நான் அழைத்தால் என் கதறல்களை கேட்க அங்கு யார் இருக்கிறார்கள், தேவதூதர்களின் மத்தியில்…
(Wer, wenn ich schriee, hörte mich denn aus der Engel Ordnungen?)
என்று தொடங்குகிறது டுயினோ எலஜிக்கள் (Duino Elegies) என்னும் கவிதை தொகுப்பு. ஒரு கடற்கரை ஓர நடையின் போது இந்த முதல் வரி காற்றில் எதிரொலித்ததாக Rilke ஒரு இடத்தில் கூறியிருக்கிறார். ரெய்னர் மரிய ரீல்க (Rainer Maria Rilke) டுயினோ (Duino) என்னும் இத்தாலி கடற்கரையில் அமைந்த பழமையான கோட்டையில் இருந்து கொண்டு 1912இல் எழுத துவங்கிய துயர் பாடல் தொகுப்பு டுயினோ எலஜிக்கள் என்ற பெயரில் 1922 இல் வெளியானது. பத்து பாடல்கள் கொண்ட தொகுப்பு இது. நடுவில் போர்களால் எழுத்து தடைபட்டு பின் உச்சபடைப்பூக்கத்தில் ஓரிரு வாரங்களில் மொத்த தொகுப்பையும் எழுதி பின் ஆரபியஸ் பாடல்கள் (Sonnets to Orpheus) என்ற தொகுப்பையும் எழுதி முடித்தார்.
டுயினோ எலஜிக்கள் பல முக்கியமான கலைஞர்கள் தத்துவவாதிகள் மீது பெரும் தாக்கத்தை உருவாக்கிய கவிதை தொகுப்பு.
அக்காலக்கட்டம் (20ஆம் நூற்றாண்டின் துவக்கம்) இயற்கையை பரிணாம வளர்ச்சிக் கொள்கையால், மனித மனதை பிராய்டின் Ego மற்றும் Id என்னும் கருதுகோள்களால், ஆன்மாவை Nietzsche யின் Will to power என்னும் கருத்தால் என அனைத்துமே விளக்கப்பட்டு வந்த வரலாற்று புள்ளி. உலகத்தை நம்மால் முழுத்தறிந்து கொள்ள முடியும் என்ற தோற்றத்தை இவை உருவாக்கியிருந்தது. ஆனால் இவ்வாறு இங்குள்ள அனைத்தும் மனிதனால் விளக்கப்படவேண்டி இருப்பது என்பது அவன் இவ்வுயிருலகில் எவற்றையும் தனதாக உணர்வதில்லை என்பதால்.
ஒருபோதும், ஒரு தருணத்திலும், பூக்கள் முடிவில்லாமல் திறக்கும் அந்தத் தூய வெளி நம் முன் விரிவதில்லை...
“கடவுள் இறந்துவிட்டார்” என்றார் நீட்சே. ஆனால் அதற்கு கடவுள் இல்லை என்று அர்த்தமல்ல. கடவுள் இல்லாத உலகில் வாழும் ஒருவன் அவ்வெறுமை உணர்வை அடைவதில்லை. கடவுள் இறந்துவிட்டார் என்று கூறுவதில்லை. அவன் வாழும் உலகு அவனுக்கானது. அணுக்கமானது. கைக்குள் அடங்குவது.
ரீல்கவின் duino elegies இல் மீண்டும் மீண்டும் வருவது உலகின் ஒரு பகுதியாக தன்னை ஒருபோதும் உணர முடியாத மனிதன்.
மிருகங்கள் கூட அறிகின்றன விளக்கப்பட்ட இவ்வுலகிடமிருந்து நாம் எவ்வளவு
தொலைவில் உள்ளோம் என்று…
நம்மால் அறிய முடிவது இத்தொலைவை மட்டுமே. இத்தொலைவு சுட்டுவது நம்மை விட்டு என்றென்றைக்குமாக அகன்று நிற்கும் கடவுளின் அம்சத்தை. Rilke வின் உலகு கடவுள் அற்ற உலகல்ல. தேவதூதர்களை மட்டுமே நமக்கு காட்டி நிற்கும் அணுக முடியாத முடிவிலி அது. Elegy என்னும் கவிதை வடிவம் துக்க பாடலுக்கானது. ஏதோ ஒன்றின், ஒருவரின் இழப்பை கூறும் பாடல்கள் அவை. Rilke டுயினோ மலைமுகட்டில் நின்று உணர்ந்த வெறுமையும் இழப்புணர்வும் என்ன?
