எழுத்தாளர் மா.அரங்கநாதனின் ‘பொருளின் பொருள் கவிதை’ நூலில் வரும் மேற்கண்ட பகுதி கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசனுக்கு பொருந்திப் போகும். மற்ற கவிஞர்களிடமிருந்து அவர் வேறுபடும் இடம் இதுதான் என்று நினைக்கிறேன். வாழ்வை அவர் தீராது எழுதிச் செல்கிறார். இயற்கையை, பொழுதை, எதிர்வரும் மனிதனை, ஊரை, மனதை ஓயாது தன் கவிதையில் திறந்து வைக்கிறார். தமிழில் கவிஞர் தேவதேவனும், கவிஞர் விக்ரமாதித்தனும் வாழ்விலிருந்து கவிதைகளை அதிகம் எடுத்து எழுதியவர்கள். மற்ற கவிஞர்களை விட இந்த இருவரின் கவிதை உலகங்களிலும் இந்த தன்மையை அதிகம் காணலாம். இருவரின் உலகமும், பார்வையும் முற்றிலும் வேறு என்றபோதிலும் இந்த பொது அம்சத்தை இருவரின் கவிதைகளிலும் அதிகமாகக் காணலாம். மற்ற கவிஞர்கள் அன்றாடத்தில் தாங்கள் எதிர்கொள்வதில் எதை கவிதையாக்கலாம், எவை கவிதையாகலாம் என்ற குறைந்தபட்ச விழிப்புடனாவது செயல்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் தேவதேவன், விக்ரமாதித்தன் கவிதைகளை தொடர்ந்து வாசிக்கும்போது காணும் யாவும் கவிதையாகியிருப்பது புலப்படுகிறது. காணும் யாவையும் தன் பார்வையில் தேவதேவனும், அதன் போக்கிலேயே விக்ரமாதித்தனும் எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது. காணும் அனைத்தையும் கவிதையாக்கத் துடிப்பது ஒரு வரம். இளம் தலைமுறையில் கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகளில் இந்த அம்சம் காணப்படுகிறது. அவரது கவிதைகளின் பாடுபொருள் என ஒன்றை குறிப்பிட்டுச் சொல்வது அரிது. கவிஞர் விக்ரமாதித்தனைப் போல் காணும் அனைத்தையும் அவர் அதன் போக்கிலேயே கவிதை உள்ளத்தோடு கவிதையாக்கத் துடிக்கிறார். கவிஞனுக்கு இந்தக் கவிதை மனம் வேண்டும். கவிதையை எழுதவும், எழுதாத போது அதையே நினைக்கவும் செய்யும் மனம் வேண்டும். அந்த மனம் சதீஷ்குமார் சீனிவாசனுக்கு அமைந்துள்ளது. அவர் அதை விடாது தொடர வேண்டும்.
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது பெறும் கவிஞர் சதீஸ்குமார் ஸ்ரீநிவாசனுக்கு வாழ்த்துக்கள்.
மழை எண்ணம்
பாதுகாப்பற்ற வெளிகளில்
பெய்கிறது மழை
ரயிலை பாதியிலேயே மறித்ததுபோல
இந்த நகரத்தை மறிக்கிறது மழை
அதுதான்
இப்போதைக்கு தீர்மானிக்கும்
அதிகாரமுடையது என்ற தொனியில் பெய்கிறது
மழை பார்க்கிறது
வீடு திரும்புவர்களை
வீட்டுக்கு திரும்ப முடியாதவர்களை
மழை கவனிக்கிறது
மழையைப் பற்றி கவிதை எழுதுபவர்களை
மழைக்கு அஞ்சுகிறவர்களை
மழை அழைத்து வருகிறது
குளிரை
தனிமையை
மழைக்கு எந்த ஞாபகமும் இல்லை
அது இத்தனை காலம்
எந்த எண்ணத்தில் பெய்ததோ
அதே எண்ணத்தில் பெய்கிறது
மனிதர்கள்தான்
அஞ்சுபவர்களாக
ரசிப்பவர்களாக உருமாறியிருந்தார்கள்
உருமாற்றியிருந்தார்கள்
நித்திய கல்யாணி
மனநலக் காப்பகத்தில்
நித்திய கல்யாணி
பூத்திருந்தது
வாசனையற்ற பூ அது
