தீ நின்ற பாதம்
இட்ட அடி நோக
எடுத்த அடி கொப்பளிக்க
நடக்கின்ற நிலம் யாவும்
பொசுங்கிக் கருக
அறுதியான பொருள் தேடித்
தட்டழியும் தடமெங்கும்
ஒரு கணமேனும் எங்கும்
எனை நிற்க விடாத
தீ நின்ற பாதம் எனக்கு.
.
அடி தொற்றி
ஒரு கொடி போல் சுற்றி
மேலேறி முடி வரை செல்லும்
தன்னை அழிக்கும் அக்னியைத்
தானே சுமந்து திரியும்
பித்தர் கூட்டம் பின் தொடரும்
நீர்மை நின்ற பாதத்து* ஈசா…
உனை அறிந்த போதிலும் அணையாத
தீ நின்ற பாதம் எனக்கு.
*சிவவாக்கியர் சொல்லும் பாதம்
பாலை
பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல்.
என் பாதம் பதித்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல் தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம்.
- பிரமிள்
பிரமிளின் கவிதை மெளனமான ஆழ எரிதலைச் சொல்கிறது. எங்கும் கண்குளிரும் பொன்மணல். தீ அவ்வளவு மெளனமாக, ரகசியமாக. பாதம் பதித்து நடக்கும் இடம் மட்டும் எரிகிறது. நிலத்தை நிழல் நாடவைக்கும் தேடல் அது.
சம்யுக்தா மாயாவின் கவிதையோ கிட்டத்தட்ட உக்கிரமான பாடல் போல என்றுமுள்ள தீராத தேடலையும் அலைகழிப்பையும் சித்தரிக்கிறது. அகத்தின் நெருப்பில் புறம் பொசுங்குகிறதையும் இறுதிப்பொருளான இறையை உணர்ந்தபின்னும், முடிவடையாத, நிழலுணராத, ஒருகணம்கூட ஓய்ந்திருக்க முடியாத மானுடனின் யாத்திரையைச் சித்தரிக்கிறது.
மலை நெருப்பு
உன் காதல் – இதோ
இந்த கண்ணாடி சாளரத்தின் வெளி
வியாபித்திருக்கும் இருளில்
நிழலுருவாய் தெரியும்
அந்த மலை போன்றது என்கிறாள்
நானும் என் காதலும்
வெவ்வேறல்ல என்கிறேன்
சிக்மகளூரின் புறநகர் விடுதியில்
காதுமடல்களில் வெப்பக் காற்றை
விசிறச் செய்யும் – ஒரு
மதுப்போத்தலோடு அமர்ந்திருக்கிறோம்
உன் மீட்சிக்கான வழி தான் என்ன..?
என்கிறாள் மிக்க ஆற்றாமையுடன்
காதலில் மீட்சி என்பதே
மெல்ல அழிவது தானே...?!
நெடுங்காலமாய் நொதித்த
மதுவின் வீரியம்
என்னை உடையச் செய்கிறது.
எப்படி சொல்ல அவளிடம்..?
நீ
நின்று நிதானமாய்
இந்த பச்சை மலை மேல்
பற்றி படரும் நெருப்பு என...
முகடுகளெங்கும் கவிந்திருப்பது
பொசுங்கும் வாசத்தின் புகையென…
காதலில் மீட்சி என்பதே
மெல்ல அழிவது தானே...?!
இப்படித்தான் சொல்ல முடிகிறது அவரால். எரிந்து, தன்னைக் கடந்து, இன்னொன்றாக உருமாற்றம் கொள்வதன் ஏக்கம்.
சம்யுக்தா மாயாவின் கவிதையில் நெருப்பு கட்புலனாகுவது அல்ல, மனம் மூட்டும் அல்லது மனதில் மூண்ட நெருப்பு அது. நெருப்பு, தன் வாலை தானே கவ்வியிருக்கும் நாகம் போன்றது அல்லவா? தொடக்கமே முடிவைக் கவ்விச்சுருண்டிருப்பது போல. ஒளிக்குப் பின் சாம்பல் என்ற நினைவூட்டலும்தானே? சாம்பல் மண்ணுக்கு உரமாகவும் ஆகும்தானே?
ஒன்றா…..வேறா….?
இந்த விளக்கின் நுனியில்
நின்று எரிந்திருக்கிறேன்
எண்ணற்ற முறைகள்.
தொடர்ந்து எண்ணெய் ஊற்றி...
திரியை மட்டும்
திரும்பத் திரும்ப மாற்றி...
ஒவ்வொரு முறையும்
எரியும் சுடர்
ஒன்றே தானா.... ?
வேறு....வேறா.... ?
தீ எங்கிருந்து வருகிறது? புராமிதியஸ் கடவுளர்களுக்குத் தெரியாமல் பூமிக்கு நெருப்பை கொண்டுவந்த கதையொன்றையும் கிரேக்க தொன்மங்களில் நாம் பார்க்கிறோம். நம் வயிறு எத்தனை பழைய விளக்கு? நம் மனம் புயல் நடுவே நடுங்கும் விளக்கும்தான் அல்லவா?
சில நூற்றாண்டுகளுக்கு முன்னே சொல்லப்பட்டிருக்கிறதுதானே?
“உன் சொந்த நெருப்பிலேயே நீ உன்னை எரித்துக்கொள்ளத் துணிய வேண்டும்; முதலில் சாம்பலாகாமல் நீ எப்படி மீண்டும் உயிர்த்தெழ முடியும்?” என.
மெய்வீடு தேடும் யாத்திரைதான். மானுடனின் தேடல் நீடு வாழ்க!
2026ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் குமர குருபரன் விருது பெறும் கவிஞர் சம்யுக்தா மாயாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.







0 comments:
Post a Comment