத இடத்துக்குப் போய்விடுகிறார்களா


இந்த நைஸிற்காகத்தான்

ஆழக்குழி தோண்டி அதில் பண்பாட்டை போட்டு மூடுகிறார்களா

இதற்காகத்தான் ஓட்டைப் பிரித்து பிறன்மனைக்குள் குதிக்கிறார்களா


இதற்கு ஏங்கித்தான் பசலை ஏறுகிறதா

கைவளை நெகிழ்கிறதா

இந்த நைஸிற்காகத்தான் "வைகறை வாளாகிறதா"


இதற்காகத்தான் எஜமானிகள் பரிசாரகர்களை அன்பு செய்கிறார்களா

முதலாளிகள் சமத்துவம் பேணுகிறார்களா

இந்த நைஸிற்காகத்தான் தென்னந்தோப்பை எழுதி வைக்கிறார்களா


இதற்காகத்தான்

தூங்கும்போது தலையில் கல்லைத் தூக்கிப் போடுகிறார்களா

இதற்காகத்தான் மனைவிக்கு விஷம் வைக்கிறார்களா


அந்த நைஸ் இனியில்லையென்றானதற்காக

தண்டவாளங்களை நோக்கி ஓடுபவர்களுக்கு

பாவம்,அதே நைஸ்தான் வேண்டுமோ.

- இசை

இசையின் இந்தக் கவிதையில் இடம் பெறும் சொல்லாட்சிக்கு "மரபின் தண்டவாளத்தில் நவீன சொல் ஒன்று ஓடுதல்" என்று தலைப்பிட்டிருந்தேன். ஒரு கவிஞன் தன் மரபார்ந்த இலக்கிய அறிவை நவீன காலகட்டத்தோடு பொருத்தும்போது தோன்றும் மாயம் என இசையின் இந்தக் கவிதையைக் குறிப்பிடலாம். "நைஸ்" என்ற ஒற்றைச் சொல் மரபின் தண்டவாளத்தில் ஓடும்போது அது என்னவெல்லாம் செய்கிறது, நமக்கு எப்படியெல்லாம் இருக்கிறது என்பதே இந்தக் கவிதை. இந்தக் கவிதையில் கடைசி மூன்று பத்திகள் மட்டும் சமகாலச் சித்திரத்தையே அளிக்கின்றன. அவை அல்லாத ஏனைய பத்திகள் ஒரு சங்கச் சித்திர உணர்வை வாசிக்கையில் உணரவைக்கின்றன.அதில் நைஸ் போய் அமரும்போது தோன்றும் விந்தை - ஒளவையாருடன் இசை செல்ஃபி எடுப்பதைப் போலாகிறது. 

மரபின் பயிற்சி கொண்ட கவிஞர் சமகாலக் கவிதையில் நவீனத்தை எழுதும்போது பிறக்கும்  சொல்லாட்சியே இசையின் இந்தக் கவிதை. மேலும் இதில் நைஸ் என்பது மட்டும் புதிய சொல்லாட்சியா என்றால் ஆம், முதலிலேயே பார்த்தது போல உரைநடைக்குள் ஒரு சொல்லை வைப்பதும் கவிதையில் வைப்பதும் ஒன்றல்ல. தேவதச்சன் ஒரு கவிதையில் "செமயாக இருக்கிறது" என்கிறார். றாம் சந்தோஸின் சமீபத்திய கவிதையொன்றில் "இவ்வளவு சல்லிசா மகிழ்ச்சி" என்று வருகிறது. அன்றாடத்தில் புழங்கும் சொற்களை கவிதைக்குள் கொண்டுவரும்போது கவிதை அதை அனுமதிக்க வேண்டும். துருத்தி நிற்கிற கூடுதல் சொல்லாக அல்லாமல் கவிதையின் ஒரு உறுப்பாக அச்சொல் அமைதல் வேண்டும். அந்த அடிப்படையில் நைஸ் நைஸாக இக்கவிதையில் இடம்பிடித்து விடுகிறது.

