மனிதரின் அறிவு செயல்படாமல் இருக்கும் களத்தையே இலக்கியம் தன் பிரதானப் பேசுபொருளாகக் கொண்டிருக்கிறதோ என பல சமயம் தோன்றும். அறிவு திட்டமானது. வரையறுத்தபின் அதிலிருந்து பெற்றுக் கொள்ள ஒன்றுமில்லை. ஆனால் உணர்வுகள் எத்தனை சொன்னாலும் இன்னும் இன்னும் எனக் கோருபவை. இன்னும் மிச்சமிருக்கிறது எனக் கைசுட்டுபவை. இன்னும் சொல்லி விட முடியாத தவிப்பைக் கொண்டிருப்பவை. பிரிவு, காத்திருப்பு என அதன் எந்த இழைகளும் இன்னும் ஏதாவது சொல் என கவிஞர்களைப் பார்த்து கை நீட்டுகையில் பரிதவிப்புடன் அவர் தன்னை அகழ ஆரம்பிக்கிறார்.
"மனித உடலுக்கு மையமென ஒன்றிருந்தால் அதை அடைய ஆறு இன்ஞ்ச் கூட இருக்காது, ஆனால் ஆன்மாவின் மையம் என்பது இந்த மொத்த பிரபஞ்சத்தின் மையம் எனக் கருதும் ஒன்றுக்குள் நுழைவதற்கு இணையானது. உளரீதியாக ஒருபோதும் உன்னால் ஆன்மாவின் மையத்தை அடையவே இயலாது. எத்தனை சென்றாலும் இன்னும் இன்னும் என்று சென்று கொண்டே இருக்கக் கூடிய தொலைவு. அத்தனை ஆழமானது.” என்கிறார் நித்ய சைதன்ய யதி.
அதனால் தான் கடவுள்/மிகப்பெரிய ஒன்றுடனான நம் தொடர்பில் காதலுக்கு முதலிடம் அளிக்கப்படுகிறது. “O living flame of love” என்ற புனித ஜானின் (பொ.யு 15ஆம் நூற்றாண்டு) விளி அதன் ஆழத்தை உணர்வதிலிருந்து தான் வருகிறது.
*
உறவுச்சிக்கல், உணர்வுச்சிக்கல் இவை இரண்டும் நிரம்பித் ததும்பும் எழுத்துக்கள் மேல் ஓர் ஏளனம் பெரும்பாலானோர்க்கு உண்டு. பெரும்பாலும் வணிக எழுத்துக்களில் சிக்குண்டு தேய்ந்த கருப்பொருளாக மாறிப்போனவை அவை.
பல்லுறவுகளை, நிமிடத்தைய காதலை, புணர்ந்து பிரிந்து செல்லும் உறவுகளை மிக எளிமையாகச் சொல்லிச் செல்லும் கவிதைகள் நம்மை ஆக்கிரமித்த காலம் என்பது ஒரு தலைமுறையின் பொதுவான மனநிலை தானா? அவை ”கவிதை” என்ற தன்மையை அடைந்துவிட்டதால் அந்த மனநிலையையே ஒரு காலகட்டம் அனைத்திற்கும் பொருத்திப் பார்ப்பது சரிதானா? ஒரு வகையில் ”ஆம், சரி” என்றே சொல்ல முடிகிறது. ஏனெனில் அது புதிய பேசு பொருள், புதிய சாத்தியங்களை அதன் நிமித்தமே கொண்டது. அத்துடன் அதைச் சார்ந்த அக்காலகட்டத்தைய மொழியின் சாத்தியமும் இணையும் போது மேலும் கவிதைக்கான சாத்தியம் விரிகிறது. அங்கு நாம் அதில் வெற்றிச் சாத்தியங்களை நிகழ்த்திய கவிஞர்களை/கவிதைகளை புனித நூல் பட்டியலில் சேர்த்திருக்கிறோம்.
ஆனால் இதேகாலகட்டத்தில் ஒரு உறவின் பொருட்டு தன் வாழ்நாள் முழுவதும் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தவர்கள் உயிர்த்திருக்கவே இல்லை என்று சொல்லிவிட இயலுமா?
கல்பற்றா நாராயணனின் தொடுதிரைக் கவிதை இலகுத் தன்மையுடன் நோக்கும் அதே நேரத்தில் எடையுடனும் அணுகும் சாத்தியமுள்ளது.
