இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள்

வியனுலகு வதியும் பெருமலர் தொகுப்பிலுள்ள இளங்கோ கிருஷ்ணனின் கவிதை - பயணம். 

இதில் மரணத்தை நோக்கிச் செல்லும் உடலின் பயணத்திற்கு ஒப்பாக கூறப்பட்டிருப்பது அடிவாரம் நோக்கிச் செல்லும் மலையில் உருட்டி விடப்பட்ட கல். உடலின் பயணம் டிக் டிக்கென நகரும் கடிகாரம் - அதன் வேகம் நமக்கு தெரியும். மலையில் விழும் கல் - அதன் வேகம் நாம் அறிவோம். 

இரண்டும் ஒன்றென ஆகும் அற்புதமே இந்தக் கவிதை. கவியும், புத்தனும் ஒரு தொன்மச் சிறப்பாக இந்தக் கவிதையில் மிளிர்கிறார்கள். டிக் டிக்கென நகன்று குழி நோக்கி செல்லும் உடல் எவ்வளவு பெரிய மலையில் இருந்து உருண்டு கொண்டிருக்கிறதோ?!

- மதார்

***

பயணம்

மரணத்துக்குக் கண்ணீர் உண்டு

கண்ணில்லை என்கிறான் கவி

மலையில் உருட்டிவிட்ட கல்

அடிவாரம் போய்ச் சேரும் தீவிரம்

கவனித்திருக்கிறாயா நண்ப

இந்த உடல் அவ்வளவு தீவிரமானது

மனம் எங்கு செல்கிறதென

பின் தொடர்கிறான் போதிச் சத்துவன்

காலம் எங்கு செல்கிறதென 

கவனித்துக் கொண்டிருக்கிறான் புத்தன் 

நாம் சொல்லலாம்

நான் இங்கு செல்கிறேன்

அங்கு செல்கிறேனென

நீ எங்கு சென்றாலும்

டிக் டிக் டிக்கென உடல்

குழி நோக்கி

சென்றுகொண்டே இருப்பதைப் பார்

- இளங்கோ கிருஷ்ணன்

***

'வெளிச்சத்தின் எடை 

வெப்பமாய் இருக்கிறது' 

என்கிற முதல் வரியிலேயே இந்தக் கவிதை திறக்க ஆரம்பித்து விடுகிறது. 'ஆழ்கடல் மீன் - மொத்தக் கடலையும் சுமந்தலைவது' கவிதையின் உச்சம். 

அன்றாடம் என் தெருவில் நடக்கும் பைத்தியக்காரனின் கோணியில் சுமையே இருக்காது. சுமை அவன் பாவனையில் இருக்கும். எனக்கு இந்தக் கவிதையில் வரும் பூவும், மீனும் அவனைத்தான் ஞாபகப்படுத்துகிறது. உண்மையில் அவன் கோணி சுமப்பதென்ன? 

பிரபஞ்சத்தின் பிரதிநிதியான காற்றாக இருக்குமோ?

இந்தக் கவிதையில் பாவனை பாவனையா? அல்லது அதைத் தாண்டியதா?

- மதார்

***

ஆழ்கடல் மீன்கள்

வெளிச்சத்தின் எடை

வெப்பமாய் இருக்கிறது 

விடிகாலையில்

மேற்புறக் கடலில் நீந்தும் மீன்கள்

வெளிச்சத்தை தொட்டுத் திறக்கின்றன

ஆழ்கடலின் குருட்டு மீன்கள் வெளிச்சத்தை உணர்வது 

இருட்டின் பாரமின்மையாலா பாரத்தாலா 

ஆழ்கடலின் ஒரு மீன்

மொத்தக் கடலையும் சுமந்து கொண்டிருப்பது

ஒரு பாவனையா

ஒரு பூ

மொத்த பிரபஞ்சத்தையும் சுமப்பது போல

- இளங்கோ கிருஷ்ணன்

***

வியனுலகு வதியும் பெருமலர் தொகுப்பு வாங்க


Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

தேடு

Most Popular

Blog Archive