என் சிறு வயது ஞாபங்களுள் ஒன்று நான் அளவுக்கு அதிகமாக சிரித்தால் வீட்டில் சொல்லப்படும் ஒரு வசனம் ‘ரொம்ப சிரிக்காதே அப்பறம் அழப் போற’ என்று. இதனை பாட்டி சொல்லி கேட்டிருக்கிறேன். அப்பா, அம்மா, மாமா என வீட்டிலுள்ள அனைவரும். இது ஒரு விதத்தில் கிறுக்குத்தனமாக தோன்றலாம். ஆனால் மரபார்ந்து நம்முள் இச்செய்தி எப்படியோ கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சதீஷ்குமார் சீனிவாசனின் ’நித்திய கல்யாணி’ கவிதை அதனை நினைவு படுத்தும் விதத்தில் அமைந்தது. சதீஷ்குமார் கவிதைகளை வாசிக்கும் போது அவர் நித்திய கல்யாணி மலருக்கு அடியில் இருக்கும் சிறு கசப்பை தான் தன் கவிதையாக்க முயற்சிக்கிறாரோ எனப்படுகிறது. இக்கவிதையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காட்டும் சைகைக்கு பின்னால் உள்ள சொல்லப்படாத மொழி போல.
நித்திய கல்யாணி
மனநலக் காப்பகத்தில்
நித்திய கல்யாணி
பூத்திருந்தது
வாசனையற்ற பூ அது
துளித் தேனுக்குப் பிறகு கசக்கும்
பூ அது
அது உணவுக்கான நேரம்
மனநலம் பேணப்படும் ஒருத்தி
நான் உணவு உண்டதுபற்றி
சைகையில் கேட்டாள்
நான் ஒரு பதில் சொன்னேன் தலையசைப்பில்
எனக்கு இதுகுறித்தெல்லாம் வருத்தமில்லை
கழிவிரக்கமில்லை
ஆனால்
நானேந்த முடியாத
ஒரு சொல் போல இருந்தாள்
ஏற்கனவே இருக்கும்
ஒரு அகராதி
தொகுக்குமளவிற்கு இருக்கும்
ஏந்த முடியாத இந்தச் சொற்களை
அர்த்தங்கள் விடுவிக்கனுமென
எதனிடமாவது
வேண்டனும்போல இருந்தது
வேண்டிக்கொண்டேன்
பூத்திருந்த நித்திய கல்யாணியிடம்
வாசனையற்ற அந்தப் பூவிடம்
துளித் தேனுக்குப் பிறகு கசக்கும்
அந்தக் கசப்பிடம்
***
’ஆகா என்றொரு அசைவு’ கவிதை நித்திய கல்யாணி கவிதை மனநிலைக்கு நேர் எதிரானது. வெளிச்சத்துள் இருட்டை நுழைப்பது கடினம். ஆனால் இருட்டில் ஒரு சிறு தீக்குச்சி போதும் ஒளியை எல்லா இடங்களிலும் சென்று நிறைக்க.
அப்படிப்பட்ட ஒரு அசைவு தான் இந்த இரண்டாவது கவிதை. சதீஷ்குமார் கவிதைகளில் உள்ள இறுக்கம் தளர்ந்த இடங்களில் ஒன்று இக்கவிதை. அவர் பாடுபொருள் என்பது இலையுதிர் காலத்தின் அத்தனை சாத்தியங்களையும் சொல்வது. ஒரு மரத்தில் அத்தனை இலைகளும் ஒன்று கூட இல்லாமல் உதிர்ந்து நம் முன் மொட்டையாகி நிற்கும் அவலத்தைப் பற்றி பாடுவது.
காட்டில் நாம் சென்று பார்த்தால் தெரியும் அத்தனை அடர் பச்சைகளுக்கு நடுவே மொட்டையாக ஒரு மரம் நிற்கும். பச்சைகளை மட்டும் நிறைத்து வைத்த கண்களுக்கு அந்த மொட்டை மரம் இம்சையாக தொந்தரவு செய்யத் தொடங்கும் சதீஷ்குமார் தன் கவிதைகளில் அந்த இம்சையை மட்டும் எழுதுகிறார்.
