நிகழ்வில் திகழ்தல்: ஸென் கவிதைகள் பற்றி ஒரு எளிய அறிமுகம் - காஸ்மிக் தூசி

ஸாஸென் எனும் ஆசனம்:

ஜப்பானிய ஸென் பௌத்த நூல்களிலிலும் வரும் “Zazen” என்ற சொல்லுக்கு அமர்ந்த நிலையில் மேற்கொள்ளும் தியானம் என்பது பொருள். பதஞ்சலியின் யோக சூத்திரங்களின் எட்டு அங்கங்களுள் மூன்றாவதாக வருவது ஆசனம். “அமர்தல்” என பொருள்படும் ‘ஆசன (आसन,)’ என்ற சமஸ்கிருத சொல் ‘zuòchán’ (坐禪 ) என சீன மொழிக்கு சென்று  zazen (ざぜん) என ஜப்பானியத்திற்கு வந்து சேர்ந்தது. 

அதாவது முறையான சுவாசம், குவிந்த மனம் மற்றும் இறுக்கமில்லாத ஆடையுடன் அமர்ந்த நிலையில் ஒழுங்குடன் மேற்கொள்ளும் தியானம். முதுகெலும்பை நேராக்கி உடலின் தசைநார்களை நெகிழ்த்தி, தசைகளின் பதற்றத்தையும் இரத்த அழுத்தத்தையும் குறைத்து விழிப்புணர்வு மற்றும் கவனத்தை அதிகரிக்கும் ‘பத்மாசனம்’தான், Zazen என்பது.

***

ஸென் எனும் தியானம்:

zen - என்பது ஸென் அணுகுமுறை, சிந்தனையையும் Zen என்பது புத்தமத பிரிவையும் குறிக்கிறது. ‘த்யான’ (dhyāna - ध्यान) என்ற சமஸ்கிருத சொல் சீனமொழிக்கு சென்று ‘chánnà’, (禪那) என வழங்கி காலப்போக்கில் ‘chán’ (禪) என மருவி ஜப்பானை சென்றடைந்தது. ‘chán என்ற சீனச்சொல்லின் ஜப்பானிய ஒலிபெயர்ப்புதான் ‘zen’ (kana: ぜん) என்பது. 

கொரிய மொழியில் Seon (선) என்றும் வியட்நாமிய மொழியில் Thiền என்றும் அழைக்கப்டும் zen என்ற சொல்லுக்கு  ஈடான ஒலிபெயர்ப்பு “tgen” அல்லது “tzen” எனும் தமிழில் இல்லாத உச்சரிப்பு. ஆகவே ஸென் அல்லது ஜென் என்ற சொற்களை பயன்படுத்தலாம். 

ஹான் சான்

தியானம் என்று பொருள்படும் சொல்லாக இருந்தாலும் ‘சமாதி’ எனப்படும் ஆழ்நிலை தியானத்தையே இங்கு ஸென் என்ற சொல் அடையாளப்படுத்துகிறது. புத்த ஆய்வில் தேர்ச்சி பெற தேவைப்படும் எண்வகை மார்க்கங்கள். அவைகளை அடையும் வழிகளான ஒழுக்கம் (சீலா)  ஆழ் கவனம் (சமாதி) மற்றும் முழுதறிவு (பிரஜ்ஞா) ஆகிய மூன்று நெறிகளும் ஒருங்கும் பயிற்சியின் மையமாக தியானம் அமைகிறது. 

சிவஞானபோதத்தில் வரும் ‘சானத்தின் தீர்விடம்போல்’ என்ற வரியின் ‘சானம்’ என்ற சொல் தியானத்தை குறிக்கிறது. நெதி, உன்னம், பாவகம், முகம், ஸ்மரணம், தியாத்துவம், நிஷ்டை, பாவனை, முதிதை, ஸகிருதாகாமி, ஊழ்கம் என தியானத்தின் நிலைகளை குறிக்க பல சொற்கள் தமிழில் உண்டுதான். என்றாலும், இவை எதுவும் ஸென் பெளத்தம் உத்தேசிக்கும் விஷேஷ தளத்தில் பொருள்படுவதில்லை என்பதால்,‘ஸென் அல்லது ஜென் என்ற சொல்லை பயன்படுத்துவதே சரியானதாக இருக்கும்.