இக்கவிதைகளில் வருவது மனிதன் இன்மையை நோக்கி விடுக்கும் அழைப்புகள். எதிர்க்குரல் எதிர்பாராது அவன் வீசியெறியும் அழைப்புகள்.
செவிகொள், என் இதயமே, முன்பு துறவிகள் மட்டுமே கேட்டது போல, கேள்…
(Höre, mein Herz, wie sonst nur Heilige hörten)
கேள்வி புலனாக மட்டுமே தன்னை முழுமையாக மாற்றி கொள்ள விழைகிறார் இவ்வரிகளில். இவரிகள் ஐரொப்பாவில் 13,14 ஆம் நூற்றாண்டுகளில் செழித்து வளர்ந்திருந்த மறைஞான பாடல்களை நினைவு படுத்துகின்றன. அந்த மரபின் சாயல் இக்கவிதைகளில் அனைத்திலும் காணலாம். ஆனால் கடவுள் இங்கெங்கும் இல்லை.
தேவ தூதர்கள் மட்டுமே வருகிறார்கள். அவர்களும் மரபான கிறிஸ்தவ குறியீடாக அல்ல. டுயினோ எலஜிகளின் தூதர்கள் அழகு, சீர்மை என இவ்வுலகை கடந்த கடவுளின் அம்சங்கள். தங்கள் உலகை விட்டு இங்கும் அங்கும், உயிருலகத்திலும், இறந்தவர்களின் உலகங்களிலும் பரவி திரிபவர்கள். நம்மால் அணுக முடியாத உச்சங்கள். அவ்வுலகில் உள்ளவற்றில் இருந்து நாம் எதை அள்ளுவது? அள்ளிக்கொண்டு எங்கு செல்வது? என்று கவிஞன் கேட்கிறான் ஒரு இடத்தில்.
... அழகு என்பது வேறொன்றுமல்ல
பயங்கரமான ஏதோ ஒன்றின் தொடக்க புள்ளி. அதை நாம் சகித்துக் கொள்கிறோம், ரசிக்கிறோம்
ஏனென்றால் அது நம்மை முற்றழிக்க மறுத்து விலக்கத்துடன் நோக்கி நிற்கிறது…
அவனை முற்றழிக்கவும் மறுக்கும் ஈவிரக்கம் அற்ற ஒன்றாக அதை காண்கிறான் கவிஞன். இவ்வுணர்வு நிலைகள் அனைத்துமே மரபான மறைஞான உணர்வு நிலைகள் தான். ஆனால் இங்குள்ள அனைத்தின் வெறுமையை அறிந்தபின் எழுபவையாக உள்ளன. அவற்றில் ஒரு சிறு திரிபு உள்ளது. ஒரு உருகுலைவை உணரமுடிகிறது. இதனை counter sublime என்று கூறுகிறார்கள்.
நீட்சே மனிதனின் இறுதி இலக்கற்ற தன்மையைக் ஒருவன் உணர்ந்தால், அவனுடைய ஒவ்வொரு செயலிலும் அதன்பின் வீண் என்றாகிவிடும் என்கிறார். ஒரு மலர் மலர்ந்து வீணாகி விழுவதை போல், மனிதகுலம் வீணாகி மடிவதை போல், இங்குள்ள ஒவ்வொருவரின் சுயமும் வீண் என்பதை உணர்வது எல்லாவற்றிற்கும் மேலான ஒரு உணர்வு. ஆனால் அவ்வுணர்வை கவிஞனை தவிர யாராலும் தாங்கிக்கொள்ள இயலாது. கவிஞர்களுக்கோ தங்களை எப்படி ஆறுதல்படுத்திக் கொள்வதென்று தெரியும் என்று கூறுகிறார். இலக்கின்மையை உணர்ந்த பின் ஒரு கவிஞன் கூறும் ஆறுதல்கள் இப்பாடல்கள் என்றெடுத்து கொள்ளலாம். என்றாலும் இவை எவ்வகையிலும் தன்னை விடுவிக்காது என்றறிந்த பின் அவன் தனக்கு கூறிக்கொள்வது தான்.