உ) மரபின் சொல் நவீன தண்டவாளத்தில் ஓடுதல்

பிழையான விலங்கை நாம் ஏற்பதும், ஏற்காமலிருப்பதும் சட்டப்படி தண்ட்ணைக்குரியது அல்ல

நீண்டகாலத்திற்குப் பிறகு ஊர் முச்சந்திக்கு வந்தான்

வித்தைகளை வாங்கி விற்கும் யாத்ரீகன் 

தற்செயலாக நாங்கள் கேட்டோம்

ஐயா உம் பயணத்தில் பிழையான மன்னனைக்

கொண்ட

மக்களைக் கண்டதுண்டோ வென்று

பதிலுக்கு யாம் வெட்கும்படி

காற்றைப் பிளந்து கூறிட்டான்

நீரை அளவிட்டு முடிந்தான்

கற்பாறைகளை விலை காட்டினான்

நாங்கள் சினந்து வளரும் மிருகத்தைப்போல

உறுமினோம்

பிறகு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்

அதன்பின் சாந்தமாகி அது நாங்கள்தானா என்றோம்

அதுசமயம் அவன் கேட்டான்

இவ்வாறு அண்டிக்குழைந்தீர்

மதிகெட்டீர் மானமிழந்தீர்

எப்படி இதுவெல்லாம்

இன்ன விலை

இன்ன பொருள்

பார் முழுதும்

விற்க

இது வேண்டும்

கற்றது ஆரொடு சொல்லுதி விரைந்து.


- கண்டராதித்தன்

கம்பராமாயணத்தின் இரணியன் வதைப் படலத்தில் நாராயண நாமத்தை உச்சரிக்கும் தன் மகனிடம் சினந்து இரணியன் பேசும் இடத்தில் வரும் சொல்லாட்சி - கற்றது ஆரொடு சொல்லுதி விரைந்து. யாரிடம் கற்றாய்? விரைந்து சொல். இந்தக் கவிதையில் அந்த மரபின் சொல்லாட்சி நவீன தண்டவாளம் ஒன்றில் ஓடுகிறது. கிட்டத்தட்ட முந்தைய இசை கவிதையின் சொல்லாட்சிக்கு நேர் எதிரானது இந்தக் கவிதை. அது மரபின் களத்தில் நவீன சொல். இது நவீன களத்தில் மரபின் சொல். நேரடியான அரசியல் கவிதை. அரசியலுக்கான களமும் என்றும் ஒன்று போல்தான் அமைகிறது. ஜார்ஜ் ஆர்வெல்லின் 1983 நாவலை இன்று படிக்கும்போது அது இன்றுள்ள நாவல் தான். அன்றும் அதே களம்தான். பெரும்பாலும் எழுதப்படும் அரசியல் கவிதைகளில் காணப்படும் ஒரு பொதுத்தன்மை - சிறிய விளக்கில் எழும் பெரிய பூதம் என்பதாகத்தான் இருக்கும். யவனிகாவின் உலகம் இசக்கியை உழைக்கவே வைக்கிறது என்ற கவிதை - இதில் உலகம் பெரிய பூதம், இசக்கி சிறிய விளக்கு.

மண்குதிரையின் மலைச்சாமியின் வயலை பதினெட்டாம் நூற்றாண்டு மேய்கிறது கவிதையில் 18 ஆம் நூற்றாண்டு பெரிய பூதம், மலைச்சாமி சிறிய விளக்கு. யவனிகாவின் கடவுளின் நிறுவனம் கவிதையில் கடவுள் பூதம் நிறுவனம் விளக்கு.

