விஷயம் மிகப்பெரிது. அதில் எனக்குத் தெரிந்ததோ குறைவு. பல பகுதிகள் என் அனுபவத்துக்காட்படாமலே இருக்கலாம். எல்லாவற்றையும் கரைத்து குடித்துவிட்டதாக நான் சொல்ல முன்வரமாட்டேன். படிக்க, படித்து அறிந்துகொள்ள, தெரிந்துகொள்ள, முயலுகிறேன் அவ்வளவுதான். எனக்குத் தெரிந்ததில் ஒரு பகுதியை இங்கு எனக்குள்ள காலவரையறைக்குட்பட்டு எடுத்து சொல்லுகிறேன்.
இலக்கியமும் அனுபவமும்
இலக்கியம் என்பது பேராசிரியர்களின் ஆய்வுக்காக மட்டுமோ, பாட புஸ்தகங்களாகப் படிப்பதற்கு மட்டுமோ எழுதப்படுவதில்லை. நல்ல இலக்கியத்துக்கு லட்சக்கணக்கான வாசகர்கள் இருக்கலாம். ஒரு நூறு வாசகர்கள் மட்டுமே இருக்கலாம். நல்ல இலக்கியம் என்பது நமது அனுபவத்துக்குட்பட்டது. கவிதை என்பதை ரசித்து அனுபவிப்பது என்பதுதான் முக்கியம். ‘கவிதை பற்றி அதிகம் சொல்லிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை படித்ததை அனுபவிப்பது முக்கியம்’ என்று எஸ்ரா பவுண்டு என்கிற கவி விமர்சகர் கூறுகிறார்.
இரண்டாவதாக ஒரு விஷயம். சில விஷயங்கள் சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. சொந்த விருப்பு, வெறுப்புகள் இல்லாவிட்டால் இலக்கிய அனுபவம் ஏற்படாது. என் சொந்த விருப்புகள், வெறுப்புகள் இவற்றிற்கு ஏற்பத்தான் என் வாசிப்பு ஏற்படுகிறது.
கதேயின் உலக இலக்கியக் கோட்பாடு
‘உலக இலக்கியம்’ என்கிற வார்த்தை சேர்க்கையை ஜோஹன் வுல்ஃப் கதே என்பவர் சென்ற நூற்றாண்டின் இருபதுகளில் உருவாக்கினார். அவருக்குப் பழக்கமான மேலைநாட்டு இலக்கியத்துக்கும் நோக்கங்களுக்கும் மாறுபட்டதாக அவருடைய பார்வைக்கு அப்போது பாரசீகக் கவிஞர்கள் ஷாதி முதலியவர்களும், இந்திய நூல்களாக உபநிஷத்துகள், விஷ்ணு புராணம், பகவத் கீதை, காளிதாஸனின் கவிதைகள் நாடகங்கள் (முக்கியமாகச் சாகுந்தலம்) முதலியனவும் சீனச் சிந்தனையாளர்களில் கன்ஃபூஷியஸ் முதலியவர்கள் வந்திருந்தார்கள். இவை மாறுபட்டிருந்ததுடன் இவற்றின் நோக்கமும் இயல்பும் குணாதிசயங்களும் சாதனைகளும் தனி என்று கண்ட அளவில் மேலைநாட்டு இலக்கியங்களுக்கு அப்பாலும் இலக்கியங்கள் உண்டு என்றும், ‘உலக இலக்கியம்’ என்று அதற்குப் பெயர் கொடுத்து அவற்றையெல்லாம் உலக மக்கள் படிக்கவேண்டும் என்றும் எண்ணினார்.
உலக இலக்கியக் கோட்பாட்டின் வளர்ச்சி
உலக இலக்கியம் என்கிற சிந்தனை கதேயுடன் நின்றுவிடவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலே பலர் - ஆங்கிலேயர்களில் ஸர். ஜான் வ்பரி, ஃபிரெடரிக் ஹாரிஸன் என்று பலர். இவர்கள் இருவரும் ஆங்கிலேயர்கள் - உலக இலக்கியத்திலிருந்து நூறு நூல்களை பொறுக்கி எடுத்து இவற்றை படிக்காதவன் படித்தவனல்லன் என்று பட்டியல் போட்டு தந்தார்கள். ஷிகாகோ சர்வகலாசாலை உலகத்து சிறந்த நூல்கள் என்று பலவற்றை பொறுக்கி எடுத்து சில சமயம் சுருக்கியும் ஒரு தொகுதியாக வெளியிட்டிருக்கிறது. எத்தனை பகுதிகள் என்று எனக்கு இப்போது நினைவில்லை. ஐம்பதுக்கும் அதிகம் என்று எண்ணுகிறேன்.