”மேல்தளத்தில்
எடையில்லாமல் நகர
என்னால் இயலவில்லை”
என்ற வரிகள் வருத்தத்துடன் கவி பகிர்வது போலவும் உள்ளது. அவருடைய பல கவிதைகளை இந்த வாசிப்புப் பார்வை வழியாக நோக்கினால் அந்த எடையின் கனத்தை நம்மால் பார்க்க இயலும்.
உறவுகளுக்கான பல்வேறு வரையறைகளைக் கொண்டு, மிக இலகுவாக ஆகிவிட்டதாக நாம் சொல்லும் இக்காலகட்டத்தில் தான் மனச்சிக்கல் சார்ந்த பிரச்சனையும் அதிகரித்த காலகட்டம் எனலாம். ஒரு காலகட்டம் என்றவுடனேயே நம் குவிமையம் இளைஞர்களில் குவிகிறது. ஆனால் களநிலவரம் அதுவல்ல. தன் காலகட்டத்தில் மறுக்கப்பட்டதை கவ்விக் கொள்ளும் பொருட்டு முந்தைய தலைமுறையினரே பெருமளவு ஒரு காலகட்டத்தின் மனநிலை என்பதற்குள் இளைஞர்களாகிக் கொள்ளும் பொருட்டு புகுந்து கொள்கின்றனர். எனவே ஒரு காலகட்டத்தின் மனநிலை என்பது எல்லா தலைமுறையிலும் ஊடுறுவுகிறது.
மறுப்பே இல்லாமல் உறவுகளில் இலகுதன்மை, தீவிரம் இந்த இரண்டு மனநிலைகளுமே எக்காலத்திலும் இருந்து வந்துள்ளது. ஆனால் முதலாமது வெளிப்படக்கூடிய சூழலை பின்நவீனத்துவ காலகட்டம் முழுமையாகத் திறந்து வைத்தது எனலாம். இரண்டாவது சற்று ஒதுங்கி பார்த்துக் கொண்டிருந்தது என்றே சொல்ல முடிகிறது. தமிழில் (அல்லது எம்மொழியிலும்?) இளமையில் ஏதோ ஓர் உறவின் இழப்பே கவிதையை/ கவிஞரை ஜனனிக்கிறது என்பதனாலேயே காதல் கவிதைகள் முதிரா இளமைக்குரியது என்ற எண்ணத்தைக் கை கொண்டுள்ளோம். முதிர்ச்சியடைய முதிர்ச்சியடைய உணர்வு மழுங்களே கெளரவமாகக் கொள்ளப்படுவதால் உணர்ச்சித் ததும்பலின் ஆரம்பமான காதலுணர்வை நாம் பெரிதாக மதிப்பதில்லை. அதனாலேயே அது குறித்த பகடி மீது நமக்கு அறிவார்த்தமான பார்வை ஏற்படுகிறது. மேலும் ஒன்று கவிதைத் தன்மையை அடைந்து விடுவதும், இன்னொன்று அடையாமல் இருப்பதும் அந்தப் பார்வையை வலுவாக்கிவிடுகிறது
*
சம்யுக்தா மாயாவின் முதல் தொகுப்பான “டல்ஹௌஸியின் ஆரஞ்சு இரவு” முழுவதுமாக ஒரு காதல் சோகம் இழையோடுகிறது. காதலனை, காதலை நோக்கி ஒருத்தியின் புலம்பல் குரல் ஒன்று கேட்டுக் கொண்டே இருக்கிறது. நகர்ந்து செல்ல முடியாமல் நிர்கதியாக நின்றிருக்கும் ஒரு இடம், காலம், தருணம், ஒரு ஆள் பற்றிய சித்திரம் நமக்கு வந்து கொண்டே உள்ளது. நிலைத்திருக்கும் ஒரு காதலுக்கான ஏக்கம், காதலின் நினைவேக்கம் இதில் உள்ளது.
“முதல் தொடுகைக்குப் பின் இரண்டாவது தொடுகையின் நிமித்தம் பொறுமையற்றவராக இருப்பாய். முதல் புன்னனைக்குப்பின் இரண்டாவது புன்னகையை நோக்கி பொறுமையற்றவராக இருப்பாய். காதலை வரையறுக்கச் சொன்னால் நான் அதை ’ஒன்றிணைதலை நோக்கிய தவிப்பு’ என்று சொல்வேன்” என புனித ஜானின் கவிதைகளைப் பற்றிய ரசனைக் கட்டுரை ஒன்றில் நித்யசைதன்ய யதி குறிப்பிடுகிறார்.