இப்படி பெரிய ஒன்றும் சிறிய ஒன்றும் இணைந்து கலக்கும் சொல்லாட்சியை பொதுவாக அரசியல் கவிதைகளில் காணலாம். ஆனால் மரபின் பயிற்சியுள்ள ஒரு கவிஞன் நவீன அரசியலை எழுதும்போது அதில் சொல்லாட்சியை எவ்விதம் வைப்பான் என்பதற்கு கண்டராதித்தனின் இந்தக் கவிதை ஒரு நல்ல உதாரணம்.

***

Share:

கவிதைக்கு காலமில்லை - கமலதேவி

நவீன கவிதை ஒன்றை வாசிக்கும் போது அல்லது இசைப் பாடலாக கேட்கும் போது சங்கக் கவிதைகள் மூளையில் வருவதை  கவிதானுபவம் என்று சொல்லலாம்.

உன்னை காணவே……

சங்கப்பாடல்களில் தலைவன் வருகை குறித்து தலைவி, தோழி கூற்றுகளாக வரும் பாடல்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் வியப்பாக இருக்கும். கார்காலம் வந்து விட்டது, முல்லை மலர்ந்துவிட்டது, காலையில் மேய்சலுக்கு சென்ற மந்தை திரும்பும் மணியோசை கேட்கிறது, அந்தியும் வந்ததுவே என்று எத்தனை பாடல்கள். இந்தக் கவிதைகள் ‘இன்னும் வரவில்லை’ என்பதை எத்தனை ஆடிகளில் பிரதிபலித்துக்காட்டுகிறது. கலேடாஸ்கோப்பை திருப்புவதைப்போல தலைவிகளின் மனம் இந்த உணர்வை விதவிதமாக உணர்கிறது.

பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்

வருவீர் உளீரோ எனவும் வாரார்

குறுந்தொகை: 118

உணவிற்காகவும் காரியங்களுக்காகவும் பலர் வந்து செல்லும் இல்லம் அது. இரவில் வாயிலை அடைக்கும் முன் ‘யாராவது வருபவர் உள்ளீர்களா?’ என்று கேட்பது வழக்கம். இரவு உணவு வேண்டியோ, இருப்பிடம் வேண்டியோ யாரேனும் வாயிலில் இருக்கிறீர்கள் என்று கேட்கும் நேரமும் வந்துவிட்டது இன்றும் தலைவன் வரவில்லை என்றாள் தலைவி.

உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை

வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்

புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்உகிர்ப்

பொலங்கல ஒருகாசு ஏய்க்கும்

நிலங்கரி கள்ளியங் காடு இறந் தோரே

குறுந்தொகை: 67

நம் வாசலில் வேம்பு பழுத்திருக்கிறது. கள்ளிகாட்டு வழியில் செல்றான் தலைவன். அங்கும் வேம்பு பழுத்திருக்கும் தானே. மங்கல நாணில் உள்ள காசுகளை  போன்ற பழத்தை கண்டும் ஏன் இன்னும் வரவில்லை என்று தலைவி கேட்கிறாள்.

‘ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த

உலை வாங்கு மிதிதோல் போலத்

தலைவரம்பு அறியாது வருந்தும் என்நெஞ்சே

குறுந்தொகை: 172

தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை. இரும்பு உலை துருத்தியை உவமையாக்கி அந்த துயரை தலைவி உணர்த்துகிறாள். சங்ககாலம் போர்கள் நடைபெற்ற காலம். கொல்லர் பட்டறைக்கு ஓய்வு கிடையாது. அதுவும் ஏழு ஊர்களுக்கு பொதுவாக உள்ள பட்டறையின் துறுத்தி போல முடிவிலாது துயருற்றேன் என்கிறாள்.

பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகிய

சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயர் கடைநாள் 

குறுந்தொகை: 2

வருவதாய் சொன்ன காலத்தில் வராது போன தலைவனால் காலம் தப்பிப்பெய்த மழையால் உள்ளீடு அற்று போன எள் செடி போல அனேன் என்று இந்தப்பாடலில் தலைவி சொல்கிறாள்.