போக்குவரத்து சாதனங்கள் அதிகரித்திருப்பதாலும் பல எலெக்ட்ரானிக் சாதனங்கள் தோன்றி ஒரே உலகமாக இவ்வுலகம் செயல்படுவதனாலும் உலக இலக்கியம் என்று ஒரு சித்தாந்தத்தை சாதிப்பது மிகவும் சுலபமான காரியமாக இருக்க வேண்டும். ஆனால் அப்படியொன்றும் சுலபமாகச் சாதித்துவிடக்கூடிய காரியமும் அல்ல என்றும் சொல்லலாம். மொழிபெயர்ப்புகளினால்தான் இது சாத்தியமாக வேண்டும். ஒவ்வொரு நல்ல நூலுக்கும், ஒவ்வொரு தலைமுறைக்கும், புது மொழிபெயர்ப்புகள் வேண்டியதாக இருக்கிறது. ஆங்கிலத்தில், அதுவும் அமெரிக்காவில், பலதரப்பட்ட பரவலான மொழிபெயர்ப்புகள் சாத்தியமாக இருக்கின்றன; இந்தியாவில் அத்தனை மொழிபெயர்ப்புகள் வருவதில்லை. தமிழில் மொழிபெயர்ப்பில் நூல்கள் வருவது மிகவும் குறைந்துவிட்டது. நாற்பதுகளில், ஐம்பதுகளில் இப்படியில்லை.
பெயர்களை நான் அதிகமாகச் சொல்லப்போவதில்லை. எல்லாப் பெயர்களையும் பேச்சுவாக்கில் காதில் வாங்கி மனத்தில் இருத்திக்கொள்வது சிரமம்.
உலக இலக்கியத்தில் காவியங்கள் பெறும் இடம்
கவிதை என்கிற விஷயத்துக்கு வந்தோமானால் அதில் காவியங்கள் என்கிற பகுதியை முதலில் கவனிக்க வேண்டும். இது மிகவும் சக்திவாய்ந்த பகுதியாக உலகத்து மக்களை பாதித்திருக்கிறது. மக்களின் பொது அறிவில் காவியங்கள் பற்றிய அறிவும், பாதிப்பும் கணிசமாகவே இருக்கின்றன.
அண்மைக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதிகாவியம்
ஐரோப்பிய இலக்கியத்துக்கும், கிரேக்க இலக்கியத்துக்கும் ஆதிகவியாக ஹோமரை கருதுவது மரபு. ஆனால் அதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒரு காவியத்தை இப்போது கண்டுபிடித்தார்கள். அதன் பெயரே மக்கள் நினைவிலிருந்து மறைந்துவிட்டபோதிலும் அது பைபிளின் முதல் பகுதி, ஹோமர், வால்மீகியையும்கூட பாதித்திருப்பது தெரிகிறது. இந்தக் காவியம் கி.மு. சுமார் 2500 அல்லது 3000 ஆண்டில் வழக்கில் இருந்ததாகவும் க்யூனிஃபார்ம் என்கிற முக்கோண வடிவப் பாபிலோன் பிரதேச மொழியில் சுலபமாக கண்ணில்படாத மலைகளில் பொறித்து வைத்திருப்பதாகவும், அதைக் கண்டுபிடித்து வாசித்து உருவாக்கியதே ஒரு காவியம் போல சொல்லவேண்டும் என்றும் சொல்கிறார்கள். இந்தக் காவியம் Epic of Gilgamesh என்ற ஆங்கில மொழிபெயர்ப்பில் பெங்குவின் நூலாகக்கூட வெளிவந்திருக்கிறது.