போதிதர்மரும் ஸென் பெளத்தமும்:

கிழக்காசியாவிலும் கிடைக்கும் ‘போதி மரத்தின் கீழ் தியானிக்கும் புத்தர்’ என்ற படிமம் வழியாக தியானம் பெளத்தத்திற்கு அடிப்படையானது என்பது எளிதில் அறியக்கிடைப்பது. பெளத்த பயிற்சியில் தியானம் இருந்தமை முதல் நுற்றாண்டில் இயற்றப்பட்ட ‘பிரஜ்னபர்மிமிதா’ சூத்திரங்களில் ஆவணப்படுத்தப்பட்டிருப்பது இந்த தொடர்பின் பழமையை உறுதிப்படுத்துவது. பிற்காலத்தில் இந்திய மஹாயான பெளத்தம் மற்றும் சீன தாவோயிசம் ஆகியவற்றின் ஆன்மிக மறைஞான சிந்தனைகளை உள்வாங்கி, புதிய தனித்த மரபாக சான் பெளத்தம் கிளைத்தபோது தியானம் அதன் மையமான அடிப்படையாக ஆகியது. 

தியானத்தின் வழி ஞானமடைந்ததாக சொல்லப்படும் சாக்கியமுனியின் குரு சிஷ்ய பரம்பரைகளின் வழி ஸென் பெளத்தம் இந்தியாவில் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் வேரூன்றி இருந்தது. சாக்கியமுனியின் வழி வந்த போதிதர்மர்(Bodhidharma c.470- c.534) தென்னிந்தியாவில் இருந்து கிளம்பி சீனாவுக்கு சென்றார், 

பெளத்த சாஸ்திரங்களில் அவநம்பிக்கை கொண்ட தா ஷெங் (Dao Sheng c.360-434) என்ற பிக்கு தியானத்தின் வழி ஞானமடையும் வழியை முன்வைத்ததாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. சொற்களால் விளக்க முடியாத ஞானபதேசத்தை உள்வாங்கி அதை தியானத்தால் அடைந்து, உள்ளுணர்வின் வழி மாணவர்களே சுயமாக உணரும்படியான தியான வழியை கற்பித்தவர் போதிதர்மர். முறையான சாதகங்களை பயிற்றுவித்து ஞானோபதேசத்தின் ஆசியை கையளிக்கும் குருவாகவும் ஆகியவர். சீனாவில் சான் பெளத்தத்தை வித்திட்டு நிறுவியவர் போதிதர்மர் என்பது ஆய்வாளர்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தரப்பாக உள்ளது. 

போதி தர்மருக்கு பிறகு அவர் வழி வந்த குருசிஷ்ய பரம்பரையின் வழியாக ஸென் பெளத்தம் மைய பெளத்தத்திற்கு இணையாக சீனாவில் வளர்ந்தது. டோஷோ (Dosho, c.629-700) என்ற ஜப்பானிய பிக்கு சீனாவிற்கு சென்று எட்டு ஆண்டுகள் தங்கி சான் பெளத்தத்தை கற்று ஜப்பானுக்கு திரும்பி ஸென் சிந்தனைகளாக அறிமுகப்படுத்தினார். அதுபோல ஜப்பானிய பிக்குகள் சீனாவிற்கு சென்று மேலதிகமாக சான் பெளத்தம் கற்று திரும்புவது அக்காலத்தில் தொடர் வழக்கமாக இருந்தது. இவ்வாறாக ஏழாம் நூற்றாண்டில் ஜப்பானுக்கு சென்றடைந்த சான் பெளத்தம் “ஸென்” பெளத்தமாகியது. 

சாங் பேரரசில் (960 -1275)  சீனாவில் சான் பெளத்தம் (பழைய) பெளத்தத்துக்கு இணை வைக்கும்படி வளர்ந்து, இரண்டு பள்ளிகளையும் சேர்ந்த பிக்குகள் ஒரே மடங்களிலும் விகாரங்களிலும் இருக்கும் நிலை ஏற்பட்டு இரு பெளத்தங்களும் ஒன்றை ஒன்று உள்வாங்கி ஒருங்கும் நிலை உருவாகியது. என்றாலும் தனித்து நிலைபெற்றுவிட்ட சான் பெளத்தம் இன்றளவும் ஒரு தனிப்பெரும் மரபாக நீடிக்கிறது.

ஆங்கிலம் வழி ஸென் பெளத்தம்:

1844 ஆம் ஆண்டு தோரோ (Henry David Thoreau) ஸ்தர்ம புண்டரிக சூத்திரங்களை தாமரை சூத்திரங்கள் (Lotus sutra) என்ற தலைப்பில் New England journal of metaphysics பத்திரிகையில் மொழிபெயர்த்து வெளியிட்டதன் வழி ஆங்கில உலகின் பல்கலைகழக வட்டங்களில் பெளத்த சிந்தனை அறிமுகமாகியது. 

D.T. Suzuki
1893 ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற Parliament of the World's Religions மாநாட்டில் ஸென் துறவியும் ஜப்பானின் காமகுரா மடாலயங்களின் தலைமை பிக்குவுமான ஸொயன் சாகு (Soyen Shaku) வின் சொற்பொழிவின் வழி ஸென் பெளத்தம்  அமெரிக்க கண்டத்திற்கு வந்து சேர்ந்தது. பிற்பாடு ஹவாய் தீவின் ஹனலூலு நகரில் முதல் விகாரம் எழுப்பப்பட்டது.  இதை தொடர்ந்து பெளத்த துறவியும் பேராசிரியருமான D.T. Suzuki 1920 களில் சமஸ்கிருத சீன ஜப்பானிய மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, உரைகள் ஆற்றி பெளத்த சிந்தனைகளை மேலும் பரவலாக்கினார். 

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு வந்த 1950 களின் பீட் ஜெனெரேஷன், அல்லது ஹிப்பி என்று சொல்லப்படும் அமெரிக்க இளைய தலைமுறையின் ஒரு பகுதி போர்கள், அரசுகள் மீது கசந்து விழுமியங்களை கைவிட்டு ஆன்மீக அகதியாக பெளத்த மதத்திற்கு வந்து சேர்ந்தது. விளைவாக, கேரி ஸ்னைடர் (Gary Snyder) ஃபிலிப் வெலன் (Philip Whalen) முதலானோர் ஜப்பானுக்கு சென்று ஸென் பெளத்தம் கற்று திரும்ப, ஆங்கில மொழிபெயர்ப்புகள் வழியாக ஸென் சிந்தனைகளை உள்வாங்கிய அமெரிக்க கவிஞர்கள் தோன்றினர். 

சீன, ஜப்பானியம் மற்றும் பிற மொழிகளிலிருந்து புத்த குருக்களின் போதனைகள், பிக்குகளின் விளக்கங்கள், வழிகாட்டிகள் கவிதைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலம் வழியாக பல நாடுகளுக்கும் சென்றடைந்தன. 

இன்று நாம் வாசிக்கும் தமிழ் வடிவங்களின் ஆங்கில ஸென் கவிதை மூலங்கள் பல அப்படி தோன்றியவையே. சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, ஆகியற்றில் பெளத்த சிந்தனைகள் பயின்று வருவதும் நாம் அறிந்ததே. சமஸ்கிருதம் பிராகிருதம், பாலி மற்றும் ஜப்பானிய, சீன மொழிகளிலிருந்து நேரடியாக தமிழுக்கு ஜென் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டனவா என்பது விரிவான ஆய்வுக்கு உரியது. 

ஸென் எனும் நடைமுறை: 

மஹாயான பெளத்தத்திலிருந்து கிளைத்திருந்தாலும் தியானத்தை மையமாக முன்வைப்பதன் வழி பெளத்த சூத்திரங்கள், ஸ்மிருதிகள், கோயன்கள் ஆகியற்றின் பங்கை குறைத்து புறம் தள்ளுவதுடன் ‘போதிசத்துவர்’ எனும் வழிகாட்டும் குருமார்களின் பங்கையும் சற்று பின்தள்ளுவது ஸென் பெளத்தம் மஹாயானத்திலிருந்து விலகும் முக்கிய புள்ளியாகும். 

மனிதன் அவனது துயரங்களிலிருந்து விடுதலை அடைய கோட்பாட்டு அறிவு மட்டுமே போதுமானது அல்ல. 

தத்துவ, கோட்பாட்டு அறிவு என்பது ஒருவகையில் வெறும் மொழி விளையாட்டு (keron or prapañca). அது மொழியை பயன்படுத்தி நாம் அறிந்த பாகுபாடுகளின் வழி கட்டமைத்து பெறப்படுவது. 

மேலும் பாகுபடுகளின் வழி பெறப்படுவதால் கோட்பாட்டு அறிவு மாயையும் மயக்குகளும் கொண்டது. ஆகவேதான் கோட்பாடு அறிவை விட (theōria) நடைமுறை பயிற்சிக்கு (prāxis) ஸென் முக்கியத்துவம் அளிக்கிறது. 

பிரபஞ்சத்தை புரிந்துகொள்ள “இங்கு”, “இப்போது” எனும் எளிமையையும் நேரடித்தன்மையையும் ஸென் முன்வைக்கிறது. 

அதாவது நம் கண்முன் நிகழ்வதையும் காலுக்கு கீழ் இருப்பதையும் எதையும் அதைப்போலவே, அதுவன்றி பிறிதொன்றில்லாமல் அணுகி அறிவது என எளிமைப்படுத்தலாம். 

நிகழ் கணத்தை மனதில் ஆழமாக அவதானிப்பதன் வழியாக சாதகன் பெறும் சுய விழிப்புணர்வு மட்டுமே ஞானத்திற்கு இட்டுச்செல்லும் என்பது ஸென் மைய தரிசனங்களுள் ஒன்று. அதாவது, தொடர்ந்த படிப்படியான கல்விக்கு ஈடாக, திடீரென ஏற்படும் உடனடி விழிப்புணர்வின் வழியாக ஞானத்தின் பாதையை அடைவது. 

இருமையின்வழி அறியப்பழகிய சிந்தனையின் விளைவாக மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றால் உண்ணப்படுவது மனிதனின் அன்றாட வாழ்வு. இன்பம் துன்பம் இரண்டையும் முழுமையாக அறிவதன் வழி உருவாகும் கண்ணோட்டத்தின் மூலம் வாழ்க்கையின் பதற்றங்களை வெற்றிகொள்வதை ஒரு நடைமுறையாக ஸென் முன்வைக்கிறது. இதன் வழியாக அன்றாட வாழ்க்கை மற்றும் இயற்கையின் நிர்ப்பந்தங்களை சாந்தத்துடன் ஏற்கும் மனநிலை உருவாகி வாழ்க்கை ஒரு கொண்டாட்டமாக ஆக முடியும். 

அன்றாட வாழ்வில் தன் சுயம், சுற்றம் மற்றும் இயற்கையை கருணையின் வழி தொடர்புறுத்தி உருவாகும் புரிதலின் கனிவின் வழி முழுதறிதலை அடையும் வழிமுறை. நம்மை சுற்றி படர்ந்துள்ள பொருள்களில், நிகழ்வுகளில் உள்ள இயற்கையின் சமநிலையை அனுபவத்தில் பயின்று கொள்வதற்கான பயணம். அதற்கான பயிற்சியின் அடிப்படையாக ‘za-zen’ எனப்படும் அமர்ந்த நிலை தியானம் அமைகிறது. தியானத்தின் வழியாக பாரபட்சமற்ற கண்ணோட்டத்தை உருவாக்கி முழுதறிதலை அடையும் செயல்முறையான ஸென் “ஒரு சித்தாந்தம் அல்ல, வாழ்க்கை முறை” என்ற சொலவடைக்கு முற்றிலும் பொருந்துவது. 

ஒரு பொருள் அதன் தொடர்புடைய வினை(நிகழ்வு), இரண்டும் அவை எப்போதும் இருந்துகொண்டிருக்கும் அவற்றின் ஆதி தொன்மையின் வடிவில் உள்ளன. இரண்டும் ஒரு முழுமையின் இரு மீள்நிலைகள் (recapitulations). ஒரு பொருளில் நம் விருப்பத்திற்குரிய பண்பும் உள்ளுறையாக அதன் எதிர் துருவமாக உள்ள விரும்பத்தகாத அம்சமும் சேர்ந்தே உள்ளது. ஒளி, இருள் என துருவங்களாக அமையும் குணங்களும் இதைப்போன்றவையே. இரண்டும் ஒன்றன் வெளிப்பாடுகள் என்பதால் அதன் முழுமையிலிருந்து விலகாமல் முழுமையின் பகுதிகளாக இரண்டற அறியப்பட வேண்டியவை. ஆகவேதான், கண்ணுக்கு புலப்படுவதையும் புலப்படாததையும் வெளிப்படையாக தெரிவதையும், உள்ளுறையாக மறைந்திருப்பதையும் இருமையாக பிறித்தறியாமல் பாகுபாடின்றி ஒருமையாக அறிவதன் அவசியத்தை ஸென் அறிவுறுத்துகிறது. 

"இரண்டு அல்ல" என்பது - முழுமையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கும் இரட்டை நிலைப்பாட்டை மறுப்பது. 

"ஒன்றல்ல" என்பது - அவை இரண்டையும் இரட்டையற்ற முழுமையின் ஒருமையாக ஒரு சாதகன் அறியும்போது உண்டாகும் இரட்டையற்ற ஒற்றை நிலைப்பாட்டை மறுப்பது. 

ஒரு பொருளை முழுதறிய பொருள் வினையுடன் பிரிக்க முடியாத உறவில் இருப்பதை அறிவது அவசியம். ஆகவேதான், “ஒன்றல்ல" எனும் இருமை நிலையையும், "இரண்டல்ல" எனும் இருமையற்ற நிலையையும் கடந்து இவை இரண்டும் அல்லாத "ஒன்றல்ல மற்றும் இரண்டல்ல" என்ற “நிலையற்ற” புதிய மூன்றாம் நிலைப்பாட்டை ஸென் அறிமுகப்படுத்துகிறது. 

அன்றாட நடைமுறைகளின் வழி மனம் உடல் இரண்டிலும் உருவாகும் அடிப்படையான மாற்றத்தின் வழி அறிதலின் பாதைக்கு சாதகனை வழிநடத்துகிறது ஸென். இந்த தயாரிப்பு விஷேஷ பயிற்சிகளின் (shugyō) வழியாக ஒரு நபரின் ஆளுமையின் முழுமையின் இருப்பாலும் அடையப்படவேண்டியது. அதாவது, உடல் இயக்கத்தை சரிசெய்யும் பயிற்சியின் மூலம் மன இயக்கத்தில் உருவாகும் சமநிலையின் விளைவால் அடையப்பெற வேண்டியது.  

கவியல்லாத கவிஞர்களும் கவிதையல்லாத கவிதைகளும்: 

கோட்பாடுகளும் இலக்கிய விமர்சனங்களும் ஸென் சிந்தனைக்கு எதிரானது. பொதுவாகவே விளக்கங்களுக்கும் விரிவாக்கங்களுக்கும் எதிரானது என்பதால் ஸென் அணுகுமுறை தத்துவத்திற்கு எதிரானது. அதாவது Zen is antiphilosphy என சொல்வதுண்டு. 

ஸென் பெளத்தத்தின் தோற்றுவயாக கருதப்படும் புத்தரின் “மலர் உபதேசம்” என்ற நிகழ்வை இங்கு நினைவுபடுத்திக்கொள்வது பொருத்தமானது. ஒருமுறை புத்தர் தனது உபதேசத்தை நிறுத்திவிட்டு அமைதியாகி ஒரு மலரை பற்றி எடுத்து கையில் வைத்து அதை விரல்களால் சுழற்றி காண்பித்தார். பிறகு இந்த புரிதல் "வார்த்தைகளால் சொல்லப்படாதது, விளக்கத்திற்கு அப்பாற்பட்டது" என்றார்.

ஸென் ஒரு தரிசனம். சிக்கலான விவாத முறைமைகளை, கருத்துருவாக்கங்கள், மயிர்பிளக்கும் வாதங்கள் ஆகியவற்றை ரத்து செய்துவிட்டு. ஒரு பொருளை, நிகழ்வை அவதானிப்பதன் வழி உருவாகும் முற்றிலும் நேர்நிலையான புரிதலின் முழுமையை நோக்கியது ஸென் அணுகுமுறை. இருத்தலின் முழுமை என்று அதைச் சொல்லலாம். 

வழக்காமான இலக்கிய வடிவத்துக்குள் அடங்காத, Belles-lettres என்று ஆங்கிலத்தில் சொல்லத்தக்க, மொழியின் அழகியலும் கவித்துமும் அர்த்தச்செறிவும் பயின்று வரும் குறிப்புகள்(கவிதைகள்??) பெளத்த நூல்களில் ஏராளமாக உண்டு. அதேசமயம், நேரத்தையும் ஆற்றலையும் கவிதைக்காக வீணடிக்க கூடாது என்று தன் மாணவர்களிடம் பகிரங்கமாக எச்சரித்தவர்கள் பல ஜப்பானிய ஸென் குருமார்கள். 

Dogen 
எடுத்துக்காட்டாக புகழ்பெற்ற ஜப்பானின் ஸென் குரு டோகன் (Dogen 1200–1253) "இலக்கியம் சீன கவிதை மற்றும் ஜப்பானிய வசனங்கள் அனைத்தும் பயனற்றவை, அவற்றை கைவிட வேண்டும்" என்று  மாணவர்களை எச்சரித்து அறிவுறுத்தியதை அவரின் பிரதான சீடரான இஜோ (Koun Ejō, 1198–1280) தனது Shōbōgenzō Zuimonki (The Treasury of the True Dharma Eye: Record of Things Heard) என்ற நூலில் பதிவு செய்துள்ளார். 

இருந்தும், அப்படி போதித்த ஸென் குருக்கள் பலர் தங்களின் சொந்த படைப்புகளை ஏராளமாக விட்டுச் சென்றவர்களே. 

இந்த முரண்பாடு ஆச்சரியமானதல்ல. ஏனென்றால் தர்க்கத்தின் அடிப்படையில் இயங்கும் அறிவாற்றலைக் காட்டிலும் உணர்வுபூர்வமான அறிதலுடன் நேரடியான பிணைப்பை கொண்டுள்ளதால் ஸென் அணுகுகுமுறை, தத்துவத்தை விடவும் கவிதைக்கு இன்னும் அணுக்கமானதாக ஆகிறது. கவிதையே அதன் இயல்பான வெளிப்பாடாக அமைகிறது.  ஒருவகையில் கவிதையை நோக்கிய அதன் சாய்வு இயல்பானது, தவிர்க்க முடியாதது.  

ஸென் கவிதைகள் என்றால் என்ன?

ஸென் கவிதைகள் என்று எவற்றை சொல்லலாம்? ஸென் பெளத்த துறவிகள் எழுதியவை? ஸென் பெளத்தம் பற்றியவை? ஸென் சிந்தனைகளின் தாக்கத்தால் உந்தப்பட்டவர்கள் எழுதியவை? ஸென் மன நிலையை பிரதிபலிப்பவை? 

நீண்டகால ஸென் மரபு கொண்ட நாடுகளான சீனா, ஜப்பான், வியட்நாம், கொரியா மற்றும் கிழக்காசிய நாடுகளின் ஸென் துறவிகள் எழுதியவை ஸென் கவிதைகள் என்ற விளக்கம் போதுமானதல்ல. 

சீனாவின் ஸென் கவிஞருக்கு எடுத்துக்காட்டாக ஸென் துறவியாகவே வாழ்ந்த ஹான்-ஷன் (Han-shan, c.800) என்பவரை குறிப்பிடுவது மரபு. ஜப்பானின் கோஸன் பகுதியில் இயங்கிய ஐந்து மலைகள் என அறியப்பட்ட மடாலயங்களைச் சேர்ந்த துறவிகள்(1127–1279) ஸென் கவிதை மரபில் மையமாக வைக்கத்தக்கவர்கள். ஆனால், ஸென் துறவிகள் எழுதியவை மட்டும் ஸென் கவிதைகள் என்று வரையறுத்துக்கொண்டால் ஸென் கவிதைகள் என்று நாம் இன்றைய தேதிக்கு அறிந்துள்ளதன் பெரும்பகுதியை இழக்க வேண்டிவரும். 

Chūgan Engetsu

மேலும் ஸென் துறவிகள் தங்களின் பல்வேறு அன்றாட அனுபவங்களையும் கவிதையாக எழுதியிருப்பதால் அவற்றுள் பல கவிதையாக ஆகாதவை. காட்டாக, ஷுகன் என்கெட்ஸூ (Chūgan Engetsu, 1300-1375) சீனாவில் மலேரியாக்காய்ச்சல் கண்டது பற்றி எழுதியவை கவிதைகள் ஆகா. ‘கதா’ எனும் பெளத்த நுட்பங்களை விளக்கும் பெருவாரியான துதிப்பாடல்களையும் கவிதைகளாக ஏற்றுக்கொள்ள முடியாதுதான்.   

இன்று நாம் அறியும் ஸென் கவிதைகள் பலவற்றை எழுதியவர்கள் பிற சிந்தனை மரபுகளையும் சார்ந்தவர்கள்.  ஜப்பானின் ஸென் கவிஞராக அறியப்படும் ஸோகி துறவறத்தை மேற்கொள்ளாதவர்.  

இன்னும் சில ஸென் கவிகள் ஸென் மரபில் ஆர்வம் கொண்டிருந்தாலும் வாழ்நாளை துறவுக்காக செலவழிக்காதவர்கள். சிலர் புத்த பிக்குகளாக வாழ்ந்தவர்கள் என்றாலும் ஸென் மரபை சாராதவர்கள். ஸென் மரபின் தாக்கம் இருந்தாலும் ஸென் மட்டுமே அவர்களின் ஆர்வம் அல்ல என சொல்லத்தக்கவர்கள் ஜப்பானின் பாஷோ போன்ற கவிஞர்கள்.  ஆகவே ஸென் மன நிலையை பிரதிபலிப்பவை ஸென் கவிதைகள் என வகுத்துக்கொள்வதே பொருத்தமானது. 

நிகழில் திகழும் நிகழ்வுகள்:

துருத்திக்கொண்டிருக்கும் உவமையோ உருவகமோ ஸென் கவிதைகளில் அனேகமாக இருப்பதில்லை. சொற்சிக்கனத்தாலும் எளிமையாலும் உருவாகும் ஒரு சிறு நிகழ்வின் அவதானமே முழு கவிதையாக உருப்பெற்று நிற்கிறது.  இங்கு கவிதை ஒரு நிகழ்வின் எளிய சாட்சியாக கவிஞனுடன் மெளனித்து நிற்கிறது.

ஆகவே இக்கவிதைகளில் பெரும்பாலும் விளக்குவதற்கு ஒன்றுமில்லை. அர்த்தப்படுத்தி புரிந்து கொள்ள குறியீடுகள், உவமைகள் இல்லை. அவற்றின் எளிமை இது கவிதைதானா என்ற ஐயத்தையும் உண்டாக்குவது. இலக்கிய விமர்சனத்தின் வழக்கமான கருவிகளுடன் இக்கவிதைகளை அணுகப்புகும் ஒருவருக்கு  திகைப்பே மிஞ்சுகிறது. 

தேங்கி நிற்கும் 

குளத்திலிருந்து 

குளிர்கால நிலவை 

கரைத்து 

அழிக்கப்பார்க்கிறது 

காற்று. 

(மியாவோ யின் 376-380 B.C.E) 

என்ற கவிதையை வாசித்த ஒருவர், குளத்தை கவிஞனின் மனம் என்றும் அதில் தெரியும் நிலவை அகத்தூய்மை என்றும் காற்றை உலக இச்சைகள் என்றும் ஒப்புமைப்படுத்தி உலக இச்சைகள் ஆக்கிரமித்து உளத்தூய்மையை அழிக்க முயல்வதாக கூறலாம். இது போன்ற பல விளக்கங்களுக்குள் ஒருவர் செல்ல முடியும். ஆனால் கவிதையில் அப்படி ஒப்புமைகள் எதுவும் சொல்லப்படவில்லையே என்றும் நாம் வாதிட முடியும்.

ஸென் பௌத்தத்தைப் பொறுத்தவரை பாரபட்சமற்ற ஞானம் அல்லது முழுதறிதலின் முழுமை (hannya haramitsu or prajñāpāramitā) என்பது ஒரு முமுட்சு தன் அன்றாட நடைமுறையில், தன் சொந்த அனுபவத்தில் உணர்ந்து பெறுவது. 

பறவை வானத்தில் நிலைத்திருக்கிறது மேகங்கள் விலகிச்செல்கிறன, நகர்ந்து செல்வது நதி அல்ல, பாலங்கள், -என்பது போல பிரபஞ்சத்தை நோக்கிய ஒரு சராசரியின் அணுகுமுறையை தலைகீழாக்கி, கேள்விக்குள்ளாக்குவது ஒரு ஆரம்பம். ஒரு பொருளை, நிகழ்வை தியானிப்பதன் வழி நிகழ்கணத்தின் ஒளியை எளிய சொற்களால் வெளிப்படுத்துவதும், மரபான விளக்கங்கள் சம்பிரதாயங்களின் நிர்ப்பந்தங்களை தகர்த்து மொழியின் ஆழத்துள் செல்வதன் வழி உடனடி திறப்புகளை அடைவதும் இதன் வழிகள்.  

