ஒருவரின் முதன்மை விருப்பத்திற்குரியவர் அவரது ஆன்மாவே. ஆன்மா என்பது நம்முள் நாமென உணரும் பிரக்ஞையும் இங்கே இயற்கையில் உள்ளுறைந்திருக்கும் ஒட்டுமொத்த பிரக்ஞையுமாகும் என்று நவ வேதாந்திகள் விளக்கமளிக்கிறார்கள். தத்துவத்தின் மேற்படி ஆழ் அடுக்குகளுக்குள் செல்லாமல் பொதுவாக நின்று பார்த்தாலும் நம் பிரியத்திற்குரிய முதன்மை மனிதர் நாமன்றி யாருண்டு!
ஆயினும் நம்முன் உங்கள் பிரியத்திற்குரிய முதன்மை நபர் யார் ? என்ற கேள்வி சட்டென்று முன்வைக்கப்பட்டால் என்னென்ன பதில் சொல்வோம். இந்த கேள்வியை நாமனைவரும் ஏதோ ஒரு சமயத்தில் சந்தித்திருப்போம். சமூகம் கற்பித்தப்படி, நமது வளர்ப்பு சூழ்நிலைகளுக்கேற்ப அம்மா, அப்பா, பிள்ளைகள், அக்கா, தம்பி, கணவன், மனைவி, தாத்தா, பாட்டி, அத்தை என ஏதோ ஒரு உறவின் பெயர் உச்சரிக்கப்படும். எங்காவது நான் என்று அறுதி உறுதியுடன் சொல்லிய ஒரு நபரை பார்த்திருக்கிறீர்களா ? பெரும்பாலும் அந்த புண்ணியவான்கள் நம் கண்களுக்கு தட்டுப்படுவதில்லை. இப்படி நமது பிரியத்திற்குரியவர் என்று நாம் சொல்லும் உறவினரை காயப்படுத்தாமல் அல்லது அவரால் காயப்படுத்தப்படாமல் இருக்க முடிகிறதா ? நமது நேசத்திற்குரியவரின் குரல்வளையை கடித்து குருதி குடிக்க வெறியெழும் தருணமொன்று அமையாத மானிடர் புவியில் அரிது தான். கல்பற்றா நாராயணனின் விதிப்பயன் கவிதை அந்த தருணத்தை நோக்கி குவிவது.
விதிப்பயன்
மகன் இறந்த ஓர் அன்னை
யுதிஷ்டிரனை அணுகி
ஏனிப்படி எனக்கு நிகழ்ந்தது என்றாள்
பதிலுக்கு யுதிஷ்டிரன் சொன்னான்
உற்றவரின் ஆசையின்படி அன்றி
மண்ணில் ஒரு குழந்தையும் இறப்பதில்லை
எந்தக் கொடுந்துயரும்
நிராகரிக்க முடியாத விண்ணப்பத்தின் விளைவே
நினைக்காதது நடக்குமளவுக்கு
பெரிதல்ல இவ்வுலகம்
நினைத்துப்பார்
எப்போதோ நீயும் உள்ளெரிந்து பிரார்த்தனை செய்திருப்பாய்.
ஆனால் அதுஞ்
அவள் நினைவுகூர்ந்து சொன்னாள்
அப்படி நிகழவேண்டும் என்று எண்ணி அல்ல
அடுத்தக் கணமே என்னை நானே
கிழித்து ரணமாக்கியிருக்கிறேன்
தெய்வமே நான் சொன்னதென்ன என்று
தீயிலிருந்து விரலெடுப்பதுபோல
அச்சொல்லில் இருந்து என்னை
இழுத்துக் கொண்டிருக்கிறேன்
பெற்றதாயின் சொல்லல்லவா
பலிக்காதென்று சமாதானம் செய்து கொண்டிருக்கிறேன்
நான் எப்போதும் வேண்டி கொண்டிருந்த எதுவுமே
கேட்கபடாமல்
இது மட்டுமே கேட்கப்பட்டது என்கிறாயா ?
எத்தனை நெருக்கமானவர்களிடமும் கேட்கவழியில்லாத
பிற எவரிடமும் வேண்டிக்கொள்ள முடியாத
கலப்பற்ற, அவசரமான
ஒரு வேண்டுகோள்
அதுவும் ஒரு பெற்றதாயின் விண்ணப்பம்
எப்படி கேட்கப்படாது போகும் ?
அந்த அன்னை சொல்லாததனால் போலும்
இதுவரை வெளியே தெரியவில்லை இக்கதை.
பாழடைந்த கிணறுகள் கெட்ட கனவுகளை எழுப்புவதை போல கவிதை மர்ம உறுப்புகளின் அந்தரங்க நரம்புகளில் கைவைத்து அழுத்துகிறது. விதி எப்போதும் அப்படித்தான் வேலை செய்கிறது என்பது வேறு விஷயம். அன்றாடத்தில் எப்போதெல்லாம் மனிதர்கள் எல்லாம் விதி என முணுமுணுக்கிறார்களோ அப்போதெல்லாம் விடலை பையன்கள் முரட்டு தடியன்களால் விதையழுத்தம் பார்க்கப்பட்ட பாவத்தை அவர்களின் முகங்களில் காணலாம். கவிதை அதற்கு குறைவாக எதையும் செய்துவிடவில்லை. தடியன்களை போல மாறா புன்னகையுடன் தானும் வேலையை செய்கிறது. ஒரு விஷயம், தடியன்களுக்கும் விடலை பருவம் உண்டு என நினைப்பெழுந்தால் சற்று ஆசுவாசப்படுத்தி கொள்ளலாம்.