கவிஞனாக மாறும் தருணத்தில் மானுடன் தேவதைகளின் எல்லைக்குள் உலவுகிறான். ஆனால் அங்கும் தன்னை முழுதாக அளிக்க முடிவதில்லை. தேவ தூதர்களில் ஒருவன் தன்னை அவனது மார்போடு அணைத்து கொண்டாலும் அவனது மேலும் தீவிரமான இருப்பில் (stärkere Dasein) தான் மூழ்கிவிட கூடும் என்கிறான் கவிஞன். சுயத்தின் அழிவின் மூலம் இங்குள்ள எல்லைகளை கடந்து செல்வதை குறித்து கூரும் இடங்களும் வருகின்றன.
புவியில் இல்லாமல் ஆவது, எவ்வளவு விசித்திரமானது…. கற்றுக்கொள்ள துவங்கும் முன்னரே நாம் கைவிடும் நெறிகள்
...
விசித்திரமானது. நம் விழைவுகளை நாம் விழையாமல் ஆவது…
நாம் ஒரு திரளாக கண்ட அர்த்தபடுத்தபட்ட உலகம் சிதறி வெவ்வேறு திசைகளில் செல்வது…
இன்மைக்கும் இருப்புக்கும் நடுவில் அவ்வளவு தெளிவான கடக்க முடியாத எல்லை ஒன்றை Rilke காணவில்லை. அவை இரண்டும் கலக்கும் ஒரு புள்ளியை மீண்டும் மீண்டும் சென்று தொட முயல்கிறது இக்கவிதைகள். வெவ்வேறு கண்ணோட்டத்தில். வெவ்வேறு உணர்வு நிலைகளுடன்.
நம் காதலிடமிருந்து விடுபட்டு நடுக்கத்துடன் தொடர வேண்டிய காலம்…
நாணின் இறுக்கத்திலிருந்து தப்பி அதிர்ந்து வெளியேறும் அம்பு
தன்னை விட தீவிரமான ஒன்றாக மாறிவிட்டுருக்கும் அத்தருணத்தில் …
அம்பு வில்லில் இருந்து அகன்று விசை கொண்டு அதிரும் அத்தருணம், தன்னை பற்றி கொண்டிருந்த ஏதோ ஒன்றை உதறி இன்னும் தீவிரமான ஒன்றாக மாறும் தருணம். இத்தொகுப்பில் உள்ள எல்லா கவிதைகளும் அருவமான உணர்வுகளை இது போன்ற மிக கூர்மையான படிமங்களால் சுட்டுகின்றன.
சிதறுண்ட அருவமான படிம குவியலாக மேலோட்ட வாசிப்பில் இக்கவிதைகள் காட்சியளிக்கின்றன. ஆனால் அவற்றை இணைக்கும் அடித்தளம் இவை அனைத்தும் எங்கிருந்து எழுகின்றதோ அது.
அதில் நம் சாயல் அல்லது சாரம் சிறிதேனும் உள்ளது என்னும் கனவு.
நாம் இவ்வுலக வெளியில் கரைகையில் அதில் நம் சாயல் சிறிதேனும் தென்படுமா? தேவதைகள் தங்களிடமிருந்து வெளிப்படுவதை மட்டுமே மீண்டும் நுகர்கிறார்களா, அல்லது சில சமயங்களில், ஏதோ ஒன்றின் பிழையால், நம் சாரத்தின் ஒரு தடயம் ஒன்று அங்கிருக்குமா?
***
0 comments:
Post a Comment