துளித் தேனுக்குப் பிறகு கசக்கும்
பூ அது
அது உணவுக்கான நேரம்
மனநலம் பேணப்படும் ஒருத்தி
நான் உணவு உண்டதுபற்றி
சைகையில் கேட்டாள்
நான் ஒரு பதில் சொன்னேன் தலையசைப்பில்
எனக்கு இதுகுறித்தெல்லாம் வருத்தமில்லை
கழிவிரக்கமில்லை
ஆனால்
நானேந்த முடியாத
ஒரு சொல் போல இருந்தாள்
ஏற்கனவே இருக்கும்
ஒரு அகராதி
தொகுக்குமளவிற்கு இருக்கும்
ஏந்த முடியாத இந்தச் சொற்களை
அர்த்தங்கள் விடுவிக்கனுமென
எதனிடமாவது
வேண்டனும்போல இருந்தது
வேண்டிக்கொண்டேன்
பூத்திருந்த நித்திய கல்யாணியிடம்
வாசனையற்ற அந்தப் பூவிடம்
துளித் தேனுக்குப் பிறகு கசக்கும்
அந்தக் கசப்பிடம்
***
மேலும் சில கவிதைகள்,
பழக்கப்பட்ட இலைகள் காத்திருக்கின்றன
தீவிரம் புனலென பாயத்தொடங்கி
கரையின் ஈரமாக கொஞ்சம்தான் மிச்சமிருந்தது
காற்றிலைசைந்து பழக்கப்பட்ட இலைகள்
காற்றுக்காக காத்திருக்கின்றன
சலனமற்று
நாளை என்றும்
விடியலென்றும்
அற்புதங்கள் நிகழும் என்றும்
அப்படி ஒரு
வீம்புபிடித்த வீணான நம்பிக்கைகள்
***
உன் எறும்புகள்இறந்துகொண்டிருக்கின்றன
தனிமையும் காமமும் புற்றென
வளர்ந்துகிடந்தது
புற்றிலுள்ள
காத்திருப்பின் சர்ப்பங்கள் உண்ண
உன்னையே புற்றுக்குள் திணித்தாய்
பாதி உள் நுழைந்தும்
பாதி பிதுங்கியும்
விபரீதமாய் இருந்தது அந்தக் காட்சி
மூச்சுத்திணறி இறந்தும் போனாய்
சாக்லேட்டை உண்பதுபோல
உன்னை உண்டன எறும்புகள்
பிறகு வெகுகாலம் நீ பிறக்கவில்லை
இந்தப் பிறவியில்தான்
நீ எறும்புகளாய் பிறந்திருக்கிறாய்
ஓடி ஓடி அலைந்து களைத்திருந்த
உன் எறும்புகள்
நிச்சயமின்மையின் மழையில்
இப்போதும் அனாதியாய் இறந்துகொண்டிருக்கின்றன
சின்னஞ்சிறிய சீனிப்பரல்களை
புற்றில் சேர்க்க முடியாத துயரத்துடன்
இந்த இரவின் அற்புதமே
இல்லாத வாழ்க்கையைப் பற்றி
பேசிக்கொண்டிருந்தோம்
அடம்பிடிக்கும் ஒரு சிறுமியை
சமாதானப்படுத்துவது போல
எங்களது துயரங்களுடன் பேசிக்கொண்டிருந்தோம்
ஒரு குரல்
‘ஆமாம் எனக்கும் அப்படி நடந்திருக்கிறது’
இன்னொரு குரல்
‘ஆமாம் எனக்கும் நடந்திருக்கிறது .
ஆனால் வேறு மாதிரி’
கோடையின் இரவு காற்றால் குளிர்ந்துகொண்டிருந்தது
கெஞ்ச நேரத்திலேயே
சொல்லவும்
கேட்கவும் ஒன்றுமில்லை
இனியும் ஏன் என்ற கேள்வி
அழ முடியாமல்
பல்லைக் கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தோம்
மௌனம் ஒரு மோசமான இரவைப்போல பெருகிக்கொண்டிருந்தது
எங்களது அபத்த இருப்பின்
நேரெதிர் திசையில்
நாயுடன் ஒருத்தி வாக்கிங் வந்தாள்
அவளது கூந்தல்
இரவென அசைந்தது காற்றில்
அது அற்புதம் போல இருந்தது
இந்த இரவின் அற்புதமே
எனக்கு வாழ வேண்டும்
இந்த இரவின் அற்புதமே
நானுனை இந்த ஒரு கணம் காதலித்துக்கொள்ளவா ?
எனக்கு வாழ வேண்டும்
எப்போதும் அழுதுகொண்டும்
மௌனத்துடனும் அமர்ந்திருக்க முடியாது
***
சதீஷ்குமார் சீனிவாசன் தமிழ் விக்கி பக்கம்
***
0 comments:
Post a Comment