என் கண்

துஞ்சா வாழி தோழி! காவலர்

கணக்குஆய் வகையின் வருந்தி,என்

நெஞ்சுபுண் உற்ற விழுமத் தானே 

குறுந்தொகை: 261

இந்தப்பாடலில் தலைவன் வராததால் ஒரு கணமும் கண்களை மூடாத நாழிகை கணக்கனை போல நானும் மாறினேன் என்கிறாள் தலைவி.

கோடீர் இளங்குவளை நெகிழ நாளும்

பாடில கலிழ்ந்து பனியா னாவே

துன்னரும் நெடுவரை ததும்பிய அருவி 

தன்ணென் முரசின் இமிழிசை காட்டும் 

மருங்கிற் கொண்ட பலவிற்

பெருங்கல் நாடநீ நயந்தோள் கண்ணே

இந்த அருவி ஆர்ப்பரித்து விழக்கூடிய அருவி இல்லை. முரசின் ஆழ்ந்த ஒலியை உடைய அருவி. தலைவன் வருகைக்காக ததும்பும் அருவி.

இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்

தோலாவாறு இல்லை தோழி நாம் சென்மோ

சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே

மாசு இன்றாதலும் அறியான் ஏசற்று

என் குறைப் புறனிலை முயலும்

அண்கணாளனை நகுகம் யாமே 

தலைவன் வரமாட்டானோ என்று அஞ்சும் தலைவியிடம் தோழி ‘தன் இனத்திலிருந்து விலக்கப்பட்ட களிறு போல நேற்று சென்றவன் இன்றும் வருவான். உன்னிடம் நேராக பேச பயந்து என்னிடம் தூதுவிடும் அவனை கேலி செய்வோம் வா…’ என்கிறாள். 

இன்னும் இன்னும் பல பாடல்களில் இந்த உணர்வு கையாளப்பட்டுள்ளது. தற்செயலாக வாசித்த அல்லது பாடலாக கேட்ட கவிஞர் இசையின் கவிதை ஒன்று இந்தக் கவிதைகளை நினைவுபடுத்தியது. சங்கபெண்கவிகளின் கவிதைகள் இவை. இந்தப்பாடல்களுக்கு பதிலாக இந்த நவீன கவிதை  ஒலிக்கிறது. தலைவன் கூற்றாக சில பாடல்கள் உண்டு. தன் பாங்கனிடம், தேரோட்டியிடம் விரைந்து செல்லுமாறு தலைவன் கூறும் பாடல்கள் அவை. ஆனாலும் என் வாசிப்பின் எல்லைக்குள் தலைவி கூற்றாக வரும் இத்தனை பாடல்களின் கவித்துவத்திற்கு ஈடாக அந்த பாடல்கள் இல்லை. தலைவி பேரருவியாக கலங்கும் போது தலைவனிடம் சொற்கள் இல்லையோ என்று தோன்றும். அல்லது தலைவி போல சொல்வதில் தலைவனுக்கு ஏதோ ஈகோ சிக்கல் இருக்க வேண்டும். இந்த நவீனகவிதைக்கு அந்த சிக்கல் இருந்த போதும் இறுதியில் கவிதை சென்று தொடும் இடத்தில் அந்த சிக்கலே கவித்துவமாகிருக்கிறது. வார்த்தைகளின் இணைப்பு, குறிப்புணர்த்துதல், உணர்வமைதி, சொல்லமைதி என்று பல விஷயங்கள் கவிதைக்கு உண்டு. இந்த நவீனக்கவிதையை மேற்சொன்ன சங்கக் கவிதைகளுடன் இணைக்கும் போது சொல்முறையும், கவிதையின் படிப்படியான விரிதலும்… எதற்காக வீட்டிற்கு வந்தேனில் தொடங்கி, எதற்காக இவ்வுலகிற்கு வந்தேன் என்று முடியும் இந்தக்கவிதை இனியவாசிப்பனுபவமாகிறது,

கச்சிப்பட்டு நன்னாகையோ, அள்ளூர் நன்முல்லையோ, நல்வெள்ளியோ  இருந்தால் புன்னகைத்திருக்கக்கூடும். இந்த நவீன கவிதையை மையப்படுத்தினால் மேற்சொன்ன சங்கக்கவிதைகள் நவீன கவிதைகளாக முகம் காட்டுகின்றன. கவிதை என்றும் புதியது.