கதை அளவில் வீர காவிய மரபைச் சேர்ந்தது ‘கில்காமெஷ்’. கில்காமெஷ் என்கிற வீரன் தன்னைவிட பலசாலி உலகில் இல்லை என்று இறுமாந்து அகங்காரம் பிடித்தவனாக ஆட்சி செலுத்துகிறான். ஜனங்களுக்கு அவன் நல்லதுதான் செய்கிறான், கொடுங்கோலன் அல்லன், என்றாலும் அவன் கொட்டத்தை அடக்க அவனைப்போன்ற இன்னொரு பலசாலியை உற்பத்தி பண்ணித்தரவேண்டும் என்று ஜனங்கள் தங்கள் தேவனை வேண்டுகிறார்கள், அப்படியே ஒரு பலசாலியை உற்பத்தி செய்து தருகிறான் அவர்கள் தேவன். இவன் பலம் பற்றிக் கேள்வியுற்று கில்காமெஷ் அவனை மல்யுத்தப் போட்டிக்கு அழைக்கிறான். இருவரும் பதினைந்து நாட்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் யுத்தம் செய்கிறார்கள். ஒருவரும் கெலிக்கவுமில்லை; தோற்கவும் இல்லை. போட்டி வியர்த்தம் என்று முடிவுகட்டிக்கொண்டு இருவரும் இணைபிரியாத நண்பர்களாகிவிடுகிறார்கள். இருவரும் பல வீரச் செயல்களை புரிகிறார்கள். ஆனால் நாளடைவில் ஒரு மந்திரவாதி காரணமாக கில்காமெஷின் நண்பன் இறந்துவிடுகிறான். நண்பனின் பிரிவைத் தாங்க மாட்டாமல் கில்காமெஷ் உத்தான பிஷ்டம் என்கிற உலகில் நித்தியமாக இருக்கும் ஒருவனைத் தேடிப்போய் பல சாகஸங்களுக்குப் பிறகு உலகில் மனிதர்கள் சாகாமல் வாழ்வதற்கான ஒரு கடல் மூலிகையைப் பெற்றுக்கொண்டு, அதைக் கொண்டு தன் நண்பனை உயிர்பித்துவிடலாம் என்கிற நம்பிக்கையுடன் ஊர் திரும்புகிறான். வழியில் ஒரு மகர மீன் அந்த மூலிகையை விழுங்கிவிடுகிறது. கில்காமெஷ் தவிர்க்க முடியாதது இது, விதிக்கப்பட்டது என்று உணருகிறான் என்பது கதை. இதில் நவரஸங்களுக்கும் இடம் தந்து காவியம் அமைத்திருக்கிறார்கள். இதைக் கவனம் செய்தவர்கள் சிநேகிதம், அன்பு, காதல், வீரம், கருணை என்பதெல்லாம் தூக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இன்றுள்ள அறிவு எட்டுகிற வரையில் இதைத்தான் முதல் உலக இலக்கிய நூலாகக் கருத வேண்டும், அந்த அளவுக்கு இதைப்பற்றி தெரிந்திருக்கவேண்டியது அவசியம் என்று எண்ணுகிறேன்.
காவிய இலக்கியத்தில் ஹோமரின் பங்களிப்பு
ஹோமர் என்பவரின் பெயரில் வழங்குகிற காவியங்கள் இரண்டு. ‘இலியாது’ம், ‘ஓடிஸி’யும். டிராய் நகரை பத்து வருஷங்கள் முற்றுகையிட்ட கிரேக்கர்கள் தங்கள் கிரேக்க சகோதரர்களின் நகரத்தை வஞ்சனையினால் தீக்கிரையாக்கிவிடுகிறார்கள். இந்தப் போரில் ஒரு சிறு சம்பவம்தான் இலியாதின் விஷயம். அக்கிலிஸ் . என்கிற மாவீரன் ஒரு அல்ப விஷயத்துக்காக கோபித்துக்கொண்டு போரிலிருந்து விலகிக்கொள்கிறான். அக்கிலிஸ் இல்லாததால் ஏற்பட்ட தைரியத்தில் ட்ராய் நகரத்து வீரர்கள் கிரேக்கர்களின் ஒரு கப்பலைக் கொளுத்திவிடுகிறார்கள், பட்ராக்ளின் என்ற அக்கிலிஸின் நண்பன் ஹெக்டர் என்கிற ட்ராய் ராஜகுமாரன் கையில் சாகிறான். அத்தியந்த நண்பனை இழந்த அக்கிலிஸ் கோபம் கொண்டு எழுந்து போர் செய்து ஹெக்டாரை கொன்று, அவன் உடலைத் தேர்க்காலில் கட்டி போர்க்களத்தில் டிராய் நகரைச் சுற்றி மூன்று முறை இழுத்து வருகிறான். ஹெக்டாரின் தகப்பன் - கெஞ்சிக் கேட்டு ஹெக்டாரின் சடலத்தை மீட்டுப்போய் உரிய சடங்குகளுடன் தகனம் செய்கிறான்.
