இரவும் பகலும் இணைந்து துரத்தும் ஒரு பொற்கனவுதான் காதல். அந்த கருப்பு வெள்ளை கட்டத்தில் கவிதை வரிகள் சதுரங்கம் ஆடுகிறது
படைப்புத் தொடக்கத்தின் முதல் நிறம்
நிகழ்ந்து கொண்டிருக்கும் வெற்றி
எப்போதும் மீதமிருக்கும் பூர்ணம்
சூரியன் சாயு(யா)ம் சந்தி(யா)
காயும் பகலின் மீது கவிழும் நிழல்
விழையும் உடலின் தழல்
கணுக் கணுவாய் மூழ்கும் சுழல்
இளங்கோ கிருஷ்ணனின் பூர்ணமையூரிய செவ்வரிக் கயல் என்னும் கவிதை நூலில் முதல் பாடல் என்னும் தலைப்பில் இரண்டு கவிதைகள் இடம்பெற்றுள்ளன. காதலின் மறைவை கலவியின் வெளியை என இரவு பகலை கவிதை உலகிற்கு அளிக்கிறது. காமம் எனும் மலர் பெயர்களைச் சூட்டிக் கொள்ளும் போதுதான் மெய் மறந்து உதிர்கிறது.
எப்போதும் நினைவில் மலரும்
ஒன்றாகவே இருக்கிறது
அதன் வாசனை பகலில் ஒளிந்து இரவில் ஒளிர்கிறது
காணும் அனைத்துள்ளும் உறையும் ஒன்றாக காதல் இருக்கிறது
படைப்பை காதலென்றும் காமமென்றும் பிரிக்கும் இருமை
கவிதைக்கே வாய்க்கும்
கவிதை மட்டுமே அதை மொழியில்
சொல்ல முடியும்
மீண்டும் மீண்டும் முளைக்கும் காமம்
கவிதைக்குள் மட்டுமே அடங்கும்
கல் தன்னை சிற்பமாக்கிக் கொள்ளும் நிகழ்வுபோல அரூபமான உணர்வுகள் தொஷ்டா என்றும் தாதா என்றும் பெயர் தாங்கி சொரூபமாகி விடுகின்றன. காதலை மறுதலிக்கும் போக்கு ஆதியிலேயே தொடங்கி விட்டது என்று நினைக்கிறேன். காரணங்கள் பலவுள்ளன என்றாலும் இக்கவிதையின் நாயகி யமியின் காதல் ஏற்கப்படாமைக்குக் காரணம் ஆதி காரணம். ரிக் வேதத்தின் 10.10 -ல் வரும் உரையாடலை முன் வைத்து இக்கவிதை எழுதப்பட்டிருக்கிறது.
முதல் பாடல்
யம!
என் சோதரனே பைங்கருப்பே
உன் யமியை இடைவெளியின்றி அணைப்பாயாக
நின் புஜபலம் என் சுரோணிதத்தைப் பெருக்குகின்றது
கருமார்பில் புரளும் தாழைகளின்
பூநாக வாசமும் அதன் மோடியும்
என் தலையைக் கிறுக்குகிறது
வருஷ காலங்களின்
சூலைக் காற்று மாங்கனிகளை உதிர்க்கட்டும்
பித்துக்கொண்டு அள்ளி உன் துடையில்
என் நிதம்பம் பொருத செருகு அசுவே
யோனி நிறையட்டும்
மத்தியமம் அடைபடட்டும்
உபஸ்தம் பூக்கட்டும்
அவற்றின்
அதி தேவதைகள்
தொஷ்டாவும் தாதாவும்
உன் ஸ்தம்ப பலத்தை வியந்து வாழ்த்துவார்களாக
என் சூதகப் பெருக்கு
கோடை கால நதியாய் உலரட்டும்
அதன் வித்துகளில் உன் சுண்ணம்
ஸ்வேத வண்ண தாதை நிருவி
புத்துயிர் ஜனிக்கட்டும்
யம!
பர மானுஷ்ய ஜனன மித்ர
பயிர் மழை கேட்டு நிற்கும்போது
வருணன் குருடாகக் கூடாது
உன் திமிரென்ன காட்டு
என் காட்டருவிக் குகையின் ஆதி இருளே.
முதல் பாடல் 2
தொஷ்டா!
நீ அழைத்தால் என்னால்
வராமல் இருக்க முடியாது
என் கண்களைக் குருடாக்கிக் கொள்கிறேன்
காதுகளை பழுக்கக் காய்ச்சிய
கம்பிகளால் செவிடாக்கிக் கொள்கிறேன்
என் இதயத்தைப் பிய்த்து
நாய்களுக்கு வீசுகிறேன்
அப்போதும்
உன் குரல் எனக்குக் கேட்கிறது
உன் உருவம் எனை அழைக்கிறது
உன் காதல் எனைத் தொடுகிறது
மலைகளில் திரளும் வெள்ளம்
பள்ளத்தாக்குகளில் பாய்வதுபோல்
விண்ணுக்கு எரியப்பட்ட கல்
பூமிக்கு இழுக்கப்படுவதுபோல்
நான் உன்னால் அழைக்கப்டுகிறேன்
கதியற்று வருகிறேன்
மீண்டும் மீண்டும்.
***
0 comments:
Post a Comment