ஆம்

உன்னையல்ல

நீ.வாழும் வீட்டைக் காணவே

உன் தெருவில் அலைந்தேன்.

உன்னையல்ல

நீ வசிக்கும் தெருவைக்

காணவே இந்த ஊரில்

திரிந்தேன்.

உன்னையல்ல

நீ திகழும் ஊரைக் காணவே இவ்வளவு தூரம்

வந்தேன்.

உன்னையல்ல

உன் ஊருக்கு செல்லும் வழியைக்காணவே காடு

மலை கடந்தேன்.

உன்னையல்ல

நீ வாழும் பூமியைக் காணவே இந்த பூமிக்கு

வந்தேன்.

 - கவிஞர் இசை

மேலும் உன்னையல்ல என்று சொல்லி எத்தனை உன்னைகளை காண்கிறது இந்த மனம். புறப்பாடலில் வரும் யாதும் ஊரே யாவரும் கேளீர் போல மனம் விரியும் கவிதை இது. ஒற்றை அன்பை கொண்டு இந்த பூமி முழுவைதயும், இந்த முழு வாழ்வையும் நேசிக்கும் அளவுக்கு.

***


***
Share:

விழி நோக்குதல் - தேவி. க

ஒருமுறை திருநாகஸ்வரம் திருமணஞ்சேரி பரிகார தலங்களுக்கு சென்று திரும்பும் போது சிறிதும் பெரிதுமான சாலைப் பணிகளும் மேம்பாலம் வேலைகளும் நடந்து கொண்டிருந்ததால் கூகுளின் உதவியுடன் சின்ன சின்ன தெருக்களில் எல்லாம் நுழைந்து எங்கள் வாகனம் வந்துக் கொண்டிருந்தது. ஒரு திருப்பத்தில் சட்டென்று அழகிய பெரிய கோபுரம் எழுந்து வந்தது வியப்புடன் அதை பார்த்துக்கொண்டிருக்கும் போதே அரைத் தூக்கத்தில் இருந்து விழித்த என் அம்மா "ஹேய்ய் இது கங்கைக்கொண்ட சோழபுரம்" னு கூக்குரலிட்டார்கள். எத்தனையோ முறை எண்ணிய தலம் திடுப்பென்று கண் முன்னே எழுந்து வந்ததை இன்றும் என்னால் மறக்க முடியாது அதை போன்றதொரு அனுபவம் கவிஞர். பொன்முகலியின் கவிதைகள். 

பெரும்பாலான காதல்கவிதைகளில் நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்றும் எப்படி எல்லாம் விரும்புகிறேன் என்றும் நீ மறுத்தால் என்னவாகுவேன் தெரியுமா என்றே இருக்கும். ஆனால் அரிதாக பொன்முகலியின் கவிதை வேறு ஒரு ஒன்றை சொல்கிறது எது எப்படி ஆனாலும் நீ என்னை தொடர்ந்து நேசித்து இருக்க வேண்டும் என்கிறது நான் உன்னை மட்டுமல்ல எல்லோரையும் குருதி வழிய கிழிக்கும் முள்ளாக இருந்தாலும் காதலிக்க வேண்டும் என்கிறது அத்தனை கனிவும் பரிவும் உனக்கு வேண்டும் என்று கோரவில்லை ஆணையிடுகிறது. இந்த குரல் புதிதாக நேசிப்பிற்குரியதாக இருக்கிறது.

