"வானத்தை வெறித்துக் கொண்டிருக்கிறான் தனியன்
இம்முறை நிலவு கூட இல்லை ஆகாசத்தில்"
என்று துவங்கும் ஒரு கவிதை வே.நி.சூர்யாவின் அந்தியில் திகழ்வது தொகுப்பில் வருகிறது. இதில் வரும் தனியன் தான் வே.நி.யின் எல்லா கவிதைகளிலும் வருகிறான். தமிழ்க் கவிதையில் 'தனியன்' அதிகமாக இடம் பெற்றது நகுலனின் கவிதையில் தான். எல்லா கவிஞர்களுமே தனியர்கள் தான். ஆனால், அவர்கள் தன்னை பிரபஞ்சத்தோடு தொடர்புபடுத்தி கொள்கிற ஒரு இடம் உண்டு. அந்த இடத்தில் அவர்கள் தனியர்கள் இல்லை. நகுலன் சுசீலாவோடும், பூனையோடும் தன்னை தொடர்புபடுத்திக் கொள்ள முயன்றாலும் அவர் தனியனாகவே தான் இருக்கிறார். இந்த வினோதத்துக்கு காரணம் அவர் தொடர்புபடுத்தும் பூனையும், சுசீலாவும் அவரது தனிமையையே அடைகிறார்கள் என்பதால்தான். பிரபஞ்சத்தோடு தொடர்புபடுவதில்லை. ஆனால் அதுதான் நகுலனின் தனித்துவமாக அமைந்தது. வே.நி.சூர்யாவின் முதல் தொகுப்பு கரப்பானியம். அதில் அவர் தொட்ட யாவுமே தனிமையை அடைந்தன. அந்தியில் திகழ்வதில் சூர்யா தனிமையைத் தொட வருகிறார். ஆனால் பிரபஞ்சத்தோடு தொடர்புபடுகிறார். இது கவிதை கவிஞனை இழுத்துச் செல்லும் இடம். இது சூர்யாவின் இரண்டாவது தொகுப்பிலேயே ஒரு மாற்றமாக அவருள் நிகழ்ந்திருக்கிறது.
கண்களும் வெற்றிடமும்
அந்திக்கருக்கலில் எனக்குக் கண்ணாடியைக் கழற்றிவைக்கும்
ஆசை வந்துவிடுகிறது
கவசமற்ற வெறும் கண்களோடு நடை போகிறேன்
சும்மா சொல்லக்கூடாது
மங்கலாகத் தெரிவதிலும்
சில நன்மைகள் இருக்கவே செய்கின்றன
ஒரு நொடிதான்
எதிர்ப்படும் முகங்கள் யாவும் ஒரே முகங்கள் ஆகிவிடுகின்றன :
மங்கல் முகங்கள்
அவ்வளவு பேரும் புதியவர்கள்
இனிமேல்தான் அறிமுகம் செய்துகொள்ளவேண்டும் போல
ஒருவரைக் கூட எனக்குத் தெரியவில்லை
பெயர்ப்பலகைகளில், சுவரொட்டிகளில், பேருந்துகளில் என
எந்த எழுத்தையும் படிக்க முடிக்கவில்லை
வேறு ஏதோ மொழியில் இருக்கின்றன அவை:
அர்த்தம் தர மறுக்கும் ஓர் உலகம்
நிறங்கள் நிறங்கள் ஆகப் போராடுகின்றன இங்கு
இந்தத் தேவாலயச் சப்தம் மட்டுமில்லை எனில்
இத்தருணம் ஒரு கனவேதான்
வழியில் பிறகு பாரபட்சமின்றி
இருட்டிவிட்டதைப் பார்க்கிறேன்
இனி நான் எனது ஊருக்குத் திரும்ப வேண்டும்
நெருங்கிநெருங்கிப் பார்த்தும்
பின்பு கண்ணாடி அணிந்தும்
***
தியானம்
இந்நாட்களில் காலையில் எழுந்ததும்
முதலில் பார்ப்பது சன்னல்களினூடாக அறைக்குள்
ஊர்வலம் போகும் ஒளித்துகள்களைத்தான்
என்ன கோஷம்
என்ன காரணத்திற்காக
ஒருவேளை ஒன்றுமில்லையோ?
அறிய முடிந்ததேயில்லை என்னால்
ஆனாலும் வெறுமனே ஒவ்வொரு காலையிலும்
ஒரு தியானம் போல
மேலும் சில நிமிடங்கள் அவற்றை பார்க்கிறேன்
பின்பு ஒரு எறும்பைவிடவும் சிறிய ஆளாக
ஏழெட்டுமுறை படிக்கட்டில் ஏறியிறங்கிவிட்டு
அம்மாவின் எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏறிநிற்கிறேன்
பூஜ்ஜியத்தை தவிர வேறு எண் வரவே மாட்டேன் என்கிறது
***
வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்
0 comments:
Post a Comment