வீரத்தை போற்றுகிற காவியம் என்று இதைச் சொன்னாலும் அதே சமயம் வீரத்தின் வியர்த்தத்தையும் சொல்லுகிறார் கவி என்பது அவர் பெருமை. ராமாயணத்தில் ராமன் அளவுக்கில்லாவிட்டாலும் பெரியவனாகவே ராவணனை வான்மீகி காட்டுகிற மாதிரியே ஹோமர் அக்கிலிஸைவிட பலவற்றில் உயர்ந்தவனாக ஹெக்டரை காட்டுகிறார். தரும நியாயங்களில் மதிப்பு வைக்காத கிரேக்க தேவ தேவிகளின் போக்குகளை கிண்டல் செய்கிறார் கவி என்று ராபர்ட் க்ரேஸ் போன்ற நவீன கவிகள் இன்று அபிப்பிராயப்படுகிறார்கள். காவியம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக அமைந்த காவியம் ஹோமரின் ‘இலியாது’.
‘ஓடிஸி’யை ஹோமர் எழுதவில்லை என்று ஒரு கட்சி உண்டு. வீரத்துடன் குடும்ப வாழ்வு, புருஷன் மனைவி இருபது ஆண்டுகளுக்கு மேல் பிரிந்திருந்தாலும் ஒருவருக்கொருவர் அன்பு குறையாமை, யஜமான விசுவாசமுள்ள நாய், அடிமை என்றெல்லாம் பல வேறுபட்ட விஷயங்கள் ‘ஓடிஸி’யில் இடம்பெறுகின்றன. ‘ஓடிஸி’யில் சாகஸமும், புத்தி சாதுர்யமும் உலகில் உள்ள இடைஞ்சல்கள், இன்பங்கள் எல்லாம் இடம்பெறுகின்றன. இலியாதைவிட இதை அதிகம் சிறப்புள்ள காவியமாக கருதுகின்றனர். பத்து ஆண்டுகள் அலைக்கழிக்கப்பட்டு ஓடிஸியஸ் தன் மகனையும் மனைவியையும் இருபது ஆண்டுகள் பிரிவுக்குப்பிறகு (ட்ராய் முற்றுகை பத்து ஆண்டுகள் நீடித்தது) சென்று சேர்வதை வீர காவியமாக தீட்டியிருக்கிறார் ஹோமர்.
ஹோமரைப் பற்றி நிச்சயமாக ஒரு விவரமும் தெரியவில்லை. எங்களூரில் பிறந்தவர் என்று அவரைப் பத்து ஊர்கள் போட்டி போட்டுக்கொண்டு சொந்தம் கொண்டாடுகின்றன என்று சொல்லுவார்கள். ஹோமர் குருடர் என்று ஒரு செய்தியும் பிற்காலத்திலிருந்து வந்திருக்கிறது. அதுவும் எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியவில்லை. கி.மு. எட்டாவது நூற்றாண்டில் தோன்றிய இந்தக் காவியங்கள் லைர் என்கிற கிரேக்க இசைக்கருவி பின்தொடர கிரேக்கக் குறுநில மன்னர்கள் சபையில் பாடப்பட்டதாகவும், அக்காலத்தில் வழக்கிலிருந்த பல காவியங்களில் சிறந்த இலக்கியமாக இவை இரண்டும் நிலைத்துவிட்டன என்றும் அனுமானிக்கலாம். இலக்கிய மேன்மையில் மட்டும் உலகின் கவனத்தை கவர்ந்த நூல் இது என்பது இதன் தனிப்பெருமையாகும்.
உலக இலக்கியத்தில் இந்தியக் காவியங்கள்
அடுத்து சொல்லவேண்டிய சிறப்பான இரு உலகக் காவியங்கள் இராமாயணமும் மகாபாரதமும். இலக்கிய அளவிலும் மக்கள் மதிப்பிலும் இவை இரண்டுக்கும் ஹோமருக்கு உள்ள அளவு மேன்மைகள் உண்டு.
ராமாயணத்தில் காருண்யம் என்பதை அடிநாதமாக கொண்டு ஒரு காவியத்தை உருவாக்கியிருக்கிறார் என்பது பிற்கால இலக்கிய விமர்சகர்கள் (அபிநவ குப்தா, ஆனந்த வர்த்தன்) ஏற்படுத்தி தந்த ஒரு மரபு. ‘ஹோமரில் மனிதனின் மேன்மையான குணாதிசயங்கள் வெளிப்படவில்லை. வால்மீகி மனிதனின் High Water Mark’ என்று மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் குறிப்பிட்ட மாதிரி ராமனை சிருஷ்டிக்கிறார். கவிதை அளவிலும் இந்தியக் கவிதையைத் தொடங்கி வைத்த காவியம் இது. ஆதிகவி என்று வால்மீகியைப் போற்றுவது மரபு.
வியாஸர் என்கிற பெயர் மகாபாரதத்துடன் பிணைத்து சொல்லப்பட்டாலும் பாரதத்துக்கு உள்ள மூன்று உருவங்களையும் அவரே படைத்தாரா என்பது தெரியவில்லை. மகாபாரதத்தின் அடிநாதம் இது என்று குறிப்பிடுவது, இந்திய விமரிசன மரபில் இல்லை. அதைத் தருமம் என்று குறிக்கலாம் என்று தோன்றுகிறது. எந்தக் காலத்திலுமே தருமம் என்பது சிக்கலானது. சுலபமாக கண்டுபிடிக்க முடியாதது. தருமசங்கடமான நிலைமைகளை சிருஷ்டித்து அவற்றை விடுவிப்பதையும் காவியநயத்துடன் மகாபாரத ஆசிரியர் செய்திருக்கிறார்.
இந்திய இலக்கியம் என்திற பெருமாளிகை இந்த இரண்டு காவியங்களின் பலமான அஸ்திவாரத்தின் மேல்தான் எழுந்திருக்கிறது என்று சொல்லலாம்.
உலகக் காவியங்களில் விடுபட்ட இரு உலகக் காவியங்கள்
இந்தப் பேச்சுக்கு முன்னுரையாகத் .தலைவரால் வாசிக்கப்பட்ட வ.வே.சு. ஐயரின் ‘கவிதை’ என்கிற கட்டுரையில், ஒன்பது பத்து காவியங்களை சிறந்த உலகக் காவியங்களாக அய்யர் குறிப்பிடுகிறார். ஓரிரு காவியங்களை அவர் விட்டுவிட்டார். இந்தப் பத்திருபது எஞ்சியிருக்கிற காவியங்களில் இரண்டு ஹோமர், வான்மீகி என்பவர்களின் தரத்துக்கு வருவதாக என் நினைப்பு. ஒன்று இத்தாலிய மொழியில் எழுதப்பட்ட டாண்டேயின் ‘தேவ ஜீவனம்’, இரண்டாவது தமிழில் எழுந்த தனிப்பெருங் காவியமான இளங்கோவின் ‘சிலப்பதிகாரம்’.
இரண்டுக்கும் உள்ள ஒற்றுமையை விரிவாகப் பார்க்கவேண்டிய அவசியம் உண்டு. இங்கு சுருக்கமாகச் சொல்கிறேன். இரண்டு காவிய கர்த்தாக்களும் பூர்ண விமரிசன அறிவுடன் தெரிந்து சில விஷயங்களை ஒதுக்கிவிட்டு சில விஷயங்களை தெரிந்தெடுத்துக்கொண்டு கவிதை செய்கிறார்கள். இரண்டு காவியங்களும் சமய ஒழுக்க நீதி நெறிகளை சொல்ல முன்வருகின்றன - டாண்டே கத்தோலிக்க கிறிஸ்துவத்தையும் இளங்கோவடிகள் சமண ஹிந்து நீதி நெறியையும் சொல்லுகிறார்கள். மூன்றாவதாக, டாண்டேயின் காவியம் மனிதன் கடவுளை எட்டுவகை குறிப்பாக காட்டுகிறது. இளங்கோவின் காவியம் ஒரு மனிதன் தேவனேயாகி கோயிலில் குடியேறுவதை காட்டுகிறது. இந்த இரண்டுமே வீர காவியங்கள் அல்ல.
இன்னும் பல ஒற்றுமைகள் சொல்லலாம். விரிவாகச் சொல்லி ஸ்தாபிக்கவேண்டிய விஷயம் அது. இங்கு விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். தமிழில் கம்பனைத்தான் சிறந்த காவிய கர்த்தாவாகச் சொல்வது ரசனை மரபாக இன்றுவரை வந்திருக்கிறது. ஆனால் இலக்கிய விமரிசன ரீதியில் இளங்கோவின் ‘சிலப்பதிகாரம்’தான் தமிழில் உயர்ந்த காவியமாகப் போற்றப்பட வேண்டும் என்பது என் நினைப்பு. கம்பன் பல தனிப்பட்ட மாறுதல்களுடன் வான்மீகி காவியம் செய்ததையேதான் எடுத்து கையாளுகிறார். உலக அரங்கில் ஒருதரம் ஏறிய கதை அது. ‘சிலப்பதிகாரம்’ தமிழில் மட்டும் தோன்றி முதல் தடவையாக காவியம் ஆனது. உலக அரங்கில் அதுவரை இல்லாத ஒன்றை தருகிறது. கவியாக கம்பனுக்கும் இளங்கோவுக்கும் ஏற்றத்தாழ்வு சொல்ல இயலாது; இருவரும் கவி காரியத்தை பூரணமாகச் செய்தவர்கள்.
ஒரு காலத்தில் ஜான் மில்டனை பெரும் காவிய கர்த்தாவாக மதித்தார்கள். அதேபோல அதிக காலம் வர்ஜீல் என்கிற லத்தீன் காவிய (எனியட்) கர்த்தாவையும் பெரிதாக மதித்தார்கள். இதேபோல, பலதரப்பட்ட காவியங்கள் உள. ஆங்கிலோ ஸாக்ஸனில் ‘போஃவுல்ஃப்’, ஸ்காண்டிநேவிய ‘ஸாகாக்கள்’, பெர்சிய ‘ஃபிரதெனஸின் ஷாநாமா’, அசுவகோஷரின் ‘புத்த சரிதம்’ என்று பல சொல்லலாம். இந்தக் காலம் காவியங்கள் எழுத அனுசரணையாக இல்லை என்றும் சொன்னாலும்கூட இந்தக் காலத்தில்கூட காவியங்கள் எழுதப்படுகின்றன. நிகாஸ் காஸாண்ட்ஸகிஸ் என்பவர் மீண்டும் இதாகாவை விட்டுக் கிளம்பிய ஓடிஸியஸ் பல கடல்களில் சுற்றித் திரிந்ததை ஒரு காவியமாக, நவீன கிரேக்க மொழியில் எழுதியிருக்கிறார். கார்ஸ் ஸ்பிட்டலார் என்கிறவர் ஜெர்மன் மொழியில் கிரேக்க ஒலிம்பஸ் தேவ தேவிகளை பற்றி ஒரு காவியம் செய்து அதற்காக 1919-ல் நோபல் இலக்கியப்பரிசு பெற்றார். தாமஸ் மன் என்பவர் பைபிளில் ஒரு சம்பவத்தை எடுத்து 1500 பக்கங்களில் ‘ஜோஸஃப்பும் அவன் சகோதரர்களும்’ என்று நான்கு பாகங்களாக காவியச்சுவை மேம்பட வசனத்தில் எழுதியிருக்கிறார். இப்படிப் பல சொல்லலாம்.
(தொடர்ச்சி அடுத்த இதழில்)
‘உலக இலக்கியம்’, 1989
***
***