நீ என்னை காதலித்திருக்க வேண்டும்.

நீருக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிற ஒருவனை

கரைக்கு இழுப்பவனின் தீவிரத்துடன்.

கழுத்தெலும்பு உடைபட்ட குதிரையை

கருணைக்கொலை செய்பவனின்

அனுதாபத்துடன்.

முற்றிலும் இலைகள் உதிர்ந்த

ஒரு கருவேலமரத்தைப்போல,

எவரையும் கிழித்துவிடும்

கூரிய வன்மத்தின் முட்களோடு

நான் இருந்திருந்தாலும்,

கனிந்த முகத்தோடு

தனது மேடிட்ட வயிற்றை

பரிவோடு வருடுகிற

ஒரு கர்ப்பிணியைப் போல

நீ என்னைத் தொடர்ந்து நேசித்திருக்க வேண்டும்.

காதலர்களுக்கிடையில் "விழி நோக்குதல்" என்பது காவியங்கள் தோறும் சொல்லப்பட்ட ஒன்று. ஆண்டு கணக்கில் ஒரு சொல்லும் பேசிக் கொள்ளாமல் அத்தனை உறுதியாக ஒருவரையொருவர் நேசிப்பதாக நம்பிய நண்பர்களை அறிவேன். எப்படி சொல்லிட்டீயா? என்றால் சொல்லனுமா பார்த்தாலே தெரியுதே என்று பதில் வரும். அவர்கள் வாழ்வில் இணையும் போது இனிய ஆச்சரியமாக இருந்தது. ஒரு பார்வை அணைக்கும் முத்தமிடும் குளிர்விக்கும் ஒருபோதும் தீரா தழலில் எரியவும் செய்திடும். அமீர் குஸ்ராவின் இந்த வரிகள் மிக பொருத்தமானவை "The only cure for the patient of Love is the sight of the Beloved".

அத்தகைய விழிகள் இங்கு எங்கும் நிறைந்து இருக்கும் ஆகாயத்தின் பகுதியாக நட்சத்திரங்களாக மாறி நோக்கினால் அமைதி உண்டாகுமா? ஆனால் பாடலாக மாறிவிட்டால்.

விண்மீன்கள் உன் கண்களாய் மாறி

என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிற

இவ்விரவில்,

நான் எப்படி அமைதியுறுவேன் சொல்?

அந்தியின் வழி நடந்து

ஆதவன் அடைகிறான்.

நிலவு ஒரு தும்பை பூவைப் போல

வானத்தில் மலர்கிறது.

நீயும் நானும்

காலத்தின் ஓயாத பாடலில்

ஒலிக்கத் துவங்குகிறோம்

செய்வதற்கு ஒன்றும் இல்லாத அல்லது ஆயிரம் இருப்பதாக நம்பினாலும் எதுவும் தோன்றாமல் இயலாமல் இருக்கும்

மதியப்பொழுதுகள் மிக நீளமானவை. இரவின் அமைதியைவிட நண்பகலின் அமைதி கூரியது அலைக்கழிப்பது. வெளியே சற்று தூரத்தில் உலகமே அதிவேகமாக ஓடிக் கொண்டுயிருக்கும் வேளையில் ஒரு அறையில் இருக்க நேரும் பொழுதில் சிதறி பரந்துவிடும் என்னை அங்கே இயங்கிக் கொண்டு இருக்கும் ஏதேனும் ஒன்றுடன் பொருத்திவிடுவேன் அநேக நேரங்களில் மிக மனமுவந்து அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளுவது தலைக்கு மேல் சுற்றிக்கொண்டு இருக்கும் மின்விசிறி தான். என்னை இழுத்து அதனுடன் சுழலவிடுவேன். முதலில் மிக வேகமாக பின் சற்று குறைத்து பின்பு மெல்ல மிக மெல்ல அது கடக்…கடக்..என்று இழுத்து ஒரு கட்டத்தில் நிறுத்தும் வரை இந்த ஆடல் நிகழும்.  பொன்முகலியின் இந்த கவிதையை வாசித்து முடிக்கும் போது கவிதையை அணைத்துக் கொண்டும் அவரின் கைகளை இறுகப் பற்றியும் கொண்டேன். அத்தனை அணுக்கமான ஒன்று.

