உள்பாடு
இந்தப் பழக்கம்
விட்டுவிடு
எங்காயினும்
வானிலேனும் மண்ணிலேனும்
புள்ளியொன்று கிடக்கக் கண்டால்
சுற்றிச் சுற்றி
வட்டங்கள் வரைவதும்
சுழன்று சுழன்று
கோலங்கள் வரைவதும்
குறுக்கும் நெடுக்குமாய்ப்
புள்ளியின் வழியே
பரபரத்துத் திரிவதும் --
இந்தப் பழக்கம் விட்டுவிடு
முடிந்தால்
புள்ளியைத் தொட்டுத்தடவி
அதன் மூடிதிறந்து
உள் நுழைந்துவிடு
- அபி
***
3 கி.மீ
அந்த ஊருக்கு
இந்த வழியே
3 கி.மீ. எனக் காட்டிக்கொண்டு
நிற்கும்
கைகாட்டி மரத்திற்கு
அவ்வூரைப் பார்க்கும்
ஆசை வந்துவிட்டது ஒருநாள்
வாஞ்சைகொண்டு
கிளம்பிய மரம்
நடையாய் நடந்துகொண்டிருக்க
3 கி.மீ. 3 கி.மீ. எனத்
தன்னை பின்னோக்கி
இழுத்துக் கொள்கிறது
அவ்வூர்
- இசை
***
துணி துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்.
- தேவதச்சன்
***
***
0 comments:
Post a Comment