தன்னை மாற்றுபடுத்தும் கவிஞன் - லட்சுமி மணிவண்ணன்

தன்னை மாறுதலுக்குட்படுத்திக் கொண்டிருக்கும் கவிஞன் பிறரில் மேன்மையானவன்

தொடர்ந்து தன்னை மாறுதலுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கும் கவிஞனே பிறரில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்கிறான். மேம்பட்டவனாகிறான். தன்னுடைய மனதளமாகவே கவிதை அமைய பெற்ற கவிஞனுக்கு மட்டுமே இந்த பண்பு சாத்தியம்.பெரும்பாலும் எங்கு தொடங்குகிறார்களோ ,அங்கேயே சுற்றி வட்டமடித்துக் கொண்டிருப்பார்கள்.சிறந்த கவிக்கு பண்பு இதுவல்ல.அவனுடைய சில கவிதைகளை படித்து விட்டு அவனுடைய விதியைப் பற்றி தீர்மானம் செய்து விடாத உயரிய பண்பை அவன் கொண்டிருப்பான்.அவன் வாழ்வின் மீது இயற்றுகிற சலனங்கள் தொடர்ந்து மாறுதலைடைந்து கொண்டே இருக்க வல்லவை.அத்தகைய கவிகளில் ஒருவர் தேவதச்சன்

கல்குதிரை இதழில் வெளிவந்திருக்கும் தேவதச்சனின் கவிதைகள் அவர் ஏற்கனவே தன்னை நிறுவிய விதத்திலிருந்து வேறுவிதமாக அமைந்திருக்கின்றன. சரஸ்வதியை மையமாகக் கொண்டு நெடுங்கவிதையின் தோற்றத்திலிருக்கும் இந்த கவிதைகள் தனித்தனியாகவும் சிறப்புடன் உள்ளன.

தேவதச்சன் கவிதைகள் சிறப்பு தருணங்களையும் கொண்டிருப்பவையே ஆனாலும் கூட அதற்காக காத்திருப்பவை என்று சொல்வதற்கில்லை. பல சந்தர்ப்பங்களில் அவை வெறுமனே ஒரு பேச்சை உருவாக்க முயல்பவை .அந்த பேச்சை வாசகனின் அனுபவத்தின் பல உண்மைகளோடு மோதச் செய்கிறார் தேவதச்சன். எந்த உண்மையையும் தாழ்வுபடுத்தி விடாமல் அவர் கவிதைகளில் மேற்கொள்ளும் இந்த மோதல் அவர் கவிதைகளில் மேலான நிலை நோக்கி செல்லக் கூடியவை.இதனை அவருடைய சிறப்பம்சமாகக் கருதலாம்.

கல்குதிரை இதழில் வெளிவந்திருக்கும் அவருடைய இந்த கவிதை பேச்சு போலவே, மிகவும் சாதாரணமான பேச்சாகத் தொடங்கி இருவேறு உண்மைகளுடன் மோதலை நிகழ்த்தி அர்த்த பரிமாணத்தை அதிகப்படுத்தி நிற்கிறது .இது வெறும் சாதாரணமான பேச்சுதான். அதனை கவிதையின் இடத்திற்கு நுட்பமாக நகர்த்துகிறார் தேவதச்சன்.


தெருமுனை
வலிமையானவர்களால் ஆனது
வலிமையில்லாதவர்களாலும் ஆனது
யாரையோ துரத்தியபடி வந்த ஒருவன்
கம்பீரமாய் பெஞ்சில் அமர்ந்து
தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறான்
வேறு யாராலோ துரத்தப்படும் ஓரமாய்
ஒதுங்கியபடி
அவசரமாய் தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறான்
தேநீர்க் கடைக்காரனின்
கல்லாப் பெட்டி மேல்
கடிகாரத்திற்கு அருகில்
தொங்கும் சரஸ்வதியே
தீயை மீறும் புகையினால்
உன் வெண்ணிற ஆடை
கருமையாகி விட்டது
உன் வெள்ளை அன்னம்
கருப்பு நிறமாகித் திகைக்கிறது
புகை மூடும் உன் நான்கு கைகளால்
உன்னைத்
துடைத்துக் கொள்ள முடியுமா
சரஸ்வதி

இந்த கவிதை "தெருமுனை வலிமையானவர்களால் ஆனது" என்கிற பேச்சில் தொடங்குகிறது.அடுத்து வருகிற வரியால் முதல் வரியின் இருப்பு மூடப்பட்டு விடுகிறது.இரண்டு வேறு வேறு உண்மைகளின் நிழல் படிந்து நிற்கும் கரிப்படிந்த சரஸ்வதி மூன்றாவதாக நிகர் உண்மையாக வந்து தோன்றுகிறாள்.கரிப்படிந்த சரஸ்வதி என்கிற பதம் நம்மைத் தீண்டியதும் நம்மிடம் ஒரு பெண்ணின் சாயையை நாம் அடைகிறோம்.அதிலிருந்து மேல் வரிகளுக்கு நகரத் தொடங்கி பல்வேறு உண்மைகளின் மாறுபட்ட புதிர் உலகம் அனுபவமாகிறது.

கவிஞன் கவிதையின் தன்மையை தொடர்ந்து மாற்றிக் கொண்டிருக்கும் போது; வாசகனுக்கு வாழ்வின் தளத்தை எவ்வாறு தொடந்து மாற்றி புதுமையடைவது என்னும் பேரிலக்கு வசமாகிறது

தேவதச்சன் அடுத்த காலகட்டத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் ஓசை இந்த கவிதைகளில் கேட்கிறது

***

(நன்றி கல்குதிரை)

தேவதச்சன் தமிழ் விக்கி பக்கம்  

 

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

தேடு

Most Popular

Blog Archive