அதனை எழுது அலுத்துக் கொண்டு ‘ஆகா’ என வியக்கும் தருணம் ஒன்றும் சதீஷ்குமார் சீனிவாசன் கவிதையில் எழுகிறது.
இந்த ஆண்டு (2023) விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது பெறும் சதீஷ்குமார் சீனிவாசனுக்கு என் வாழ்த்துக்கள்.
ஆகா என்றொரு அசைவு
சரியாக அதைச் சொல்லனும் எனில்
ஆகா என்றுதான் சொல்ல முடியும்
இந்த பத்து பருடத்தில்
திருப்பூரில் நான் கண்ட முதல் அசவைு போல இருந்தது அது
வளர்மதி ஸ்டாப்
பாலம் கடக்கும்போது
சரியாக பின்னாலிருந்து அவளைத் தொட்டான் அவன்
மீனை நீர் தொடுவதுமாதிரி
ஒரு கணம் திரும்பி
தலையை இருகைகளாலும் தாங்கி அதிசயித்தாள்
இந்த நகரத்தில் இப்போதைக்கு அவள்தான் அழகு என மலர்ந்தாள்
எனக்கு அதைக் கண்டதும்
'ஆகா' என்றிருந்தது
இந்த ஆகா இல்லாமல்தானே
இதெல்லாம் சீரழிந்தது
இந்த ஆகாவுக்காகத்தானே
கனவுகள் துடித்தன
இந்த ஆகா இல்லாமல்தானே
உடல்கள் உடல்களாக மட்டுமே
அறை திரும்பின தனித்திருந்தன
அவர்களுக்குள் என்ன என்று கூட
எனக்குத் தெரியாது
இப்போது சொற்களுக்குள் நடக்க ஆரம்பித்திருந்தார்கள்
ஆனால்
அவளுடைய இன்றைய அற்புதம் அவன்தான்
இந்த நகரத்தின்
இன்றைய அசைவு அந்த 'ஆகா ' தான்
***
இப்போதெல்லாம் பறவைகளை யாரும் கனவு காண்பதில்லை
ஒரு புகைப்படம்போல அசையாதிருக்கின்றன உணர்ச்சிகள்
இரண்டு நாட்களாக நானொருவரை
விரும்புவதை விட்டுவிட்டேன்
அவரும் எப்போதோ அந்த
நிபந்தனைகளிலிருந்து
வெளியேறி இருந்தார்
குறைந்தபட்சமாய் உயிரோடிருப்பது மாதிரி
குறைந்தபட்ச நிபந்தனைகளோடு
இருக்கலாம் என இனி யாரிடமும் கேட்க முடியாது
நான் மட்டுமே இருக்கும் சுதந்திரம்
தனிமையில் இறந்துகொண்டிருக்கிறது
இப்போதெல்லாம் பறவைகளை யாரும் கனவு காண்பதில்லை
ஒரு புகைப்படம்போல அசையாதிருக்கின்றன உணர்ச்சிகள்
***
இன்றில் நிகழ்வது
மலைகளுடைய உன் நிலத்திலிருந்து
சென்றுகொண்டிருக்கிறேன்
உனக்கு
தனிமையையும்
நினைவுகளையும்
பிரிவையும் தந்தபடி
மழைக்காலத்தின் தனிமைகள்
இந்த நினைவுகளின் பச்சையங்களை மேலும் துலக்கும்
உன் நிலத்தின் இலையுதிகாலத்து மரங்கள்
என் பெயரைச்சொல்லியா உதிரும் ?
கோடையில் முதல் தளிர் துளிர்க்கும்போது
நான் வருவதாகக் கூட
உனக்கு கனவு வரும்
ஆனால் இதெல்லாம் பிற்பாடு
இவை சாத்தியங்களின் நம்பிக்கைகள்
ஆனால்
இப்போது
இந்த நிஜமான இன்றில்
மலைகளையுடைய
உன் நிலத்திலிருந்து சென்றுகொண்டிருக்கிறேன்
சதீஷ்குமார் சீனிவாசன் தமிழ் விக்கி பக்கம்
***
0 comments:
Post a Comment