சம்யுக்தா மாயாவின் கவிதைகளில் இருப்பதும் சற்றே தொலைந்து போன அருகிப் போன காதலை மீள கைக்கொள்ளுதலை நோக்கிய தவிப்பு எனலாம். ”பிரிவு” என்ற கருப்பொருள் அவரின் இரு கவிதைத் தொகுப்பிலும் பிரதானமாக ஆக்கிரமித்திருக்கின்றன. அதன் பகுதிகளாக புறக்கணிப்பு, நிறைவேறாத கனவுகள், ஒளிக்கப்பட்ட ஆசைகள் ஆகியவை இழையோடுகின்றன.
//
நீயும் அருந்தாத நானும் பருகாத
கறுத்துக் கொண்டிருக்கும் இவ்வளவு ‘தேநீரை’
எந்த கடலில் போய் கொட்டுவது?
//
//
தவறான பருவங்களில் பொழியச் செய்வதற்கெனவே
என் வயல்வெளிகளில் எப்போதும்
பொறுப்பற்றுப் பறக்கின்றன தட்டான்கள்.
//
போன்ற கவிதை வரிகள் அவற்றை பறைசாற்றுவன. இக்கவிதைகளில் மிக அரிதாகவே முழுக்கவிதையும் கவிதையாகும் சாத்தியத்தை கொண்டிருப்பதே இதிலுள்ள சிக்கல். பெரும்பாலான கவிதைகளில் மிகப்பழைய படிமங்களும், உருவகங்களும் ஆக்கிரமித்திருக்கின்றன. பழைய மொழி அவற்றை மேலும் பழையதாக்குகின்றன. பழையனவற்றைக் கை கொள்வது இலக்கியத்தில் விரும்பத்தக்கது என்றாலும், அதன் சேர்க்கை கவிதைக்கு ஏதும் புதிய ஒளியைப் பாய்ச்சுகிறதா, புதிய சொல்லிணைவுகளை உருவாக்குகிறதா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்ல முடிகிறது. உதாரணமாக “நீர்வழிப்படூம்” என்ற பழைய சொல் ஒன்று வேணுவேட்ராயனின் கவிதையில் நீர்வழிப்படூம் நிலா” என்றாகி புதிய சொல்லிணைவை உருவாக்குவதைச் சொல்லலாம்.
சம்யுக்தாவின் கவிதைகளில் இலையுதிர் பருவத்தின் கடைசி இலை, பனி உறைந்த மலை சரிவு, கையிலிருக்கும் சிறு விளக்கு, கரை தட்டி நிற்கும் கைவிடப்பட்ட கப்பலொன்றின் மேல் அடர்ந்த பாசி, ஒற்றை மேகம் (நினைவுகள்), சிறு பிள்ளை கையில் பிடித்து மறந்து போன பட்டம், காய்ந்த பூக்கள் சிதறியிருக்கும் ஒரு வாசல், இரவு, குளிர், பாலை ஆகியவை காதல் பிரிவைக் கடத்தும் பழைய படிமங்களாக மட்டுமே எஞ்சுகின்றன.
ஆனால் தலைப்புக் கவிதையான டல்ஹௌஸியின் ஆரஞ்சு இரவு கவிதையில் வெளிப்படும் ”ஆரஞ்சு வெளிச்சத்தை நோக்கி ஈர்க்கப்படும் விட்டில்களின் இறகுகள்”, “அறுவடை காலம் எதிர்நோக்கி முற்றத்தில் காத்திருக்கும் துருவேறும் அரிவாள்கள்”, “உறைந்த உதிரத் துளிகளென இறைந்து கிடக்கின்றன சிவந்த பூக்கள்”, ”நிறமற்ற நீர்மை எளிய உன் அன்பு” போன்ற கவிஞரின் தனித்த படிமங்கள் புத்துணர்வையும் அளிக்கின்றன.
மிக அரிதாக மொத்தக் கவிதையும் ஓர் படிமமாக பிரிவை உணர்த்துவனவாக உள்ளன. நினைவேக்கத்தைச் சொல்லும் கவிதை ஒன்று:
அரூப முத்து
ஒரு மாதுளம்பழம் பிரியத்துக்குரியவர்களை
உனக்கு நினைவூட்டுவதாய் சொல்வாய்
தொலைவிலிருந்து பசியாற்றும் திறன் - அதற்கு
உண்டெனும் உனது நம்பிக்கைகள்
இப்போதும் உண்மையா?
நான் ஒரு மாதுளையைப் பிளக்கிறேன்
உன்னைப் பற்றிய நினைவுகள் சிதறுகின்றன
கழுவிட முடியாத உதிரக் கறையென
இருகைகளிலும் பரவுகிறது இளங்கனியின் சாறு
இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை
இறுதி சந்திப்பின் போது - நம்
உணவு மேசையிலிருந்து களவு போய்விட்ட
அரூபமான
சிவந்த
ஒற்றை
மாதுளை நல் முத்து !
*
மாதுளை நல் முத்து போன்ற நினைவேக்கம் தரும் பொருட்கள் கவிஞரின் தனித்த அகம் சார்ந்தவையாக உள்ளன.
“நிரம்பும் வெளி” போன்ற கவிதையாகாத ஆனால் வெறுமே தனியரின் உணர்வுகளை மட்டும் கடத்திச் செல்லும் கவிதைகள் முதல் தொகுப்பில் அதிகம் விரைந்து கிடக்கின்றன. காதலின் பிரிவை, துக்கத்தை, ஏக்கத்தை, துரோகத்தை பலவாறு ஏற்றி வைத்துப் பார்க்கிறார் என்பதற்கு அப்பால் அக்கவிதைத் தொகுப்பு முக்கியத்துவம் பெறுவதில்லை.
இனி ஒருபோதும் சந்தித்துக் கொள்ள வாய்ப்பற்ற பிரிவு என்ற சித்திரத்தை கவிதைகள் அளிக்கின்றன. ஆனால் அதன் கனத்தின் ஆழத்தின் குறைவால் சோர்வூட்டவும் செய்கின்றன.
தனிமையையும், கைவிடலையும் கடத்தும் அத்தனை எதிர்மறைப் படிமங்களையும் இக்கவிதைத் தொகுப்பு முழுவதும் பார்க்கலாம். இந்தத் தொகுப்பிலேயே பிரிவை விலகி நின்று பார்க்கும் சிற்சில கவிதைகள் தென்படுகின்றன.
முன்னேற்பாடு
இதோ பிறந்து விட்டது
மற்றுமொரு டிசம்பர் மாதம்
நேற்று துளிர்த்த தம் முதல் தளிர்களோடு
புதிய குளிரில் நடுங்குகின்றன
எதிர்கால சிலுவை மரங்கள்
*
பிரிவின் அடுத்த கட்டம் என இதைச் சொல்லலாம். பழகிப் போதல். ஒன்று பழகுவதன் வழியாக விலகி நின்று பார்க்கும் பார்வையை அடைவது. நினைவுகளை அழிக்கும் தொழில் நுட்பங்களைப் பற்றி பேசும் காலகட்டத்தில் இருக்கிறோம். ஆனால் நிதர்சனத்தில் ஓர் விரும்பத்தகாத நினைவை இரு வழிகளில் கடக்கலாம். ஒன்று அதை பிரக்ஞைப் பூர்வமாக வலிந்து இல்லாமல் செய்வது. இரண்டு அதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொணர்ந்து வாழச் செய்து மரத்துப் (Numb) போகச் செய்வது. அதன் வழியாகவே தனியரின் பிரிவிலிருந்து அடுத்த கட்டமான நித்தியத்துவமான பிரிவை நோக்கிச் செல்ல முடியும். அதன் வழியாகவே நான் பிரிவைக் கொடுத்த இன்னொரு தரப்பின் ஆன்மாவை விசாரிக்க முடியும். முதல் தொகுப்பில் மிக அரிதாக அத்தகைய நிலை கொண்ட கவிதைகள் உள்ளன.
சலனம்
பத்திரப்படுத்தியிருந்த ஒரு நெளிமுடி கொண்டு
உன் சயனக்கட்டிலில் கட்டிப் போட்டு வளர்க்கிறாய்
காட்டில் கண்டெடுத்த பூனைக் குட்டிகளை
நகரெங்கும் செல்லப் பிராணிகள் வைத்திருப்போரால்
பொறாமையோடு பேசப்படுகிறது - முன்மாதிரியான
சாதுப்பூனைகளை உருவாக்கும் உன் திட்டம்
பூனைகளின் பொதுஅறிவிற்காய் மட்டும் ஆகட்டுமென
வாளிப்பான மீன்களின் ஓவியங்கள் வரைகிறாய்
புலாலின் கள்ளவாசமறிந்திரா உன் வீட்டு சுவர்களில்
உதிரக்கறை தோய்ந்த அடர் சொப்பனங்களில்
அவை திடுக்கிட்டு எழுந்து விழிக்கையில்
அதீத கற்பனைகள் என சமாதானப் படுத்துகிறாய்
அரும்பு மீசைகளுக்கு ஒருபோதும் ஐயமேற்படாதெனும்
திடமான நம்பிக்கையில் விளையாட கொடுக்கிறாய்
பல நிறங்கள் மாற்றிப் பூசிய இறகுப் பந்துகளை
விரிப்புகளில் ரோமங்கள் ஒவ்வாமை ஏற்படுத்துமென
உன் படுக்கையிலேற நீ அனுமதிப்பதேயில்லை
கட்டுண்ட எல்லைகளில் மட்டும் சுற்றிடும் பூனைகளை
உன் பரம்பரை மரக்கட்டிலின் கால்கள் இன்று
மெல்ல ஆட்டம் காணத் துவங்குகின்றன
நீர்த்த பால் கிண்ணங்களில் மிதக்கும் தம்
வேட்டை முக பிம்பங்களில் கலங்கும்
உன் சைவப் பூனைகளின் நினைவிலூறும்
மறந்திருந்த பசியின் புதிய உறுமல்களில் .
//
ஓர் உறவில் எல்லையற்று இரு தரப்பாலும் பரஸ்பரம் அன்பு காட்டிக் கொள்ள முடியும்போதே அது முழுமையடைகிறது. அல்லது முழுமையை நோக்கிச் செல்லும் பயணம் சாத்தியமானது. ஆனால் சதா தன் வரையறையை சொல்லிக் கொண்டே இன்னொரு இணையை அதற்கு ஏற்றாற்போல ஆட்டிவைக்க முற்படுகையில் அதை உணர்திறன் மிக்க மனம் மிகக் கூர்மையாக கண்டு கொண்டு ஓர் மூச்சுமுட்டலை உணர்கிறது. நம்புவது போல அது நடித்துக் கொண்டாலும் அது அதன் வழியாக தன் அன்பையே அதிகம் வெளிப்படுத்துகிறது.
ஆனால் அதன் வழியாக அந்த இணை தனக்கு பிரிவு எனும் வலியை வழங்கும் குற்றவுணர்வை அதற்கு உருவாக்கிக் கொண்டிருக்கும் தன் முகத்தைப் பற்றிய விசாரணையின்மையால் அந்தத் தரப்பும் முழுமை கொள்வதில்லை.
*
சம்யுக்தாவின் கவிதைகளில் இரண்டாவது தொகுப்பான “தீ நின்ற பாதம்” தொகுப்பிலும் கைவிட்டுச் சென்ற இணையற்ற காதலை நோக்கிய பரிதவிப்பு உள்ளது.
//
எதுவும் கைக்கெட்டியவுடன்
மதிப்பு குறையத் தானே செய்கிறது
என்று நான் சொல்வது
உனக்குப் புரியாமல் இல்லை.
//
//
அடுத்த சந்திப்பின் நிச்சயமின்மை குறித்தோ
இந்தச் சந்திப்பின் அலைக்கழிப்புகள் பற்றியோ
நாம் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
//
//
உண்மையில்
நீ நீங்கிச் சென்ற பின்னரே
தொடங்குகிறது
உன்னைத் தீண்டுதல்.
//
தேன் மெழுகு
நீ கொண்டு வந்திருக்கும்
இந்தச் சின்னஞ்சிறிய நெருப்பு
எனக்குக் கொஞ்சம் கூட போதவில்லை.
…
எவ்வளவு நேரம் உற்று நோக்குவது?!
கரைந்து கொண்டே இருந்தாலும்
உனதிந்த தேன் மெழுகு
எனக்காக உருகுவது இல்லை.
//
ஆகிய கவிதைகளில் பிரிவின் புலம்பலை விடவும் இணையின் ஆன்மாவை நோக்கிய விசாரணையைச் செய்கிறது. இங்கிருந்து அவர் காதலின் மெல்லிய பக்கங்களையும் பேசும் இடத்திற்கு வந்து சேர்வதை சில கவிதைகளில் காண முடிகிறது. தரவு, இடைவெளி ஆகிய இரண்டும் இதில் கவிதையான கவிதைகள் எனலாம்.
தரவு
திமிறும் வெண்புரவிகளின் பிடரிமயிரென
நுரைக்கும் அலைகள் உயரே எழும்
கரைகளெங்கும் ஈரமான பாறைகள்
ஒன்றில் நீ
மற்றொன்றில் நான்
நீ குனிந்து – என்னை
முத்தமிடும் பாவனையுடன் நோக்குகிறாய்
சற்றே கலவரமடைந்து நான்
சுற்றியிருக்கும் கூட்டத்தைப் பார்
இதோ இப்பருவ கால இரவுகளில்
கடலுக்குள்ளிருந்து வெளியே உலாவ வரும்
சிறு நண்டுகளின் பெருங்கூட்டம் போல்
ஊருக்குள் பரவி விடும் – இரகசியமாய்
ஒளித்திருக்கும் உறவின் தரவுகள் என்கிறேன்
நீ பதிலேதும் பேசாமல்
ஊசிக்கண்ணில் நூலை நுழைக்கும்
பார்வையின் கூர்மையுடன்
என் கண்களை ஊடுருவி
உள் நோக்குகிறாய்
நமக்கிடையே இருக்கும் வெளி
தாங்க முடியாததாகித் தகிக்கிறது
நான் எதிர்பாரா கணத்தில்
சட்டென்று
என் இதழ்களுக்குள் அமிழ்ந்து
ஆழமாய் இடப்படுகிறது
ஒரு நீண்ட முத்தம்
பாண்டிச்சேரியின் நண்டுகள்
கடலில் இருந்தால் என்ன
கரைக்கு வந்தால் தான் என்ன..?!
//
இடைவெளி
…
சுவற்றின் மீது தவித்து அலையும்
சுடரின் நிழலை
எவ்வளவு நேரம் தான் பார்த்துக் கொண்டிருப்பது?
ஆளில்லா வீட்டின் மாடிப்படி வளைவில்
சின்னஞ்சிறு கால்களால்
அணைத்துக் கொண்டு உறங்கும்
இன்று பிறந்த நாய்க்குட்டிகளைப் போல
நாம் இந்த இரவில் இருக்கலாம் தானே?!
//
இந்த இரு கவிதைகளின் முடிவிலும் ஒரு புன்னகை பூத்துக் கொள்ள முடிகிறது.
*
சம்யுக்தா மாயாவின் கவிதைமொழி சற்றே சங்கப்பாடலுக்கு நெருக்கமானது. முதல் தொகுப்பை விட இரண்டாவது தொகுப்பில் அந்த கவிமொழி தனி மொழியை நோக்கி செல்வதைப் பார்க்க முடிகிறது.
சங்ககால அகத்திணைப் பாடல்களில் நமக்கு வெவ்வேறு பார்வைக்கோணங்கள் வழியாக காதலை உணர முடிகிறது. தலைவன், தலைவி, தோழி, பரத்தை, செவிலித்தாய், பாங்கன் எனப் பலர் வருகின்றனர். ஒவ்வொருவரின் பார்வை வழியாக நம்மால் காதலை உணர முடிகிறது. சங்கப்பாடல்களில் அகத்துறைக்கும் புறத்துறைக்கும் இடையே திட்டவட்டமான ஒரு எல்லை வகுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றும். ஆனால் சில கவிதைகளில் சொல்லப்படும் கையறுநிலை தத்துவார்த்தத்தை நோக்கி விரிவதையும் பார்க்கலாம். உதாரணமாக தலைவி ஏன் தலைவன் மேல் காதல் கொண்டாள் என்பதை அறிய முடியாது என்பதைச் சொல்லும் வரியாக குறுந்தொகையில் வரும் “அறிதற்கு யாம் யாரோ” என்ற வரியைச் சொல்லலாம்.
மெல்ல சம்யுக்தா தன்னிலையிலிருந்து விடுபட்டு இன்னொரு ஆன்மாவை நோக்கிய விசாரணை வழியாகச் சென்றடைவது நித்தியத்துவமான பிரிவை நோக்கியே. அதன் வழியாக நிலையாமையை. நிலையாமையை நினைத்து மறுகும் நிலைகொள்ளாமை என்றும் சொல்லலாம்.உறவுச்சிக்கலின் எதிர்துருவத்தில் இருப்பது நிலையாமை. இரண்டாவது தொகுப்பில் சரிபாதி நிலையாமைக்கு கொடுக்கபப்டுகிறது.