மின்விசிறி காற்றை வெட்டி வெட்டி வெளியை உண்டுபண்ணுகிறது.

காற்று மின்விசிறியை

வெட்டி வெட்டி

வெளியை உண்டுபண்ணுகிறது.

***

தீபு ஹரி பொன்முகலி தமிழ் விக்கி பக்கம்

***

Share:

சில தமிழ் கவிதை - பிரமிள்

  வடக்குவாசல்: தபாலில் வந்த தனித்துவம்


தபாலில் வந்தது -

செந்தாமரையில்

சீட் பிடித்துக் கைகாட்டி

அருள் பாலிக்கும்

தெய்வத்தை அச்சிட்ட

சீப்பான காலண்டர் அல்ல.

காலம் சரசரத்து

ஓடவிரியும்

டைரியும் அல்ல.

தபாலில் வந்தது

ஊர்பேர் அற்ற

தனித்துவம் ஒன்று.

‘என்னை உனக்குத்

தெரியாது’ என்று

மைடியர் கூட

இல்லாமல் துவங்கி

‘உன்னை எனக்குத்

தெரியும்’ என

முடிந்தது கடிதம்.

ஊர்தேதி கையொப்பம்

அனுப்புநர் முகவரி 

எதுவுமே இல்லை.

தபால் தலையில் மட்டும்

ஜே.கே. ஜாக்பாட்

என்றொரு சீல்.

ஈதென்ன பைத்யம்

என்றொரு பிச்சுவாய்

காற்றாட வாக்போய்

பு.பி.க்குப் பிடித்தது

காபி என்று

குடித்து முடித்து

சிகரெட் யக்ஞத்தை

நடத்தத் துவங்கினேன்.

புகையிலைச் சுருளைப்

பிடித்த நெருப்பில்

இன்மையின் இருப்பு.

ஜடத்தின் உயிர்ப்பில்

உள்வாங்கும் பிழம்பு.

பிழம்பு புகைந்து

என்னுள் விகசித்து

உள்வெளி ஆயிற்று.

வெளியே சிலிர்த்த

சிகரெட் புகையில்

இலையும் உடலும்

இல்லை உண்டென

இணையும் ரஸவாதம்.

சிகரெட் புகைதான்

இருந்தும் அதுதான்.

புலனுக்கும் புலனெட்டாப்

பரிமாணங்களுக்கும்

இடைவெளிகளிலே

திரிந்துகொண்டிருந்தேன்.

வெளிதோறும் நின்றது

ஒருகணப் பொறி.

கையொப்பமின்றி

அனுப்புநர் பெறுநர்

முகவரி இன்றி

காலமும் இன்றி

அண்டத்தை அளாவி

நின்றது தனித்துவம்.

***

பிரமிள் தமிழ் விக்கி பக்கம்

பிரமிள் கவிதைகள் வாங்க...

***

Share:
Powered by Blogger.

கவிதை - இந்திய, உலக இலக்கியப்‌ போக்குகள் – 2: க.நா.சு

மனித இனத்தின்‌ முதல்‌ இலக்கிய வடிவம்‌ கவிதையே காவியங்களை பற்றி இவ்வளவு போதும்‌. இப்போது கவிதை என்று பார்க்கலாம்‌. பொதுவாக உலக மொழிகளில்‌ எல்...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (8) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (7) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (201) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (3) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (4) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (8) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (7) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (201) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (3) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (4) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive