கேட்பாரற்றுக்
கிடக்கும்
பழங் கோயிலின்
இடிபாடுகளில்
இள முலைகள் துள்ள
தனித்துத் திரிந்த
ஒரு சிறுபெண்ணை சந்தித்தேன்
தனக்குப் பயமில்லை
தான் தனித்தில்லை
என்றாள் அவள்
இங்கு பறவைகள் இருக்கின்றன
என்றாள்
நூற்றுக்கணக்கில்
பிறகு
ஊழிவரும்வரை
உறங்க முடியாத தெய்வங்கள்
ஆயிரக்கணக்கில்
காலத்தில் உறைந்த விழிகளை
மூட முடியாமல்
பார்த்துக்கொண்டே இருக்கின்றன
எப்போதும்
எல்லாவற்றையும்
என்று சிரித்தாள்.
அது வீசப்பட்டது போல
பெருகி வெளியங்கும் நிறைந்தது
அந்த சிரிப்பின்
முடிவில்
வைரம் போல் மின்னும்
இரண்டு கூர்க் கொடும்பற்களை
நான் ஒருகணம் பார்த்தேன்
அஞ்சி
ஓவென்று அலறினேன்
அவள்
வாய்மீது விரல் வைத்து
அஞ்சாதே
என்று புன்னகைத்த போழுது
யாரோ எய்தது போல
இளவெயில் நிறத்தில்
ஒரு பட்டாம்பூச்சி இறங்கி
அவள் உதடுகள் மேல் அமர்ந்தது.
நான் அது சிறகுகள் அசைய அசைய
மது உண்பதைப் பார்த்தேன்.
அப்போது
ஒரு புத்தனின் கண்கள்
அவளிடம் இருந்தது
அல்லது
முலை கொடுக்கும் தாயின் கண்கள்
ஆனால்
ஒரு ஓவியத்தின் கண்கள்
மாற்றபட்டாற் போல்
சட்டென்று
அவன் கண்கள் சாய்ந்து சோம்பிற்று
எனது வெறும் கைகளைக் கண்டு
எனக்கென
ஒரு பூ கூட பூக்கவில்லை அல்லவா
உன் தோட்டத்தில்
என்று வான் நோக்கி கூவினாள் அவள்
அது கேட்டு
கோபுரங்கள் நடுங்கின.
பின்
புனல் போல் இளகும்கண்களுடன்
புகை கலைவது போல
மெல்லிய மழைக்கம்பிகள்
ஊடே நுழைந்து நுழைந்து
அவள் என்னை விட்டு
விலகி கருவறைக்குள் போவதை
நான் பார்த்துக்கொண்டே இருந்தேன்
செய்வதற்று
ஒரே ஒரு பூவில்
இருந்தது
அவள் சாஸ்வதம்.
- கவிஞர் போகன் சங்கர்
சொல் அர்த்தமாவதில் கற்பனை மற்றும் உணர்தலின் பங்கு முக்கியமானது. கற்பனையாலும் உணர்தலாலும் கவிதைக்கு ஒரு ‘கான்க்ரீட்’ தன்மை இல்லாமலாகிறது. கவிதை என்றில்லை இலக்கியமும் கலையும் எவ்வாறு உணரப்படுகிறது என்பது ஆதாரமானது. உடலுக்கு உயிர் போல..கவிதைக்கு உணர்தல் இருக்கிறது. இந்த உணர்தலால் தான் எல்லாக்கலைகளும் காலத்தால் புதியதாகிறது.
கவிஞர் போகன் சங்கரின் இந்தக்கவிதை ஒரு சிறு தெய்வம் பற்றியது. இடிபாடுகளாகிப்போன கோவிலின் தெய்வத்தை கவிமனம் சந்திக்கும் தருணம் இந்தக்கவிதையில் உள்ளது. அந்த சந்திப்பு புறநிகழ்விலிருந்து சென்று தொட்ட அக நிகழ்வாக இருக்கலாம். ஒரு கனவாக இருக்கலாம். மனதிற்குள் உள்ள நினைவாகவும் இருக்கலாம்.
கவிமனதிலிருந்து இறங்கி சொல்லில் அமரும் அது தன்னை இத்தனை விதவிதமாக காட்டுகிறது.முதலில் சிறுபெண்,அங்கு திரியும் பறவைகளில் ஒரு பறவை, கோபம் கொண்ட யச்சி, புத்தன், அன்னை, மழை, ஒரு சிறு பூ என்று அந்த தெய்வம் இந்தக்கவிதையில் வரும் சூழலில் உள்ள ஒவ்வொன்றிலும் உள்ளது. இத்தனையாகவும் தன்னை காட்டும் அது மறுபடியும் சென்று மனதில் அமர்ந்து கொள்கிறது. மனதிலிருந்து எடுத்து பார்க்க தயங்கும் ஒன்று அது. ஆறாத கோபமும் கருணையும் என்று இரு முகங்கள் கொண்டது. சிறுபெண், யட்சி என்று நாம் உணரும் இரு நிலைகள்.
சிறுதெய்வங்கள் அனைத்துமே இந்த உணர்வுகளை அளிக்கக்கூடியவை. கவிதையின் இறுதியில் பெய்யும் மழையும் அந்த சிறு பெண் கேட்கும் பூவும் என்ன?
ஒரே ஒரு பூவில் உள்ளது அவள் சாஸ்வதம் என்று கவிதை முடிகிறது. அவளுக்கு தரப்படாத அந்த ஒரே ஒரு பூவால் தெய்வமானவள் அவள். அவள் இதழில் பட்டாம்பூச்சிக்கு தேனாய் இருப்பது அதுவே.
மழைக்குள் காலகாலமாய் தன்னை மறைக்கும் அவள் புகுந்து கொள்ளும் இருள் கவிந்த கருவறையில் முடியாதவள்.
***
0 comments:
Post a Comment