இங்கிலாந்து முழுவதும் ஒரு அதிர்வை இந்த நிகழ்வு உருவாக்கியது. ஷெல்லி அராஜகத்தின் நடனம் என்ற தலைப்பில் ஒரு நீள் கவிதையை எக்ஸாமினர் என்னும் பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பினார். மக்களை நோக்கிய அழைப்பாக அவர் அதை எழுதினார்.
அதிலிருந்து சில வரிகள் :
அமைதியாக உறுதியாக நில்லுங்கள்
காட்டை போல அடர்ந்து பரவி
கைகளை கட்டிக்கொண்டு பார்வைகள் வெறிக்க நில்லுங்கள்
என்றுமே முறியடிக்கப்படாத ஆயுதங்கள் அவை.
கொடுங்கோலர்கள் துணிந்தால்
உங்கள் மீது குதிரைகளை செலுத்தட்டும்
வெட்டி குத்தி காயப்படுத்தி
அவர்கள் விரும்புவதை செய்யட்டும்.
கைகளை கட்டிக்கொண்டு பார்வைகள் வெறிக்க நில்லுங்கள்
பயமோ அதிர்ச்சியோ கண்ணில் தெரியாமல்
உங்களை கொல்பவரை வெறித்து நோக்குங்கள்
அவர்களின் கோபம் தீரும் வரை கொல்லட்டும்:
அவர்கள் வெட்கி தலைகுனிந்து வீடு திரும்புவார்கள்
இங்கு நீங்கள் சிந்திய ரத்தம்
அவர்கள் முகத்தில் மனசாட்சியின் உறுத்தலாக வெளிப்படும்
உறக்கத்திலிருந்து எழுங்கள் சிங்கங்களைப் போல
எண்ணியே பார்த்திராத எண்ணிக்கையில்!
உங்கள் தளைகளை ஒரு அசைவில் சிதறடிக்க எழுங்கள்
ஆழ்துயிலில் உங்கள் மீது படர்ந்த பனித்துளிகள் போன்றவை அவை
நீங்கள் பலர் - அவர்கள் சிலரே!
இக்கவிதை 1832 வரை பிரசுரிக்கப்படவில்லை. எக்ஸாமினர் பத்திரிகையின் ஆசிரியரும் ஷெல்லியின் தோழருமான லீ ஹண்ட் ஷெல்லி மறைந்த பின்னரே தன் முன்னுரையுடன் அக்கவிதையை அச்சிட்டார். இவ்வரிகளை அங்கியாக அணிந்து வரும் அந்த தூய கருணையுள்ள ஆன்மாவை புரிந்துகொள்ளும் இடத்தில் மக்கள் அப்போது இல்லை என்று அவருக்கு தோன்றியதால் 1819-ல் அதை வெளியிடவில்லை என்று அதன் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
ஆழ்துயிலில் புல்நுனிகள் மீது படரும் பனித்துளிகளை போல என்று மக்களை தளையிட்டுருந்த சங்கிலிகளை கூறுகிறார். ஒளியில் மின்னும் பனித்துளிகள் சங்கிலிகள் என்னும் காட்சியை மனதில் எழுப்புகிறது. இருளின் தேக்கநிலையில் எப்போதென்று அறியாத கணத்தில் உருவாகி படரும் பனித்துளிகள். ஒளியில் தன்னை காட்டுவது. ஒரு உலுக்கலில் சிதரடிக்க கூடிய வலிமையே அவற்றிற்கு.
***
அராஜகத்தின் நடனம் - ஷெல்லி, ஆங்கில மூலம்
***
0 comments:
Post a Comment