நிலையாமை என்பது ஆன்மா இந்த ஒட்டுமொத்த வாழ்வை விலகி நின்று பார்த்து அடைய இயலாத பேரமைதியை நோக்கிச் செல்வது. சங்கப்பாடலில் அத்தகைய கவிதைகளை பொருண்மொழி காஞ்சித்துறை கொண்டிருக்கிறது. “மின்னொடு வானம் தண் துளி தலைஇ, ஆனாது கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று..” என ஆரம்பித்ததும் நாம் அந்த அமைதிப் பயணத்திற்கு தாயராகிவிடுகிறோம். வெறுமே சாட்சிகளாக நம்மை உணரச் செய்வது. ஆனால் சம்யுக்தாவின் கவிதைகளில் தவிப்புடன் அதை நோக்கும் மனத்தைக் காண முடிகிறது. அந்தத் தவிப்பின் கவிதைகளில் வெளிப்படும் படிமங்கள் புதியவையாகவும் இருந்தன.
தீ நின்ற பாதம்
இட்ட அடி நோக
எடுத்த அடி கொப்பளிக்க
நடக்கின்ற நிலம் யாவும்
பொசுங்கிக் கருக
அறுதியான பொருள் தேடித்
தட்டழியும் தடமெங்கும்
ஒரு கணமேனும் எங்கும்
எனை நிற்க விடாத
தீ நின்ற பாதம் எனக்கு.
*
தேடலின் ஆரம்பத்தில், அமையாத மனத்தில் குடிகொள்ளும் உணர்வே தட்டழிதல். இவற்றை மிகச் சரியாக விளக்கும் படிமம் “தீ நின்ற பாதம்”. ஆன்று அனுபவித்த முதிர்ந்தவர்களின் நிலையாமையை, நித்தியத்துவத்தை நவீனத்துவம் பேசுகிறது. ஆனால் இங்கு ஓர் முதிர்ச்சியற்ற சிறுமியின் நிலையாமை பேசுவதாகக் கொள்ள முடிகிறது. அதற்கான பெரும் படிமமாக “தீ நின்ற பாதம்” அமைகிறது. காசி உட்பட சைவ தத்துவம் சார்ந்த காட்சிகள் நிரம்பிய கவிதைகளில் முதன்மையான கவிதையாகவும் இது உள்ளது.
ஒன்றா…..வேறா….?
இந்த விளக்கின் நுனியில்
நின்று எரிந்திருக்கிறேன்
எண்ணற்ற முறைகள்.
தொடர்ந்து எண்ணெய் ஊற்றி...
திரியை மட்டும்
திரும்பத் திரும்ப மாற்றி...
ஒவ்வொரு முறையும்
எரியும் சுடர்
ஒன்றே தானா.... ?
வேறு....வேறா.... ?
//
இந்த இரு கவிதைகளும் இந்த இரண்டாவது தொகுப்பில் சம்யுக்தாவின் தேடல் நோக்கில் முக்கியத்துவம் பெறுகின்றன.
கலையில் புதியன செய்கையில் நாம் மானாவாரியாக செய்து பார்க்க ஏதுவாக களம் உள்ளது. ஆனால் ஏற்கனவே நம் முன்னோடிகள் எடுத்தாண்ட அதே பொருளைக் கையாள்கையில் புதியதாக என்ன? என்ற கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில் இந்த தட்டழியும் மனமும், மிகச் சில புதிய படிமங்களும் இந்த பிரிவு-உணர்வுக் கவிதைகளின் கோப்புகளில் சேர்ந்து கொள்கின்றன.
சம்யுக்தாவின் தட்டழிதலும், தவிப்பும் மேலும் பெருகி அல்லது சமன்வயமாகி அந்த சென்றடையவியலாத ஆழத்தை நோக்கிய பயணத்தை இயல்பாக பற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. அவரின் கவிமொழியும், கவிதையும் மேலும் புதிய சாத்தியங்களை நோக்கி நகர இந்த விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது (2026) தொடக்கமாக அமையும் என நம்புகிறேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.







0 comments:
Post a Comment