வாசித்து வெகுகாலம் கழித்து விதிப்பயனை விதிவசத்தால் நினைவிலிருந்து எடுத்தால் - அந்த விதிவசம் என்ன என்று அறிய ஆவல் கொள்ளும் வாசகர்களுக்கு சொல்லி கொள்வதாவது, சனியிடம் பிள்ளையார் சொன்ன கதையாக நாளை வரும் கட்டுரைக்கு காத்திருக்கவும் - யுதிஷ்டிரனுக்கு பதிலாக அந்த அன்னை புத்தருக்கு முன் நின்றிருந்தாள். நினைவு மாறுவது சில சமயம் கவிதையை உயர்த்தவும் கூடும் என்றாலும் இங்கே யுதிஷ்டிரன் என்பதற்கு மாற்றே இல்லை. எல்லா தருணத்திலும் தன் நெஞ்சுக்கு உண்மை உரைத்த ஒருவனிடம் அல்லவா, நீதி கோர முடியும். ஆனால் நீதி நமக்கு நம்மை காட்டுவதோடு நின்று விடுகிறது. ஞானம் நாமாகி வந்த பிறிதொன்றையும் சுட்டி அமைகிறது. அங்கே தான் புத்தர் வருகிறார். புத்தர் எப்போதும் கௌதம சித்தார்த்தராகவே இருக்க வேண்டும் என நினைத்திருக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் குரு நித்ய சைதன்ய யதியின் கவிதைக்கு செல்வோம்.
வானில் வளியாக
வளியில் தீயாக
தீயில் நீராக
நீரில் நிலமாக
உன்னில் காதல்
கொண்டிருக்கிறேன்
ஒரு தனிக்கவிதையாக எங்கோ இயற்கை நிலக்காட்சி தோற்றத்தின் முன் அமர்ந்து குரு எழுதியிருக்க கூடிய கவிதை என தோன்ற வாய்ப்புகள் மிகுதி. இயற்கையில் உறையும் பெருங்காதலை பற்றி பாடுவதால் நம்முள் அப்படி பிம்பம் எழுகிறது - குறைந்தபட்சம் என்னுள். பின்கதை சுவாரசியமானது. தனது அக சிக்கல்களை சொல்லி எழுதிய சீடர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் பிரத்யேகமாக அவரை நோக்கி எழுதப்பட்ட கவிதை அது. ஒருவகையில் துறவியின் கவிதைகள் எல்லாவற்றிலும் உறையும் துறந்த தன்மையை, என்றுமுளதாக அமையும் தன்மையை நோக்கி எளிதில் எழுவதாக தோன்றுகிறது.
இக்கவிதையை ஒட்டி கவிஞர் வேணு வேட்ராயன் அவர்களிடம் பேசி கொண்டிருந்த போது அவர் வள்ளலாரின் பின்வரும் கவிதையை கூறினார்.
தானாகித் தானல்ல தொன்று மில்லாத்
தன்மையனாய் எவ்வெவைக்குந் தலைவ னாகி
வானாகி வளியனலாய் நீரு மாகி
மலர் தலைய உலகாகி மற்று மாகித்
தேனாகித் தேனினறுஞ் சுவைய தாகித்
தீஞ்சுவையின் பயனாகித் தேடு கின்ற
நானாகி என்னிறையாய் நின்றோய் நின்னை
நாயடியேன் எவ்வாறு நவிற்று மாறே.
நித்யாவின் கவிதை சார்புநிலைகளின் ஊடே சாராதிருக்கும் பிணைப்பில்லா பற்றுடன் நின்றாடும் வேட்கையை கூறுகிறதெனில், மறுபக்கம் வள்ளலாருடையது இங்கனைத்துமாகி நாமாகி நடமிடும் முழுமுதலின் கருணையை எண்ணி நெகிழ்கிறது. நம் பிரியத்திற்குரிய நபர் பிறரென்று திரையிட்டு சமயத்தில் அவரையும் வதைத்து நம்மையும் சுட்டுக்கொள்ளும் நமக்கு இவை தருவது தான் என்ன ? மலரை பார்க்கையில் நம்முள்ளும் ஒன்று மலர்கிறது அல்லவா ? அந்த சுட்டுதலை போல. ததாகரரின் வான் நோக்கிய சுட்டுவிரலாக ஒருகணம் ஆழத்தை நடுங்க செய்து மீளமைப்பவை.
அதே கேள்வி, உங்கள் பிரியத்திற்குரிய முதன்மை நபர் ?
***
0 comments:
Post a Comment