ஸென் கவிதைகள் உத்தேசிப்பது அப்படி ஒரு திறப்பை அளிப்பதற்குரிய சிந்தனையை பற்ற வைக்கு ஒரு நுண் பொறியை அளிப்பது மட்டுமே. இக்கவிதைகளில் எளிமையையும் நேரடித்தன்மையையும் உருவாவதற்கு காரணம் இதுதான். கவிதை என்பது வாசகனுக்கு கடத்தப்பட வேண்டிய ஒரு நேரடி அனுபவம். அதை ஆழ்ந்து தியானிக்கும் வாசகன் மனதை மெளனம் கொள்ளச்செய்யும் புதிய திறப்பை அடைகிறான். 

ஸென் அணுகுமுறை அன்றாட பெளதீக உலகத்தை சிந்தனையில் இருந்து வெளியேற்றி அதை இல்லாமல் ஆக்குவதில்லை. உண்மையற்ற ஒன்றாகவோ, இல்லாத ஒரு மாயையாகவோ மாற்றம் பெறும்படி செய்வதில்லை. 

காற்று ஓய்ந்த பிறகும் 

உதிர்கின்றன மலர்கள் 

பறவையின் கூவலில் 

மேலும் ஆழமுறுகிறது 

மலையின் மெளனம்.  


வீழும் இலைகள் படிகின்றன 

ஒன்றன் மேல் ஒன்றாய் 

மழையின் மேல் பொழிகிறது 

மழை 

-என்பது போல, பெளதீக உலகம் மேலும் ஆழமும் தீவிரமும் கொண்டு பிரம்மாண்டமடைவதையே ஸென் கவிதைகளில்  காணமுடிகிறது. 

மரங்களுக்கு 

உரமாக மாறிவிட்டார் 

செர்ரி பூக்களின் 

உரிமையாளர். 


காற்று 

உதிர்ந்து 

அளிக்கிறது 

தீயை உண்டாக்க 

போதுமான அளவு 

இலைகளை 

– என்பது போல, ஸென் அணுகுமுறை என்பது ஒருவகையில் அதிரடியான ஒரு நடைமுறை யதார்த்தவாதம் என்று கூறலாம். ஸென் ஒரு வாழ்க்கைமுறை. ஆனால் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைமுறையை அது வலியுறுத்துவதில்லை. 

சாராம்சமாக சொல்வதானால், நீரில் நீந்தும் மீனைப்போல, வானில் நீந்தும் பறவையைப்போல. இயற்கையோடு இயைந்த ஒரு பகுதியாக தன் இருப்பை அறிய ஸென் அறிவுறுத்துகிறது எனலாம். 

நள்ளிரவு 

அலைகள் இல்லை

காற்று இல்லை 

நிலவொளி நிறைகிறது 

காலிப்படகில் 

-என்பது போல. சுயம் x சுற்றுப்புறம் எனும் இருமை அற்று இயற்கையின் ஒரு இயல்பான பகுதியாக தன் இருப்பை அறிவது.

மீன் எப்படி தான் வாழும் நீரைவிட்டு தன்னை இரண்டற பிரித்தறியாதவாறு அதில் அமைகிறதோ, பறவை எங்ஙனம் வானில் தன்னை ஒரு இயல்பான பகுதியாக ஆக்கிக்கொள்கிறதோ, அதைப்போல. 

தான் கற்ற தத்துவம் அனைத்தையும், தான் x தத்துவம் என்ற இருமையற்று அவற்றை உய்த்துணர்ந்து, தன் ஆளுமையின் முழுமையால் கற்றது அனைத்தும் சுவாதீனத்தின் பிரக்ஞைக்குள் தன்னியல்பான ஒரு குணமாக ஆகும் நிலையை எய்தும்போது ஒரு முமுட்சு இயற்கையின் ஒரு பகுதியாகவே ஆகிறான். 

அவர்கள் எதுவும் பேசவில்லை 

புரவலன், விருந்தாளி 

மற்றும் 

வெள்ளை நிற 

சாமந்திப்பூக்கள்


என்பதைப் போல!


(நன்றி: காலம், ஜனவரி 2024)

***


Share:

1 comment:

  1. ஜென் கவிதைகள் என்று அடிக்கடி கேள்வி படுகிறோம். அப்படிப்பட்ட ஜென் கவிதைகள் என்றால் என்ன என்று சொல்லும் சிறந்த கட்டுரை...

    நிறைய யோசிக்க வேண்டுகிறது..

    நன்றிகள்..

    ReplyDelete

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive